Published:Updated:

திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்

திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்

திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்

‘சென்னை என்ற நகரம் ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்டது; சென்னையின் வரலாறு ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே உருவாகிறது’ என்று இங்கே ஒரு கற்பிதம் இருக்கிறது. உண்மையில், சென்னையின் வரலாறு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள். நெய்தலும் மருதமும் கலந்த திணைப்பரப்பாக இருந்த சென்னை,  மாதரசன் பட்டினம், சதிரானப் பட்டினம், புதுப்பட்டினம், நீலகங்கரையன் பட்டினம் எனப் பல்வேறு பெயர்களில் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது.  

திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்

கிருஷ்ணகிரி மாவட்டம் பெண்ணையாற்று மடம் என்ற ஊரில் உள்ள பெண்ணேஸ்வரர் ஆலயத்தை ஒட்டி சில கல்வெட்டுகள்  கிடைத்துள்ளன. அக்கல்வெட்டுகள் ‘மாதரசன் பட்டின’த்தைப் பற்றி நிறைய பேசுகின்றன. 1367 ஜூலை 21 அன்று விஜயநகர மன்னன் கம்பண்ண உடையாரால் உருவாக்கப்பட்டவை அவை. 

மாதரசன் பட்டினம் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக இருந்துள்ளது. இன்றைய சென்னைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள ராயபுரம் பகுதிதான் மாதரசன் பட்டினம் என்று ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாதரசன் பட்டினம்தான், மதராசப்பட்டணம் என்றாகி, பிறகு ‘மெட்ராஸ்’ ஆனது என்றும் சொல்லப்படுகிறது. இந்த ‘மெட்ராஸின் மொழி’ என்பது, மிகத் தொன்மையானது; தனித்தன்மையானது. நாயக்கர்கள், தெலுங்கர்கள், ஆங்கிலேயர்கள், அரேபியர்களின் தாக்கத்தால் இம்மொழியின் பூர்வத்தன்மை சற்றுக் குலைந்து புது வடிவெடுத்தது. 1950-களில் தென் மாவட்டங்களில் உருவான கடும் வறட்சி காரணமாக, அங்கு வாழ்ந்த ஏராளமானோர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்கள். அவர்களின் வழி, ‘மெட்ராஸ்’ மொழி, வேறொரு பரிமாணம் எடுத்தது. ஆகக்கூடி, இன்றைய ‘மெட்ராஸ்’ மொழி என்பது, வெவ்வேறுபட்ட வட்டாரத் தமிழும், தெலுங்கும், உருதும் இன்னபிற மொழிகளும் கலந்து புணர்ந்த புதியதொரு வடிவத்தை எடுத்திருக்கிறது.

‘மெட்ராஸ்’ மொழியின் பின்னாலிருக்கும் கலாசாரத்தையும் வேரையும் அலசுகிறார், அம்மொழியின் அசல் படைப்பாளிகளில் ஒருவரான கரன் கார்க்கி:

‘‘ ‘மெட்ராஸ்’ மொழியின் தன்மை என்பது அந்நியர்களை எரிச்சலூட்டக் கூடியது. ஒரு மொழியில் நான்கைந்து மொழிகள் ஊடாடி, ஓசைநயம் மிகுந்து, சலசலக்கும் பாவனை மொழியாகி, எரிச்சலூட்டும் மொழியாக அது உருவானது எப்படி? மொழி என்பது தனி மனிதரின் கண்டுபிடிப்பா?

ஒருவேளை ‘கறுப்பர் நகர’த்தின் செங்கேணி, ஆராயி, பாளையம், முனியம்மா, பேய்க்காளி இவர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய மொழியா? எந்த வட்டார மொழிக்கும் இது சாத்தியமில்லை… அப்படியானால் பெருநிலத்தின் தலைநகரில் இப்படியான சபிக்கப்பட்டதொரு கூவத்து மொழி எப்படிக் கூவித் திரிகிறது? கூவ நதியோர மெட்ராஸ் மொழியினுள் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள், சமூக உளவியல் எனப் பல பின்னணி இருப்பதை நாம் புரிந்தகொள்ள வேண்டும். 
375 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களாக இருந்த இம்மண்ணில், பழங்காலம் முதலே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சென்னை மொழியில் ‘திர்லகன்னி’யாக மாறுவதற்கு முன்பான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவெற்றியூர், புழல், அயன்புரம், எழுமூர், சேத்பட்டு, நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, வேப்பேரி என எல்லாமே நூற்றாண்டுகளாக உள்ள கிராமங்கள்தான். ஆனால், ‘சென்னை’ என்கிற பெயரையோ ‘மதராஸ்’ என்கிற பெயரையோ 1639-க்கு முன்பாக யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1660-ம் ஆண்டுக்குப் பிறகான ஆண்டுகளில் ‘மெட்ராஸ்’  மொழியின் பாவனைகள் தொடங்கியிருக்கலாம் என்பது அனுமானம்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்“ரிக்சாக்காரர்: குந்து வாத்யாரே... எங்க போனும்?

பயணி: அய்னாவரம்.

ரிக்சாக்காரர்: அம்மாந் தூரமா…  ஒருபா ஆவும் ஏறிக் குந்து.

பயணி : ஒரு ரூபாயா... என்னப்பா அநியாயமா சொல்ற?

ரிக்சாக்காரர்: வாத்தியாரே, இஷ்டமாருந்தா குந்து இல்லனா நவரு… எம்மா தூரம் இஸ்துக்கினு போவனும் தெரியுமா? எட்னாவுக்கு யார்னா இஸ்துக்கினு போவான், அங்க போ.” 

இப்படியான பேச்சு வெளியூரிலிருந்து வருபவருக்கு, எரியாமல் என்ன செய்யும்?  ‘இவனுக்கெல்லாம் ஒரு ரூபாய் கூலி தரணுமா? அதுவும் இந்தப் பயல் எவ்வளவு அதிகாரமாகக் கேட்கிறான்’ என்கிற புகைச்சல். அவனது அலட்சியமான உடல்மொழி, என்னமோ புதுவிதமான புரியாத பாஷை… இவை கிராமத்திலிருந்து பட்டணம் வந்தவரை மிரள வைத்துவிடும். அவரது கிராமத்து அதிகாரம் இங்கு செல்லுபடியாகாது என்கிற உளவியல் தவிப்பு அவரைப் படுத்திவிடும்.

மதராசப்பட்டணத்தின் ஆரம்பமே ஆங்கிலம், உருது, தெலுங்கு, இந்தி, தமிழ் என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகள் பின்னிப் பிணைகிற சூழல்தான். இச்சூழலில் வாழ்ந்தவர்கள் யார்? ஆங்கிலம், உருது, தெலுங்கு எசமானர்களிடம் நகரின் எண் திசைகளில் இருந்தும் பிழைப்புத் தேடிவந்த தமிழ் உழைப்பாளிகள், தங்கள் சொந்தக் கிராமங்களில் வாழ வழியற்று வெறும் கைகளுடன் பலவிதமான காரணங்களால் துரத்தியடிக்கப்பட்டும், தப்பியும் ஓடி வந்தவர்கள். அவர்களில் 99 சதவிகித ஆட்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. காதில் கேட்டதைச் சாத்தியப்பட்டதுபோல திருப்பிச் சொன்னவர்கள். எசமானர்கள் சொல்வதே சரியானது என்று நம்பப் பழக்கப்படுத்தப்பட்டார்கள். அழகான வார்த்தை உச்சரிப்புகளைக் கேட்டுப் பழகாதவர்கள்; அலட்சியமான, அதிகாரமான உறுமல்களை மட்டுமே கேட்டுப் பழகியவர்கள். இரவும் பகலும் தொடர்ந்து வேலைசெய்து களைப்படைந்த ஒருவன், தன் எசமானிடம், ‘ஐயா நான் களைப்படைந்துவிட்டேன் கொஞ்ச நேரம் படுத்துறங்கி வருகிறேன்’ என்று சொல்லக்கூட அனுமதிக்கப்படாதவன். ‘சாமி, கொஞ்ச நேரம் தரையில கெடந்துட்டு வர்றேன்’ என்று சொல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டவன். ஒருவேளை, எசமானரிடம் அப்படிக் கேட்பதே மரியாதை குறைவானது என்று கருத கற்பிக்கப்பட்டவன். 

ஏற்கெனவே, எசமானர்களின் வசவுச் சொற்களில் வாழ்ந்து பழகி, அதை வெறுத்து, பட்டணத்துக்குப் பிழைப்புத் தேடி வந்தவன். வெள்ளையர் குசினிகளில், மோட்டார் வாகனங்களில், மின் நிலையங்களில், ஐஸ் பாக்டரிகளில், அலுவலகங்களில், உருது பேசும் முகமதிய முதலாளிகளின் கிடங்குகளில், மண்டிகளில், நகரின் நாற்புறமும் சூழ்ந்த தெலுங்கு மக்களுடன் பிழைக்க, பிழைப்புக்காக உரையாட நிர்பந்திக்கப்பட்டவர்கள். வெவ்வேறு  மொழிகளின் வார்த்தைகளை உள்வாங்கவும், அதைத் தங்கள் மொழிகளில் தம்மை அறியாமலேயே கலக்கவுமான வாழ்க்கைப்பாடு மிக இயல்பான ஒன்றாக இருந்தது. கிராமங்களிலிருந்து சென்னை பட்டணத்துக்குப் பிழைக்கவரும்போதே அவர்கள், ‘இன்னாமே உங்கிட்ட படா பேஜாரா கீது கஸ்மாலம்’ என்கிற வார்த்தைகளுடன் வரவில்லை. அன்றைய வெள்ளை எசமானர்கள் தங்கள் ஊழியர்களுடன், பொதுவாக மக்களுடன் இணக்கமாக உறவாட விரும்பி, தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்துடன் சேர்த்துப் பேச முயன்றார்கள். குறிப்பாக,

‘வா மேன்… போ மேன்… இன்னா மேன் என்று உரையாட ‘ன்’ தொலைந்து வாமே… போமே.. இன்னாமே என்றாகி வளர்ந்ததுதான் ‘மெட்ராஸ்’ மொழி.

“இவன்கிட்ட படா பேஜாராக்கீதுப்பா” என்கிற சொல்லில் தமிழ், உருது, இந்தியென கலந்து கொட்டுகிறது. இவ்வளவு கலப்பு நிகழ்ந்து உருவான வார்த்தைகளை, நாம் அதன் காரண காரியம், காலச் சூழல்கள் எதையும் கணக்கிலெடுக்காமல் முகம் சுளிக்கிறோம். 

நாம் முகம் சுளித்து, இழிவுபடுத்தியதின் விளைவால், சென்னை மொழியின் பல வார்த்தைகள் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டன. எழுத, வாசிக்கக் கற்றதன் விளைவாகவும், பொருளாதார மேம்பாடு காரணமாகவும் இன்றைய நாள்களில் பழைய கஸ்மாலங்கள் காணாமல்  மறைந்துகொண்டிருக்கின்றன என்றாலும், சென்னை மொழியின் சிறப்பு, அதன் பல மொழிகளாலான தன்மையைவிட அதன் ஓசை நயம், உடல்மொழி, அது எவரையுமே கூர்ந்து கவனிக்கவைத்துவிடும். நிகழ்காலத்தில், அந்த உடல்மொழியும் நகரின் வானுயர்ந்த கட்டடங்களுக்கிடையே மறைந்து கொண்டிருக்கிறது.

‘திருலக்கன்னி’ என்று திருவல்லிக் கேணியை அழைத்த தலைமுறை ஆட்கள் அருகிவிட்டார்கள். ‘ட்ரிப்பில்கேண்’ என்கிற வெள்ளையனின் பிழையான உச்சரிப்பைக் கேட்டு நாம் முகம் சுழிப்பதில்லை. ‘திருலக்கன்னி’க்கு முகம் சுழிக்கிறோம் என்பதுதான் நகைமுரண்.

‘யானைகவுனி’ இன்னும் ‘யானகன்னி’தான். ‘சாலட் கொடர்ஸ்’ இன்னும் ‘சால்த்து கொட்டா’தான். ‘சர் ஆமில்டன் பிரிட்ஜ்’ இன்னமும் ‘அமட்டன் வாராபதி’தான். ‘உயிர் காலேஜ்’, ‘செத்த காலேஜ்கள்’ இன்னும் சென்னையின் பல வார்த்தைகள் தங்களது கடைசி மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டிருக்கின்றன. பொது மருத்துவமனைகள் இன்னமும் ‘ஜெல்லாஸ்பத்திரி’தான். இதையெல்லாம் கிண்டல் செய்கிற நாம், ‘எழும்பூர்’ என்கிற பெயரை உச்சரிக்கச் சிரமப்பட்ட வெள்ளையன், தனக்குச் சொல்லச் சுலபமாக ‘எக்மோர்’ என்றாக்கியதை  ‘பூவிருந்தவல்லி’யைப் ‘பூனமல்லி’யாக்கியதை கேள்விகளற்று ஏற்றுக்கொண்டோம்.

‘அதையெல்லாம் இழுத்துக் கீழ போடுடா… இழுத்துப் போட்டதக் கிழித்துப் போடுடா… என்னடா முழிக்கிற...’ இந்த வார்த்தைகளை ஆங்கிலேயரிடம் சொன்னால், ‘அதையெல்லாம் இஸ்த்து கீய போடு மேன்… இஸ்துப் போட்தைக் கீச்சி போடு மேன்’ என்பதாகத்தான் அவரது உச்சரிப்பு இருக்கும்.  அதைக் கேட்கிற தொழிலாளிக்கு, துரை பேசுவது வித்தியாசமாகவும் எளிதாகவும் இருப்பதுடன் அவரோடு உரையாட அது வசதியாகவும் இருக்கிறது. இப்படியான கடந்த 350 ஆண்டுகளாக நடந்து வளர்ந்ததுதான் இன்றைய ‘மெட்ராஸ்’ மொழி. இன்னும் ஆங்கிலோ இந்தியர்களுடன் தமிழில் உரையாடினால், முழுமையான சென்னை மொழியைக் கேட்க முடியும்.   

திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்

இஸ்துகினு, கோச்சிக்கினு, தூங்கினு, உங்கைல, எங்கைல, அண்ணாண்ட, இண்ணாண்ட, குந்திக்கினு, பயிந்துக்கினு, பீசல், பகுலு, பிகிலு, செவுலு, நவுறு, அவுறு, கவுறு, செவுரு, பவுரு, இத்த, அத்த, கீது, கீற, பீத்த, முய்த்து, அய்த்து, வைத்துல, கைத்துல, பூட்சி, வஞ்ச்சி, குட்த்துச்சி, சொல்ச்சி, ஃபாடு, டாபர், நைனா… என்று பல நூறு சென்னை வார்த்தைகள். பேசும்போது அந்தப் பாவனையில் பணிவு, துளியும் இல்லாத கறார் தன்மை தெரியும். வளர்ந்த நகரத்தில் பிழைக்கவரும் நிலம், பணம், சாதி அந்தஸ்துள்ள ஆட்கள், வழக்கமாகத் தாங்கள் கண்ட பாவனைக்கு முற்றிலும் மாறான பாவனை மொழியைக் கண்டு மலைத்துப் போகிறார்கள். நகரின் உழைக்கும் மக்களது மொழி பணிவற்று அலட்சியமாய் இருப்பது அவர்களால் சீரணிக்க முடியாமல் போகிறது. ‘மரியாதை கெட்ட ஆளுங்க.. என்ன பேசுறாங்கண்ணே புரியல... தமிழைக் கெடுத்து நாசம் பண்ணிட்டாங்க’ என்கிற எரிச்சலை உண்டாக்குகிறது.

சும்மாங்கட்டியும், சும்மாங்கலியும், சும்மானாச்சும், அபேசு, அப்பீட்டு, பிலிம், கோலி, அவுஸட்டை, டாமா கோலி, முனிமா, கன்னிமா, கோய்ந்தம்மா, தாராந்துட்டியா, மாஞ்சா, ‘நெஞ்சில கீற மஞ்சா சோறு’  என்கிற சொல்லாடல்களைப் புதிய தலைமுறையினர் பேசுவதை யாராவது கேட்டால், வார்த்தைக்கு 1,000 ரூபாய் பரிசு தருவதாக அறிவிக்கலாம். இந்த வார்த்தைகளின் தேவை இப்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மிக அரிதாகிவிட்டது. இவையெல்லாம் ‘மெட்ராஸ்’ மொழியின் ஜீவ வார்த்தைகள்.

காத்தாடி, பம்பரம், துண்டு பிலிம், கோலிகுண்டு, சிகரெட் அட்டைகள் சேர்த்து விளையாடுகிற சூழல் இப்போது இல்லை. அதனால், அந்த வார்த்தைகளும் இப்போது காணாமல் போய்விட்டன.

தொலுக்கு – கன்னம் 

பகுலு – விலா பகுதி

நைனா – தந்தை

காண்டு – கோபம் / பொறாமை

டப்பு – பணம்

பீலா – பொய்

கப்ஸா – பொய்

வரே பகார் – பிச்சைக்காரர்

கம்னாட்டி – கணவனை இழந்த பெண்ணின் மகன்  (இதில் மாறுபட்ட கருத்துகள் உண்டு)

நாஸ்டா – சிற்றுண்டி (உருது)

மாலு –  பணம் (உருது)

கம்முனு – அமைதி (ஆங்கிலம்)

பந்தா – ஸ்டைல்

ஜபுரு – சலசலப்பு காட்டாதே (உருது)

பேக்கு – முட்டாள் (உருது)

உடான்ஸ் – பொய்

உல்டா சீதா – உள்ளே வெளியே

இப்படி, பல்வேறு மொழிகள் ‘மெட்ராஸ்’ மொழியில் கலந்து மினுக்கித் திரிந்த காலம் மறைந்து, சென்னை பொதுத் தமிழுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

“அடிங் கோத்தா குஸ்மா மாதிரி இருந்துக்கினு எங்கிட்ட கப்ஸா வுடுறியா… யார்கிட்ட பகுல் தூக்குற” என்கிற உரையாடலில் இப்போது ‘ஓத்தா’ மட்டும் என்றென்றும் நீடுழிப் பிழைத்திருக்கும்போல. காரணம், எக்ஸ்பிரஸ் அவென்யூவிலும், சிட்டி சென்டரிலும் ஆண், பெண் பேதமற்று ஆபாசமான பாவனையுடன் நடுவிரலை நீட்டிச் சொல்கிற நவீன அந்தஸ்துக்கு அது உயர்ந்துவிட்டது.

பல வார்த்தைகள் புழக்கத்திலிருந்து நீங்கிக்கொண்டிருக்கின்றன. ஆங்கிலம் படித்ததால், தமிழ் எழுதத் தெரியாத புதிய தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. அவர்கள், தங்களின் தாத்தாவைப்போலவோ அப்பாவைப்போலவோ பேசுவதில்லை. அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள் என்கிற பிம்பம் மட்டுமே மிஞ்சியுள்ளது. ஆனாலும், அவர்களிடமும் இப்போதும் வீட்டாண்ட, அண்ணாண்ட, இண்ணாண்ட, உங்கைல, எங்கைல என்கிற வார்த்தைகள் மிஞ்சியுள்ளன.

அந்த End, இந்த End தான் ‘அண்ணாண்ட’, ‘இண்ணாண்ட’ என்ற சொற்களாக மாறியதாக ஒரு கருத்து உள்ளது. அது தவறு. அந்த அண்டை வீடு, ‘அண்ணாண்ட வீடு’ என்றும் இந்த அண்டை வீடு ‘இண்ணாண்ட வீடு’ என்றும் மாறியுள்ளது என்பதுதான் சரியாக இருக்கும்.

சென்னையில் ‘குஜிலி’ என்ற வார்த்தை முக்கியமானது. 1940-களுக்கு முன்பாக, பயன்படுத்தப்பட்ட  பழைய பொருள்களை விற்கும் இரவுக் கடைகளுக்குக் ‘குஜிலி கடைகள்’ என்று பெயர். அங்கு ஆண்-பெண் பாலுறவுப் படங்கள்கொண்ட புத்தகங்களும், அன்றைய குஜிலிப் பாடல்கள் புத்தகங்களும் விற்கப்படும். இவற்றுடன், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும் அங்கே வலம் வருவார்கள். குஜிலிப் பாடல்கள், இன்றைய கானாவின் ஆரம்பகட்ட நிலைப் பாடல்கள். (காந்தியை விமர்சனம்செய்து பாடப்பட்ட குஜிலிப் பாடல்களும்கூட உண்டு. ஆனால், அது அக்ரஹார ஆட்களால் எழுதப்பட்டது.) இப்படியான சூழலிலிருந்துதான் ஒரு பெண்ணை ‘குஜிலி’, ‘குஜால் அஜால்’, ‘ஆலிஸ்மேரி’ என்கிற கிண்டல் வார்த்தைகளால் குறிப்பிடுகிற வழக்கம் வந்தது. 

“அவங்கெடக்குறான் வுட்டுத்தள்டா அவன்லா டோப்பு கை மச்சி”  - இன்று ‘ஸ்டஃப்’ என்று கஞ்சா புகைப்பதைப் படு ஸ்டைலாகச் சொல்கிறார்கள். ‘ஸ்டஃப்’தான் ‘டோப்பு’ என உச்சரிக்கப்படுகிறது.

இன்று மீன் கடைகளில் ஆங்கிலோ இந்தியர்கள் பேசும்போது, அதைக் கேட்க நேரிட்டால் புரியும், மெட்ராஸ் மொழியின் அசல் உடல் பாவனையுடன் நல்ல ‘மெட்ராஸ்’ தமிழை இன்றும் பேசுகிறவர்கள் அவர்கள்தான். அவர்களிலும்கூட மிக விளிம்பு நிலையில் இருப்பவர் மத்தியிலேயே அதைக் கேட்க முடியும்.

கீச் போடு – கிழித்துப் போடு

இஸ்துப் போடு – இழுத்துப் போடு

வலிச்சிப் போடு – வலுவுடன்  இழுத்துப் போடு

தொலுக்க ஒட்சிடுவேன்– தாடையை  உடைத்துவிடுவேன்

‘வலிச்சி’ என்பது கிண்டலுக்குரிய வார்த்தையாகப் பாவிப்பது ஏனென்று புரியவில்லை. ‘துடுப்பு இழுப்பது’ என்று சொல்லப்படுவதில்லை. ‘துடுப்பு வலிப்பது’ என்றே சொல்லப்படுகிறது. வலி–இழு என்பது ஒரு செயலுக்கான இரு சொற்களாகப் பயன்படுகிறது. ‘கட்சிக்க’ என்கிற வார்த்தையும் இப்போது மறைகிற தருவாயில் உள்ளது. ‘கட்சிக்கா’– உணவுடன் தரப்படும் ஏதாவது ஒரு துணை உணவு. (மிளகாய் வற்றல் அல்லது வெங்காயம்). 

கை ரிக்‌ஷாக்கள்- மிதிவண்டி ரிக்‌ஷாக்களாகவும், மிதிவண்டி ரிக்‌ஷாக்கள்- ஆட்டோக்களாகவும், ஆட்டோக்கள்-  இன்றைய கால் டாக்சிகளாகவும் உருமாறியதுடன் சென்னையின் மொழியும் அதனுடன் சேர்ந்தே மாறிவருகிறது. மிகப் பழைய ஆட்கள் ஒரு சிலரிடம் அதே உடல் மொழியோடு கூடிய ஓசைநயத்துடன் அரிதாக இன்னமும் அந்த மொழி ஜீவித்திருக்கிறது. பெரும்பாலும் மெட்ராஸ் மொழி, அதிகச் செழிப்போடு வாழ்ந்தது வடசென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதியில்தான். கூடைச் சோற்றுக்காரிகளின் உலகம் காணாமல் போனதுபோல, அதுவும் தேய்ந்து வருவது ஒருவிதத் துயரம்.

“எக்கா, இன்னா எப்பிடிக் கீறே… மீன் கொழம்பு வாசனை சும்மா கும்ம்னு தூக்குது. இப்பிடிக் குந்திக்கிட்டா” என்று சாப்பிட வந்தவன் கேட்பான்.

“குந்துடா… இன்னா புஸ்குன்னு போற. புஸ்குனு வர்ற, இம்மா நாளா எங்கடா போன?” 

“எல்லா மாமியார் வூட்டுக்குத்தா (ஜெயிலு)… வேறெதுக்கு? கேங்குல ஒருத்த சும்மா ரேங்கினு (ராங் – Wrong) இருந்தான். ஒன்னு உட்டானா மூஞ்சி சீஞ்சிக்கிச்சி... தூக்கி உள்ள போட்டானுங்க”.

‘குந்து’ என்பது ஒரு கிண்டல் வார்த்தையாக மாறிவிட்டது கொடுமை. குந்தி – குந்து என்பது நல்ல தமிழ் சொல்லே. மாநிலமெங்கும் ‘ழ’ உச்சரிப்பு பெரும்பாலும் பிழையாக உச்சரிக்கப்பட, சென்னை தமிழில் மிகச் சரியாக உச்சரிக்கப்படுகிறது. சில வேளைகளில் பழம் – ‘பயமா’கப் பேசப்பட்டதுதான் ஆனால், இப்போது முற்றிலும் மாறிவிட்டது. யாராவது ‘பயக்கவயக்கம்’ என்றால், முகம் சுளிக்காமல் அவரை உற்றுப் பாருங்கள். மொழி மீதான வரலாற்றின் கிறுக்கலான பல கோடுகள் தெரியும்.    

திருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்! - வெ.நீலகண்டன்

எண்பதுகளில் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிற உறவினர்கள், சட்டையில் குத்தும் ‘பின்’னை, ‘ஊக்கு’ என்று சொல்வார்கள். ஆனால், சென்னைவாசிகள் ‘பின்’ (PIN) என்றே சொல்வார்கள். காரணம், வெள்ளையர்களுடன் வாழ்ந்ததுதான். அடிப்படையில் சென்னை அதன் சுற்றுப்புறக் கிராமங்கள், வடஆற்காடு, ஆரணி, வடதமிழகம் முழுமையும் மெட்ராஸ் மொழியின் ஓசையை ஓரளவு பெற்றிருந்தாலும் அதன் தயக்கமற்ற தீவிர உடல் பாவனையுடனான உச்சரிப்பு, கையசைவு, ஆபாசமான பேச்சுகளின்போது காட்டும் அடையாளம் இவை அமெரிக்க ஆப்பிரிக்கர்களின் தீவிர பாவனைக்கு ஒப்பானது. மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே கட்டை விரலை வைத்து ‘அட்சி தொலுக்கெல்லாம் ஒட்சிடுவேன் பகார்’ என்கிற சொற்களும் பாவனையும் வேகமும் இப்போது பயன்பாட்டில் இல்லை. 

தவுடு – தவுடாவுடா – இங்கிருந்து போ. வேகமாக மறைந்து விடு

நவுறு – நகர்ந்து போ

முய்க்கிற – விழிக்கிற

முய்துற – ஏமாத்துற

ஃபாடு – ப்ராடு

டாபர் – பாலியல் புரோக்கர்

கொழம்பு – குழம்பு

மட்டையாயிடுவ – செத்துவிடுவாய் (தென்னை மட்டைகள் காய்ந்து சருகாகிப் பயனற்று விழுவது நினைவுக்கு வருகிறது)

அஸ்டான் – அடித்துவிட்டான்

தில்லு
– தைரியம் (உருது)

தபாரு – இதோ பார்,

லவடிகோபால்
– (உருது) வசைச்சொல்

மாதர் கோத் – (இந்தி) வசைச்சொல்

“தபார் மாமே எங்கிட்ட இந்த பித்தள மாத்தி வேலல்லா வாணா. எப்ப ரேங்குவன்னு தெரியாது…”

 “வர்றான் பார் சீட்டா கை” என்று ஒருவன் சொல்ல “அய்யே மூட்றா பழைய பீங்கான்” என்று பதிலளிக்கின்ற ஆள்களின் எலும்புகள், இன்று மண்ணுக்கு மேலே மக்கித் துணுக்குகளாகக் கிடக்கின்றன.

“இன்னோர் தபா உங்கைல வச்சிக்கினான்னா, ரைட்ல குட்து லெப்ட்ல வாங்கு மச்சி. அப்பறம் ஆவற்த பாத்துக்கலாம்” என்கிற சொற்றொடர்கள், “நெஞ்சிலருக்குற மஞ்சா சோத்த எடுத்துருவேன்” என்கிற வார்த்தைகளைக் காலம் அடித்துக்கொண்டுதான் போய்விட்டது.

பிளடி பெக்கர் என்பது ஆங்கிலச் சொல். இதன் அர்த்தம் புரியாமலேயே இது பல சந்தர்ப்பங்களில் இங்கே புழங்கப்பட்டு வந்தது. பழைய ஆள்கள் சீட்டாட்டம், கால்பந்தாட்டம் பார்க்கும்போது, ஆட்டக்காரர்களின் சாகசங்களை ரசித்து, ‘வரே பகார்’ என்று கத்துவார்கள். பெக்கர் (பிச்சைக்காரன்) என்ற வார்த்தை ஏதோ பெருமிதமான வார்த்தைபோல புழக்கத்திலிருந்திருக்கிறது.

தலைநகரின் பெரும் பகுதி, குறிப்பாக உழைக்கும் மக்கள்திரள் இப்படிப் பேசுவதின் அரசியல் பொருளாதார சமூகச் சூழலைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல், எளிதாக ‘இதெல்லாம் ஒரு மொழியா?’ என்று அலட்சியமாகக் கடப்பதென்பது படிநிலைச் சமூகத்தின் இயல்பான மனநிலைதான். ஆனால், அதன் உண்மை நிலையை அறிய முற்பட்டால், அதன் வரலாற்றுப் பின்புலம் நம்மை வியக்கவைக்கும்.

அதை மறைத்துவிட்டோ, மறந்துவிட்டோ நாம் சென்னை தமிழை அணுகினால், அதன் பாவனை தெரியாமல் போகும். அதன் வரலாறும் புரியாமல் போகும்...” என்கிறார் கரன் கார்க்கி.

‘மெட்ராஸ்’ மொழியின் இன்னொரு படைப்பாளி தமிழ்மகன், ‘கேப்மாரி’ என்று ஒலிக்கும் ஒரு வார்த்தையின் வேரை அலசுகிறார்.

“நாதாரி, ஊதாரி, சோமாரி என்ற வரிசையில் கேப்மாரி என்ற வார்த்தை சென்னையில் பிரபலம். கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் செல்லமாகவும் பிரயோகிக்கப்படுகிறது. ‘‘ஏண்டா கேப்மாரி... உன்னைக் கொல்லாம விடமாட்டேன்டா’’ என்றால், கோப அர்த்தம். தன் பேரனிடம் தாத்தா, ‘‘ஏண்டா கேப்மாரி பொடி வாங்கிட்டு வாடான்னா எங்கடா போய்ட்ட?’’ - இது செல்லம்.

கேப்மாரி என்பது ‘ஏமாற்றுக்காரன்’ என்ற அர்த்தத்தில் புழங்குகிறது. ‘நாஸ்டா’, ‘பேஜார்’, ‘கஸ்மாலம்’, ‘பல்லிக்கா போச்சு’ எனப் பல பிரயோகங்கள் அப்படி வந்து கலந்தவை. ஆந்திரம், ஹிந்துஸ்தானி, இந்தி, இஸ்லாம், என்ற பேதம் இல்லாமல் சென்னை மொழி எல்லா மொழிகளையும் ஜீரணித்து ஏப்பம்விடும் தன்மையது. வந்த மொழியை வாழவைக்கும் சென்னை!

‘கேப்மாரி’ என்பது ஒரு பட்டியல் இனத்தின் பெயர் என அறிந்தபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் ஆங்கிலேயர் காலத்தில் கைதுசெய்யப்பட்ட தெலுங்கு மொழி பேசும் ஒரு குழுவினர் இவர்கள். சின்னச் சின்னத் திருட்டுகள், சின்னச் சின்னக் கொள்ளைகளில் ஈடுபடுவார்கள் என்று குறிப்புகள் சொல்லப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் இவர்களை ‘கேப்மாரீஸ்’ எனப் பதிவுசெய்துள்ளனர். கொள்ளையடிக்கப் போவதை ஒரு தொழிலாகச் செய்வது இவர்களின் மரபு. அதை ‘வல்லடைக்குப் போய்ட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டுப் போய் வருவார்களாம். இப்போது மருத்துவம், கல்வி, அரசியல் தொழில்களில் பலரும் வல்லடைக்குப் போகிறார்கள்... ஆனால், சொல்வதில்லை...” என்கிறார்.
மெட்ராஸ் மொழி, மண்ணின் வாழ்வியல் தன்மையோடு கலந்து வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது. சென்னை எல்லோரையும் அரவணைத்துக்கொள்ளும் ஒரு கலப்பு நகரம் என்றானதால், மொழியும் அவ்விதம் கலப்புக்குள்ளாகி அதுவே தனித்தன்மையாகவும் ஆகிவிட்டது. உலகமயம், தாராளமயத்தின் தாக்கம் சென்னையின் பூர்வீக வேரையும் அசைத்துப் பார்க்கிறது. குடிசைகள், அவமானச் சின்னங்களாகி நகருக்குள்ளிருந்து பிடுங்கி எறியப்பட்டு, நகரம் ‘நாகரிக மனிதர்’ களுக்கானதாக நிர்மாணிக்கப்பட்டபோதே  அதன் தொன்மப் பண்பாடும் மொழியும் வரலாறும் திரிந்துபோய்விட்டது. நகரம், பூர்வீகமற்ற பொதுவானதொரு ‘நாகரிக’ மொழியை உடுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டது. அந்த விபரீதத்தில்தான் தொலைந்துகொண்டிருக்கிறது ‘மெட்ராஸ்’ மொழி.

இதுவே வேறொரு மொழிக்கு, ஏன் தமிழகத்தின் வேறொரு  வட்டாரத் தமிழுக்கு நேர்ந்திருக்குமானால், ஆய்வாளர்கள் கொதித்துக் களமிறங்கியிருப்பார்கள். ஆதி வார்த்தைகளைத் தேடியெடுத்து அகராதி போட்டிருப்பார்கள். ‘மெட்ராஸ்’ மொழியின் அந்தப் பழைய தீவிர பாவனைகள், 70 சதவிகிதம் பயன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து இங்கே எவரும் ஆதங்கம்கொள்ளவில்லை என்பது வருத்தமான செய்தி. 

மொழி என்பது கடந்துபோன அரசியல் சமூகப் பொருளாதாரத்தின் அடையாளம். ஏராளமான பழங்குடி மொழிகள் இந்த ஒற்றைவழிப் பாதையில் சென்று தொலைந்துபோயின. ‘மெட்ராஸ்’  மொழியும் அப்படியான பாதையில்தான் இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறது!