Published:Updated:

மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்

மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்

மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்

திராவிட இயக்க அரசியல் மற்றும் அதன் கருத்தியல் மதிப்பீடுகள் குறித்த கவனம், இப்போது இந்திய அளவில் உருவாகியிருக் கிறது. சமகால வரலாற்றுச் சூழலின் வெளிச்சத்தில், திராவிட அரசியலின்  அடித்தளம் குறித்த பேச்சுத் தொடங்கியிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் திராவிட அரசியல் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்திய அளவிலான இத்தகைய பார்வைகள் நம் ஆய்வுக்கு உரியவை.    

மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்’, ‘திராவிட அரசியலுக்கு மாற்று’ என்ற முழக்கங்களோடு வெவ்வெறு அணிகள் களமிறங்கின. நீண்ட நெடுங்காலமாகவே கசப்பு உணர்வுடன் திராவிட இயக்கத்தை அணுகிவரும் இந்துத்துவ அரசியல் இத்தகைய முழக்கத்தை முன்வைப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதேநேரத்தில், ஒப்பீட்டளவில் இந்துத்துவச் சக்திகளைவிட சற்றே அதிகமான ஆதரவுத் திரட்சிகொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகளும் திராவிட எதிர்ப்பு முழக்கங்களையே முன்வைத்தன; முன்வைக்கின்றன. இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து உருவான ‘மக்கள் நலக் கூட்டணி’யும்கூட (மற்றவர்களைப்போல ‘திராவிட எதிர்ப்பு’ என்று முன் வைக்கா விட்டாலும்) ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று’ என்ற முழக்கத்துடனேயே சென்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் இன்னொரு திராவிடக் கட்சியின் தலைவரான வைகோ; முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் பெயரளவில் திராவிடத்தைத் தாங்கி நிற்கும் கட்சியின் தலைவர் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவிலோ அ.தி.மு.க, தி.மு.க. என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே பெருவாரியான வாக்குகளைப் பெற்றன. அதிலும் இரு திராவிடக் கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம், ஒரு சதவிகிதம்தான். திராவிட எதிர்ப்பை முன்வைத்த அத்தனை கட்சிகளையும் மக்கள் புறக்கணித்தனர். 

‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்பது தமிழகத்தில் இரண்டு கட்டங்களில் உருவானது. மார்க்சியம், பெரியாரியம், வள்ளுவம் குறித்தெல்லாம் கவனிக்கத்தக்க ஆய்வு நூல்களை எழுதிய குணா ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்னும் நூலை 1994-ல் வெளியிட்டார். ‘திராவிடம் என்பது தமிழ்த் தேசிய ஓர்மையைக் குலைப்பது’, ‘தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றை வீட்டுமொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் அல்ல’, ‘இத்த கையத் தமிழர்கள் அல்லாத வந்தேறிகளின் நலன்களைக் காப்பதற்காக உருவானதே திராவிடம்’, ‘பவுத்தமும் சமணமும் ஆரிய மதங்கள்’, ‘தமிழ்நாட்டை வடுக வந்தேறிகளிட மிருந்து மீட்டுத் தமிழர்களே ஆள வேண்டும்’, ‘சாதியமைப்பே வடுகர்களால் உருவாக்கப்பட்டது; தீண்டாமை, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது’ போன்றவை குணாவின் கொள்கையின் அடிப்படைகள். இதன் ஆதரவுநிலை கொண்டவர்கள் மிகச் சிலராகவே இருந்தனர். 2009 ஈழ இறுதிப்போருக்குப் பின்னால், திராவிடக் கட்சிகளின் மீதான, குறிப்பாக தி.மு.க-வின் மீதான வெறுப்பு அதிகரித்தது. சீமானின் ‘நாம் தமிழர்’ உள்ளிட்ட சில தமிழ்த்தேசிய அமைப்புகள் குணாவின் கொள்கைகளை மீட்டுருவாக்கம் செய்து முன்னெடுத்தனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்‘ஆந்திரர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களைத் திராவிடர்கள் என்று ஒப்புக்கொள்ளாதபோது, தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்?’ என்பது அவர்கள் முன்வைக்கும் கேள்வி. ‘காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னையில் அண்டை மாநிலங்கள் நமக்கு எதிராக இருப்பதால், திராவிடம் என்பது மாயை’ என்பது அவர்கள் நிலைப்பாடு. ‘திராவிடர்’ என்பதைப் பார்ப்பனரல்லாதார் என்னும் பொருளிலேயே பெரியார் பயன்படுத்தினார். ‘வங்காளத்தில், பீகாரில் உள்ள பார்ப்பனரல்லாதாரும் திராவிடர்களே’ என்றார் அவர். தொடக்கத்தில் தென் மாநிலங்களை இணைத்து ‘திராவிட நாடு’ கோரிக்கையை முன்வைத்த பெரியார், மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, ‘சுதந்திரத் தமிழ்நாடு’ கோரிக்கையையே எழுப்பினார். ஆனால், பெரியார் கைவிட்டபின்பும் அண்ணா முன்வைத்த ‘திராவிட நாடு’ தென் மாநிலங்களை ஒன்றிணைத்ததே.

பிரிவினைவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது, ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்ட அண்ணா, ‘பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன’ என்றார். பிறகு தி.மு.க. ‘மாநிலச் சுயாட்சி’ என்னும் முழக்கத்தை நோக்கி நகர்ந்தது. அதற்குப்பிறகு கட்சியின் பெயரில் திராவிடத்தைச் சுமந்தபோதும் தென்னிந்தியர்கள் அனைவரும் திராவிடர் கள் என்னும் நிலைப்பாட்டில் தி.மு.க. இருந்ததில்லை. காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை ஆகியவற்றில் ஒரு தமிழக அரசியல் கட்சி என்ற நிலையிலிருந்தே அது செயல்பட்டது. அதைவிட முக்கியமாக எம்.ஜி.ஆரை ‘மலையாளி’ என்றும் ஜெயலலிதாவைக் ‘கன்னடர்’ என்றும் தி.மு.க. விமர்சித்தபோதே, இத்தகையை பழைய வரையறைகள் தகர்ந்து போயின. கருணாநிதி அடிக்கடி ‘சூத்திரர் ஆட்சி’, ‘திராவிடர்’ என்றெல்லாம் பேசிவந்தது பெரியார் பேசிவந்த ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற பொருளில்தானே தவிர, அண்ணா தொடக்க
காலத்தில் முன்வைத்த ‘தென்னிந்தியாவில் இருப்பவர்கள் திராவிடர்கள்’ என்னும் வரையறையின் அடிப்படையில் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  

மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்

இனி, சமகாலச் சூழலில் இருந்து இத்தகைய விமர்சனங்களை மீளாய்வு செய்வோம். செப்டம்பர் 2016 ஓணம் பண்டிகையின்போது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, வாமன அவதாரம் மகாபலியைக் காலால் மிதித்துப் பூமிக்கு அடியில் தள்ளும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, ‘இது வாமன அவதாரத்தைக் கொண்டாடும் திருவிழா. மகாபலி வருகைக் கான விழா அல்ல’ என்று தெரிவித்திருந்தார். இதற்குக் கடும் கண்டனத்தை வெளியிட்ட மலையாளிகள், ‘நாங்கள் திராவிடப் பாரம்பர்யத்தில் வந்தவர்கள். மகாபலி, திராவிட அரசன். பார்ப்பனிய வாமன அவதாரத்தை நாங்கள் கொண்டாட மாட்டோம்’ என்று தெரிவித்தார்கள். இது இந்துத்துவவாதிகளுக்கு மட்டுமல்ல, ‘திராவிட அடையாளமும் அரசியலும் தமிழகத்தோடு சுருங்கிப்போன ஒன்று’ என்னும் தமிழ்த்தேசியவாதிகளுக்குமான அடிதான்.

உண்மையைச் சொல்லப்போனால், திராவிட அரசியல் குறித்த மீள்வாசிப்பும் கவனமும் அகில இந்திய அளவில் உருவாகி வருவதற்கு, மோடிக்கும் பா.ஜ.க-வுக்கும்தான் திராவிடவாதிகள் நன்றி சொல்ல வேண்டும். திராவிட அரசியல் ஊழல், வாரிசு அரசியல், குடும்ப அரசியல், தனிநபர் வழிபாடு போன்ற எவ்வளவு தீங்குகளைப் பொதுவெளியில் இழைத்திருந்தபோதும் பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, சிறுபான்மை ஆதரவு, மொழித்திணிப்பு எதிர்ப்பு, மாநிலச் சுயாட்சி போன்ற அதன் கருத்தியல்ரீதியிலான அரசியல் கொடைகள் முக்கியமானவை. இவை அனைத்துமே இந்துத்துவ அரசியலுக்கு எதிரானவை என்பதால்தான், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் திராவிட அரசியலின் கொடைகள் முக்கியமானவையாகின்றன. 

சென்னை ஐ.ஐ.டி-யில் ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்’ தடை செய்யப்பட்ட நிகழ்வை, இத்தகைய அரசியல் நகர்வின் முக்கியமான தொடக்கப்புள்ளி என்று சொல்லலாம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கவந்த இளைஞர்கள்மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே உயர்கல்வி நிறுவனங்கள் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினரின் ஆதிக்கம் நிறைந்த இடங்களாக இருக்கும் சூழலில், இந்த ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கான தடை’யை எதிர்ப்பது என்பதைத் தங்களுக்கான கருத்தியல் ஆயுதமாகக் கருதினர். எந்தப் பெரியார், இந்தியை மூர்க்கமாக எதிர்த்தவராகவும் இன வெறுப்பாளராகவும் சித்தரிக்கப்
பட்டாரோ, அந்தப் பெரியாரின் எழுத்துகள் இந்தியில் மொழிபெயர்க்கப் பட்டன. இந்தியா முழுவதும் பல ஐ.ஐ.டி-களிலும் ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்’ உருவாக்கப்பட்டது. ஐ.ஐ.டி மட்டுமல்லாது பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்ஸையும் முன் வைத்து மாணவர்கள் அமைப்புகளைத் தொடங்கினர். ரோஹித் வெமுலா, கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் பெரியார் குறித்துப் பேசினார்கள். ‘திராவிட அரசியல் என்பது பிரிவினைவாத அரசியல்’ என்றும் ‘ஒரு குறிப்பிட்ட இனத்தார்மீதான வெறுப்பரசியல்’ என்றும் ‘வடநாட்டு மக்கள் அனைவரையுமே எதிரியாகப் பார்க்கும் அரசியல் கருத்துநிலை’ என்ற மாயையையும் இத்தகைய நிகழ்வுகள் தகர்த்தெறிந்தன. பெரியாரை, அவரது வார்த்தைகளிலேயே இளைஞர்கள் படிக்கத் தொடங்கியது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒன்று.    

மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்

அடுத்தபடியாக, மோடியின் மாட்டிறைச்சிக்கான தடையும் திராவிட அடையாளம் குறித்த மறு உறுதிப்பாட்டுக்கு வழி செய்தது. ‘மாட்டிறைச்சியைத் தடை செய்வது முஸ்லீம்களுக்கு எதிரான தடை’ என்றுதான் மோடி அரசு நினைத்தது. ஆனால், கேரளாவின் தேசிய உணவே மாட்டிறைச்சி என்னும்போது, அது ஒட்டு மொத்த கேரள மக்கள் மீதான உணவுக் கலாசார வன்முறையாக உணரப்பட்டது. மாட்டிறைச்சிக்கான எதிர்ப்பு வெறுமனே மோடி எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு என்பதோடு நிற்கவில்லை. ‘திராவிட நாடு அமைப்போம்’ என்று ஆயிரக்கணக்கான மலையாளிகள் ட்விட்டரில் எழுதி, அதை டிரெண்டிங் ஆகவும் மாற்றினர். அறுபதுகளில் கேட்ட அதே முழக்கத்தை அரைநூற்றாண்டுக்குப் பிறகு கேட்ட இந்துத்துவவாதிகளுக்கும் பார்ப்பனியவாதி களுக்கும் அதிர்ச்சி. ‘திராவிடத்தைத் தமிழர்கள் மட்டுமே தூக்கிச் சுமக்கின்றனர்’ என்ற தமிழ்த்தேசியவாதிகளுக்கும் அதிர்ச்சிதான் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. 

‘திராவிட நாடு’ கோரிக்கை மட்டும் 60-களில் இருந்து மீள்வருகை புரியவில்லை, ‘இந்தி எதிர்ப்பு’ம் மீள்வருகை நிகழ்த்தியது. ‘இந்தியாவில் தமிழகம் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்க்கும் ஒற்றை நிலப்பரப்பு’ என்ற பிம்பம் தகர்ந்தது. கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் எனப் பல பகுதிகளில் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல்கள் எழுகின்றன. தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்ட வடிவங்கள் அங்கும் உருவாகின. ‘இந்தி படிக்காவிட்டால் இழப்பு’ என்ற மாயை எப்படி உடைந்ததோ, அதேபோல் ‘இந்தியாவில் பெரும்பான்மையினர் பேசும் மொழி இந்தி’ என்ற மாயையும் ‘பெரும்பாலான இந்தியர்கள் இந்தியை ஏற்றுக்கொள்கின்றனர்’ என்ற மாயையும் உடைந்ததும் திராவிட அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.

இந்தியச் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லை அண்மையில் நாட்டியிருக்கிறார், கேரள முதல்வர் பினரயி விஜயன். ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்’ என்ற கேரள அரசின் அறிவிப்புக்கு முன்னோடியும் தமிழகமும் திராவிட அரசியலும்தான். 

தன் வாழ்நாளின் இறுதியில் ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்பதை வலியுறுத்திய பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். ‘போராட்டம் நடத்த வேண்டாம். நாங்களே சட்டம் கொண்டுவருகிறோம்’ என்ற கலைஞர் 1970-ம் ஆண்டு டிசம்பர் 2-ல்  தமிழகச் சட்டப்பேரவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தார். இச்சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 14.3.1972-ல் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. ஆனால், ‘கோயிலில் அர்ச்சகர் ஆவதற்கு ஆகம விதிகளின்படி குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். கோயிலின் மரபு பழக்க வழக்கத்திற்கு மாறாக எவரும் அர்ச்சகராக முடியாது’ என்றும் அதே தீர்ப்பில் கூறியது. ‘ஆபரேஷன் சக்சஸ், நோயாளி மரணம்’ என்று ‘விடுதலை’யில் தலையங்கம் எழுதிய பெரியார், ‘இது என் நெஞ்சில் தைத்த முள்’ என்றார். பெரியார் 1973-ல் இறந்தபோது, ‘`நெஞ்சில் தைத்த முள்ளுடனே ஐயாவைப் புதைக்கிறோம்” என்றார் கலைஞர்.

 அதற்குப்பிறகு இரண்டுமுறை ஆட்சிக்கு வந்தபோதும் தி.மு.க அதில் கவனம் செலுத்தவில்லை. மீண்டும் 2006-ல் தி.மு.க. அரசு வந்தபோது, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வழி செய்யும் வகையில், இந்து அறநிலையத்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்து, சட்டம் இயற்றியது. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அர்ச்சகர் ஆகப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாடத்திட்டம், பயிற்சி முறைகள், பயிற்சிக் காலம் ஆகியவை குறித்துத் தீர்மானிக்கப்பட்டன. இதற்காக சைவ நெறி மற்றும் வைணவ நெறி பயிற்று மையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்  207 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சிக்குப் பின்னர், அர்ச்சகர் சான்றிதழ் வழங்கி, அவர்களை அர்ச்சகர் ஆக்கத் தமிழக அரசு முடிவு செய்தபோது, மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.

2011-ல் ஜெயலலிதா முதல்வரான பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணையில் மெத்தனப்போக்கு ஏற்பட்டது. வழக்கைத் துரிதப்படுத்தி, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க விரும்பாமல், இந்த வழக்கை இழுத்தடித்தது ஜெயலலிதா அரசு. 2015 டிசம்பரில், ‘ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஸ்ரீரங்கத்தில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது. பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லா தாரும் பல போராட்டங்களை நடத்தினர். இருந்தபோதும் இன்றுவரை தமிழகத்தில் நீதி வழங்கப்படவில்லை. ஆனால், கேரளாவிலோ அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத்தைக் கொண்டுவந்து, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியிருக்கிறார், கம்யூனிஸ்ட் முதல்வர் பினரயி விஜயன். இதன் அடுத்த கட்டமாக சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்களைச் சாதியற்றோராக அங்கீகரித்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் அறிவித்திருக்கிறது கேரள அரசு. இதைத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றபோதும், பெரியாரிஸ்ட்களின் நீண்டநாள் கோரிக்கையான ‘சாதியற்றோருக்கான இட ஒதுக்கீடு’ என்பது தமிழகத்தில் இன்னும் நிறைவேறாத கனவாகவே இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

மிக முக்கியமாக, தேசிய அளவில் திராவிட  அரசியல்மீது கவனம் திரும்பியிருப் பதற்கு மிக முக்கியக் காரணம் அதன் ‘மாநில சுயாட்சி’ என்னும் கருத்தாக்கம். மோடி அரசு பதவியேற்றதில் இருந்தே மாநில அரசின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு, அதிகாரம் மையத்தில் குவிகிறது. இந்திரா காந்தியின் நெருக்கடிநிலைக் காலகட்டத்தில், கல்வி - மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது, ‘நீட்’ கொண்டுவருவதற்கு வழியமைத்தது. ஜி.எஸ்.டி, சந்தைகளில் இறைச்சி விற்கத் தடை என மோடி அரசின் அடுத்தடுத்த நகர்வுகள் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்கிறது. இப்போது ‘`விவசாயத்தையும் மத்திய அரசுப் பட்டியல் அல்லது பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார், நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த். இந்த நிலையில்தான் தி.மு,க-வின் ‘மாநில சுயாட்சி’ என்னும் கருத்தாக்கமும் மாநில அரசின் உரிமைகளுக்காக அண்ணாவும் கலைஞரும் மேற்கொண்ட செயற்பாடுகளும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. கருத்தியல்ரீதியாகத் திராவிட அரசியலுக்கு எதிர்நிலையில் இயங்கியவராயினும் மாநில அரசு உரிமைகள் குறித்த ஜெயலலிதாவின் செயல்பாடுகளும்கூட பேசப்பட வேண்டியவை. ‘ஒரே தேசம், ஒரே மதம், ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை, ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே கலாசாரம்’ என்ற ஒற்றைத்துவ இந்துத்துவ அரசியலுக்கு எதிரான  பன்மைத்துவத்தை முன்வைக்கும் அரசியலாகத் திராவிட அரசியல் இந்திய அளவில் கவனிக்கப்படுகிறது.

திராவிட அரசியல் குறித்து இந்திய அளவில் புதிய பார்வைகள் உருவாகியிருக்கும் அதேநேரத்தில், தமிழகத்திலும் ஏற்பட்டுள்ள இரு முக்கியமான பார்வை மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட வேண்டும். 

‘சாதியா, வர்க்கமா?’ என்ற விவாதத்துக்குத் தமிழகத்தில் நீண்ட வரலாற்று மரபு உண்டு. திராவிட இயக்கத்தின் ‘பார்ப்பன எதிர்ப்பு’ என்னும் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளாத மார்க்சிஸ்ட்கள், பெரியாரையும் அம்பேத்கரையும் புரட்சிக்கான தடைகளாகவே பார்த்தார்கள். 1992-ல் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பும், அதை யொட்டிய இந்துத்துவ அரசியல் எழுச்சியும், இன்னொருபுறம் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பட்ட தலித் அரசியல் எழுச்சியும், இடதுசாரிகளின் பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தின. இப்போது இந்துத்துவத்தை எதிர்கொள்வதற்கான கருத்தியல் ஆயுதங்களாக அம்பேத்கரையும் பெரியாரையும் தூக்கிப்பிடிக்கும் இடதுசாரிகள், இந்தித்திணிப்பு, தமிழகப் பண்பாடு மற்றும் வரலாற்றின்மீது கவனம் செலுத்துவது ஆகிய நிலைப்பாடுகளையும் மேற்கொள்ள முனைகிறார்கள். 

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் ‘மாநிலச் சுயாட்சி மாநாட்டை’ நடத்துகிறார். ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை’ என்ற அண்ணாவின் வாதத்தைப் புதுப்பித்து, ‘கவர்னர் பதவியை நீக்க வேண்டும்’ என்று தீர்மானமும் போடுகிறார். சென்ற சட்டமன்றத் தேர்தலில் எதிரணியில் இருந்த இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் இப்போது  தி.மு.க-வுடன் இணைந்துள்ளனர். இதை வெறுமனே தேர்தல் கூட்டணியாகச் சுருக்காமல், கருத்தியல் கூட்டணியாக மாற்றும் பொறுப்பு தி.மு.க-வுக்கே உண்டு. இந்திய அளவில் திராவிட அரசியலின்மீது கவனம் குவிந்திருக்கும் வேளையில், அதை முன்னெடுத்துச் செயல்படுத்தும் வலிமை இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். அ.தி.மு.க. என்பது கிட்டத்தட்ட பா.ஜ.க-வின் தமிழகக் கிளையாகவே மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இந்திய அளவில் கருத்தியல்ரீதியிலான ஒருங்கிணைப்பையும் அரசியல் நகர்வுகளையும் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு தி.மு.க-வின் முன் உள்ளது.      

மீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்

திராவிட அரசியல்மீது உருவாகியிருக்கும் சாதகமான பார்வைகளைப் பற்றிப் பேசும் அதேவேளையில், அதன் எல்லைகளையும் போதாமைகளையும் பேசவும் வேண்டும்.

திராவிட அரசியல்மீது தலித்துகள் முன்வைக்கும் விமர்சனங்கள் முக்கியமானவை. ‘பார்ப்பனர் எதிர்ப்பை முன்வைத்த திராவிட அரசியல், இப்போது இடைநிலைச் சாதிகள் அதிகாரம் செலுத்தும் மையங்களாக மாறிவிட்டன. அதிகாரத்தில் தலித் மக்களுக் கான நியாயமான பங்கு வழங்கப்படவில்லை. பார்ப்பனர் எதிர்ப்பு என்பது சாதி ஒழிப்பாக, தலித் விடுதலையாக நீட்சி அடையாமல், வெறுமனே பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரமும் மேம்பாடும் என்று சுருங்கி
விட்டது’ என்று வைக்கப்படும் விமர்சனங்களில் உள்ள நியாயங்கள் உணரப்பட வேண்டும். ஆனால், இந்த விமர்சனங்களின் அதீதமாக ‘பார்ப்பனர் எதிர்ப்பே தேவையில்லை. அதுதான் இடைநிலைச்சாதிகளின் அதிகாரத்துக்கு வழிவகுத்தது’ என்னும் விலகல் தலித்தியவாதிகளின் வாதம் விந்தையானது. பார்ப்பனர் எதிர்ப்பு இல்லாத பிற மாநிலங்களிலும் இடைநிலைச் சாதி அதிகாரம் இருப்பதையும் தமிழகத்தில் மட்டுப்படுத்தப்பட்டாலும் தேசிய அளவில் பல்வேறு அதிகார மட்டங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் இருப்பதும் அது சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழலைத் தீர்மானிப்பதிலும் கருத்துருவாக்கத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். மேலும், தலித் விரோத இடைநிலைச்சாதி அரசியல் பேசும் சக்திகள் ‘திராவிட’ என்னும் அடையாளத்துக்கு அழுத்தம் தருவதில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்னும் நிலைப் பாட்டையே அவர்கள் எடுப்பதில்லை. ராமதாஸ் உருவாக்கிய ‘தலித் அல்லாத சாதிகளின் கூட்டமைப்பில்’ பிராமணர் சங்கமும் இருந்தது. மேலும் குணாவின் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ புத்தகமே 1994-ல் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி கருத்தரங்கில் வாசிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட கட்டுரையின் அச்சு வடிவம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, திராவிட எதிர்ப்பு, தலித் விமர்சனங்களில் உள்ள இத்தகைய அபத்தமான நிலைப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு, அதன் நியாயங்களைப் பரிசீலிக்க வேண்டும்.

சமகாலச் சூழலின் அடிப்படையில் திராவிட அரசியலின் ‘சமூகநீதி’ என்னும் கருத்தாக்கம் மறுவரையறை செய்யப்பட வேண்டும். அது வெறுமனே இட ஒதுக்கீடு, அதுவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கர் ஆக வேண்டும்’ என்பன போன்ற சில கோரிக்கைகள் ஆகியவையாகச் சுருங்கிவிடக் கூடாது. அது அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து தலித்துகளுக்கான அதிகாரத்தை உறுதி செய்வது, இடைநிலைச் சாதி ஆதிக்க எதிர்ப்பு என்று நகர வேண்டும். உலகமயமாக்கல் சூழல் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், அது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் குறித்த தீவிரமான விவாதங்கள் தொடர வேண்டும். ‘நீட் தேர்வு எதிர்ப்பு’ என்பது முக்கியமான ஒன்றுதான். ஆனால், இதுவரை அதிகபட்சமாக அரசுப்பள்ளி மாணவர்களில் 32 பேரே மருத்துவக்கல்லூரிகளில் நுழைந்திருக்கிறார்கள் என்பது திராவிட அரசியலின் வீழ்ச்சியில்லையா? அது ‘நீட்’டுக்குப் பிறகு ஐந்தாகக் குறைந்திருப்பது இன்னும் அவலம் என்றாலும் தமிழ்வழிக்கல்வி, அரசுப்பள்ளி, கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் ஆதிக்கம், விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள அழிவுநிலை, சுற்றுச்சூழல் பிரச்னைகள், ஆணவக் கொலைகள், கிராமப்புறங்களில் இன்னும் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவை குறித்தெல்லாம் இன்றைய திராவிட அரசியலுக்கு என்ன பார்வைகள், நிலைப்பாடுகள், செயல்திட்டங்கள் இருக்
கின்றன என்ற கேள்வியும் விவாதங்களும் முக்கியமானவை.

பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையிலான இன்றைய தேர்தல் முறைக்கு மாற்றாக, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை ஏற்கெனவே தி.மு.க. முன்வைத்திருக்கிறது. அதை இன்றையச் சூழலில் இடதுசாரிகள், தலித் அமைப்புகளுடன் இணைந்து அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். தி.மு.க-வின் ‘மாநிலச் சுயாட்சி’ பற்றி விடுதலைச் சிறுத்தைகள் பரிசீலித்ததைப்போல, சென்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைத்த ‘கூட்டணி ஆட்சி’ என்னும் அரசியல் கருத்தாக்கம் குறித்தும் தி.மு.க. பரிசீலிக்க வேண்டும். ‘மாநில சுயாட்சி’ என்பது ‘மாநிலத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி’ என்பதாகச் சுருங்கிவிடக் கூடாது.

திராவிட அரசியல் குறித்துப் புதிய பார்வைகள் உருவாகியிருப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் திராவிட அரசியல் தமக்கான சுயவிமர்சனப் பார்வையை உருவாக்கிக்கொள்வதும் முக்கியம்.