Published:Updated:

``ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் புரோக்கர் இவர்தான்” - காங்கிரஸ்

``ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் புரோக்கர் இவர்தான்” - காங்கிரஸ்
``ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் புரோக்கர் இவர்தான்” - காங்கிரஸ்

“அனில் அம்பானிதான் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் புரோக்கர்” என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயபால் ரெட்டி குற்றம் சுமத்தியிருக்கிறார்.

"பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் அதைப்பற்றி எழுதும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்'' என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஆனால், "அப்படி எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு பி.ஜே.பி தலைவர்கள் குரலெழுப்பி வருகிறார்கள். 

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஜெயபால் ரெட்டி, நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்திருந்தார். தனியார் ஹோட்டல் ஒன்றில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. மோடியின் அமைச்சரவைக்குக்கூட ரபேல் ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரியவில்லை. அதைப்பற்றிக் கேட்டால், `உயர்மட்ட அளவில் முடிக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடிக்கு மட்டுமே தெரியும்' என்று கூறி தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர். ரபேல் விமானத்தின் தரம் குறித்த எந்தக் கேள்வியும் இங்கு எழவில்லை. அதே நேரத்தில், திடீரென நடந்த ஏஜென்சி மாற்றம் மற்றும் விலை அதிகரிப்பின் பின்னணி என்ன? ஏப்ரல் மாதம் 10-ம் தேதியன்று ஒப்பந்தம் போடப்பட்ட பின்பு 12 நாள்கள் கழித்து ரிலையன்ஸ் கம்பெனி பெயரில் புதிய ஏஜென்சி தொடங்கப்பட்டு, அதன்மூலம் ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டது எதற்காக?

போர் விமானங்கள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவில் இருந்தும் இதுவரை ஒரு விமானம்கூடத் தயாரிக்கப்படவில்லை. ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடிதான் போர் விமானங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன என்றும் விமானங்களை மேம்படுத்தத் தேவைப்படும் கூடுதல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களால்தான் விலை உயர்ந்துவிட்டதாகப் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. ரபேல் விமானங்கள் வாங்கப்பட்ட விவகாரத்தில் முழுக்க முழுக்க அனில் அம்பானி புரோக்கராகச் செயல்பட்டு இருக்கிறார்.

இதில் 41,000 கோடி ரூபாய் ஊழல் அரங்கேறியுள்ளது. பிரதமர் மோடியின் மௌனமே அந்த ஊழலுக்கு மிகப்பெரிய ஆதாரம். இந்த விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாக மூத்த அமைச்சர்கள் யாருமே வாய் திறக்கவில்லை. அவ்வளவு ஏன், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக்கூட இதில் எதுவும் தெரியாது என்பதுதான் வேடிக்கை. பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே, அதி முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பாதுகாப்புத் துறையை இளையவரான நிர்மலா சீதாராமனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அதே காரணத்துக்காகத்தான், பல முக்கியத் துறைகள் மூத்த அமைச்சர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பிரதமர் மோடியைத் தவிர, இந்த இமாலய ஊழலுக்கு வேறு யாரும் காரணமில்லை. இதை நாடாளுமன்ற விசாரணைக்கு அனுப்புவதோடு உரிய பதிலையும் அவர் அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அவரது ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். இந்த விவகாரத்தை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம். காரணம் தொடக்கமும், முடிவும் அவர்கள்தான். கடந்த 70 ஆண்டுக்கால இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் செய்யத் துணியாத காரியத்தைப் பண மதிப்பிழப்பீடு என்ற பெயரில் மோடி செய்தார். ஒரே நாள் இரவில் பண மதிப்பிழப்பு திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும்?

உழைத்துச் சேர்த்த பணத்தை எடுப்பதற்காக வங்கி வரிசையில் காத்திருந்து உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும், நாடு முழுவதும் அந்தத் தருணத்தில் நின்றுபோன 10,000-க்கும் மேற்பட்ட திருமணங்களுமே அதற்கு சாட்சி. விரைவில் பி.ஜே.பி-க்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்” என்றவரிடம்,  ``டெல்லி யூனியன் பிரதேசத்தில், `யாருக்கு அதிகாரம்' என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, புதுச்சேரிக்குப் பொருந்தாது என்று கவர்னர் கிரண் பேடி கூறுகிறாரே'' என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்பதால், முதல்வரின் அதிகாரம் குறைவாக வரையறுக்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தவிர, டெல்லியில் கவர்னரை யாரும் கேள்வி கேட்க முடியாது.

மற்ற யூனியன் பிரதேசங்களில் கவர்னரைவிட மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெளிவாகக் கூறியிருக்கிறது. கிரண் பேடி அதை ஏற்றுக்கொள்ளாதது அவர் நிலைத் தன்மையில்லாத தாறுமாறான நபர் என்பதால்தான். இன்னமும் அவர் கான்ஸ்டபிள் மனநிலையிலேயேதான் இருக்கிறார். அதன் காரணமாகத்தான் அவருக்குக் காவல் துறையில் டி.ஜி.பி. கமிஷனர் உள்ளிட்ட உயர் பதவிகள் கிடைக்கவில்லை. எப்போதும் சுய விளம்பரத்துக்காக ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பவர் அவர்” என்றார்.

காங்கிரஸ் - பி.ஜே.பி இடையே மோதல் முட்டுகிறது.

அடுத்த கட்டுரைக்கு