அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

 ‘என்னுடைய கருத்தால் ‘மெர்சல்’ படத்துக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை’ என இல.கணேசன் சொல்லியிருக்கிறாரே?


தேர்ந்த அரசியல்வாதி இப்படித்தான் முடிவெடுப்பார். மணிரத்னத்தின் ‘இருவர்’ படம் எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. அந்தப் படத்தை, கருணாநிதியைப் பார்க்க வைக்க முயற்சி செய்தார்கள். கருணாநிதி தவிர்த்துவிட்டார். தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட ஒருவர் மூலமாக படத்தின் கதையைத் தெரிந்துகொண்டார். அதில் தனக்குப் பிடிக்காத பகுதிகள் இருப்பதை அறிந்துகொண்டார். அந்தப் படத்தை விமர்சித்து, படத்தைப் பிரபலப்படுத்தி விடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அமைதியாக இருந்துவிட்டார். தேர்ந்த அரசியல்வாதிகள் இப்படித்தான் முடிவெடுப்பார்கள். இல.கணேசன் இதை ஊருக்குச் சொல்வதற்கு முன்னதாக, ஹெச்.ராஜாவுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

மாநிலத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க, ஒரு திரைப்படத்துக்கு இவ்வளவு விமர்சனங்களும் விவாதங்களும் தேவைதானா?


மற்றவை எல்லாம் பிரச்னைகளாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லவா? ஒருவேளை, நாடு சுபிட்சமாக இருப்பதாக நினைக்கிறார்களோ என்னவோ?!

கழுகார் பதில்கள்!

எஸ்.கே.வாலி, த.முருங்கப்பட்டி.

 ‘மெர்சல்’ பட சர்ச்சைகளால் மிரண்டது விஜய்யா? பி.ஜே.பி-யா?


இருவருமில்லை. படத்துக்குக் கிடைக்கவேண்டிய பப்ளிசிட்டி விஜய்க்குக் கிடைத்ததால், வியாபாரம் அமோகம் ஆனது. பி.ஜே.பி-க்கும், பேசுவதற்கு ஒரு விஷயம் கிடைத்தது. அதன் தலைவர்களை விரட்டிவிரட்டி மீடியாக்கள் கருத்து வாங்கினார்கள். இருவரும் விரும்பியது இந்தப் பிரபல்யத்தைத்தான்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘சிங்கப்பூரைவிட, தமிழ்நாட்டில் டெங்கு குறைவு’ என்கிறாரே அமைச்சர் விஜயபாஸ்கர்?


விஜயபாஸ்கருக்கு, சிவகங்கைக்கும் சிங்கப்பூருக்கும் வித்தியாசம் தெரியாது போலும்.

ச.புகழேந்தி, மதுரை-14.

‘மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு வைகோவே காரணம்’ என்று பிரேமலதா விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?


விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததுதான் மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம் என்று மற்ற தலைவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், பிரேமலதா இப்படிச் சொல்லியிருக்கிறார். பொதுவாக, வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் அதிகம். தோல்வி எப்போதுமே அநாதைதான்.

கழுகார் பதில்கள்!

சொ.ஆகாஷ், ரோஸ்மியாபுரம்.

‘அ.தி.மு.க-வில் சின்னச் சின்ன மனக்கசப்புகள் இருப்பது உண்மைதான்’ என்கிறாரே முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி?


முனுசாமியின் பெருந்தன்மையைப் பாராட்டத்தான் வேண்டும். அவர் கேட்ட பெரிய பெரிய பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதைப்பற்றிக் கவலைப்படாமல், சின்னச் சின்னக் கசப்புகள்தான் இருக்கின்றன என்று சொல்வது பெருந்தன்மைதானே?

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

சிலர் பேசுவதில் உள்ளர்த்தம் கொள்வதிலும், தப்பர்த்தம் கொள்வதிலும், கெட்டிக்காரர்கள் ஆண்களா... பெண்களா?அல்லது  அரசியல்வாதிகளா?


ஆண், பெண், அரசியல்வாதி என்று பிரித்தோ, இன்னார் மட்டும்தான் என்று குறிப்பிட்டோ, சொல்ல முடியாது. தனக்குப் பிடிக்காததை யார் சொன்னாலும், அதற்கு உள்ளர்த்தம் எடுத்துக்கொள்வதும், தப்பான அர்த்தம் கொள்வதும், மனித இயல்பு. அவர்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் சொன்னால், இப்படி யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

‘நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை’ என்கிறார் வள்ளுவர். ‘நல்லது செய்வதிலும் ஒரு தவறு இருக்கிறது. அதனை யாருக்குச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது’ என்பது இதன் பொருள்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தமிழகத்தில் ஐந்தாறு நடிகர்களுக்காவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்போல் தெரிகிறதே?


ஐந்தாறு பேர்தானா? மற்றவர்களுக்கு இல்லை என்கிறீர்களா? ஐந்தாறு பேர் ஆசையை வெளியில் காட்டியிருக்கிறார்கள். மற்றவர்கள் போகப்போகக் காட்டுவார்கள்.

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரதட்சணை எதிர்ப்புப் பிரசாரம் செய்துவருகிறார். அதனால் மனம் திருந்திய ஒருவர், தான் வாங்கிய நான்கு லட்சம் ரூபாய் வரதட்சணையைப் பெண்வீட்டாரிடம் திருப்பிக் கொடுத்துள்ளாரே?


சபாஷ் நல்ல விஷயம். இதேபோல், ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தையும் நிதிஷ்குமார் தொடங்க வேண்டும். லஞ்சம் வாங்கியவர்கள், அதைத் திருப்பித்தரத் தூண்ட வேண்டும்.
 

கழுகார் பதில்கள்!

வி.ஐ.பி கேள்வி!

இனியன் ஜான்
முதன்மைச் செயலாளர், இளைய தலைமுறை அமைப்பு


வம்பர் 1-ம் தேதி, மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம்; தமிழ்நாடு உருவான தினம். ஆனால், தமிழகத்தில் அது பெரிதாக கொண்டாடப்படுவதில்லை. கன்னட மாநிலத்துக்கு உள்ளதுபோல, தனிக்கொடி நமக்கில்லை. தமிழ்நாட்டின் மாநில மலர், மரம், பறவை, விலங்கு என எதுவும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரவில்லை. தமிழும் ஆட்சிமொழி ஆகவில்லை. இவையெல்லாம் நம்மை நெடுநாளாக  ஆண்ட தி.மு.க., ஆளும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் வரலாற்றுப் பிழைதானே?

உண்மைதான். இதற்கான முழுப்பொறுப்பையும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளும்தான் ஏற்க வேண்டும். சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், அந்த வழித்தடத்தில் தொடர்ந்திருந்தால் தமிழ்நாடாக அது தொடர்ந்திருக்கும். இன்று, நாடு இருக்கிறது. தமிழ் இல்லை. ‘பேரு வெச்சியே, சோறு வெச்சியா?’ என்பது சினிமா வசனம். அதுதான் நினைவுக்கு வருகிறது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள்களுக்குத் தருகின்ற முக்கியத்துவம், தமிழ்நாடு பிறந்தநாளுக்குத் தரப்படுவதில்லை. தனி மனிதர்களை முன்னிலைப்படுத்தும் அரசியலாக மாறியதுதான், திராவிட இயக்கத்தின் மீதான முதன்மைக் குற்றச்சாட்டு. தனி மனிதத் துதி, அதிகாரக் குவியலாக மாறும். அதிகாரக் குவியல் ஊழலுக்கு வழிவகுக்கும். இதைத்தான் பார்த்துவருகிறோம்.

தமிழக மாநில மலர் - செங்காந்தள், மரம் - பனைமரம், பறவை - மரகதப் புறா, விலங்கு - நீலகிரி வரையாடு... இது ஊட்டப்படாததால்தான் சினிமா கவர்ச்சியிலும், மோகத்திலும் தமிழ்ச் சமூகம் மூழ்கிவிட்டது. இனியாவது நவம்பர் 1-ம் நாளை தமிழக அரசு கொண்டாடவேண்டும், நாடு முழுவதும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

திருத்தம்!

டந்த இதழ், கழுகார் பதில் பகுதியில் இடம்பெற்ற நிலவேம்புக் கஷாயம் பற்றிய கேள்வியில், ‘இந்திய மருத்துவ கவுன்சிலும் இதை அங்கீகரித்துள்ளது’ எனக் கூறப்பட்டிருப்பது தவறான தகவல். ‘இந்திய மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் இதை அங்கீகரித்திருக்கிறார். தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆராய்ச்சிசெய்து அங்கீகரித்ததுள்ளது’ என்பதுதான் சரி.