Published:Updated:

அ.தி.மு.க. அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளும்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்களும்!

அ.தி.மு.க. அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளும்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்களும்!
அ.தி.மு.க. அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளும்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்களும்!

தமிழக அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்த கட்டுரை...

"இன்று பேசத் தெரியாமல், உளறும் அமைச்சர்களால் அ.தி.மு.க-வுக்கே கெட்ட பெயர். அதிலும் அம்மா (ஜெயலலிதா) எப்படித்தான் இவர்களை எல்லாம் அமைச்சரவையில் வைத்திருந்தாரோ எனத் தெரியவில்லை'' என்று புலம்புகின்றனர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர், தாங்கள் 'என்ன பேசுகிறோம்?' எனத் தெரியாமலேயே உளறிவருகின்றனர். அமைச்சர்களின் உளறல்களுக்கு எத்தனையோ சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்... குறிப்பாக, இந்தப் பட்டியலில் அதிகம் இடம்பிடித்தவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்தான். உளறல் அமைச்சர்களின் பட்டியலில் அவரே முதலிடத்தில் உள்ளார். இவர் ஒருமுறை, "ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்; எங்களிடம் பேசினார் என்று நாங்கள் ஏற்கெனவே சொன்னதெல்லாம் பொய்" என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்தார். மற்றொரு கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார்'' என்றார். இதனால், "தற்போது பிரதமர் யார் என்பதைக்கூட சரியாகச் சொல்லத் தெரியாதவரெல்லாம் அமைச்சரா?'' என அவருடைய இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமைச்சர் செல்லூர் ராஜூவோ, ஏரியில் உள்ள நீர் ஆவியாதலைத் தடுப்பதற்காகத் தெர்மாகோலைவிட்டுச் சாதனை படைத்தார். அவரையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள், ``நீர் ஆவியாதலைத் தடுக்கத் தெர்மாகோல் போட்ட ஐன்ஸ்டீனே” என்று வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். இது ஒருபுறமிருக்க, தஞ்சாவூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி இது'' என்று பேசியது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ``கம்பராமாயணத்தை எழுதியதுகூட யாரென்று முதல்வருக்குத் தெரியவில்லையா'' எனக் கேள்வியெழுப்பிய நெட்டிசன்கள், அதை மிகப்பெரும் விவாதப்பொருளாக்கினர். 

மற்றொரு நிகழ்ச்சியில், கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் பெயரை மாற்றி உச்சரித்த அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்தனர். `சுதா ரகுநாதன்' பெயரை, `சுதா ரங்கநாதன்' என அழைத்து அதிர்ச்சியளித்தார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதே நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், `நடிகை சுஹாசினி மணிரத்னம்' என்பதற்குப் பதிலாக, `சுஹாசினி மணிவாசகம்' என உச்சரித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

காலங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அமைச்சர்களின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் என்னவோ தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அமைச்சர்களின் அதுபோன்ற கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு காய்ச்சி எடுப்போரும் ஓய்ந்தபாடில்லை. ``தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைக் காட்டிலும், தமிழக அமைச்சர்கள் நன்றாக காமெடி செய்கிறார்கள்'' என்கின்றனர், நெட்டிசன்கள்.

அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு தற்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``இந்திரா காந்தி முதல்வராக இருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது'' என்று குறிப்பிட்டு அதிர்ச்சியூட்டினார். `பிரதமர்' என்பதற்குப் பதிலாக இந்திரா காந்தியை, `முதல்வர்' என அவர் குறிப்பிட்டது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் அமைச்சர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் திண்டுக்கல் சீனிவாசன், "ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, டி.டி.வி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுக்கொண்டு, தற்போது தினகரனுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் போன்று அவர் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. அவருக்குப் போட்டியாக அமைச்சர் செல்லூர் ராஜூவும் வேறொரு சர்ச்சையைக் கிளப்பி, தான் ஒன்றும் சளைத்தவர் அல்ல என்று அங்கலாய்த்தார். நிகழ்ச்சியொன்றில் அவர், "அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை இருந்தால்தான், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்கள் பெற முடியும்'' என்று குறிப்பிட்டது தமிழகம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. இந்தமுறை இவ்விரு அமைச்சர்களையும் பின்னுக்குத் தள்ளி புதிதாக ஓர் அமைச்சர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்தார். அவர் வேறு யாருமல்ல... அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிதான். அவர், "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஜாதகத்தில் குரு நேரடிப் பார்வையில் உள்ளார். இதனால், எடப்பாடி அரசை யாராலும் அசைக்க முடியாது'' என்று சொன்னது சர்ச்சையானது. தவிர, வேளாண்மைத் துறை அமைச்சராக உள்ள துரைக்கண்ணு, "காவிரி தண்ணீர் என் பாக்கெட்டிலா இருக்கிறது அல்லது என் வீட்டின் பைப் குழாயிலா இருக்குது, போனவுடன் தண்ணி திறந்துவிடுவதற்கு'' என்று அலட்சியமாய்க் கேள்வி கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், கொள்ளிடம் முக்கொம்பு அணையின் சில மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதற்கு, `தமிழக அரசே காரணம்' என ஒருபுறம் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ஆட்சியாளர்கள் அந்தப் பாதிப்பை உடனே சென்று பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்துவருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியொன்றில், கொள்ளிடம் முக்கொம்பு அணை குறித்துப் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "பக்கத்து மாநிலங்களில் நாம் தண்ணீர் கேட்காமலேயே அவர்களே திறந்துவிடுகிறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திறந்துவிடுங்கள்; நாங்கள் அதைப் பெற்றுக்கொள்கிறோம் என்ற அளவிலே தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. முதலமைச்சருக்குத் தண்ணீர் ராசி என்று நினைக்கிறேன். இங்கே பேசிய அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்குத் தண்ணீர் ராசி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். முக்கொம்பு அணை உடைப்புக்குக் கண் திருஷ்டியே காரணமாக இருக்கலாம்'' என்றும் பேசி பரபரப்பைக் கூட்டினார். 

"தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பலரும் தாங்கள் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற அமைச்சர்களால் அ.தி.மு.க-வுக்கும், அரசுக்கும்தான் கெட்டபெயர் ஏற்படுகிறது. இதுபோன்றவர்களை, அம்மா (ஜெயலிதா), எப்படித்தான் ஏற்கெனவே அமைச்சர்களாக வைத்திருந்தாரோ என்று தெரியவில்லை. நாட்டில் நடக்கும் பிரச்னைகள் குறித்து ஒருவரும் பேசுவது கிடையாது. ஆனால், தாங்கள் பிரபலமாவதற்காக இதுபோன்று ஏதாவதொரு கருத்தை உளறிக் கொட்டுகின்றனர். அன்று, அம்மாவைப் புகழ்ந்த அமைச்சர்கள்தாம், இன்று மோடியையும், எடப்பாடியையும் புகழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் காற்று எந்தத் திசையில் வீசுகிறதோ, அந்தத் திசையில் செல்பவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள், மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்ய முன்வரவேண்டும்'' என்கின்றனர், அமைச்சர்கள் மீதும், ஆட்சியின் மீதும் வெறுப்பில் இருக்கும் கட்சிக்காரர்கள். 

இன்று, உளறிக் கொட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் எல்லாம், அடுத்து தேர்தல் என்று வந்தால், மக்கள் மத்தியில் அறியப்படுவார்களா என்பது சந்தேகமே?

அடுத்த கட்டுரைக்கு