
பசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்!
‘‘முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவச விவகாரத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இது எங்கள் முதல் வெற்றி” எனத் துள்ளிக் குதிக்கிறது தினகரன் தரப்பு. தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து பெறும்போதும், ஒப்படைக்கும்போதும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை டம்மியாக்கிவிட்டது தினகரன் அணி.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திலுள்ள அவரது சிலைக்கு, 13 கிலோ தங்கக் கவசத்தை அ.தி.மு.க சார்பில் 2014-ம் ஆண்டு அன்பளிப்பாக அளித்தார் ஜெயலலிதா. ஆண்டுதோறும் குருபூஜையின்போது, அக்டோபர் 25-ம் தேதி மதுரையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா லாக்கரிலிருந்து தங்கக் கவசம் எடுத்துச் செல்லப்பட்டு, குருபூஜை முடிந்தபின் நவம்பர் 1-ம் தேதி மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்படும். தேவர் நினைவிடக் காப்பாளர்களும், அ.தி.மு.க பொருளாளரும் தங்கக் கவசத்துக்குப் பொறுப்பாளர்கள். இந்த இரு தரப்பினரிடம்தான் கவசத்தை ஒப்படைக்க வேண்டும். தற்போது, அ.தி.மு.க இரு அணிகளாகச் செயல்படுவதால், தங்கக் கவசம் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டது.

அக்டோபர் 27-ம் தேதி காலையில் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு அமைச்சர்கள் சூழ வந்த பன்னீர்செல்வத்துக்கு எதிராக, வங்கிக்கு வெளியே குழுமியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், மோசமான வார்த்தைகளால் கோஷமிட்டனர்.
தினகரன் அணியின் அமைப்புச் செயலாளர் மேலூர் சாமி, அந்த அணியின் பொருளாளர் ரங்கசாமி, வழக்கறிஞர்கள் எனப் பெரும் படையே வங்கியில் அமர்ந்திருந்தது. வங்கிக்கு வெளியே தினகரன் அணியின் மதுரை மாநகரச் செயலாளர் ஜெயபால், பெரும் கூட்டத்தைத் திரட்டிவைத்திருந்தார். இவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை, மதுரை பப்பீஸ் ஓட்டலில் இருந்தபடி, தினகரன் கொடுத்துக்கொண்டிருந்தார்.
கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம் தனி அணி நடத்தியபோது அவரை நீக்கிவிட்டு, திண்டுக்கல் சீனிவாசனைப் பொருளாளராக நியமித்தார் சசிகலா.
எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்தபிறகு பொருளாளர் யார் என்பதில் குழப்பம். இப்படிப்பட்ட நிலையில்தான் பொருளாளர் என்ற முறையில் பன்னீர், கவசத்தை வாங்க வந்திருந்தார். ஆனால் அவரிடம் கவசம் ஒப்படைக்கப்படவில்லை. மிகுந்த ஏமாற்றத்தில், இறுக்கமான முகத்துடன் ஐந்து மணி நேரம் காத்திருந்த பன்னீர், பிறகு வங்கியிலிருந்து வெளியேறினார்.
‘‘தங்கக் கவசத்தை அம்மா செய்து கொடுத்தபோது, என்னைத்தான் காப்பாளராக நியமித்தார். அதனால், என்னிடம்தான் ஒப்படைக்க வேண்டும்” என வங்கி அதிகாரிகளிடம் பன்னீர் விளக்கினார். அதை, தினகரன் அணியினர் எதிர்த்தனர்.
‘‘அ.தி.மு.க-வில் அந்த நேரத்திலிருந்த பொருளாளரைத்தான் காப்பாளராக அம்மா நியமித்தார். தனிப்பட்ட பன்னீரைஅல்ல.இப்போது பன்னீர்செல்வம் பொருளாளர் இல்லை. அவரை நீக்கிவிட்டு ரங்கசாமியை நியமித்துள்ளோம். எங்கள் பொருளாளர் மூலம் தங்கக் கவசத்தைத் தேவர் நினைவிடக் காப்பாளர்களிடம் ஒப்படையுங்கள்’’ எனத் தினகரன் தரப்பு சொன்னது. வங்கி நிர்வாகம் குழம்பியதால் தலைமை அலுவலக வழக்கறிஞர் பிரிவிடம் ஆலோசித்தனர்.

குருபூஜை தொடங்கவுள்ள நிலையில், தங்கக் கவசம் பசும்பொன்னுக்கு வராததால், முக்குலத்தோர் அமைப்புகள் பதற்றமடைந்தன. ஆட்சியில் இருந்துகொண்டு கவசத்தைப் பெறமுடியல்லை என்றால் அவமானம் எனப் பன்னீர் தரப்பு நினைத்தது. இறுதியாக, ‘தேவர் நினைவிடப் பொறுப்பாளர்களிடம் கவசத்தை ஒப்படைக்க எங்களுக்குச் சம்மதம்; ஆனால், பன்னீரிடம் மட்டும் கொடுக்கக் கூடாது’ என்ற நிபந்தனையைத் தினகரன் தரப்பு வைத்தது. வேறு வழியில்லாததால், பன்னீரும் அதை ஒப்புக்கொண்டார். ‘தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம், மதுரை கலெக்டர் மூலம் ஒப்படைக்க ஆட்சேபனை இல்லை’ எனப் பன்னீர்செல்வம் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதேபோல், தினகரன் தரப்பினரும் எழுதிக் கொடுத்தனர். ‘அவர்களிடம் ஏன் எழுதி வாங்குகிறீர்கள்?’ எனப் பன்னீர் தரப்பு கேட்க, ‘அதைச் சொல்ல நீங்க யாரு?’ எனத் தினகரன் தரப்பினர் எகிற, வங்கிக்குள் பரபரப்பு. ஒருவழியாக எழுதி வாங்கப்பட்டபின், மதுரை கலெக்டர் தலைமையில் தங்கக் கவசம் பெற்றுக்கொள்ளப்பட்டு, பசும்பொன்னுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகக் குரல் எழுப்பினார்கள்.
மீண்டும் வங்கி லாக்கரில் தங்கக் கவசத்தை வைப்பதற்கு நவம்பர் 1-ம் தேதி கொண்டுவரப்பட்டபோது பன்னீர்செல்வம் வந்தார். அதற்கு முன்பே காத்திருந்த தினகரன் ஆட்கள், பன்னீருக்கு எதிராக கோஷமிட்டனர். வங்கி லாக்கரில் கவசம் வைக்கப்பட்டது. அதைத் தொட்டுப்பார்க்கக்கூட முடியாமல், பன்னீரும் அமைச்சர்களும் பரிதாபத்துடன் நின்றனர். பன்னீர்செல்வம், இறுக்கமான முகத்துடன் அங்கிருந்து சென்றார்.
அடுத்த ஆண்டு அக்டோபரில் தங்கள் பொருளாளரே கவசத்தைப் பெறுவார் என்று சபதம் செய்துவிட்டுப் போயிருக்கிறார் தினகரன்.
- செ.சல்மான். சே.சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வி.சதீஷ்குமார்