அலசல்
Published:Updated:

“காலி நாற்காலியைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி!” - வேல் வீசும் வேல்முருகன்

“காலி நாற்காலியைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி!” - வேல் வீசும் வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
“காலி நாற்காலியைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி!” - வேல் வீசும் வேல்முருகன்

“காலி நாற்காலியைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி!” - வேல் வீசும் வேல்முருகன்

“தமிழகத்தில் ஆட்சிசெய்யும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களுக்கு, ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்கக்கூட அருகதையில்லை. அரசு ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என யாருடைய கோரிக்கையையும் நிறைவேற்றாமல், ஊர்தோறும் கொண்டாட்ட விழாக்களை எடப்பாடி நடத்திவருகிறார். தான் ஏதோ, ஜெயலலிதாவாக மாறிவிட்டதாக அவர் நினைக்கிறார். காலி நாற்காலிகளைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் நாற்காலியைக் காலிசெய்ய வேண்டும்” என்கிறார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“என்.எல்.சி பிரச்னை மீண்டும் வெடித்துள்ளதே?’’

“என்.எல்.சி-யின் 15 சதவிகிதப் பங்குகளை ரூ.2,500 கோடிக்கு விற்கப்போவதாக மோடி அரசு அறிவித்திருக்கிறது. 2013-ல், அப்போதைய மத்திய அரசு, ஐந்து சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யவிருந்தது. அதை எதிர்த்துப் போராடினோம். தமிழக அரசே அந்தப் பங்குகளை வாங்கி, பிரச்னையை முடித்தது. என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற வாக்குறுதிகளை என்.எல்.சி நிர்வாகம் சரிவர நிறைவேற்றவில்லை. அவர்களுக்கு உடனே நிரந்தர வேலை கொடுப்பதும், நிலம் கொடுத்தவர்களை என்.எல்.சி-யின் பங்குதாரர்களாக ஆக்குவதும்தான் பிரச்னைக்கு ஒரே தீர்வு.’’

“காலி நாற்காலியைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி!” - வேல் வீசும் வேல்முருகன்

“வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க தீர்மானம் போடும் நீங்கள், தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பல திட்டங்களை வேண்டாம் என்கிறீர்களே?’’

“பிரதமர் மோடி, தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்றார். அத்திட்டத்தை வரவேற்றோம். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும்  இன்னும் அது அறிவிப்பாகவே இருக்கிறது. கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கடலூர், நாகை, அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய மண்டலத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களுக்குச் சோறு போடும்  நிலத்தை மலடாக்கும், மக்களை நோயாளியாக்கும் திட்டங்களைக் கொண்டுவருவதில்தான் மத்திய அரசு மூர்க்கத்தனமாக இருக்கிறது.

தமிழகத்துக்குள் வட மாநிலத்தவர் புகுதல் அதிகரித்திருக்கிறது. அதனால், மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில்லாத சூழல் உருவாகிறது. அதை வரைமுறைப்படுத்த வேண்டும். இங்கு, உள்ளூர்க்காரர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.”

“ரஜினியை அரசியலுக்கு இழுத்து வர முயற்சி நடக்கிறது. கமல், விஜய் போன்றவர்களும் அரசியலுக்கு வரும் ஆசையில் இருப்பதாக செய்திகள் வருகின்றனவே?”

“அவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரலாம். ஆனால், தமிழ்ச் சமூகத்தின் கால் நூற்றாண்டு கால பிரச்னைகளில், தமிழக மக்களின் வாழ்வுரிமைகளுக்கு மதிப்பளித்து மக்களின் பக்கம் அவர்கள் நின்றார்களா? திரைத்துறை மூலம் தமிழக மக்கள் அள்ளிக் கொடுத்த பணம்தான் இவர்களின் வாழ்க்கை. அந்த மக்களின் வேதனைகளில் இவர்கள் பங்கெடுத்தார்களா? தனக்கு எது லாபம் தருமோ, அதுபற்றி அந்த நேரத்தில் மட்டும் வாய் திறப்பதும், அதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவிப்பதும்தான் இந்தச் சமூகத்துக்கு அவர்கள் செய்யும் தொண்டா? மக்களின் பிரச்னைகளுக்குக் களத்துக்கே வராத இவர்கள், கோடம்பாக்கத்திலிருந்து நேரடியாக கோட்டையில் முதல்வர் அரியணையில்தான் அமர்வோம் என்று பேசுவது தமிழ்நாட்டில் மட்டும்தான் முடியும். காரணம், வந்தாரைத் தமிழர்கள் வாழ வைத்தார்கள்; ஆளவைத்தார்கள். இனிமேலாவது அந்தப் பார்வையை இவர்களைப் போன்றவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.”

‘‘தமிழர்தான் ஆளவேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமியும் தமிழர்தானே?”

‘‘அவர், பிறப்பால் தமிழராக இருக்கலாம். உணர்வால் தமிழரா என்பதுதான் முக்கியம்.”

‘‘ஜெயலலிதாவை ஆதரித்தவர் நீங்கள். எடப்பாடி தலைமையிலான அரசை ஏன் எதிர்க்கிறீர்கள்?”

“தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் அரசியல் கட்சி எது? அந்தக் கட்சியின் பெயர் இன்னதென்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் குற்றச்செயல் மட்டுமல்ல, வெளிப்படைத்தன்மையற்ற ஜனநாயக விரோதச் செயல். எனவே, தமிழ்நாட்டை ஆளுகிற கட்சி எது? அதன் பெயர் என்ன என்பதைத் தமிழக ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லை. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உடனே உத்தரவிட வேண்டும்.”

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: தே.அசோக்குமார்