அலசல்
Published:Updated:

“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!”

“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!”

தினகரனால் இழுத்தடிக்கப்படும் இரட்டை இலை வழக்கு

‘இரட்டை இலை யாருக்கு... உண்மையான அ.தி.மு.க எது?’ என்பதைக் கண்டுபிடிப்பதற் கான விசாரணையை தலைமைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. ‘இன்று முடிவு தெரியும்’ என்று ஒவ்வொரு விசாரணையின் போதும் மீடியாக்கள் செய்தி வாசித்தாலும், அது நடக்கிற கதையாக இல்லை. ‘ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தைச் சொல்லி வாதத்தை இழுத்தடிக்கிறது தினகரன் தரப்பு’ என்பதே எடப்பாடி - பன்னீர் தரப்பின் புகாராக உள்ளது.

‘345 போலி பிரமாணப் பத்திரங்களை எதிர் அணி தாக்கல் செய்துள்ளது. அது தொடர்பாக குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்’ என அக்டோபர் 30-ம் தேதி விசாரணையின்போது, தினகரன் தரப்பு கேட்டது. அதைக் கறாராக மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். ‘இனியும் அதுபற்றி வாதிட முடியாது’ என்பதால், தினகரன் தரப்பு நவம்பர் 1-ம் தேதி புதிய வாதத்தைக் கையிலெடுத்தது.

“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!”

விசாரணைக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் அணியைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, ‘‘எம்.எல்.ஏ-க்களில் சுமார் 90 பேர் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கிடையாது. எனவே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் அதிகமாக இருக்கிறார்கள் என்கிற அடிப்படையில் முடிவு எடுக்கக்கூடாது. இதையே தேர்தல் ஆணையத்திடம் புதிய கோரிக்கையாக வைக்கவுள்ளோம்’’ என்றார். அதன்படி, ஆணையத்திடம் கோரிக்கையை முன்வைத்தார்கள்.

ஆனால், தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, இதுபற்றி வாதிடவில்லை. ‘‘மார்ச் 22-ம் தேதி இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்ட போது, எல்லா தரப்பினரையும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்கள் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார் அவர். எடப்பாடியும், தினகரனும் ஒரு பக்கத்திலும், பன்னீர் எதிர் பக்கத்திலும் இருந்த காலம் அது.

“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!”

எடப்பாடியும் பன்னீரும் இணைந்த பிறகு, செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினர். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 21-ம் தேதி தேர்தல் ஆணையம், புதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வாய்ப்பு தந்தது. அப்போது தாக்கல் செய்த எந்த ஆதாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே விஜய் ஹன்சாரியாவின் வாதம்.

‘‘1989-ம் ஆண்டு அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டார். அதேபோலவே, 2016 டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலா நியமனம் செய்யப்பட்டார். பொதுச்செயலாளரை நியமனம் செய்யமுடியும் என்ற இந்த முன்னுதாரணத்தை மதுசூதனன் போன்ற சீனியர்கள், தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர். சசிகலாவை நீக்கியது சட்டவிரோதமானது’’ என வாதிட்டார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்த அவருடைய வாதத்துக்கே அன்றைய விசாரணை நேரம் சரியாகப் போய்விட்டது. அடுத்து, தினகரன் தரப்பின் இன்னொரு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி 15 நிமிடங்கள் மட்டுமே வாதிட்டார். அதோடு விசாரணை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 6-ம் தேதியன்று, இரண்டு மணி நேரம் வாதாட சிங்விக்கு நேரம் தரப்பட்டுள்ளது. பின்னர் எதிர்த் தரப்பினரின் பதில் வாதங்களுக்கு நேரம் தரப்படும். எனவே, ‘இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களாவது விசாரணை நடைபெறும்’ என்பதுதான் இந்த வழக்கைக் கவனித்துவரும் வழக்கறிஞர்களின் கணிப்பாக உள்ளது. எப்படியோ, விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பின் எண்ணம் கைகூடியுள்ளது.

நவம்பர் 1-ம் தேதி விசாரணை தொடங்கியபோதே ட்விட்டரில் பதிவிட்ட பன்னீர் தரப்பு எம்.பி மைத்ரேயன், ‘இன்று விசாரணையின் கடைசி நாள்’ என்று பதிவிட்டிருந்தார். இதே எதிர்பார்ப்போடு அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் எனப் பலரும் வந்திருந்தனர். அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!”
“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!”

‘அக்டோபர் 31-க்குள் வழக்கை முடிக்க வேண்டும்’ என்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கொடுத்திருந்த அவகாசம். இதை, நவம்பர் 10-ம் தேதி வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம். இதை தினகரன் தரப்பு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. ‘வெற்றி கிடைக்காவிட்டால்கூட பரவாயில்லை. இரட்டை இலைச் சின்னம் எதிர்த்தரப்புக்குப் போய்விடக்கூடாது’ என்பதில் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் கவனமாக இருக்கிறார்கள். ‘சின்னம் எங்களுக்குத்தான் வேண்டும். இல்லாவிட்டால் முடக்கிவையுங்கள்’ என்பதுதான் அவர்களின் வாதம். அதற்காக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச்  சுட்டிக் காட்டி வாதிடுகிறார்கள்.

எப்படியும் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்க நவம்பர் 10-ம் தேதி வரை நேரம் எடுத்துக்கொள்ளக்கூடும் என்பதுதான் இப்போதைய நிலைமை.

- டெல்லி பாலா