Published:Updated:

``ஷோபியா விவரம் தெரியாத பெண்ணல்ல!'' - பேட்டியெடுத்த வழக்கறிஞரின் கருத்து #VikatanExclusive

``ஷோபியா விவரம் தெரியாத பெண்ணல்ல!'' -  பேட்டியெடுத்த வழக்கறிஞரின் கருத்து #VikatanExclusive
``ஷோபியா விவரம் தெரியாத பெண்ணல்ல!'' - பேட்டியெடுத்த வழக்கறிஞரின் கருத்து #VikatanExclusive

"ஒரு நாட்டின் அரசியல் செயற்பாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படித்தான் ஆதாரமின்றி ஒரு மாணவி மீது குற்றச்சாட்டு வைப்பதா?” - சுசித்ரா விஜயன்

"ஷோபியா விவரம் தெரியாத பெண் கிடையாது; அவருக்கு அரசியல் தெரியும். சமூகத்தின் சிக்கல்கள் தெரியும். மண்ணின் தேவைகள் தெரியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் அந்த மண்ணின் வளத்தையும் மக்களின் உழைப்பையும் எப்படிச் சூறையாடுகிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். தனக்குத் தெரிந்த அரசியலையும் அரசின் மீதிருக்கும் அதிருப்தியையும் வெளிப்படுத்த ஒரு குடிமகனுக்கு உரிமை இல்லையா?”

 - சுசித்ரா பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அத்தனை ஆணித்தரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன. யார் இந்த சுசித்ரா என்பவர்களுக்கு... தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கலவரம் பற்றி `thewire.in' என்ற ஆங்கில வலைதளத்தில் கட்டுரைகளை எழுதினார். அதைத் தொடர்ந்து அவரைப் பேட்டி கண்டவர் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசித்ரா விஜயன். உலக அளவிலான அரசியல் நிகழ்வுகளையும் போர் தொடர்பான ஆய்விலும் தொடர்ந்து இயங்கிவருபவர். தற்போது, நியூயார்க்கில் வசிப்பவரிடம், இந்த விவகாரம் குறித்தும் ஷோபியாவைப் பேட்டி கண்டது பற்றியும் அலைபேசியில் உரையாடினேன்.

"ஷோபியாவின் கைது விவகாரம்  எனக்குப் பெரிய அதிர்ச்சியை அளிக்கவில்லை என்றாலும், மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. ஷோபியாவை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. தூத்துக்குடி கலவரம் பற்றிய அவரின் கட்டுரைகளைப் படித்ததும் பேட்டி காண நினைத்தேன். அப்போது அவர் கனடாவில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். நான் பேசியதிலிருந்தும் பேட்டி கண்டதிலிருந்தும் அவரைப் பற்றிக் கூறுகிறேன். அவருக்குத் தன் சொந்த மண்ணில் எத்தகைய அரசியல் சூழல் இருக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. அரசியல் கட்சிகள் எப்படி ஒரு சூழ்நிலையைச் சூறையாடி ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தார். இதற்குப் பெரிய அரசியல் தத்துவங்களோ, புரிந்துணர்வுகளோ இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் நேரடியாக அதன் விளைவுகளைக் கண்டிருக்கிறார். சமூகத்தில் எத்தகைய கொடுமைகள் அரங்கேறியிருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, அவர் உண்மையைப் பேசியிருக்கிறார்'' என்கிறார் சுசித்ரா விஜயன். 

ஷோபியா கைது நடவடிக்கையில் இருந்த அபத்தங்களையும் சொல்கிறார் சுசித்ரா விஜயன். ``இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் பேட்டியைக் கண்டேன். அவர் ஷோபியாவைத் தீவிரவாதியுடன் தொடர்பு இருப்பதாகவும், ஏதோ ஓர் இயக்கம் சார்ந்து இயங்குவதாகவும் தெரிவிக்கிறார். ஒரு நாட்டின் அரசியல் செயற்பாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படித்தான் ஆதாரமின்றி ஒரு மாணவி மீது குற்றச்சாட்டு வைப்பதா. அரசியலில் இருப்பவர்கள் மக்களிடமிருந்து கிடைக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும். இந்தக் கைது நடவடிக்கையிலேயே பாசிச முறையைத்தான் கையாண்டிருக்கிறது. இந்தக் கட்சியை மட்டும் குறைகூறவில்லை. இந்தியாவிலிருக்கும் அனைத்துக் கட்சிகளும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. ஓர் அரசின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் மாணவிக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டுமே தவிர, ‘என்னைப் எதிர்த்துப் பேசவே கூடாது’ என்று ஒடுக்குவது, ஒரு ஜனநாயக நாட்டுக்கு அழகா. ஒரு ஜனநாயக நாட்டில், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும், அவர்களுக்குச் சேவை செய்வதற்கும்தானே அரசும் அதை நடத்தும் கட்சியும் இருக்க வேண்டும். அதற்கு மாறாக, எனக்கு எதிர்ப்பே வரவிடமாட்டேன் என்று போராடுபவர்களை ஒடுக்குவது சரியா. இந்தியாவில் ஷோபியா மட்டுமன்றி, அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பலரும் பல காலகட்டத்தில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில், வளர்மதிக்கும் இதேபோன்றுதானே நடந்தது. இந்தச் சூழலை அலசிப் பார்க்கும்போது, இந்தியா மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறது” என்கிறார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு