Published:Updated:

உளறிய சின்னத்தம்பி…சுதாரித்த உதயகுமார்... சிக்கலில் விஜயபாஸ்கர்!

உளறிய சின்னத்தம்பி…சுதாரித்த உதயகுமார்... சிக்கலில் விஜயபாஸ்கர்!
உளறிய சின்னத்தம்பி…சுதாரித்த உதயகுமார்... சிக்கலில் விஜயபாஸ்கர்!

உளறிய சின்னத்தம்பி…சுதாரித்த உதயகுமார்... சிக்கலில் விஜயபாஸ்கர்!

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சர்ச்சையில் சிக்கிக்கொள்வது சமீபகாலமாகத் தொடர்கதையாகி வருகிறது. 

`குட்கா' ஊழல் புகாரில் லட்சம் வாங்கியதாக எழுந்த சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, செவிலியர் மற்றும் சத்துணவுப் பணியாளர் தேர்வுக்கு லஞ்சம் வாங்கியதாக வருமான வரித் துறையில் வாக்குமூலம் கொடுத்ததாக எழுந்துள்ள சர்ச்சை தமிழக அரசுக்குத் தலைவலியை உண்டாக்கி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, 2017 ஏப்ரல் 7-ம் தேதி முதல் அடுத்தடுத்து புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, வீரப்பட்டியில் உள்ள மதர்தெரஸா கல்வி நிறுவனங்கள், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் மற்றும் முத்துடையான்பட்டி பகுதிகளில் விஜயபாஸ்கரின் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில், அவரது உறவினர் சுப்பையா பெயரில் நடத்தப்படும் குவாரிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். மூன்று முறைக்கும் மேல் நடந்த இந்தச் சோதனைக்குப் பிறகு, குவாரி மேலாளர் அறை உள்ளிட்டவை சீல் வைக்கப்பட்டன.

சுமார் 13 வருடங்களுக்கும் மேலாக நடந்துவரும் அந்தக் குவாரிகளில் 3 கிரஷர், ஒரு கல்குவாரி, தார் யூனிட்கள் இயங்கி வந்ததும், அதில் 300-க்கும் மேற்பட்டோர் வேலை செய்ததும், குவாரியில் 70 லாரிகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு தார், ரெடிமிக்ஸ், ஜல்லி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், பதிவேடுகளில் மிகக்குறைவான அளவே காட்டப்பட்டது, 35 ஏக்கர் நிலத்தில் ஆரமிக்கப்பட்ட அந்தக் குவாரிகள், ஆயிரம் ஏக்கர்வரை வளர்ந்ததும், அங்கிருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில், அரசு விதிமுறைகளை மீறி, பல லட்சம் கன மீட்டர் அளவுக்குக் கற்கள் வெட்டப்பட்டிருப்பதும் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைப் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், கனிமவளத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததும், குவாரியில் வைக்கப்படும் வெடிகளால், திருவேங்கைவாசல், பெருஞ்சுனை, மேலூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பழைமைவாய்ந்த கோயில்களின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டதையும் அறிந்த உயர் அதிகாரிகள் பதறிப்போனார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியையும், உறவினர் உதயகுமாரையும் திருச்சி வருமான வரித் துறை அலுவலகத்துக்கு நேரில் வரவைத்து திருச்சி மண்டல வருமான வரி உதவி கமிஷனர் யாசர் அராபத், கோவை மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் மத்திய வருமான வரித் துறை அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இலுப்பூர் வீட்டில் பிளாஸ்டிக் உறைகளில் சுற்றி சின்னச் சின்ன பொட்டலங்களாகக் கட்டி வைத்திருந்த 20 லட்சம் ரூபாயில் சுமார் 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் என்றும், அவை செவிலியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் பணி நியமனத்துக்காக லஞ்சமாக வாங்கப்பட்டது என்றும் சின்னத்தம்பி வாக்குமூலம் அளித்துள்ளார். இதை வருமான வரித் துறை அறிக்கையாக வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

யார் இந்தச் சின்னத்தம்பி?

விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, ஆரம்ப காலகட்டத்தில் டைமண்ட் பிசினஸ் செய்துவந்தார். சொந்த ஊரில் கடன் பிரச்னையால், இலுப்பூருக்குக் குடிபெயர்ந்தார். மெள்ள மெள்ள அரசியலில் கவனம் செலுத்தி, கடந்த 1983-ல் அன்னவாசல் ஒன்றிய சேர்மன் ஆனார். ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் ஆகியோரின் விசுவாசியாக வலம்வந்த சின்னத்தம்பி, திருநாவுக்கரசர் ஆரம்பித்த எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவில் மாவட்டத் துணைச் செயலாளராக இருந்தார். சேர்மனாக இருந்தபோதே, வீரப்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தை சின்னத்தம்பி வாங்கிப்போட்டார். அந்த இடத்தில் முதன்முதலில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து மெட்ரிக் பள்ளி, பொறியல் கல்லூரி, நர்ஸிங் கல்லூரி எனத் தற்போது மதர் தெரஸா கல்வி நிறுவனங்கள் என எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. இதை விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் நடத்தி வருகின்றார்.

ரூ.ஆயிரம் கோடி டெண்டர்

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை என அனைத்துத் துறை டெண்டர்களிலும் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி வைத்ததுதான் சட்டம். கடந்த ஐந்து வருடத்தில், மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஒப்பந்தப் பணிகளும், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மற்றும் அவரது பினாமிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. அதில் கடந்த ஐந்து வருடத்தில் சின்னத்தம்பி பெயரில் மட்டும், 1000 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து கடந்த வருடம், திருச்சி நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டனர். அரசு டெண்டர்களில், யார் விண்ணப்பித்தாலும், மற்றவர்களின் விண்ணப்பங்கள், சாக்குப்போக்குச் சொல்லி நிராகரிக்கப்பட்டு விடும். டெண்டர் கேட்க, `தரக்கட்டுப்பாடு சான்று’ தேவையில்லை என நீதிமன்ற உத்தரவு இருந்தும், அதிகாரிகள் டெண்டர்களை மறுப்பதாகவும், இதனால் அரசுக்கு ரூ.60 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள் உள்ளுர்வாசிகள்.

வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்கள்!

கடந்த 2001-ல் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயபாஸ்கருக்கு, அடுத்து சீட் கிடைக்கவில்லை. அதனால் குவாரி பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்போது குவாரி தொழிலிலும் புதுக்கோட்டையைப் பொறுத்தவரை, விஜயபாஸ்கர் வைத்ததுதான் சட்டம். இதற்காகப் பலகோடி மதிப்புள்ள கிரஷிங் யூனிட், பொக்லைன், டிரான்ஸிட் மிக்ஸர், டிப்பர் லாரிகள், ஹாட்மிக்ஸ் பிளான்ட் என ஏகத்துக்கும் வாங்கிக் குவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, `தமிழ்நாட்டில் நிலம் வாங்க, விற்க வேண்டுமா. அணுகுங்கள் விஜயபாஸ்கரை...’ எனத் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதேபோல் ``உஷார்... உஷார்... புதுக்கோட்டை மக்களே உஷார்! இன்று உங்களின் இடம் நாளை விஜயபாஸ்கரின் இடமாக மாறலாம்’ என இன்னொரு போஸ்டரும் ஒட்டப்பட்டது. அந்தளவுக்குக் குவாரிக்காகவும், கல்லூரிகளுக்காகவும் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார்கள். இதன் மதிப்பு மட்டும் 500 கோடிகளைத் தாண்டும்.

கமிஷன்தான் எல்லாம்…

சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தொடங்கி, அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் தந்தை சின்னத்தம்பி, உதவியாளர் அன்பானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து எனப் பலரும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமன ஆணை வழங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்போதும் தொடர்கிறது. சத்துணவுப் பணிகளில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் பணம் வாங்கிக்கொண்டு, தங்கள் விருப்பப்படி பணி ஆணை வழங்கியதைக் கண்டித்து, 20-க்கும் மேற்பட்ட விதவைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, கடந்த மாதம் 27-ம் தேதி முற்றுகையிட்டனர். இதேபோல், செவிலியர் மற்றும் மருத்துவப் பணிக்கு நடந்த தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்குச் சொந்த ஊரில் பணி ஆணை வழங்காமல், தொலைதூர ஊர்களில் பணி ஆணை வழங்கியதுடன், பிறகு கமிஷன் பேசி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதல் வழங்கினர். இதில் சின்னத்தம்பி மற்றும் அவரது உறவினர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. 

இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையில் சின்னத்தம்பி சில விஷயங்களை உளறிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது அண்ணன் உதயகுமாரும் சுதாரித்துக்கொண்டு அதிகாரிகளிடம் பதிலளித்தாலும் சின்னத்தம்பியின் வாக்குமூலம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வில்லங்கத்தை உண்டாக்கி உள்ளது. 

தன் மீதான தொடர் சர்ச்சைகளுக்கு, `வழக்கம்போல எதிரிகளின் சூழ்ச்சி' என விஜயபாஸ்கர் தெரிவித்து, தப்புவதை மத்திய அரசு விரும்பவில்லையாம். சேகர் ரெட்டி விவகாரம், குட்கா விவகாரங்களில் ஆதாரங்கள் இருந்தாலும் விஜயபாஸ்கரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால், `அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் இனியும் பொறுமையாக இருக்கக் கூடாது' என முதல்வருக்குக் கடிதம் அனுப்பியதுடன், அதைச் சென்னையில் வருமான வரித் துறை மூலம் லீக் செய்ததாகவும் கூறப்படுகிறது. இனியும் நடவடிக்கை இல்லையெனில் அடுத்த ஆதாரங்களை வெளியிட வருமானவரித் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் அந்தத் துறை அதிகாரிகள்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க முயற்சி செய்தோம். அதையடுத்து, `ஏப்ரல் 7-ம் தேதி நடந்த வருமான வரித் துறை சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. நான் அதிகாரிகளிடம் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. என் மீதும், எங்கள் குடும்பத்தினர் மீதும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவது மனவேதனை தருகிறது. அரசியல் எதிரிகள் திட்டமிட்டு உருவாக்கும் சூழ்ச்சிகளை நானும், என் குடும்பத்தினரும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்’ எனச் சின்னத்தம்பி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அடுத்த கட்டுரைக்கு