Published:Updated:

ராமமோகன ராவைத் தொடர்ந்து டி.ஜி.பி டி.கே.ஆர்! - எடப்பாடி பழனிசாமியைக் குறிவைக்கும் சி.பி.ஐ. 

மாநிலத்தின் முதன்மை காவல் அதிகாரியாக இருப்பவரைக் குற்றவாளி எனக் கூறி ரெய்டு நடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த துறை மீதும் களங்கம் சுமத்தப்படுவதாகத்தான் இந்த ரெய்டை எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ராமமோகன ராவைத் தொடர்ந்து டி.ஜி.பி டி.கே.ஆர்! - எடப்பாடி பழனிசாமியைக் குறிவைக்கும் சி.பி.ஐ. 
ராமமோகன ராவைத் தொடர்ந்து டி.ஜி.பி டி.கே.ஆர்! - எடப்பாடி பழனிசாமியைக் குறிவைக்கும் சி.பி.ஐ. 

மிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் வீட்டில் நடந்து வரும் ரெய்டு, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. ' அரசின் உயர் பதவியில் இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இது ஓர் ஊழல் மிகுந்த அரசு என்பதை வெளிக்காட்டுவதில் உறுதியாக இருக்கிறார் அமித் ஷா' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

சென்னை, நொளம்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வீட்டு முன்பாக இன்று அதிகாலை இரண்டு இன்னோவா கார்கள் நின்றிருந்தன. அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய 13 பேர், டி.ஜி.பி வீட்டுக்குள் சென்றனர். காலை ஏழு மணிக்கு உள்ளே சென்ற அவர்கள், இன்னும் வெளியில் வரவில்லை. ' டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் டி.ஜி.பியை உட்கார வைத்துவிட்டார்கள். குட்கா விவகாரம் அவ்வளவு எளிதில் ஓயாது போலிருக்கிறது' என சக போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பியுள்ளனர், டி.கே.ராஜேந்திரனுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரைக் குறிவைத்துக் களமிறங்கியிருக்கிறது சி.பி.ஐ. இந்தச் சோதனையில் 150 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

`` ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக இருந்த காலகட்டத்தில் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவைக் குறிவைத்துக் களமிறங்கியது வருமான வரித்துறை. அவர்கள் நேராக தலைமைச் செயலகத்தில் இருந்த ராமமோகன ராவின் அலுவலகத்திலேயே சோதனையை நடத்தினர். சசிகலாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தலைமைச் செயலாளர் குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ராமமோகன ராவ், `` ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் சோதனை நடந்திருக்குமா?' எனக் கொந்தளித்தார். இந்த விவகாரத்துக்குப் பிறகு எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் ஓய்வு பெற்றுவிட்டார் அவர். அதேபாணியில் இன்று டி.ஜி.பியைக் குறிவைத்துக் களமிறங்கியிருக்கிறது சி.பி.ஐ" என விவரித்த தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், தொடர்ந்து நம்மிடம் பேசும்போது, 

`` தமிழக அரசின் முதன்மைக் காவல்துறை அதிகாரியாக இருப்பவர் வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு முன்பாக, சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். டி.கே.ராஜேந்திரன் விவகாரத்தில் அவையெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. இப்படியொரு ரெய்டு நடத்த இருப்பதை மூன்று நாள்களுக்கு முன்பே திட்டமிட்டுவிட்டனர். தமிழக டி.ஜி.பியை நேரடியாக டார்கெட் செய்கிறார்கள் என்றால், டெல்லி எதற்கும் தயாராகிவிட்டது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ' மாநிலத்தின் முதன்மைக் காவல் அதிகாரியே குற்றவாளி' எனக் கூறி ரெய்டு நடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த துறை மீதும் களங்கம் சுமத்தப்பட்டது போலத்தான் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பதவிக்காலம் முடிந்த பிறகும் டி.கே.ஆருக்குப் பதவி நீட்டிப்பு கிடைத்ததற்குக் காரணம் பா.ஜ.க அரசுதான். அவர்களே இப்போது ரெய்டு அஸ்திரத்தை ஏவுவதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் டி.கே.ஆர். தரப்பினர். ரெய்டின் அடுத்தகட்டமாக ஒன்று விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம்" என்றார் விரிவாக. 

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்வதற்கு மிக முக்கியக் காரணம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்குதான். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், ' குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்குக் கடந்த 2013-ம் ஆண்டு தடை விதித்தார் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. ஆனால், இதுதொடர்பான அறிவிப்பு ஆணை 2015-ம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை புறநகரில் உள்ள எம்.டி.எம். என்ற பான்மசாலா நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு கிடங்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.250 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் வரிஏய்ப்பு செய்திருந்தது கண்டறியப்பட்டது. இந்தச் சோதனையின்போது சிக்கிய டைரி மூலமாக, குட்காவை தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சம் கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார். 

அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு நடந்த இந்த விசாரணையின்போது, வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், ' செங்குன்றத்தில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் குட்கா கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினோம். அப்போது, புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலாளர், தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு தனித்தனியாக ரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது' எனத் தெரிவித்திருந்தார்.

இறுதியாக இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் பென்ச், ' மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல், மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரணையை விரிவுபடுத்த சி.பி.ஐ.க்குத்தான் முழு அதிகாரம் உள்ளது' எனக் கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில்தான், இன்று காலை முதலே சி.பி.ஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். 

' டி.ஜி.பியைக் குறிவைத்து சோதனை நடத்தப்படுவது ஏன்?' என்ற கேள்வியை தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். `` இது வழக்கமாக நடைபெறும் சோதனைதான். தமிழ்நாடு ஊழல் நிறைந்த மாநிலமாக இருக்கிறது என சென்னை வருகையின்போது பேசினார் தேசியத் தலைவர் அமித் ஷா. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எந்த மாதிரியான ஆதாரம் கிடைத்தாலும் சோதனை நடத்துவற்குத் தயாராக இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. ஊழல் தொடர்பாக யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்கள் மீது ரெய்டு நடத்தப்படும். டி.ஜி.பி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதும் அந்த அடிப்படையில்தான். சோதனையை நடத்துவது என்பது அரசின் கடமை. இந்த விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்வார்கள். இதை அந்தந்த துறைகள்தான் முடிவு செய்யும். இதை அரசியலாகப் பார்ப்பதைவிட ஓர் அரசாங்கத்தின் பிரிவு, எந்தவித அதிகாரத்தின் நெருக்குதலுக்கும் ஆளாகாமல் செயல்படுவதாகப் பார்க்கலாம்" என்றார் விரிவாக.