Published:Updated:

''தமிழிசை, பக்குவப்பட்டத் தலைவராக நடந்துகொள்ளவில்லை!'- தோழர் தியாகு

''தமிழிசை, பக்குவப்பட்டத் தலைவராக நடந்துகொள்ளவில்லை!'- தோழர் தியாகு
''தமிழிசை, பக்குவப்பட்டத் தலைவராக நடந்துகொள்ளவில்லை!'- தோழர் தியாகு

''தமிழிசை, பக்குவப்பட்டத் தலைவராக நடந்துகொள்ளவில்லை!'- தோழர் தியாகு

ரே நாளில், நாடு முழுக்கப் பிரபலம் ஆகியிருக்கிறார் தூத்துக்குடி மாணவி ஷோபியா! 

கடந்த திங்கள்கிழமையன்று, மாணவி ஷோபியாவும், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது, மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக ஷோபியா கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஷோபியா, நேற்று ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகப் பேசுபவர்களையும், போராட்டம் நடத்துபவர்களையும் ஒடுக்கும் முயற்சியாக பி.ஜே.பி அரசு பல்வேறு வகைகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்துவருகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஷோபியா கைது விவகாரம் நாடு முழுவதும், இணையதள ட்ரெண்டாகியுள்ளது. இதுகுறித்து, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மூத்தத் தலைவர் தோழர் தியாகுவிடம் பேசினோம்...

``அரசுக்கு எதிரான கருத்தைச் சொல்வதற்கு எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. அந்தவகையில் மாணவி ஷோபியாவும் தனது கருத்தை, உரிமையை வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே, ஷோபியா பக்கம்தான் நாங்களும் நிற்கிறோம். 

ஒரு நாகரிகமான தலைவராகத் தமிழிசை இருந்திருந்தால், சிறு புன்னகையோடு இந்த நிகழ்வைக் கடந்துபோயிருக்க வேண்டும். மாறாக, ஷோபியா மீது புகார் கொடுத்திருப்பதும், அதன் தொடர்ச்சியாகக் காவல்துறை அவரைக் கைது செய்திருப்பதும், ஷோபியாவின் முழக்கத்தையே மறுபடியும் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

ஷோபியா எழுப்பிய முழக்கம், தமிழிசை என்ற தனிப்பட்ட தலைவர் மீதான தாக்குதல் முழக்கம் இல்லையே... `பாசிச பா.ஜ.க ஒழிக' என்பது அரசை எதிர்த்த முழக்கம்தானே... `மக்களுக்கு நன்மை செய்யும் மோடி வாழ்க' என்று நீங்கள் முழக்கமிடுவதற்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ... அதே அளவு உரிமை ஷோபியாவுக்கும் இருக்குதானே...? இவ்விவகாரத்தில் தமிழிசை பக்குவப்பட்ட தலைவராக நடந்துகொள்ளவில்லை.

வெறுமனே ஒருவர் கறி வைத்திருந்தார் என்பதாலேயே, `அது மாட்டுக்கறி'தான் என்று சொல்லி அடித்துக் கொல்கிறார்கள் உத்தரப்பிரதேசத்தில். இந்தக் கொலைவழக்கில் தண்டனைப் பெற்று சிறை சென்ற நபர் மறுபடியும் ஜாமீனில் வெளிவரும்போது, அமைச்சர் ஒருவரே அவரை வரவேற்று விருந்து படைக்கிறார்.

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பி.ஜே.பி அமைச்சர்களே ஊர்வலம் போகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவரும் ஒரு பெண், `பாசிச பா.ஜ.க ஒழிக' என்று முழக்கம் எழுப்புவதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?
பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டபிறகு, தக்காளி, முட்டை என்று எத்தனையோ எதிர்ப்புகளையெல்லாம் சந்திக்க வேண்டியது வரும்தான். கடந்த காலத்தில், அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒருவர்மீது நிருபர்கள் கூட்டத்தில் ஷூ வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தச் சூழ்நிலையில்கூட சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர், யாரையும் குறிவைத்துப் பழிவாங்கவில்லை. எம்.ஜி.ஆர் இறந்தபோது, கருணாநிதியின் சிலையை சேதப்படுத்திய தொண்டரைக்கூட, `அந்தச் சின்னத்தம்பி என் நெஞ்சிலேதானே குத்துகிறான்... முதுகில் குத்தவில்லையே' என்று கவிதை எழுதி பெருந்தன்மையைக் காட்டினார் கருணாநிதி. இவையெல்லாம் பண்பட்டத் தலைவர்களின் செயல்பாடுகள். அவமரியாதைக்கு உள்ளாக்கியவர்களேகூட, `அடடா... இந்தத் தலைவரையா நாம் அவமதித்தோம்' என்று வருத்தப்படவைத்துவிடக்கூடிய சம்பவங்கள் இவை. ஆனால், இந்தச் சம்பவத்திலோ `ஷோபியாவின் கடவுச்சீட்டை முடக்கும் வேலைகள்' எல்லாம் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது உண்மையென்றால், பி.ஜே.பி மேலும் மேலும் அசிங்கப்பட்டுத்தான் போகும். 

கைது செய்யப்பட வேண்டிய நபராக இருந்த எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சரோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒன்றாகப் புகைப்படத்துக்கும் போஸ் கொடுக்கிறார். ஆனாலும், எஸ்.வி.சேகரைக் கைது செய்யாத தமிழகக் காவல்துறை இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுகிறது. இதுவே ஷோபியாவின் முழக்கத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுதான்!

`வளர்ச்சித் திட்டங்கள்' என்ற பெயரில், பி.ஜே.பி செய்துவரும் மோசடிகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்பவர்கள் மீதே குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியை பி.ஜே.பி அரசு தொடர்ந்து செய்துவருகிறது. `நக்சலைட், மோடியைக் கொல்ல முயற்சி செய்தனர்' என்றெல்லாம் சொல்லி வரவர ராவ் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். இது எந்தளவு சோடிக்கப்பட்ட வழக்கு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே நான் இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நம்பமாட்டேன். ஆனால், பொதுமக்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் எந்தளவு தெரியும் என்று சொல்லமுடியாது. இதுதான் பி.ஜே.பி-யின் பலம். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பி.ஜே.பி அரசை கடுமையாகப் பாதித்திருக்கிறது... வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இது பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பயத்திலேயே பிரச்னையைத் திசை திருப்பும் நோக்கில், பொய்ச் செய்திகளைப் பரப்பி, அரசுக்கு எதிரானவர்களைக் கைது செய்துவருகிறது மத்திய பி.ஜே.பி அரசு. ஏற்கெனவே, இதே பாணியைக் குஜராத்தில் செய்தவர்தானே மோடி.
சமீபத்திய மாநிலத் தேர்தலின்போதுகூட, `என்னைத் தோற்கடிப்பதற்காக பாகிஸ்தான், காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கிறது' என்று கூசாமல் பொய்யைப் பேசிவிட்டு, பின்னர் வாபஸ் பெற்றவர்தான் மோடி.

தற்போது, பழங்குடியின மக்களுக்கு ஆதரவான போராட்டங்களையெல்லாம் தரைமட்டமாக்க வேண்டும் என்ற முடிவோடு, ராணுவ நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாகத்தான் நக்சல் என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்தக் கைது விவகாரங்கள்!'' என்கிறார் தோழர் தியாகு!

அடுத்த கட்டுரைக்கு