Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை!”

கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்ஹாசன்

அரசியல்வாதி ஆன பிறகு இப்படிப் பேசுகிறேன் என்று தயவுசெய்து நினைக்கவேண்டாம்...

சென்னை, தஞ்சை, மன்னை, பெங்களூரு உள்பட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 187 இடங்களில் வருமானவரிச்சோதனை. ‘அரசியல் காழ்ப்பு உணர்ச்சியே இதற்குக் காரணம்’, ‘பழிவாங்கும் நடவடிக்கை’, ‘இது வழக்கமான அரசு நடைமுறை. மத்திய-மாநில அரசுகளுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’... இப்படிப் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள். ‘நாங்கள் காந்தியின் பேரன்கள் கிடையாது’ என்று அவரும் ஒப்புக்கொண்டு விட்டார். அது மக்களுக்கும் தெரியும். இந்த ரெய்டு எதற்கு என்பதும் அவர்களுக்குப் புரியும்.

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

வரி,வழக்கு விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் வரிகட்டுவதைப் பற்றிச் சில

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

விஷயங்கள் பேச வேண்டும். ‘சரியாக வரி கட்டுகிறேன்’ என்று  நான் ஏன் மார்தட்டிக்கொள்கிறேன்? கட்டாதவர்களை ஏன் குறை சொல்கிறேன்? பாமர மக்களுக்கு இது புரியாமல்கூடப் போகலாம். ஏனெனில், அவர்கள் கட்டபொம்மன் காலத்திலிருந்து மீண்டு வராமல் இருப்பதற்கான வழிகளை அரசியல்வாதிகள் சிலபேர் செய்து வைத்திருக்கிறார்கள். வரி கேட்பவர்கள் தவறான ஆட்கள் என்பது போலவும், கடனுக்கும் கந்துவட்டிக்கும் வரிக்கும் கொஞ்சமே வித்தியாசம் இருப்பதுபோலவும் பாமரனை நினைக்கவைத்துவிட்டார்கள். அதை நான் மறுதலிக்கிறேன்.

‘வரி கட்டமாட்டேன்’ என்று கட்டபொம்மனிடமிருந்து வந்த எதிர்க்குரல்கூட, வந்தேறிகள் நம்மை ஆண்டபொழுது வந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கவேண்டும். அதைக்கூட அவர்களுக்குள் இருந்த ஒருமாதிரியான வியாபாரச் சண்டையாகத்தான் நான் பார்க்கிறேன். ‘இந்திய நாடு, இது என் ஊர் என்ற முழுக் கணிப்பு அவர்களுக்கு வந்திருக்க அப்போது வாய்ப்பே கிடையாது. ஏனெனில், அப்போது அவர்கள் தங்களுடைய குறுகிய நிலங்களை எல்லாம் பெரும் மாகாணங்களாகவும், குறுநில அரசுகளாகவும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அதனால்தான் சுதந்திரத்துக்கு முன் 56 நாடுகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அப்போது அவர்கள் சண்டைபோட்டதுகூட, தேசத்துக்காகவா அல்லது ‘நான் ராஜா, என்னையே நீ வரி கேட்கிறாயா?’ என்ற அந்தக் கோபமா என்பது இன்னும் பிடிபடாத விஷயமாகத்தான் இருக்கிறது. நம் சொற்றொடரில் நாட்டின் பெருமை பேசும்போது இவர்களை சுதந்திரப்போராட்ட வீரர்களாக ஆக்கிக் காட்டியதில் பிசகும் இல்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஆனால், அவர்கள் இந்த இந்தியா என்ற நாட்டை அப்போது கண்டிருக்க முடியாது. ஆனால், அதை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட சிலர் இருந்தனர். அதில் மருதநாயகம் முக்கியமானவராக எனக்குத் தோன்றியது. அதையும் சில வரலாற்று ஆய்வாளர்கள் மறுதலிக்கலாம். ‘நீங்கள் எடுக்கும் சினிமா என்பதற்காக மருதநாயகத்துக்கு மட்டும்தான் அது புரிந்திருக்குமா?’ என்றும் சிலர் கோபித்துக்கொள்வார்கள். ஆனால், அவர் பானிபட் யுத்தம் போன்ற பல போர்களைப் புரிந்துவைத்திருந்த ஆள். ஹைதர் அலியும் இவரும் பானிபட் யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள். வெவ்வேறு யுத்தங்களில் கூலிப்படையாகப்போய் வெவ்வேறு அணிகளில் இருந்தவர்கள். ஒரு பறவையின் பார்வையில் அவர்களுக்கு இந்த நாட்டைப்பற்றிய புரிதல் இருந்தது. ஆனாலும் இப்போதிருக்கும் வரைபடமாக இந்த நாட்டை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வாய்ப்பே கிடையாது. சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு, இனி இங்கே தனித்தனிப் பகுதிகளாக ஆட்சி செய்யமுடியாது என்று உணர்ந்து, இந்தியாவின் ராணியாக விக்டோரியாவை அறிவித்த பிறகுதான் பிரிட்டிஷாருக்கே இந்தியாவின் முழுப்படமும், வியாபாரமும் புரிய ஆரம்பிக்கிறது.

பிறகு வியாபார நலன் கருதியும், சௌகர்யம் கருதியும் இந்த வரைபடத்தை ஒரு குடையின்கீழ் கொண்டு வருகிறார்கள். அதன்பிறகு ரூபாய் நோட்டை இங்கேயே அச்சடிக்கலாம் என்ற முடிவை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்கிறது. அது நம் சுதந்திரத்துக்கே இடையூறாக இருக்கக்கூடும் என்ற பதற்றம் காந்தியாருக்கு வருகிறது. அதனால்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸுக்கு எதிர்க்குரல் ஒன்று இருந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து ‘ஃபிக்கி’ என்கிற ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி என்ற அமைப்பை அவர் ஆரம்பித்துவைக்கிறார். அதனால்தான் ஃபிக்கியில் நான் இன்று இருக்கிறேன். ‘அனைவரின் தேவைக்கும் இயற்கை நல்கும். ஆசைக்கு நல்கவே முடியாது.’ இது ஃபிக்கியைத் தொடங்கிவைக்கும்போது காந்தி சொன்னது.

ஏனெனில், அப்போதும்கூட வரி கட்டுவதில்  சின்னத் தயக்கம் இருந்தது. அதுவும் தவறுதான். ஏனெனில், சாலை, பள்ளிக்கூடம் என்று  அரசு வேலைகள் நடக்கும் இடத்தில் வரி கட்டவேண்டியது முக்கியம். ஆம், பிரிட்டிஷ் அரசாங்கத்திலேயே வரி கட்டாமல் இருந்தது தவறு. ஏனெனில், அவன் தந்த சாலை வசதிகளையும் வாங்கிக்கொண்டு, வரியும் கட்டாமல், ‘இது சரியில்லை’ என்று புகார் மட்டுமே தந்துகொண்டிருந்தது என்னைப் பொறுத்தவரை தவறே. ஆனால் இன்று இது என் நாடாக, இந்தக் குடியின் அரசாக மாறிய பிறகு, வரிகட்டாமல் இருப்பது குற்றம். தவறு என்பதுகூடக் கிடையாது, மிகப்பெரிய தேசத்துரோகம்.

ஆனால், அதை அப்படி யாரும் சொல்லித்தருவதும் இல்லை என்பதே பிரச்னை. அவ்வளவு ஏன், ‘அதைப்பற்றி ரொம்ப அழுத்தாதீர்கள்’ என்று அரசியல்வாதிகள்கூடச் சொல்கிறார்கள். அழுத்தினால், ‘மக்களிடம் இருந்து பறிக்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். இது பறிப்பது அல்ல. ‘செலவுக்கு வைத்துக்கொள்’ என்று பள்ளிக்கூடம் போகும் குழந்தைக்கு அம்மா காசு கொடுப்பதுபோல நாம் அரசுத் துறைகளிடம் கொடுக்கிறோம். அதைக் கொடுத்தேயாகவேண்டும்.

இன்று ‘மெர்சல்’ திரைப்படத்தில்கூட சிங்கப்பூர், லண்டன் பற்றியெல்லாம் வசனங்கள் வருகின்றன. லண்டனில் மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் மிகச்சரியாக வரி கட்டியே தீருகிறார்கள். அதுவும் இங்கு உள்ளதைவிட அங்கு அதிக வரி. அப்படிச் சரியாகக் கட்டினால்தான் அவ்வளவு வசதிகளை நாம் இங்கு எதிர்பார்க்க முடியும். நீங்கள் சுண்டைக்காய் பணத்தைக் கொடுத்துவிட்டு, பூசணிக்காய் வேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால், நாம் அதைத்தான் பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

‘நீ ஒருத்தன் சரியா வரிகட்டுவதால் ஏதாவது மாறுமா?’ என்று கேட்டால் புரட்சியோ, போராட்டமோ... அந்த ஒருவனின் தனிக்குரலில் இருந்துதான் தொடங்குகிறது. பிறகு அந்தக் குரல் இரண்டாகும். பிறகு அதுவே பல்கிப் பெருகும். தேர், எந்த ஒருவனின் பலத்தினால் நகர்கிறது. நம்புகிறவன், ‘உள்ளே இருக்கும் சாமி’ என்பான். விஷயமும் இயற்பியலும் தெரிந்தவன், ‘அது நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது’ என்பான். ‘நான் ஒருத்தன் இழுக்கலைனா என்ன’ என்று நினைத்துவிட்டால் பிறகு தேர் எப்படி நிலைக்கு வரும், உற்சவ மூர்த்தி எப்படி உள்ளே போவார்? ‘தேர் இழுக்க மாட்டேன்’ என்று ஒருவர் ஒதுங்கிச்சென்றால், ‘தெய்வக்குத்தம்டா, நாசமாப்போயிடுவ’ என்று சொல்கிறவர்கள், அதையே வரி கட்டும் விஷயத்தில் யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்களே, ஏன்? ‘நாம கட்டுற வரியைத்தான் அரசியல்வாதி திருடிக்கிறாரே, பிறகெதுக்கு வரி?’ என்பார்கள். அவன் வரி கட்டினாலும், கட்டாமல் விட்டாலும் திருடுவான். அவனைத் திருடாமல் பண்ண வேண்டியதற்கான முன்னெச்சரிக்கை என்பது வேறு. ஆனால், வரி கட்டவேண்டியது நம் கடமை.

 கோயிலுக்கு நேர்ந்துகொண்டு நாம் காசு போட்டு ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தி, அதில் நம் பெயரைக் கொட்டை எழுத்தில் பொறித்துவைக்கிறோம். அந்தமாதிரி நாம் கட்டும் வரியில் நம் பெயர் பொறிக்கவில்லை என்றாலும், நம் நாட்டின் முன்னேற்றப்படிகளில் கண்டிப்பாக நம் பெயர் பதிந்தே தீரும். பொதுவாக வரியை எதிர்க்கும் அறிஞர்கள், அது இல்லாமல் அரசை நடத்த நம்பகமான வழி ஒன்றைச் சொல்லுங்கள். 90 சதவிகிதம் சூப்பர் டாக்ஸ் போட்டுக்கொண்டிருந்தபோதும் ஏய்த்தீர்கள். பிறகு 40, 33, 30 சதவிகிதங்களாகக் குறைத்தபோது நியாயமாகக் கட்டியிருக்க வேண்டுமல்லவா? ஆனால், குறைத்தாலும் ஏய்க்கிறீர்கள் என்றால், எதை வைத்து நாட்டை நடத்துவது என்று கேட்க மாட்டார்களா? அரசியல்வாதி ஆன பிறகு இப்படிப் பேசுகிறேன் என்று தயவுசெய்து நினைக்கவேண்டாம். அதற்கும் முன்பே இதை உணர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அவர்கள் எனக்கு சீனியர்கள், பெரிய நடிகர்கள். பெயர்கள் சொல்ல மாட்டேன். ‘பாத்ரூமில், டைல்ஸுக்குள் ஒளித்து வைத்திருந்த கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது’ என்று நான் பார்த்து வியந்த நடிகர்களைப் பற்றியெல்லாம் அப்போது செய்திகள் வரும். ‘எதற்கு அப்படிப் பணத்தை  ஒளித்து வைக்கின்றனர்? அது அவர்கள் பணம்தானே?’ என்று, நான் சிறுவனாக இருந்தபோது தோன்றும். கேட்பேன். ‘வரி கட்டலைடா’ என்பார்கள். ‘வரி கட்டலைனாலும் அது அவங்க பணம்தானே’ என்பேன். ‘டேய், வரி கட்டணும்டா’ என்று எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்வார்கள். ‘நேரில் பார்க்கும்போது அவ்வளவு கண்ணியவான்களாகத் தெரியும் இவர்கள், வரியைக் கட்டிவிட வேண்டியதுதானே’ என்று நினைப்பேன். ‘ரொம்ப ஜாஸ்தி.. கட்டினா, செலவுக்கே இருக்காது போலிருக்கிறது. பாவம்’ என்றெல்லாம் நினைத்துக்கொள்வேன். இந்த எண்ணம் எனக்கு மாறுவதற்கே பல ஆண்டுகள் ஆகின.

இதற்கிடையில், ‘நாங்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கொள்கிறோம். நீங்கள் ஏதாவது வைத்திருந்தீர்கள் என்றால், இந்தப்பக்கமாகக் கொண்டுவந்து வைத்துவிடுங்கள். `தப்புப்பண்ணிட்டேன், மன்னிப்பு’ என்று எதுவுமே நீங்கள் கேட்க வேண்டாம். ஆறு மாதங்கள் டைம் கொடுக்கிறோம். வரி கட்டிவிடுங்கள்’ என்று அறிவிப்பு வரும். எவ்வளவு பெரிய பதற்றச் சூழலில் அரசாங்கம் இருந்திருந்தால் அந்தமாதிரியான சலுகை கொடுப்பார்கள் என்று தோன்றும். எந்த அரசாக இருந்தாலும் சரி, சிந்தாந்தத்தின்படி நமக்குப் பிடிக்காத அரசாகக்கூட இருக்கட்டும். ஆனால், அரசாங்கம் நடத்தவேண்டுமா, வேண்டாமா? அரசு நியாயமாக நடத்தப்படவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதற்கு அவர்களுக்கு நியாயமான பணம் வேண்டும் இல்லையா? அந்த நியாயமான பணத்தை யார் யார் கொடுக்கிறார்கள்?

வரிகொடுக்கும் இந்தச் சிறுபான்மைக்குப் பல இடைஞ்சல்கள் என்ற குரல்களும் கேட்கின்றன. என்ன இடைஞ்சல் என்பதைக் கண்டு ஆய்ந்து அறிந்து அதை அகற்றுவதற்கான வேலைகளைப் பார்க்கவேண்டுமே தவிர, `வரியே கட்ட மாட்டேன்’ என்று சொல்வது தவறு. உங்கள் வருவாயை மீறி, தவறாக வரி போட்டிருந்தால் தவறு என்று அரசு மீது வழக்கு தொடருங்கள். சட்டத்துக்கு உட்பட்ட ஆர்ப்பாட்டம்கூடச் செய்யலாம்.  ஆனால், வரி கட்டவேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள்  நினைக்கக் கூடாது. இந்த அரசுக்காக நான் பேசவில்லை. சலுகை கொடுப்பவர்கள் நல்ல அரசியல்வாதி என்று நினைத்துவிட்டால், நம்மைவிடப் பெரிய ஏமாளிகள் வேறு யாருமே இருக்க முடியாது. ‘வரி இல்லாமல் பண்ணுகிறேன்’ என்று சொன்னால் எதைவைத்து நாட்டை நடத்தப்போகிறாய் என்று கேட்க வேண்டும். அந்த விழிப்பு இல்லையென்றால் வேறு நாடுகளுக்கேகூட நம் நாட்டை விற்றுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவ்வளவு கொடுமையான அரசியல் இங்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கடந்த வாரம் நான் அறிவித்த ‘மைய்யம் விசில்’ செல்போன் செயலி பற்றி ஒரு தகவல். ‘இந்த ஆப் சமாசாரங்கள் எல்லாம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே போய்ச்சேரக்கூடியது. எல்லோர் கைகளிலுமா போன் இருக்கு’ என்று சிலர் கேட்கிறார்கள். இந்த ஆப் என்பது என் முயற்சிகளில் ஒரு துளி. ருசி பார்க்கப் பதார்த்தத்தின் ஒரு முனையை மட்டுமே உங்களுக்குக் கிள்ளிக் கொடுக்க முடியும். கடையில் உள்ள மொத்தப் பதார்த்தத்தையும் சாம்பிள் பார்க்க இப்போதே கொடு என்றால், கொடுக்க மாட்டேன். ஏனென்றால், மொத்தத்தையும் சாப்பிட்டுப் பார்க்கிறேன் என்று நீங்கள் கொண்டுபோய்விட்டீர்கள் என்றால், நான் என்ன செய்வது?

அரசியலில் பல நுணுக்கங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, போனில் உள்ள மெக்கானிசம் தெரிந்துகொண்டு நாம் அதை வாங்குவதில்லை. அது என்னென்ன செய்யும் என்றுதான் கேட்கிறோமே தவிர, உள்ளே சர்க்யூட்டுகள் எப்படியெப்படிப் போகின்றன என்று பார்ப்பதில்லை. அதேபோல ரயிலில் ஏறுகிறோம் என்றால், அது எங்கே போகிறது, எங்கெங்கு நின்று செல்லும் என்பதைப் பார்த்துவிட்டுத்தான் அதில் ஏறுகிறோமே தவிர, ரயில் இன்ஜின் எப்படி வேலை செய்கிறது என்று புத்தகத்தைப் படித்துவிட்டு ஏறுவது இல்லை. அதேபோல இந்த ஆப் மூலம் மக்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சொல்லலாமே தவிர, இந்த ஆப் எப்படி இயங்குகிறது என்பதை முழுவதும் விளக்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். தவிர, இந்த ஆப் என்பதை மட்டுமே நம்பி நாங்கள் அரசியலில் இறங்கவில்லை. இன்னும் அடுத்தடுத்துப் பல செயல்கள் உள்ளன.

ஒரு சின்னப் பொறி பற்றிக்கொண்டு எரிகிறது. நான் சொன்னதிலிருந்து ஏதோ பின்வாங்கிவிட்டேன் என்று  நினைக்க வேண்டாம். ‘கமலின் தீவிர ரசிகன்’ என்பதை, ‘டெரர் ஃபேன்’ என்றா மொழிபெயர்ப்பீர்கள்? நான் சொன்னதை  ‘ஹிந்து டெரர்’ என்று மொழிபெயர்த்ததும் அப்படித்தான். இந்த வார்த்தைப் பிரயோகம் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிரணியில் நிற்கும் காங்கிரஸின் பிரயோகம். நான் தீவிரவாதம் பரவி வருகிறது என்றுதான் சொன்னேனே தவிர, அவர்கள் ஆங்கிலப்படுத்திய வார்த்தையை நான் பிரயோகிக்கவில்லை. ஆனால், நான் சொன்ன கருத்தில் மாற்றம் கிடையாது. வழக்கு போடும் அளவுக்கு இது ஒரு குற்றமும் இல்லை. உடனே ‘குற்றவாளி அப்படித்தான் சொல்லுவான்’ என்பார்கள். இது குற்றமே இல்லை என்பதுதான் என் வாதம். நான் சொன்னதை மீண்டும் படித்துப்பார்க்க யாருக்குமே நேரம் இல்லை. ஒருமுறைகூடப் படிக்காத வம்பர்கள் இனிமேலும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

ஆனால், மதத்தையும் தீவிரவாதத்தையும் சேர்த்துப் பேசவே கூடாது என்ற ஒரு புதுச் சட்டத்தைச் சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எண்ணெய்யும் தண்ணீரும்போல மதமும் அதுவும் சேராத ஒரு கலவை என்கிறார்கள். ஆனால், பேராசை அல்லது மதமோதானே உலகத்தில் ஏற்படும் கலவரங்களுக்கு முக்கியமான காரணங்கள்? இது கமல்ஹாசன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இங்கு, ‘மதம், கலவரம், வன்முறையைப் பற்றிச் சேர்த்துப் பேசக்கூடாது’ என்று சொல்ல உலக மதங்கள் எதற்குமே அருகதை கிடையாது. ‘ஜைன மதத்தைப்பற்றி அப்படிச் சொல்ல முடியாது’ என்று யாராவது சொன்னால், அதிலும்கூடக் காலஹாச்சாரி என்ற ஒரு போராளி சமணர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் படித்தது, அது நிஜமா பொய்யா என்று தெரியாது. சரித்திரத்தில்கூட நிறைய மிகைப்படுத்திப் பொய்கள் சொல்லப் பட்டுள்ளன.

இப்போது நான் சொல்ல வருவது, இந்து மதம் என்பது மூத்த சமுதாயம். மற்றவர்களுடன் ஒப்பிட்டு யார் உசத்தி, யார் தாழ்த்தி என்பது பற்றிப் பேசவில்லை. எண்ணிக்கையில் இவர்கள் கூடுதலானவர்கள். அண்ணனின் பொறுப்பு இவர்களுக்கு. அப்படியிருக்கையில், ‘நான் பெரிது... நான் பெரிது’ என்று சொல்லும்போது மனதும்  அந்தளவுக்குப் பெரிதாக இருக்கவேண்டும். மற்றவர் அனைவரையும் அரவணைக்க வேண்டும். மற்றவர்கள் தவறு செய்தால்கூடத் திருத்தவேண்டும். தண்டிக்கும் பொறுப்பை நாம் நீதிமன்றங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அது அதைச் செய்தால் போதுமானது. ‘யார் தவறு செய்தாலும் அதற்கான தண்டனை உண்டு’ என்பதை உணர்த்தத்தானே கண்களை மூடிக்கொண்டு நீதித்தராசுடன் இருக்கும் அந்த அம்மாவைக் குறியீடாக நிறுத்தி யிருக்கிறோம்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

நடுநடுவே நீதிதேவதை ஒரு கண்ணை மாத்திரம் திறந்து, ‘யார்’ என்று பார்த்துத் தீர்ப்பு வழங்கக் கூடாது. ‘இது நடக்கிறதா’ என்று கேட்டால், ‘ஆம், இல்லை’ என்பதை மக்களே சொல்வார்கள். அதை நான் சொன்னால் மும்பையில் இருந்தோ, ஆந்திராவில் இருந்தோ வழக்கு போடுவார்கள். நானும் வக்கீல் மகன் என்பதால், போகலாம்தான். பல நீதிமன்றங்கள் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். படித்திருந்தால்தான் நீதிமன்றங்கள் பார்க்க முடியும் என்பதுபோய், படிக்காமலேயே கோர்ட் பார்ப்பதற்கும் வாய்ப்புகள். இதில் அவமானப்பட ஒன்றுமே இல்லை. ‘கோர்ட்டுக்கு இழுத்துவிட்டார்களே. அலைச்சல் வருமே’ என்கிறார்கள். நான் மக்களைத் தேடிப் பிரயாணத்தை ஆரம்பித்து விட்டேன். அதில் ஒரு பகுதியாகத்தான் இதை எடுத்துக்கொள்வேன். வாரணாசி போகணும் என்றால் போய்வருவேன். `ஹேராம்’ படத்துக்காகப் பல நாள்கள் அங்கு சுற்றியிருக்கிறேன். நல்ல நகரம். அதையும் பார்த்துவிட்டு நீதிமன்றத்தையும் பார்த்துவிட்டு வரலாம். கூப்பிட்டால் போய்தான் வரவேண்டும். அங்குபோய் அவர்கள் மொழியில் பேசக்கூடிய அறிவை எனக்கு என் வாத்தியார்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த மொழியில் என் மக்களுடன் பேசுவேன். ஏனெனில், அவர்களும் என் மக்கள்தானே.

ஆனால், இதற்கு முன்பாகப் பல பேட்டிகளில் இதைவிடக் கடுமையாகப் பேசியிருக்கிறேன்.ஆனந்த விகடனில்கூட அப்படிப் பலமுறை பேசியிருக்கிறேன். ஆனால், நான் கடவுளர்களைத் தாக்குவேனே தவிர, எந்த நேரத்திலும் மதங்களைத் தாக்க மாட்டேன். ஏனெனில், அவை மனிதர்களால் ஆனவை. ‘ஒருவிஷயம் சொல்கிறார். பிறகு அதற்கு விளக்கமும் சொல்கிறார்’ என்பார்கள் சிலர். ஆமாம், புரியவில்லை என்றால் சொல்லித்தானே ஆகவேண்டும். ஆனால், நம் சட்டம், நீதியின் மீதான நம்பிக்கை எனக்கு இன்னும் அழியாமல் இருக்கிறது. அங்கும் நியாயம் பார்க்கும் ஆட்கள் பலர் இன்னமும் இருக்கிறார்கள். அதனால்தான் சக்கரம் கழன்றுவிழாமல் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. நியாயம் வழங்கப்படும் என்று நம்புகிறேன். வழங்கப்படவில்லை என்றால் வாதாடுவோம்.

ஏழைகளுக்கு எம்.ஜி.ஆர் நிறைய கொடுத்தார் என்கிறார்கள். இருக்கலாம். அன்று ஒரு வள்ளலை நோக்கிப் பல ஏழைகள் இருந்தனர். ஆனால், இன்று நான் ஒரு ஆள் 10 ஏழைகளுக்குக் கொடுப்பேன் என்றால்... என்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் வள்ளல்கள்; ஆம், சும்மா வந்தவர்களை வள்ளல்களாக மாற்றியிருக்கிறேன். அதுதான் எனக்கான பெருமை. இதுவரை என் நற்பணி மன்றத்தார் தங்களின் சொந்தப்பணம் 30 கோடி ரூபாய்க்கும் மேல் சேர்த்து நற்பணி செய்துள்ளார்கள். ‘கமல் எவ்வளவு பெரிய பணக்காரர்’ என்று என்னைப் பார்த்து வியக்கும் இடத்தில் இருப்பவர்கள், நற்பணி மன்றம் ஆரம்பித்த இந்த 37 ஆண்டுகளில், பணமாக 30 கோடி ரூபாய் நற்பணி செய்துள்ளார்கள். ஆனால், தனிப்பட்ட என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது என்பதே உண்மை.

இதைத்தவிர அவர்கள் தானமளித்த பல லட்சம் லிட்டர் ரத்தத்துக்கு நீங்கள் பண மதிப்பே போட முடியாதே. உடல்தானத்துக்கு விலையே கிடையாதே. கண்தானத்தை எந்த பட்ஜெட்டில் அடக்குவீர்கள்? இது பணத்தின் கணக்கில் வராது. மனத்தின் கணக்கில் வரும். ஆனால், அந்தப்பணத்தில் ஒரு கட்சி நடத்த முடியாது. அதற்கு அதையும்விட அதிகமாக வேண்டும். மக்கள் கொடுப்பார்கள். ரசிகர்கள் அதை மக்களிடம் எடுத்துச்சொல்லும் பிரசாரகர்களாக மாறக்கூடும். அதிலும் எல்லோருக்கும் அந்தத் திறமை இருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஏனெனில், சிலர் செயல்வீரர்களாக இருப்பார்கள்; பேச்சு வராது. தி.மு.கவினர் அற்புதமாகப் பேசும்போது காமராஜருக்கு அந்தளவுக்குப் பேச்சு வராது. அதனால்தான் அவருக்குக் கர்ம வீரர், செயல் வீரர் என்ற பெயர்கள் எல்லாம் இருந்தன.

அந்தமாதிரியும் என் கூட்டத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைமட்டுமே செய்யத்தெரியும். செய்ததைக்கூடச் சொல்லிக்காட்டத் தெரியாது. பெருந்தன்மை காரணமாக, என்ன செய்தோம் என்பதைப் பெரிதாகத் தம்பட்டம் அடிக்காதீர்கள் என்று நான் சொன்னது இன்று, ‘என்ன செய்திருக்கிறார் மக்களுக்கு’ என்ற கேள்வியாக எங்களுக்கே திரும்புகிறது. ஆனாலும், இதெல்லாம் செய்தோம் என்று பட்டியல் போடுவதற்கே வெட்கமாக இருக்கிறது. நாங்கள் அப்படியே பழகிவிட்டோம். அவர்களுக்குக் கணக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காகப் பட்டியல் போடுவதாக இல்லை.

இந்தச் சமயத்தில், ‘கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்’ என்று நான் சொன்னதை ‘ரசிகர்கள் கொடுப்பார்கள்’ என்று சொன்னதாக ஊடகங்களில் செய்தி சொல்கிறார்கள்.

இப்படி விளக்கம் சொல்வதிலேயே என்னைத் தாமதப்படுத்துகிறார்கள். இருந்தாலும் என் நற்பணி இயக்கத்தாரும் மக்களும் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த விளக்கம். எனக்குக் கடிதங்கள், பணம் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், இப்போது வாங்கினால் சட்டவிரோதம். அவற்றை வாங்கிச் சும்மா வைக்கவும் கூடாது. அதனால், திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறேன், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில். இதனால், வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை; முன்வைத்த காலைப் பின்வைக்கிறேன் என்றும் எடுத்துக்கொள்ளக் கூடாது. சரியான கட்டமைப்பு இல்லாமல் இந்தப் பணத்தைத் தொடக் கூடாது. இந்தப்பணம் என்னுடையது என்று நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். அதற்குள் செலவாகிவிட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக்கொள்கிறேன்.

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகிவிட்டது. இன்னும் பெயர் வைக்க வேண்டும்; ரிஜிஸ்டர் பண்ணவேண்டும்; அவ்வளவே. ஆனால், கட்டமைப்புகள், முன்னேற்பாடுகள், தளம் சரியாக அமைய வேண்டும். ஏனென்றால், எனக்குப் பின்னாலும் இது சரியாக நடக்க வேண்டிய இயக்கம். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்யாமல் போனால், இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறுபடிகள் என் இயக்கத்துக்கும் நடக்கும். தனக்குப்பின் என்ன என்பதை யோசிக்காமலேயே விட்டுவிட்டுப்போன பல தலைவர்களால் கட்சிகளுக்கு ஏற்பட்ட கொடுமை நமக்கும் ஏற்படும். அது இங்கு நடக்கக் கூடாது. ஆம், நான் என் சீட்டை இன்றே காலி பண்ணப்போவதைப் பற்றிப் பேச ஆரம்பித்துத்தான் கட்சியையே தொடங்குகிறேன். ஏனெனில், இது சீட்டைப்பற்றிய, சீட்டை நோக்கிய நகர்வு கிடையாது. தமிழகம் நல்ல தமிழகமாக வர, வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

- உங்கள் கரையை நோக்கி!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள
kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.

- கமல்ஹாசன்

படங்கள்: ஜி.வெங்கட்ராம்