Published:Updated:

இறுகும் சி.பி.ஐ பிடி... திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி... தப்பிக்கிறாரா விஜயபாஸ்கர்?

இறுகும் சி.பி.ஐ பிடி... திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி... தப்பிக்கிறாரா விஜயபாஸ்கர்?
இறுகும் சி.பி.ஐ பிடி... திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி... தப்பிக்கிறாரா விஜயபாஸ்கர்?

இறுகும் சி.பி.ஐ பிடி... திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி... தப்பிக்கிறாரா விஜயபாஸ்கர்?

குட்கா வழக்கில் சி.பி.ஐ அதிரடியில் இறங்கியிருப்பது அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, அமைச்சர் விஜயபாஸ்கர் என்று அ.தி.மு.க ஆட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கும் வகையில் வருமானவரித் துறை, சி.பி.ஐ அமைப்புகளின் கை நீண்டிருப்பது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய அரசின் நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்தத் தன்னாட்சிப் புலனாய்வு அமைப்புகளின் ரெய்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. `உடனே பதவி விலக வேண்டும்' என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. இதனால், இந்தக் கெட்டபெயரைச் சரி செய்ய என்ன செய்யலாம் என்று ஆளும் கட்சி யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. 

குட்கா புகாரில் சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அதன்மீது மேல் நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அப்போதைய சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை அப்படியே கிடப்பில் போட்ட நிலையில்தான், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் அவருடைய அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அப்போது சோதனை நடந்தது. அதன் பிறகும் இந்தக் குட்கா வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் முடங்கியே கிடந்தது. 

அதன் பிறகு, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடுத்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றது. குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இதையடுத்து, குட்கா தயாரிப்பு கம்பெனியின் நிர்வாகி மாதவ ராவுக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் சென்னையில் விசாரணை நடத்தினர். கடந்த வாரம் 10 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், மாதவ ராவ் ஏராளமான தகவல்களைச் சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில்தான், நேற்று ஒரே நேரத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 35 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் வீடு, முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியனவும் இந்த ரெய்டு பட்டியலில் அடங்கும்.


இந்த ரெய்டு குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் விளக்கம் அளித்தார். அதேநேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரோ, ''சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில், எந்த விசாரணைக்கும் என் ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளேன். இரவும் பகலும் பொதுச் சேவையாற்றி, மக்கள் நலவாழ்வுத் துறையை இந்திய அளவில் சிறந்து விளங்க நடவடிக்கை எடுத்துவரும் என் மீது, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அரசியல் எதிரிகள் முன்வைப்பது இயல்புதான். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். இவற்றையெல்லாம் கடந்து, மக்கள் பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருகிறேன். 'என் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை.' இந்தப் பிரச்னையைச் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன்'' என்று கூறினார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் இரா.சண்முகராஜன் தனது முகநூல் பக்கத்தில், '' 'குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே குற்றவாளி இல்லை' என்று தன் வீட்டில் நடந்த சி.பி.ஜ விசாரணை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அரசு அலுவலர்கள் தவறு செய்தால் விசாரிக்காமல் உடனடி தண்டனை; ஊழல் தடுப்புத் துறையினால் உடனடி நடவடிக்கை; எவ்வித விசாரணையின்றி கைது மற்றும் சட்டபூர்வ நடவடிக்கை; தற்காலிகப் பணி நீக்கம்; ஓய்வுபெறும்போது பலன்கள் நிறுத்தம். ஆனால், அமைச்சருக்கும் டி.ஜி.பி-க்கும் இந்த விதி பொருந்தாதா? என்னங்கடா உங்க சட்டம். பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்கள் கதறுகிறோம். சட்டத்தைப் பொதுவாக ஆக்குங்கள்'' என்று கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த  ஜார்ஜ், இப்போது டி.ஜி.பி-யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் மீது குட்கா டைரி, குட்கா குடோன் அதிபர் மாதவ ராவ்  வாக்குமூலம் மற்றும் தற்போதையை சி.பி.ஐ ரெய்டு ஆகியவற்றின் அடிப்படையில் ஊழலுக்கான ஆரம்பகட்ட ஆதாரம் வெளிவந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரும் டி.ஜி.பி-யும் தங்கள் பதவிகளை அவர்களாகவே முன்வந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்யவில்லையென்றால், அவர்களைத் தமிழக ஆளுநர் அமைச்சர் விஜயபாஸ்கரையும் தமிழ்நாடு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனையும் எவ்வித காலதாமதமுமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அரசியல் சட்ட அமைப்புகள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாளாவிருந்தால், சம்பந்தப்பட்டவர்களைச் சரித்திரம் மன்னிக்காது'' என்று கண்டித்துள்ளார்.

இந்த ரெய்டு, அ.தி.மு.க அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தியுள்ளது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். "குட்கா பிரச்னையில் கடுமையான நடவடிக்கையை எடுத்தால்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்துள்ள கறை போகும். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் செயல்பட்டால் அ.தி.மு.க அரசுக்குத்தான் கெட்டப்பெயர்" என்று அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதேநேரத்தில், விஜயபாஸ்கர் ஆதரவாளர்களோ, ''முதல்வர், துணை முதல்வர் என்று அனைவர் மீதும் வருமானவரித்துறை புகார் இருக்கிறது. எனவே, தி.மு.க தொடர்ந்த இந்த வழக்கில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுத்தால் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உடந்தையானதாகிவிடும்" என்று சொல்லி வருகிறார்கள். 

இப்படி, விவாதங்கள் நடந்துகொண்டிருந்தாலும், விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ பிடி  இறுகி வருவதால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு முதல்வர் எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார் என்றே சொல்கிறார்கள் உள் விவரமறிந்தவர்கள். இதனால், எடப்பாடி பழனிசாமி திரிசங்கு நிலையில் சிக்கித் தவிக்கிறார். 

அடுத்த கட்டுரைக்கு