Published:Updated:

மோட்ச தீபம், சடங்குகள்... கடவுள் ஆக்கப்படுகிறாரா கருணாநிதி? - தி.மு.க. பதில்

மோட்ச தீபம், சடங்குகள்... கடவுள் ஆக்கப்படுகிறாரா கருணாநிதி? - தி.மு.க. பதில்

தன் வாழ்நாள் முழுக்க மத எதிர்ப்புக் கொள்கையாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு மோட்சதீபம் ஏற்றும் விழாவில், வைணவக்கோட்பாட்டை அறிந்தவர்கள், பார்த்தசாரதியின் பக்தர்கள், பார்த்தசாரதி சொன்ன வார்த்தையை மறந்து எப்படிக் கலந்து கொள்ளலாம்?

Published:Updated:

மோட்ச தீபம், சடங்குகள்... கடவுள் ஆக்கப்படுகிறாரா கருணாநிதி? - தி.மு.க. பதில்

தன் வாழ்நாள் முழுக்க மத எதிர்ப்புக் கொள்கையாளராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு மோட்சதீபம் ஏற்றும் விழாவில், வைணவக்கோட்பாட்டை அறிந்தவர்கள், பார்த்தசாரதியின் பக்தர்கள், பார்த்தசாரதி சொன்ன வார்த்தையை மறந்து எப்படிக் கலந்து கொள்ளலாம்?

மோட்ச தீபம், சடங்குகள்... கடவுள் ஆக்கப்படுகிறாரா கருணாநிதி? - தி.மு.க. பதில்

றைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, இறந்த உடனேயே சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றினார்கள். நான்கு பெரிய அகல்களில் இலுப்பை எண்ணெய், கடலை எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு கோயிலின் நான்கு கோபுரங்களிலும், கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. தவிர, கருணாநிதியின் மறைவுக்காக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் இதுபோன்ற தீபமேற்றும் நிகழ்வுகள் நடந்தேறின. மேலும், மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியைச் சுற்றி தினமும் விதவிதமான பூக்களாலும், பழங்களாலும் அலங்காரம் செய்யும் நிகழ்வும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கருணாநிதி தொடங்கிய முரசொலி பத்திரிகையின் பிரதி ஒன்று சமாதியில் உள்ள அவரின் உருவப்படத்துக்கு அருகே தினந்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட மறுநாளே, கவிஞர் வைரமுத்து அவரின் சமாதிக்கு வந்து பால் ஊற்றிய சம்பவம் மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியது. முன்னாள் அமைச்சரும், தி.மு.க. முக்கிய நிர்வாகியுமான எ.வ. வேலு, தி.மு.க. தொண்டர்கள் சிலருடன் கருணாநிதி சமாதிக்குச் சென்று அவரைப்பற்றிய துதிப்பாடல் பாடி, ஆடிய சம்பவமும் சமூக வலைதளங்களில் பரவி, கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்தச் சூழ்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் தலைமையில் செயல்படும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தில், கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், திருவருட்பா, நாராயண மந்திரம் ஆகிய பாடல்களைப் பாடினார்கள். அத்துடன் 1008 வைணவ பாகவத அடியார்கள் திரண்டு `ராமானுஜர் நூற்றந்தாதியும்' ஓதி இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோட்ச தீபமும் ஏற்றப்பட்டது. இத்தகைய சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது, கடவுள் மறுப்புக் கொள்கையை தன் வாழ்நாள் இறுதிவரைக் கடைப்பிடித்த கருணாநிதியை இதுபோன்றவர்கள் என்னவாக சித்திரிக்கப்பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. கருணாநிதியின் திராவிடச் சிந்தனைகளுடன் இதுபோன்ற அஞ்சலி நிகழ்வுகள் எந்தளவுக்கு விலகி நிற்கின்றன. கருணாநிதி கடைப்பிடித்த கொள்கைகளுக்கு இவை அனைத்தும் முரண்பட்டவை அல்லவா போன்ற கேள்விகளைச் சிலரிடம் முன்வைத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டேன்.

விடுதலை ராஜேந்திரன், 

திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் 

``மறைந்த கருணாநிதியின் அதிதீவிர விசுவாசியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கவிஞர் வைரமுத்துவுக்கு, இதுபோன்றதொரு சடங்கு தேவைப்பட்டிருக்கிறது. கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அதை வைரமுத்து வெளிப்படுத்திக்கொண்டார். அறியாமையால் வைரமுத்து இப்படி நடந்துகொண்டால் நாம் என்ன செய்ய முடியும். மேலும், வைரமுத்துவைப் பொறுத்தவரை, தி.மு.க-வில் அவர் இல்லை. அவருடைய மூடநம்பிக்கையுடன் கூடிய இந்தச் செயலுக்கு தி.மு.க. பொறுப்பேற்க வேண்டியதில்லை. அதுபோலவே, கருணாநிதி சமாதியில் தொண்டர்களுடன் சென்று எ.வ.வேலு பாடியது பக்திப்பாடல் அல்ல. ஆனால், ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோட்ச தீபம் ஏற்றுவது, கீர்த்தனைகளையும், பாசுரங்களையும் பாடுவது போன்றவை கடுமையாகக் கண்டிக்கத்தக்கவையே. இத்தகைய சடங்குகளுக்கு முற்றிலும் எதிரானவர் கருணாநிதி. ஜெகத்ரட்சகன் வைணவ பக்தராக இருக்கலாம். ஆனால், அவர் தன்னுடைய நம்பிக்கையை அவருக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். கருணாநிதிக்கான அஞ்சலி என்ற பெயரில், அதைத் திணித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது களங்கம் சுமத்தக் கூடாது. தி.மு.க-வின் கொள்கைகளுக்கு உட்பட்டுத்தான் அவர் கட்சியில் இருக்கிறார். கருணாநிதிக்காக ஜெகத்ரட்சகன் செய்த இதுபோன்ற ஆன்மிகச் செயல்பாடுகளுக்காக, கட்சியையும் சேர்த்து விமர்சிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஆண்டாள் குறித்து வைரமுத்து கருத்துத் தெரிவித்த பிரச்னையில் தி.மு.க. தரப்பில் வைரமுத்துவுக்கு எதிராகக் குரல்கொடுத்த ஒரே நபர் ஜெகத்ரட்சகன்தான். இப்போது எம்.ஜி.ஆர். கழகத் தலைவராக இருக்கும் ஆர்.எம்.வீரப்பன், ஒருகாலத்தில் இதுபோன்றுதான் செயல்பட்டார். அவரின் சிஷ்யராக அறியப்படும் ஜெகத்ரட்சகன் இப்படிச் செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. என்றாலும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் தொடர தி.மு.க-வினர் அனுமதிக்கக் கூடாது. கருணாநிதிக்காக ஜெகத்ரட்சகன் மோட்ச தீபம் ஏற்றியதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்".

வானதி சீனிவாசன், 

துணைத் தலைவர், தமிழக பி.ஜே.பி.

``ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியாக, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை இரண்டு விதமாகப் பார்க்கிறேன். இதுபோன்ற

சடங்குகளை நான் வரவேற்கிறேன். நம்முடைய கலாசாரம், நம் நாட்டு மக்களை எந்த அளவுக்கு பிணைத்திருக்கிறது என்பதற்குக் கடவுள் எதிர்ப்பாளரான கருணாநிதிக்குச் செய்துவரும் சடங்குகளே சான்று. பல்வேறு மொழிகளை, பழக்கவழக்கங்களை, பல்வேறு மத நம்பிக்கைகளை வைத்திருந்தாலும் சடங்குகளில் யாரும் முரண்பட்டு நிற்காமல் இருப்பதைக் கவனியுங்கள். அடிப்படையில் பி.ஜே.பி., இத்தகைய தேசிய ஒற்றுமையைத்தான் அழுத்தமாக வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல அடுத்தவர்களின் நம்பிக்கையில் நாம் தலையிடுவதும் தவறு. கருணாநிதி உயிரோடு இருந்தவரை, தீவிரமான மத எதிர்ப்பாளராகவே இருந்தார். ஆனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கோயில்களுக்குச் செல்வதை அவர் தடுக்கவில்லை. கருணாநிதியின் மகள் செல்வி, வேணுகோபால சுவாமி கோயிலுக்குத் தொடர்ந்து செல்லக்கூடியவர். ஆகவே, அவ்வாறு செய்பவர்களை நாம் விமர்சிக்கத் தேவையில்லை. 

இரண்டாவது விஷயம், தி.மு.க-வினரே பஜனை, பால், மோட்ச தீபம் எனச் செய்து வருவது இந்தச் சமூகத்தில் இனி கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வேலை இல்லை என்பதையே காட்டுகிறது. உடல் எங்கே புதைத்தால் என்ன என்கிற பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு, மெரினாவில்தான் கருணாநிதியின் உடலை புதைக்க வேண்டுமெனக் கேட்டார்கள். உணர்வுரீதியாக அதைப் பார்த்தார்கள். இப்போது அந்தச் சமாதியைப் புனிதமாக்குகிறார்கள். இதை நான் தவறாகப் பார்க்கவில்லை. இதுதான் இந்து மதத்தின் கலாசாரம். நம் வீட்டிலுள்ள முதியோர்களை நம் வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்து அவரை ஒரு கடவுளாக வழிபடுவோம். தி.மு.க-வினரும் அதைத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் தி.மு.க-வினரின் இந்து தேசியத் தன்மை, கருணாநிதிக்குச் செய்யப்படும் சடங்குகள் மூலம் வெளிப்படுவதை ஆரோக்கியமானதாகவே நான் பார்க்கிறேன்."

சுப. வீரபாண்டியன்,

பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

``தலைவர் கலைஞரைப் பொறுத்தவரை, கடைசிவரை பகுத்தறிவாளராக வாழ்ந்தவர். ஆனாலும், அவரைப் பின்பற்றுகிற அவரைப் போற்றுகிற, அனைவரும் பகுத்தறிவாளர்களாகவே இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்துக்கு ஏற்பவும், தங்களின் நம்பிக்கைக்கு ஏற்பவும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். அதனை நாம் தடுக்கவும் முடியாது. என்றென்றும் அவருடைய எழுத்துகளும், பேச்சுகளும்தான் நமக்கு வழிகாட்டுமே தவிர, அவரைப் போற்றியவர்கள், தாங்கள் கொண்டுள்ள அன்பின் காரணமாகப் பல்வேறு வழிகளில் இரங்கல் தெரிவிப்பது, வழிகாட்டுதலாக அமையாது. எனினும், ஒருவரைப் போற்றுகிறவர்கள், அவர் கருத்துகளுக்கு மாறான அவர் நம்பிக்கை கொண்டிராத வழிகளில் அவருக்கு இரங்கல் தெரிவிப்பது அவருக்குப் பெருமைசேர்க்கும் செயலாக அமையாது என்பது என்னுடைய கருத்து".

அனந்த பத்மநாத சுவாமி ஆச்சாரியார்:

``பகவத் கீதையில் கண்ணன், அர்ஜுனனைப் பார்த்து, என்ன உபதேசம் சொல்கிறார் என்றால், `எவன் என்னை வெறுக்கவில்லையோ, எவன் நான் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறானோ, என்னுடைய உபதேசங்களை அவனுக்குச் சொல். ஒருபோதும் என்னிடத்தில் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லாதே' என்று குறிப்பிடுகிறார். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜெகத்ரட்சகன்

மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. தன் வாழ்நாள் முழுக்க இந்து மத எதிர்ப்புக் கொள்கையாளராக இருந்த கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றும் விழாவில், வைணவக் கோட்பாட்டை அறிந்தவர்கள், பார்த்தசாரதியின் பக்தர்கள், பார்த்தசாரதி சொன்ன வார்த்தையை மறந்து எப்படிக் கலந்து கொள்ளலாம். தமிழஞ்சலி செய்தார்கள், அதில் தவறில்லை. ஆன்மிக வழிபாடு ஏன்? இந்தச் சடங்கை கருணாநிதியே விரும்பி இருக்க மாட்டாரே. அவருக்கு ஏன் இதைச் செய்ய வேண்டும். இந்து மத வழக்கப்படி, அவருக்கு அஞ்சலி செலுத்துவது விந்தையிலும் விந்தை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நிறைய திருப்பணிகளைச் செய்தவர். அவருக்கு ஏன் மோட்ச தீபம் ஏற்றவில்லை. இந்த ஆழ்வார் பெருமக்கள் ஏன் அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. ஆண்டாளை, கவிஞர் வைரமுத்து தரக்குறைவாகப் பேசியபோது வைரமுத்துவுக்கு எதிராகத் திரண்டு ஏன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடவில்லை. சமீபத்தில் முக்தியடைந்த இரண்டு ஜீயர்களுக்குக்கூட இவர்கள் மோட்ச தீபம் ஏற்ற முன்வரவில்லை. ஆனால், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மட்டும் புறப்பட்டிருக்கிறார்கள் என்றால் என்ன காரணம். அனைத்துக்கும் காரணம் பணம். பணம்தான் இவர்களை இப்படிச் செய்யச் சொல்கிறது. இவர்களின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!"

கருணாநிதியின் மறைவுக்கு மோட்ச தீபம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினேன்.

``மோட்ச தீபம் ஏற்றினால் இறந்தவரின் ஆத்மா சாந்தியடையும் என்கிற இறைநம்பிக்கை உண்டு. நான் நம்புகிற ஒரு விஷயத்தை இறந்துபோன என் தந்தை போன்ற நிலையில் உள்ள கலைஞர் கருணாநிதிக்காகச் செய்தேன். இதைக் கேள்வி கேட்க, இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்து மதமும், அதன் சடங்குகளும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் சொந்தமா என்ன? ராமானுஜர் பற்றி கருணாநிதி எழுதியிருக்காவிட்டால், இந்துக்கள் பலருக்கே ராமானுஜர் யார் என்று தெரிந்து இருக்காது. `பெரியார் செய்த சீர்திருத்தங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்துவிட்டார்' என்று சொன்னார் கருணாநிதி. நல்லதை யார் செய்தாலும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களை அடையாளப்படுத்தக் கூடியவர் அவர். இதற்கிடையே, இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். `இறைமறுப்பு மட்டுமே திராவிடக் கொள்கை அல்ல' என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். என் தந்தை போன்றவருக்கு ஆத்மார்த்தமாக, நான் செய்ததை யாருக்கும் இனி விளக்க வேண்டியதில்லை" என்றார் ஜெகத்ரட்சகன்.