Published:Updated:

`ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்' - ஏழுபேரின் விடுதலைகுறித்து ஜெயக்குமார் பேட்டி

`ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்' - ஏழுபேரின் விடுதலைகுறித்து ஜெயக்குமார் பேட்டி
`ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்' - ஏழுபேரின் விடுதலைகுறித்து ஜெயக்குமார் பேட்டி

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று சென்னையில் இருந்து விமானம்மூலம் திருச்சி வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ''பெட்ரோல், டீசல் விலை  உயர்வைக்  குறைப்பதற்கு மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய்  உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டுவருகிறது. எரிபொருள்கள் விலையைக் குறைக்கவில்லை என்றால், பெரும் பாதிப்பை உண்டாக்கும். கலால் வரியை மத்திய அரசு குறைப்பதன் மூலம், எரிபொருள் விலை குறையக்கூடும். இதனால்,  பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள். மாநில அரசைவிட மத்திய அரசுக்கு வருவாய் அதிகம். அதனால், தமிழக அரசால் எரிபொருள் விலையைக் குறைக்க முடிவில்லை.   

டி.டி.வி.தினகரன், எதிர் வரும் காலங்களில் ‘நாம் ஒருவர், நமக்கு ஒருவர்’ எனத் தனிமைப்பட்டு நிற்பார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்கள் விடுதலைகுறித்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கருத்துக்கு வலு சேர்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏழு பேரின் விடுதலைகுறித்து, தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை விடுதலை செய்வதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம்.  அந்த வழியில், 7 பேர் விடுதலை என்பதுதான்  தமிழக அரசின் நோக்கம். அவர்களது விடுதலை தொடர்பாக, தி.மு.க மத்தியிலும் மாநிலத்திலும் அதிக அதிகார பலத்தோடு இருந்தபோது, இவர்களின் விடுதலையை உறுதிப்படுத்தவில்லை. நிச்சயம், ஜெயலலிதாவின் விருப்பப்படி ஏழுபேரின்  விடுதலைகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.

குட்கா விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கையாகக் கைதுகள் நடக்கிறது. ஆனால் எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. இது, ஆரம்பகட்ட விசாரணை என்பதால், ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு