Published:Updated:

டிக்கெட் கருவி வாங்கியதில் விதி மீறல் இல்லை: அமைச்சர் விளக்கம்

டிக்கெட் கருவி வாங்கியதில் விதி மீறல் இல்லை: அமைச்சர் விளக்கம்
டிக்கெட் கருவி வாங்கியதில் விதி மீறல் இல்லை: அமைச்சர் விளக்கம்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு பயணச் சீட்டுக் கருவிகள் வழங்கும் திட்டத்தில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புவி இருப்பிட முறைமை கொண்ட மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்துவது குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி குறித்தும், அதன் தொடர்ச்சியாக, கருணாநிதி எழுப்பியுள்ள வினாக்கள் குறித்தும் 1.4.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் அளித்த அறிக்கையை கருணாநிதி படித்தாலே போதும்.

உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிடும். இருப்பினும் “அரைத்த மாவையே அரைத்தது போல” என்ற பழமொழிக்கேற்ப மீண்டும் அதே புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

இந்த கம்பெனி என்றைக்கு தொடங்கப்பட்டது? எப்போது டெண்டர் கொடுக்கப்பட்டது? டெண்டர் நிபந்தனையாக மூன்றாண்டுகள் அனுபவம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களே அது ஏன் புறக்கணிக்கப்பட்டது? ஏதோ ஒரு பெயரில் இந்த நிறுவனம் இயங்கி வந்தது என்றால் அந்த நிறுவனத்தின் பெயரால் டெண்டர் கோரி இருக்க வேண்டியதுதானே? ஏன் அரசின் நிபந்தனை தளர்த்தப்பட்டது?” என்று பல கேள்விகளை கருணாநிதி அடுக்கியிருக்கிறார்.

##~~##
10.1.2005அன்று பதிவு செய்யப்பட்ட எர்ரம் சொல் யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வருமானவரித் துறையினரால் ஏ.ஏ.ஏ.சி.ஒய். 2368எல் என்னும் நிரந்தர கணக்கு எண் வழங்கப்பட்டது. பின்னர், இந்நிறுவனம், மேங்கோ ஹெல்த் கேர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோதும், தற்போது இன்ஜெனரி டெக் னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றப்பட்ட பிறகும் அதே வருமான வரி நிரந்தர கணக்கு எண், அதாவது ஏ.ஏ.ஏ.சி.ஒய். 2368எல் என்ற எண் தான் தொடர்கிறது. இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்தின் அனுபவம் 7 ஆண்டுகள் ஐந்து மாதம் என டெண்டர் ஆய்வுக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே, டெண்டர் நிபந்தனையாக மூன்றாண்டுகள் அனுபவம் வேண்டும் என்பது மீறப்படவில்லை. டெண்டர் படிவம் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாள் 7.9.2012 ஆகும். எனவே, டெண்டர் நிபந்தனை தளர்த்தப்பட்டது என்ற கேள்விக்கே இட மில்லை. அரசுக்கு வழங்கப்படும் மின்னணு பயணச் சீட்டுக் கருவிகள் தரம் உடையதாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், அக்கருவிகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள இதர போக்குவரத்து நிறுவனங்களுக்கோ அல்லது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கோ ஒரு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 மின்னணுப் பயணச் சீட்டுக் கருவிகள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், அல்லது 2000 மின்னணு கணக்கீட்டுக் கருவிகள் வழங்கி இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இன்ஜெனரீஸ் டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை முதன்மை நிறுவனமாக கொண்டுள்ள கூட்டுக் குழுமத்தின் துணை நிறுவனமாக ஹைதராபாத் அனலாஜிக்ஸ் டெக் இந்தியா நிறுவனம் இதுவரை ஆந்திரா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 9,732 மின்னணு பயணச் சீட்டு கருவிகள் வழங்கியுள்ளது.
இன்ஜெனரீஸ் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரை வேட் லிமிடெட், ஹைதராபாத் நிறுவனத்தின் பங்குதாரர்கள், ஹைதராபாத்தில் உள்ள மத்திய அரசின் கம்பெனி பதிவாளருக்கு தங்கள் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பதிவிற்காக 6.1.2013 அன்று விண்ணப்பித்துள்ளார்கள். 10.1.2013 அன்று நடைபெற்ற இந்நிறுவன பங்குதாரர்கள் வருடாந்திர கூடுதல் சாதாரண பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக ஒப்புதல் பெற்றுள்ளனர்.
11.1.2013 அன்று பெயர் மாற்ற தடையில்லை என்று கம்பெனி பதிவாளரால் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டு 24.1.2013 அன்று இன்ஜெனரீஸ் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத் என்ற பெயரில் பதிவாளரால் பதிவுச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, இந்த டெண்டரில் பங்குபெற்ற ஏனைய கூட்டுக் குழுமங்களில் உள்ள பல நிறுவனங்களும் தங்களது பெயரை அவ்வப் போது மாற்றம் செய்துக் கொண்டுள்ளன. உதாரணமாக கும்ப கோணத்தை தலைமையிட மாகக் கொண்டு இயக்கப்பட்ட அப்போதைய சோழன் போக்கு வரத்துக் கழகம் பின்னர் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம், (கும்ப கோணம் கோட்டம்), கும்பகோணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதுபோல, ஏறத்தாழ 1400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது பழைய பெயரை மாற்றி புதுப்பெயரை வைத்துக்கொண்டுள்ளன. எனவே, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருவது சட்டத்திற்கு உட்பட்ட நடை முறையாகும். இந்தக் குழுமங்கள் தங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டாலும், அடிப்படையான அனுபவம், வருமான வரித்துறையுடனான தொடர்புகள், மத்திய விற்பனை வரித் தொடர்புகள் ஆகியவை மாற்றம் பெறாது.
பெயர் மாற்றத்திற்கு முன்பு இருந்த பழைய கணக்கு எண் முதலானவையே பெயர் மாற்றத்திற்குப் பின்னும் தொடரும். மேலும் அந்தக் கட்டுரையில், டெண்டர் தாக்கல் செய்ய, 25 கோடி ரூபாய்க்கான சொத்து உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஆனால், அந்த கம்பெனியின் சொத்து 8 லட்சத்திற்கும் குறைவு என்று ஆவணங்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
ஒப்பந்தப் புள்ளி விதி 2.2.8.யின்படி, ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்கும் கூட்டுக் குழும நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு 25 கோடி ரூபாயாகவும், அதில் முதன்மை நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைந்தபட்சம் 60 விழுக்காடாகவும், அதன் துணை நிறுவனங்களின் சொத்து மதிப்பு குறைந்தபட்சம் 20 விழுக்காடாகவும் இருக்க வேண்டும். ஒப்பந்தப் புள்ளி வழங்கிய இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், நிகர சொத்து மதிப்பான 25 கோடி ரூபாயில், 60 விழுக்காடான 15 கோடி ரூபாய்க்கு பதிலாக 15.03 கோடி ரூபாய் சொத்து மதிப்பும், கூட்டுக் குழுமத்தில் உள்ள ஒரு துணை நிறுவனமான அபிபஸ், 20 விழுக்காடான 5 கோடி ரூபாய்க்கு பதிலாக, 20.10 கோடி ரூபாய் சொத்து மதிப்பும், கூட்டுக் குழுமத்தில் உள்ள மற்றொரு துணை நிறுவனமான அனலாஜிக்ஸ் டெக் இந்தியா நிறுவனம் அதே 20 விழுக்காடான 5 கோடி ரூபாய்க்கு பதிலாக 20.05 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் கொண்டுள்ளன. ஆக, ஒப்பந்தப்புள்ளி படிவத்தின்படி கூட்டுக் குழும நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு 25 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக 55.18 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பை ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்ட நிறுவனங்கள் கொண்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்களை அவை வழங்கியுள்ளன.
மேலும், கருணாநிதி ‘இந்தக் கம்பெனி இணைத்து அனுப்பியுள்ள பல ஆவணங்கள் கையினால் எழுதப்பட்டுள்ளதாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட நிறுவனத்தால் அனைத்து ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களும் அச்சடித்தும், தட்டச்சு செய்யப்பட்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதை கருணாநிதிக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அரசு தற்போது டெண்டர் அளித்துள்ள குழுமத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர் கறுப்புப்பட்டியலிலே இடம் பெற்றவர்கள் என்ற கருத்தும் உண்மைக்கு மாறானதாகும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஜி.பி.எஸ். என்னும் புவி இருப்பிட முறைமையுடன் கூடிய மின்னணு பயணச் சீட்டுக் கருவிகள் வழங்கும் திட்டத்தில் எந்த விதிமுறை மீறலும் இல்லை, எந்த விதிமுறை தளர்வும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.