Published:Updated:

"தாகூர் சர்ச்சை முதல் 'நானும் அர்பன் நக்ஸல்தான்' வரை" - கட்டத்துக்குள் அடங்காத கிரிஷ் கர்னாட்!

விகடன் விமர்சனக்குழு
"தாகூர் சர்ச்சை முதல் 'நானும் அர்பன் நக்ஸல்தான்' வரை" - கட்டத்துக்குள் அடங்காத கிரிஷ் கர்னாட்!
"தாகூர் சர்ச்சை முதல் 'நானும் அர்பன் நக்ஸல்தான்' வரை" - கட்டத்துக்குள் அடங்காத கிரிஷ் கர்னாட்!

"தாகூர் சர்ச்சை முதல் 'நானும் அர்பன் நக்ஸல்தான்' வரை" - கட்டத்துக்குள் அடங்காத கிரிஷ் கர்னாட்!

சென்ற வருடம் செப்டம்பர் 5 ம் தேதி பத்திரைக்கையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார்.அவரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்ற  எழுத்தாளர்,இயக்குநர் மற்றும் நடிகருமான கிரிஷ் கர்னாட்,'நானும் அர்பன் நக்ஸல்தான்'(Me Too Urban Naxal) என்ற வாசகத்தைப் பொறித்த அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனங்களையும் ஈர்த்தது.

தமிழில் காதலன், ஹேராம் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தன் வாழ்க்கையில் பெரும்பாலும் சர்ச்சைகள் சூழும் பாத்திரத்திலேயே உள்ளார். தொடர்ந்து மதவாத இயக்கங்களுக்கு எதிராகத் தன் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். மதசார்பின்மைவாதியான இவர் 1992 பாபர் மசூதி இடிப்பிற்குக் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தது முதல் 2014-ல் மோடி பிரதமராவதை எதிர்த்தது வரை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற வலதுசாரிகளைத் தொடர்ந்து சாடி வருகிறார்.

1938-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த இவர் கர்நாடகா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியியலும், பிறகு ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவவியலும், அரசியல் மற்றும் பொருளாதார துறைகளிலும் பட்டம் பெற்றார். இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தினால் தன் இதர வேலைகளை விட்டுவிட்டு முழுநேர எழுத்தில் ஈடுபடத் தொடங்கினார். இவரின் முதல் படைப்பான 'யவாதி', மகாபாரத கதாப்பாத்திரங்களை மையமாகக் கொண்டு 1961-ம் ஆண்டு எழுதப்பட்டது. இதிகாசக் கதைகளின்படி 'யவாதி' என்னும் அரசன் பாண்டவர்களின் முன்னோனாக இருந்துள்ளான் என நம்பப்படுகிறது. அவனின் மீட்சியே மகாபாரதக் கதைகள் எனலாம். இந்த நாடகம் மாபெரும் வெற்றியடைந்து பின் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாடகத்திற்கு மைசூர் மாநில விருது வழங்கப்பட்டது. அப்போது கர்னாட்டின் வயது 23.

நாடகங்களில் பெரும்பாலும் அரசியல் பேசும்பொழுது ஆட்சியாளர்களின் சிக்கலைத் தவிர்க்க அதிகம் வரலாற்று கதாபாத்திரங்களை பயன்படுத்தி அதன் மூலம் சம கால அரசியலைப் பொருத்தி விமர்சிப்பார்கள். அதையே கர்னாட்டும்  செய்தார். அதற்கு அவருக்கு வசமாக மாட்டிய பாத்திரம் 'துக்ளக்'. டெல்லியின் சுல்தானாக இருந்த முகமது பின் துக்ளக் மக்களை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே இரவில் தனக்கு தோன்றிய திட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் மக்களை அலைக்கழிப்பதும்,பின் திட்டம் தோல்வியடைந்து பின்வாங்கியதுமாக கிறுக்குத்தனங்களைச் செய்தவர். கர்னாட் தன் நாடகத்தில் துக்ளக்கை கொண்டு அப்போதைய மத்திய அரசின் நிலையை  விமர்சித்திருந்தார். இது பரவலாக பாராட்டப்பட்டு லண்டன் வரை அரங்கேற்றப்பட்டது.

தொடர்ந்து நாடகங்களில் புகழ்பெற்ற இவர் நம் தமிழ் எழுத்தாளர்களின் கனவு லட்சியமான சினிமாவில் நுழைகிறார்.1970-ம் ஆண்டு உ.என்.அனந்தமூர்த்தியன் நாவலைத் தழுவி உருவாகிய 'சம்ஸ்காரா' என்ற படத்தில் நடிகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பங்குபெற்றவர் பின் கன்னடம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்து,இயக்கம்,நடிப்பு என சினிமாவின் ஆல்ரவுண்டராக இருந்துள்ளார். திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள், சாகித்திய அகாடமி விருது, பத்ம விபூஷண், பத்மபூஷண் வரை பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். 2011-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸின் 'சவுதர்ன் கலிபோர்னியா' பல்கலைக்கழகம் இவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் அளித்துள்ளது.

தொடர் சர்ச்சைகள் :

தன் மனதிற்குப் படும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் கர்னாட். அதனடிப்படையில் கடந்த 2012-ம் ஆண்டு தேசியக்கவி எனப்போற்றப்படும் ரபிந்தரநாத் தாகூர் பற்றி, "தாகூர் சிறந்த கவிஞர், ஆனால் சிறந்த எழுத்தாளர் எனச் சொல்லமுடியாது. அவருடைய எழுத்துகள் அவருடைய கவிதைகளை ஒப்பிடும்போது இரண்டாம் தர எழுத்துகளாகவும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவுமே இருந்துள்ளது" என்றார் கர்னாட். இது நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.

கடந்த 2015-ம் ஆண்டு திப்பு சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா அரசால் ஏற்படுத்தப்பட்ட 'திப்பு ஜெயந்தி' விழாவில் பங்கேற்ற கர்னாட், 'பெங்களூர் விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை வைக்க வேண்டும்' என்று வற்புறுத்தினார். இது பல கோணங்களில் சர்ச்சையானது. 'கெம்பே கௌடா' என்ற விஜயரங்க அரசரின் பெயரில் பெங்களூரு விமான நிலையம் உள்ளது. அந்த பெயரை மாற்றச் சொல்வதன் மூலம் எங்கள் சமூகத்தையும் எங்கள் மன்னரையும் இழிவுப்படுத்திவிட்டார் என்று ஒரு சாரர் கர்னாட்டை எதிர்த்துப் போராடினர். அப்போது, "கெம்பே கௌடா சுதந்திர போராட்ட வீரர் அல்ல, ஆனால் திப்பு சுல்தானோ சுதந்திரத்திற்காகப் போராடியவர், மேலும் இதே திப்பு சுல்தான் இந்துவாக இருந்திருந்தால் மராட்டிய சிவாஜியை புகழ்வது போல் இவர்கள் போற்றிருப்பார்கள்" என்று தன் வாதத்தை வெளிப்படுத்தினார். கோபமான மதவாத அமைப்புகள் கிரிஷ் கர்னாட்டை தொடர்ந்து அச்சுறுத்த ஆரம்பிரத்தனர். கொலைமிரட்டல்கள் தொடர்ந்து கொடுத்துவருகின்றனர்.

கௌரி லங்கேஷின் படுகொலையைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜ் உட்படப் பலர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைத் தரவேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். கௌரி லங்கேஷின் கொலையில் கைதான 9 பேரில் ஒருவரான அமோல்காலேவிடமிருந்து டைரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மேலும், கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் கிரிஷ் கர்னாட்டின் பெயரும் இடம்பெற்றது. இருந்தும் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு