Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கந்தசாமி, காங்கேயம்.

நடிகை தீபிகா படுகோன் தலைக்கு விலை வைக்கப்பட்டுள்ளதே?


‘அவர் தலையைக் கொண்டுவந்தால் ஒரு கோடி, இவர் தலையைக் கொண்டுவந்தால் 10 கோடி’ என்று விலை வைப்பவர்களைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது. துணிச்சல் இருந்தால் அந்தக் காரியத்தை இவர்களே செய்துவிட்டு, பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? 

இதுபோன்ற அறிவிப்புகள் பாப்புலாரிட்டிக்காகச் செய்யப்படுபவை. ‘தலைக்கு விலை’ என்று யாராவது படம் வேண்டுமானால் பண்ணலாம். அதில் நடிக்க தீபிகா படுகோன் கேட்கும் விலையை அவர்களால் தரமுடியாது!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.

‘ஒரு மொழி, ஒரு மதம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்த நினைத்தால் அது நிறைவேறாது’ என்று தேனியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திடீரென்று தம்பிதுரை பேசியிருக்கிறாரே?


பி.ஜே.பி-யின் டெல்லி தலைமைக்கும் ஆளும் அ.தி.மு.க-வுக்கும் விரிசல் ஏற்பட்டுவருகிறது என்பதற்கு உதாரணம் இது. எப்படியாவது மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைத்தார் தம்பிதுரை. அது நிறைவேறாத ஏக்கமும் இதில் வெளிப்படுகிறது.

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

178 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு செய்திருப்பது மத்திய அரசின் பின்புத்திதானே?

‘இது குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்புத்தி நடவடிக்கை’ என அரசியல்ரீதியாக விமர்சனம் செய்யலாம். அதைத் தாண்டி, சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி கவுன்சில் என்ற அமைப்புதான், வரி விகிதங்களை ஏற்றுவது, குறைப்பது, மாற்றுவது என எல்லாவற்றையும் முடிவுசெய்கிறது. இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் உறுப்பினர்கள். இவர்களுக்குள் ஒருமித்த கருத்து வந்தால்தான், எந்த முடிவும் எடுக்கப்படும்.  ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருமானமும் தொடர்புடைய விஷயம் என்பதால், ஒரு சிறு மாற்றமும் ஏதோ ஒரு மாநிலத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும். அதனால்தான் அமல் செய்வதில் இத்தனை ஆரம்பகட்டக் குழப்பங்கள் இருக்கின்றன.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘கல்யாண கோஷ்டிக்கான காரில் வந்து ரெய்டு நடத்திட நாங்கள் என்ன தீவிரவாதிகளா’ என்று கேட்கிறாரே தினகரன்?


ரெய்டு நடக்கப்போகும் விஷயம் ஒரு நிமிடத்துக்கு முன்பு தெரிந்தாலும், எத்தனையோ ஆதாரங்களைப் பதுக்கிவிட முடியும். அதனால், தகவல் கசிந்துவிடக்கூடாது என்பதில் வருமானவரித் துறை அதிகாரிகள் உஷாராக இருப்பார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வைத்து ரெய்டு செய்வதை இந்த சோஷியல் மீடியா யுகத்தில் ரகசியமாக வைத்திருப்பது சவாலான விஷயம். அதனால்தான், திருமண வீட்டுக்கு கார் எடுப்பதுபோல மொத்தமாக எடுத்துள்ளார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.


தமிழகத்தில் ‘சாதனை அரசியல்’ மாறி ‘சோதனை அரசியல்’ தொடர்கிறதே?


அதுதான் வேதனை அரசியல்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அதிக திறமைசாலி எடப்பாடியா, பன்னீரா?


மெஜாரிட்டி பலத்துடன் முதலமைச்சராக இருந்தவர் பன்னீர். ஆனால், மெஜாரிட்டி இருக்கிறதா என்று தெரியாமலேயே முதலமைச்சராகத் தொடர்பவர் எடப்பாடி. முன்னவர் திறமைசாலி. பின்னவர்தான் அதீத திறமைசாலி.

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.


? சமீபத்தில் மறைந்த பேராசிரியர் ம.நன்னன் பற்றி..?


! 95 வயதுவரை தமிழுக்காகவும் பெரியாருக்காகவும் வாழ்ந்தவர். ‘முதுமை என்னை முற்றுகையிட்டாலும், என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பது தமிழும் பெரியாரும்’ என்றவர். ‘திருஞானசம்பந்தன்’ என்ற தனது பெயரை தமிழ்ப்பற்று காரணமாக ‘நன்னன்’ என்று மாற்றிக் கொண்டவர். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் அளவுக்கு உயர்ந்தவர். பின்னர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகவும் ஆனார்.

நன்னன் பெயர் நாடு முழுக்க பரவியதற்குக் காரணம், அவரது தமிழ் வகுப்புகள். ‘பிழையில்லாமல், முறையாகத் தமிழ் எழுதுவது எப்படி’ என்று சென்னை தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் பாடம் எடுத்தார். இலக்கணக் குறிப்புகளைச் சுத்தமாக விளக்கும் கணீர் குரலால் பெயரெடுத்தார். பின்னர், மக்கள் தொலைக்காட்சியிலும் ‘அறிவோம் அன்னைத் தமிழ்’ என்று பாடம் நடத்தினார். நன்னனின் பாடங்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் காணொலியாக வெளியிட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கூடத்துக்குக் கிடைத்த தமிழாசிரியர் அல்ல அவர். ஓர் இனத்துக்கு, நாட்டுக்குக் கிடைத்த தமிழாசிரியர். 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய நன்னன், இறுதிக்காலத்தில் சிலப்பதிகாரத்துக்கு விளக்கவுரை எழுதிவந்தார். இறுதிவரை எழுதிக்கொண்டே, பேசிக்கொண்டே, இயங்கிக்கொண்டே இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மைத்ரேயன், எம்.பி.,   அ.தி.மு.க.

கழுகார் பதில்கள்!

இரட்டை இலைச் சின்னம்தான் அ.தி.மு.க-வுக்குப் பிரச்னையா? அது கிடைத்தால் அ.தி.மு.க-வில் இருப்பதாகக் கூறப்படும் அத்தனை சிக்கல்களும் தீர்ந்து பழைய வலுவைக் கட்சி பெற்றுவிடுமா?

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது மட்டுமே அ.தி.மு.க-வின் பிரச்னை அல்ல. ஆயிரம் பிரச்னைகளில் அதுவும் ஒன்று. இரட்டை இலைச் சின்னம் என்பது, அ.தி.மு.க-வை வெற்றிபெற வைக்க அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அது கிடைத்தால் மட்டுமே போதாது.

அ.தி.மு.க-வுக்கு இன்று தேவையானது வலிமையான தலைமை. அது இல்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கிறார். ஆனால், அமைச்சர்கள் முதல் கடைக்கோடித் தொண்டன்வரை அனைவரையும் கட்டுப்படுத்தும் தலைவராக அவர் இல்லை. ஜெயலலிதா அளவுக்கு இல்லையென்றாலும், ‘இவர் கட்சியை வழிநடத்தும் திறமை வாய்ந்தவர்’ என்ற நம்பிக்கையைக்கூட பழனிசாமி பெறவில்லை.

பன்னீர் அணி, எடப்பாடியுடன் ஒன்றுசேர்ந்தது உண்மை. ஆனால், உள்ளார்ந்த ஒற்றுமை வரவில்லை. மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பிரச்னை... நிர்வாகிகளுக்குள் மோதல்... என்று அ.தி.மு.க-வின் உள்கட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டுவருகிறது. இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலையோ, நாடாளுமன்றத் தேர்தலையோ எப்படிச் சந்திக்க முடியும்? இரட்டை இலை வருவதற்கு முன்பாக இதைக் கவனிக்க வேண்டும்.

மாநில அளவில் ஓர் ஒருங்கிணைப்புக் குழு போட்டது மாதிரி, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்தால் மட்டுமே கட்சியை ஓரளவு காப்பாற்றலாம்! எல்லாவற்றுக்கும் மேலாக தினகரன் -எடப்பாடி என  இரண்டாக இருக்கும் அ.தி.மு.க., ஒன்றாகச் சேரவேண்டும்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!