அதிகாரத்தில் இருப்பவர்கள் சிவகங்கைக்கு விழாவுக்காக வருவதென்றாலே உள்ளுக்குள் கொஞ்சம் ஜெர்க் அடிக்கும். இங்கு, கிராஃபைட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட ராஜீவ் காந்தி வந்தார். அதன்பின் தேர்தலில் தோற்று, பிரதமர் பதவியை இழந்தார். ஜெயலலிதா வந்தார். சொத்துக் குவிப்பு வழக்குப் பாய்ந்தது. தா.கிருட்டிணன் மணிவிழாவுக்கு வந்தார் கருணாநிதி. பதவியை இழந்தார். தமிழக அமைச்சராக கோகுல இந்திரா எக்ஸ்மாஸ் லைட் திறப்புவிழாவுக்கு வந்து, பதவியிழந்தார். வைகைச்செல்வனும் அமைச்சராக இங்கே வந்தார்; பதவியிழந்தார். இந்தப் பட்டியல் பிரதமரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை நீண்டுகொண்டே போகிறது.

தற்போது, சிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீரும் வந்துசென்றுள்ளனர். ‘இவர்களுக்கு என்ன ஆகுமோ?’ என்ற கவலையில் இருக்கிறார்கள் சிவகங்கை அ.தி.மு.க-வினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரியக்குடியில் தயாராகும் குத்துவிளக்கு, காரைக்குடியில் தயாராகும் செட்டிநாட்டு பலகாரங்கள் என எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அசத்தலாக நடத்திமுடித்தார்கள். அதற்காக, ‘மாவட்டத்துக்குச் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது’ என்பது முதல்வரின் அறிவிப்பு. அதைத் தட்டிச்செல்வதற்காக அமைச்சர் பாஸ்கரனும், எம்.பி செந்தில்நாதனும் எக்ஸ்ட்ரா யோசனைகளுடன் அலைந்தார்கள். வெள்ளியால் ஆன இரண்டு கிலோ எடைகொண்ட கற்பகவிநாயகர் சிலையையும், வெண்கலத்தால் ஆன ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் உருவச் சிலையையும் முதல்வருக்கு வழங்கினார்கள்.
அரசு நலத் திட்ட உதவிகளைத் தருவதாக ஆடியன்ஸை வரவழைத்து, அவர்களைப் பல மணி நேரம் அடைத்துவைத்தார்கள். இப்படி அழைத்துவரப்பட்ட காரைக்குடி அருகேயுள்ள வேட்டக்காரன்பட்டியைச் சேர்ந்த சுப்பையா, பஸ்ஸில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரை நம்பி மனைவி, இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பாகத்தான், மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி.தினகரன் பற்றி அனல்பறக்கப் பேசிவிட்டு வந்திருந்தார், முதல்வர் எடப்பாடி. ‘‘நான் அ.தி.மு.க-வில் 45 ஆண்டுகளாக இருக்கிறேன். நான்கு முறை கட்சிக்காகச் சிறைக்குப் போயிருக்கிறேன். இந்தக் கட்சியில் படிப்படியாக எம்.எல்.ஏ-வாக, அமைச்சராக இருந்து, இன்று முதல்வராகவும் உயர்ந்திருக்கிறேன்’’ எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தார், எடப்பாடி.
விழா சிறப்பாக நடந்ததில் முதல்வருக்கு மகிழ்ச்சி என்றாலும், விழா முடிந்த பிறகு, ‘சிவகங்கை சென்டிமென்ட்’ பயத்தில், நவக்கிரக பூஜை செய்தாராம்.
- தெ.பாலமுருகன்,
படம்: சாய் தர்மராஜ்