Published:Updated:

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர், சூரஜ்ஓவியங்கள்: நெடுமாறன், பிரேம் டாவின்ஸி

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர், சூரஜ்ஓவியங்கள்: நெடுமாறன், பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

ஜெயலலிதா மரணமடைந்து ஓர் ஆண்டு நிறைவடைகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள்தாம், எடப்பாடியின் ஆட்சியிலும் அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, எந்த இலாகாவுக்கு, யார் அமைச்சராக இருந்தார் என்பதே பொதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தது. எடப்பாடி ஆட்சியில், இவர்கள் எப்படி அமைச்சர்கள் ஆனார்கள் என்பதே மக்களுக்குப் புரியாமல் இருக்கிறது! அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீதான விமர்சனங்களும், அமைச்சர்கள் கொடுக்கும் பேட்டிகளும், அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் விவாதத்துக்குள்ளாகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிரடியாக வெளிச்சத்துக்கு வந்த அமைச்சர்களும்... துறை சார்ந்து அவர்களுடைய செயல்பாடுகளும் எப்படி இருக்கின்றன?

ஓ.பன்னீர் செல்வம்

துணை முதல் அமைச்சர்

தர்ம யுத்தத்திற்கு `பெப்பே’ காட்டிவிட்டு , டெல்லி தூதர்களின் ஆணைக்கிணங்க எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஆன ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல் அமைச்சர் என்ற அந்தஸ்து கிடைத்ததோடு,  நிதி, சட்டம், சட்டமன்றம், வீட்டுவசதி, குடிசைமாற்றுவாரியம், சி.எம்.டி.ஏ துறைகள் அவரது ஆளுகையின் கீழ் வந்தன. ஆனால், இவற்றில் பன்னீரின் செயல்பாடுகள் மணக்கவில்லை. பன்னீர் கையில் இருக்கும் எந்தத் துறையிலும் அவரால் ஸ்கோர் பண்ண முடியவில்லை. இத்தனைக்கும் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்ததால், அரசாங்க நிர்வாகம் பன்னீருக்கு அத்துப்படிதான். ஆனால், இப்போது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை எதுவும் செய்யவிடுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

சென்னையில் இருக்கும் நாள்களில் `கடமையைச் செய்ய’  கோட்டைக்கு வருகிறார் பன்னீர். முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், முதல்வரைப் போய்ச் சந்திக்கிறார். தமிழகத்தின் நிதி நிலை தள்ளாட்டத்தில் இருப்பது உறுத்துவதால் அவ்வப்போது அதிகாரிகளுடன் சில ஆலோசனைகள் நடத்துகிறார். ஆனால், அந்த ஆலோசனைகள் நடவடிக்கைகளாக மாறுவதில்லை.

கடந்த இரண்டு மாதங்களில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஏகப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. சென்னையில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான மனைகள், முறைகேடான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்யப் பட்டுள்ளதாகப் புகார்கள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. ஆனால், ஒன்றிலும் உருப்படியான நடவடிக்கை இல்லை. `தனக்குத் தேவையான செயலாளர்களைக்கூடக் கேட்டு வாங்க முடியவில்லை; கட்சியில் உரிய மரியாதை இல்லை; ஆட்சியிலும் தேவையான அதிகாரம் இல்லை என்ற அதிருப்தியில் இருக்கும் பன்னீர் செல்வத்தால், அவர் துறையில் மட்டும் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் என்கிறார்கள் பன்னீரின் விசுவாசிகள்.

தங்கமணி

மின்சாரத்துறை அமைச்சர்

“உங்களால்தான் எங்களுக்கும் ஆட்சிக்கும் பிரச்னை; அதனால், நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள்” என்று தினகரனுக்கு  அதிர்ச்சி கொடுத்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கிறார் தங்கமணி. சமீபகாலமாக தமிழகத்தை மின்வெட்டு பெரிதாக பாதிக்கவில்லை என்பதால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார் தங்கமணி. ஆனால், மின்சாரத்துறை கடனில் தத்தளிக்கிறது.

 தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சுமார் நான்கு ரூபாய் வீதம் மின்சாரத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தனியாரிடம் போடப்பட்ட  ஒப்பந்தங்களுக்காகவும், அதிக விலைகொடுத்து வாங்கியதற்காகவும் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு 96 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.  இதில் 22 ஆயிரம் கோடியைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. எஞ்சியுள்ள கடனை எப்படித் தமிழ்நாடு மின்சார வாரியம் அடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

மின்சாரத்தோடு டாஸ்மாக்கும் இவர் வசம்தான் இருக்கிறது. இந்த நிலையில், மதுபானங்களின் விலையை திடீரென தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியது. இந்த விலை உயர்வினால் வரும் தொகையில் கணிசமான தொகையை மதுபானம் சப்ளை செய்கிறவர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், இந்தமுறை ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே  வழங்கினார்கள். இடையில் என்ன `பேச்சுவார்த்தை’ நடந்ததோ?!

தமிழகத்தில் மொத்தமுள்ள 11 மதுபான உற்பத்தி நிறுவனங்களில் இரண்டு நொண்டி அடிக்கின்றன. நிர்வாகப் பிரச்னைகளில் அவை சமாளிக்கமுடியாத அளவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன. அதேபோல், கொங்கு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு மதுபான நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவரச் செயல்படவில்லை. அது சமீபத்தில் ஆளுங்கட்சி வட்டாரத்துக்குக் கைமாறியிருக்கிறது என்கிற பேச்சு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பலமாகக் கேட்கிறது. மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்த கால கட்டத்தில், சில இடங்களில் டாஸ்மாக் கடைகளின் மூலம் வங்கியில் செலுத்தப்பட்ட தொகையில் செல்லாத நோட்டுகளும் இருந்திருக்கின்றன. அப்படிச் செலுத்தப்பட்ட செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 800 கோடி ரூபாய் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ``65 கோடிக்கும் குறைவு’’ என்கிறார் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஸ் குமார். அதாவது, ஆளுங்கட்சி பிரமுகர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க டாஸ்மாக் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் தற்போது நிலுவையில் இருக்கிறது.

வேலுமணி

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்
 
எடப்பாடி பழனிசாமியின் இருகரங்களில் ஒருவர் அமைச்சர் வேலுமணி. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  இரண்டும் இவருடைய துறைகளில் பிரதானமானவை.  இந்த நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் இன்னும் தொங்கலில் இருக்கிறது. அதனால், நகராட்சி நிர்வாகம் அதிகாரிகளை வைத்து நடத்தப்படுகிறது. ஆய்வுக்கூட்டங்களை மட்டும் சரிவர நடத்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒருமுறை அதிகாரிகள் மத்தியில் `தமிழக உள்ளாட்சித்துறை நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சித்துறைக்கு வந்த தொகை பல ஊராட்சிகளுக்கு முழுமையாக இன்னும் போய்ச்சேரவில்லை. கொங்கு மண்டல பிரமுகர்கள் சிலர் இந்தத் தொகையை ஏப்பம் விட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் புகார்கள் எதையும் அமைச்சர் கண்டுகொள்வதாக இல்லை.

செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, இன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் என அனைவருக்கும் அரசியலில் சீனியர் செங்கோட்டையன்.
செங்கோட்டையனுக்கும் மற்ற மூத்த அமைச்சர்களுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், அவர்களைப்போல் இவர் காமெடி பேட்டிகளைத் தட்டுவதில்லை. பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக உதயச்சந்திரன் இருந்தபோது, சில வேலைகள் வேகவேகமாக நடைபெற்றன. அதில் உதயச்சந்திரனுக்குத்தான் பெயர் கிடைத்தது. செங்கோட்டையனுக்குப் பெயரும் கிடைக்கவில்லை; வேறு பிரயோஜனமும் இருக்கவில்லை. அதனால், உதயச்சந்திரனை அந்தத் துறையில் டம்மியாக்குவதற்காக, முதன்மைச் செயலாளர் என்றொரு புதிய பதவியை உருவாக்கி, அந்த இடத்துக்கு பிரதீப் யாதவைக் கொண்டுவந்தார் அமைச்சர். உதயச்சந்திரனுக்குப் பிறகும், பள்ளிக் கல்வித்துறையில் வேலைகள் வேகமாக நடக்கின்றன; அதில் எந்தக் குறையும் இல்லை என்று காட்டத்துடிக்கிறார் செங்கோட்டையன். அதற்காக, ஆய்வுக்கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார் செங்கோட்டையன்.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

அதுவும் ‘நீ்ட்’ பிரச்னைக்குப் பிறகு, கல்வித்துறை அதிகாரிகளுடன் வாரம் ஒருமுறை கூட்டம் போடுகிறார் அமைச்சர். ஆனால், அவரைச் சுற்றி உள்ள டீம் செங்கோட்டையனுக்குச் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் கும்பல் ஆசிரியர்கள் பணியிடமாற்றம் முதல் பணி நியமனம் வரை, வாரிச்சுருட்டுகிறது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். தன் பெயரைப் பயன்படுத்திப் பணம்பார்க்கும் டீமின் ஆதிக்கத்தை அமைச்சர் தடுக்கவும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. காரணம், அமைச்சரின் நெருங்கிய உறவே இந்த டீமில் இருப்பதுதான் என்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரும் முயற்சியில் கல்வித்துறை இறங்கியுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்குவதற்கு முன்பே, கமிஷன் வசூல் வேகம் பிடித்துவிட்டது என்கிறார்கள். அதே நேரம், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், பள்ளிக்கல்வித்துறையை நவீனப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் அமைச்சருக்கு இருப்பதே பாராட்டுதலுக்குரிய விஷயம்தான் என்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறையினர்.     

விஜயபாஸ்கர்

மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

ஜெயலலிதா காலத்திலிருந்து இப்போதுவரை மக்கள் நல்வாழ்வுத்துறையை அப்படியே கையில் வைத்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

குட்கா விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, தமிழகம் முழுவதும் குட்கா பொருள்கள் விற்பனை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது வழக்கம்போல் மீண்டும் குட்கா விற்பனை சக்கைப்போடு போடுகிறது.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

டெங்கு ஒழிப்பிற்காக சுகாதாரத்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அரசு மருத்துவனைகள், டி.எம்.எஸ் வளாகம் ஆகியவற்றின் சுகாதாரத்தைப் பார்த்தால், அதற்கெல்லாம் ‘ஃபைன்’ தொகையை நிர்ணயமே செய்ய முடியாது. அந்த லட்சணத்தில் இருக்கிறது அவற்றின் சுகாதாரம். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்த நேரத்திலேயே, டெங்கு மரணங்கள் தமிழகத்தில் தொடங்கிவிட்டன. ஆனால், அந்த மரணங்களுக்கான காரணங்களை வேறு பெயர்களில் மாற்றி எழுதி, வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது மக்கள் நல்வாழ்வுத்துறை.

அதேசமயம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங் களை முழுமையாகச் செயல்படுத்திய மாநிலம் என்ற பெருமையைத் தமிழகம் பெற்றுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவனை தமிழகத்திற்குக் கொண்டுவரப்படும் என்று அறிவித்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. 

ஆர்.பி.உதயகுமார்

வருவாய்த்துறை அமைச்சர்

யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களின் விசுவாசியாக கணநேரத்தில் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரசியல் அறிந்தவர் ஆர்.பி.உதயகுமார்.

பேரிடர் மேலாண்மைத்துறையும், வருவாய்த்துறையும் ஆர்.பி.உதயகுமாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. தமிழகத்தை நூற்றாண்டு காணாத பஞ்சம் தாக்கியுள்ளது. ஆனால், அதைச் சமாளிக்க வேண்டிய பேரிடர் மேலாண்மை என்ற ஒன்று செயல்படவே இல்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதே இல்லை. மாலிக் என்பவர்தான் ஆர்.பி.உதயகுமாரின் பி.ஏ. ஆனால், இவர்தான் அந்தத் துறையின் அமைச்சரைப்போல் செயல்படுகிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். விளைநிலங்களில் கட்டடம் கட்ட பட்டா வேண்டுமா... பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிதி வேண்டுமா... எல்லாவற்றுக்கும் மாலிக்கைத்தான் சந்திக்க வேண்டும்.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

கடந்த வருடம் பருவமழை பொய்த்துவிட்டது. அதனால், மழையால் எந்தப் பேரிடரும் நிகழவில்லை. ஆனால், இந்தமுறை பருவ மழை கொஞ்சம் தீவிரம் காட்டிய நேரத்தில், தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைத்து ஆர்.பி.உதயகுமார் முனைப்பாகச் செயல்பட்டார். ஆனால், மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்துக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை தாரைவார்க்கச்சொல்லி அமைச்சர் தரப்பினர் அழுத்தம் கொடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

ஜெயக்குமார்

மீன் வளத் அமைச்சர்

ஆர்.கே.நகர்த் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்காக ஓட்டு கேட்டவர். அதன்பிறகு, தினகரனைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தொலைக்காட்சிகளுக்கு முதன்முதலாகப் பேட்டியும் கொடுத்தவர் அமைச்சர் ஜெயக்குமார். இவர் அமைச்சராகச் செயல்படுவதைவிட ஆளும் கட்சிப் புள்ளியாகத்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். தன்னிடமிருந்து நிதித்துறையைப் பறித்து, பன்னீருக்குத் தாரைவார்த்துவிட்டதால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஜெயக்குமார், பரபரப்பில்லாத மீன்வளத்துறையைக் கையில் வைத்துள்ளார். உலகத்தின் மீன்சுரங்கம் என்று சொல்லப்படக்கூடிய  ‘வெட்ஜ் பேங்க்’ தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் இருக்கிறது. அங்கு நம் மீனவர்கள் போக முடிவதில்லை. மாறாக, இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதியைச் சூறையாடுகின்றனர். ஆனால், அதற்காகப் பெரிதாக எதுவும் ஜெயக்குமார் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.

பிடிக்கப்பட்ட மீன்களை வைப்பதற்கான மீன் பதனக் கிடங்குகள் தமிழகக் கடற்கரை ஓரங்களில் கிடையாது. ராமேஸ்வரத்தில் இருக்கும் ஒரு கிடங்கில் ஒரு வேன் லோடு மீனைக்கூட வைக்க முடியாது. எல்லாக் கடற்கரை கிராமங்களிலும் மீன் வைக்க பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜெயக்குமாரின் மேஜையில் நீண்டகாலமாக இருக்கிறது.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

மத்திய அரசின் நிதி உதவியில் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்கக் கற்கள் கொட்டுவதற்கான பணிகள் மீன்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் ஜெயக்குமாருக்கு வேண்டியவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் ஜெயக்குமாரின் எதிர் அணியினர்.

சீன இன்ஜின்கள் பொருத்தப்பட்ட போட் விவகாரம் சமீபத்தில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. அது தடைசெய்யப்பட்ட இன்ஜின் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால், அந்த இன்ஜின்களைப் பொருத்தி காசிமேட்டில் ஓடிய எட்டு போட்களும் அமைச்சரின் நெருக்கமானவருக்குச் சொந்தமானவை என அந்தப் பகுதியின் மீனவர்கள் குற்றம்சாட்டி, காவல்நிலையத்தில் புகாரே அளித்தனர். ஆனால், புகார் கொடுத்தவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ய, மீனவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் என்று தெருவில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் தலை உருண்டதால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் `சூப்பர் முதல்வர் ஜெயக்குமார்’ என்று கமென்ட் அடித்தார்.

ராஜேந்திர பாலாஜி

பால்வளத்துறை

ஏடாகூடமாகவும், பரபரப்பாகவும் பேசி ‘நெட்டிசன்’களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஓரிரு அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். ராஜேந்திர பாலாஜியின் மாவட்டம் விருதுநகர். பட்டாசுத் தொழிற்சாலை அதிகம் உள்ள மாவட்டமும் அதுதான். இந்த வகையில், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன தொடர்பு என திடீர் சந்தேகத்தைக் கிளப்பினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். தீபாவளியை முன்னிட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு தலா 150 ரூபாய் மதிப்புடைய வெடி, ஸ்வீட் கட்டாயமாக வழங்கப்பட்டன. இதற்கான தொகையை 3 தவணைகளில்  பிடித்தம் செய்வோம் என்றது பால்வளத்துறை. ``இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கும் பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் என்ன தொடர்பு எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”என்றார் முத்தரசன். இதற்கு ராஜேந்திர பாலாஜி தரப்பில் மௌனம்தான் பதில்.  தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பதாகத் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

தமிழகத்தில்  பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பெரிய அளவில் நவீனத் தொழிற்சாலைகளைக் கொண்டுவர உரிய முயற்சியை ராஜேந்திர பாலாஜி  இதுவரை எடுக்கவில்லை.

செல்லூர் ராஜூ

கூட்டுறவுத்துறை அமைச்சர்

40 வருடங்களாக அ.தி.மு.க-வில் இருக்கிறார். 2011-தேர்தலில் வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த அமைச்சரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆனார். 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று, அதே கூட்டுறவுத்துறைக்கு அமைச்சர் ஆனார். ஆனால், மதுரையைத் தாண்டி செல்லூர் ராஜூவை யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அமைச்சர்கள் ஆளுக்கு ஆள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், செல்லூர் ராஜூ தன்னுடைய அரிய திட்டம் ஒன்றின் மூலம் உலகப்புகழ் பெற்றார். வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மாகோல்களைப் போட்டு மூடி வைப்பதுதான் அந்தத் திட்டம். தெர்மாகோலைப் போட்ட நேரத்திலேயே, அவை காற்றில் கரை ஒதுங்கின.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

கூட்டுறவுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக வைத்தியநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியை, முறைப்படுத்தி வழங்கவில்லை. அந்தத் துறையின் ஒட்டுமொத்த அவமானம் என்று சொல்லவேண்டுமானால், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்க வழியில்லாமல், கடந்த பல வருடங்களாக ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டி, பொருள் விநியோகம் செய்துகொண்டிருந்ததைக் குறிப்பிடலாம். ஆனால், ஒவ்வொருமுறை சட்டமன்றத்தில் பேசும்போதும், `கூட்டுறவுத்துறையை நவீனப்படுத்துவோம்’ என்று அறிவிப்பு மட்டும் வெளியாகும்.  பொதுவிநியோகத் திட்டத்திற்கு மாநில அரசு வழங்கும் மானியத்தைக்கூட முறைப்படி  வழங்காமல் இருப்பதால், பொதுவிநியோகத் திட்டத்தில் தேக்க நிலை அதிகரித்துவருகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட்டுறவு வங்கிகள் முதல் தொடக்க  வேளாண்மைச் சங்கங்கள் வரை அனைத்தையும் கணினிமயமாக்கிவிட்டார்கள். வேளாண்மைச் சங்கங்கள், நியாய விலைக்கடைகளை விடுங்கள்... தமிழகக் கூட்டுறவு வங்கிகளைக்கூட இன்னும் கணினிமயப்படுத்தவில்லை. நபார்டு வங்கிதான் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி வழங்கும் கேந்திரம். ஆனால், நபார்டு வங்கி கூட்டுறவு வங்கிகளை நவீனப்படுத்துங்கள் என்று வலியுறுத்தினாலும், அதை அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது,  கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் முறைகேடான பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அமைச்சரிடமிருந்து இன்னும் முறையான பதில் இல்லை.

இந்த ஆட்சிக்கே மூலவரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் புகழைத் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதில் பிஸியாக இருப்பதால், துறைரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவருக்குப் போதுமான நேரம் இல்லை என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். முதலமைச்சர்னாலே பிஸிதானே!