Published:Updated:

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

தொகுப்பு: சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன் படங்கள்: கே.ராஜசேகரன், க.சதீஷ்குமார்

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

தொகுப்பு: சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன் படங்கள்: கே.ராஜசேகரன், க.சதீஷ்குமார்

Published:Updated:
வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

கீழ்வெண்மணி... தமிழக வரலாற்றின் தழும்பு, சாதியம், நிலப்பிரபுத்துவம் என்னும் இரு அதிகாரக் கருத்தியல்களின் வன்முறைக்கான அழுத்தமான சாட்சி. ‘சேரன்மாதேவி குருகுலப் பிரச்னை’யைப் பிராமணிய ஆதிக்கத்துக்கான வரலாற்று உதாரணம் என்று சொன்னால், கீழ்வெண்மணிக் கொடூரத்தை இடைநிலைச் சாதியாதிக்க மனநிலையின் சான்று எனச் சொல்லலாம். ஒருவகையில் தமிழகத்தின் முக்கியமான மூன்று அரசியல் இயக்கங்களான பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம் ஆகியவை வெண்மணிச் சம்பவத்தோடு தொடர்புடையவை.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்
வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீழத்தஞ்சைப் பகுதிகளில் பண்ணையாதிக்கத்துக்கும் சாதியத்துக்கும் எதிரான வீரஞ்செறிந்த போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தினார்கள். அதன் எதிர்வினைதான் கீழ்வெண்மணிச் சம்பவம். கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற நிலப்பிரபுக்கள், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்ததை வரலாற்றில் பார்க்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் சகாப்தம் முடிவடைந்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்த காலத்தில்தான் இந்த வெண்மணிப் படுகொலை நடைபெற்றது. பிராமணிய எதிர்ப்பையும் தமிழின அரசியலையும் முன்வைத்த தி.மு.க, சாதிய-வர்க்கப் பிரச்னையில் சமரசம் செய்துகொண்டதைத்தான் வெண்மணிப் பிரச்னையில் அவர்களின் நிலைப்பாடு காட்டுகிறது.

கீழ்வெண்மணிச் சம்பவம் நடந்து 50-ம் ஆண்டு தொடங்கும் நிலையில், வெண்மணி காலகட்டத்திலும் சமகாலத்திலும் நிலவும் அரசியல் - சமூகநிலைகள் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. மார்க்ஸியம், பெரியாரியம், தலித்தியம் என வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட எழுத்தாளர்களின் இந்தக் கட்டுரைகள் பல்வேறு கருத்தியல் அணுகுமுறைகளை முன்வைக்கின்றன. இது ஒரு துயரமான வரலாற்றை நினைவுகூர்வது மட்டுமல்ல, அதிகாரத்தைப் புரிந்துகொள்வதும் வரலாற்றை விசாரணை செய்வதும்கூட.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

தியாகம் வீணாகாது! - அருணன்

 அந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் 25 அன்றும், உலகம் இயேசுவைத்தான் நினைத்திருந்தது. ஆனால், கீழ்வெண்மணி கிராமத்தில் ஒருவித சிலுவை ஏற்றம் நடந்திருந்தது. நிலப்பிரபுக்களுக்கும் பண்ணைத் தொழிலாளர்களுக்கும் இடையில் மூண்ட வர்க்கப் போரில் 44 உயிர்கள் கருகி மாண்டன. அவர்களில் ஆகப் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும். அவர்கள் தம் உயிருக்கு அஞ்சி ராமய்யாவின் குடிசையில் தஞ்சம் அடைந்திருந்தனர். பண்ணையார்கள் சங்கத் தலைவர் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவரது அடியாள்களும் அவர்களை எரித்துச் சாம்பலாக்கினார்கள். விவசாயக் கூலிகளை மனிதநேயத்தோடு நடத்தவில்லை பண்ணையார்கள். முதலாளித்துவம் பிறந்துவிட்ட காலத்திலும் அவர்களைப் பண்ணையடிமைகளாகத்தான் பாவித்தார்கள். அந்த 1960-களிலும் சவுக்கடி கொடுப்பது, சாணிப்பால் கொடுப்பது, பெண்களைத் தரக்குறைவாக நடத்துவது என்பது தொடர்ந்தது. நெல்லாகத் தரப்பட்ட கூலியின் அளவை உயர்த்தச் சொல்லிக் கேட்டதைக்கூட அவர்களால் தாங்க முடியவில்லை. ‘அடிமைகளுக்கு ஏது பேரம் பேசும் உரிமை’ என்பதே நிலப்பிரபுக்களின் உள்ளார்ந்த மனநிலை. விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு நின்றது, அதிலும் செங்கொடியின் கீழ் திரண்டு நின்று உரிமைக் குரல் கொடுத்தது அவர்களுக்குக் கடும் ஆத்திரத்தைத் தந்தது. புதிதாகப் பிறந்திருந்த அந்த உழைப்பாளி வர்க்க சுயமரியாதை உணர்வுக்குப் பாடம் புகட்டவே இந்தக் கொடூரத்தைச் செய்தார்கள்.

44 அப்பாவி உயிர்கள் துடிதுடித்துச் செத்தது இந்தியாவின் மனசாட்சியை அன்று  உலுக்கி  எடுத்தது.  நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்திற்குத் தக்க பதிலடி தர வேண்டும் எனும் நியாயமான உணர்வு எங்கும் நிறைந்திருந்தது. அதைச் சட்டபூர்வமாக நிறைவேற்றிடவே செங்கொடிச் சங்கம் முயன்றது. ஆனால், நமது நீதிமன்ற முறைமைம் ஆளும் வர்க்கச் சார்புகொண்டது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே உயர் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தது. கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

‘அவரைப் போன்ற பணக்காரர்கள் இதுபோன்ற கொலைகளைச் செய்திருக்க மாட்டார்கள்’ எனும் நீதிமன்றத்தின் கணிப்பிற்கும் `சிவப்பானவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்’ எனும் பாமரத்தனமான சொல்லாடலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருந்தது. வெண்மணி அக்கிரமத்தில் நிலப்பிரபுத்துவத்தின் கோரமுகம் மட்டுமல்ல; நீதிமன்றங்களின் நியாயமற்ற தன்மையும் அம்பலமானது.

அந்த அநீதி நடந்ததன் 50-ம் ஆண்டு தினத்தில் பழைய நினைவுகள் நம் நெஞ்சுக்கூட்டுக்குள் பற்றி எரிவதன் ஊடே அதன் முழுப் பரிமாணத்தையும் உள்வாங்க வேண்டியிருக்கிறது. சந்தேகம் இல்லை, அது அடிப்படையில் வர்க்கப் போராட்டமே. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் பண்ணையடிமைகள் நடத்திய போரில் கருகிய சிவப்பு மலர்களே, அந்த இளம் உயிர்கள். ஆனால், அது வர்க்கப் போர் மட்டுமல்ல; சமூகப் போராகவும் இருந்தது. அதனால்தானே மாண்டவர்கள் எல்லாம் தலித்துகளாக இருக்க, முக்கியமான குற்றவாளிகள் எல்லாம் தலித் அல்லாதவர்களாக இருந்தார்கள்!

வெண்மணித் தியாகிகளுக்கு எழுச்சிகரமான நினைவுச் சின்னத்தை அங்கே எழுப்பிய தொழிலாளி வர்க்கம், தமிழ்ச் சமூகத்தில் நிலவும் நிலப்பிரபுத் துவத்தின் அனைத்து முகங்களையும் இன்று உணர்ந்து வருகிறது. அந்த இரக்கமற்ற எரியூட்டல் நிலப்பிரபுத்துவத்தின் வர்க்கக் குணத்திலிருந்து மட்டுமல்ல; அதன் சமூகக் குணத்திலிருந்தும் பிறந்தது என்பதைப் புரிந்துகொண்டுள்ளது.

இந்திய நிலப்பிரபுத்துவம் தனித்துவ மானது. அது ஐரோப்பிய பாணியிலிருந்து வேறுபட்டது. இங்கு அது சொத்துடைமையால் மட்டுமல்லாது பிறப்பின் அடிப்படையிலான சாதியக் கட்டமைப்பாலும் வடிவமைக்கப்பட்டது. “பண்ணையடிமைகள் பேரம் பேசுவதா?” எனும் ஆளும் வர்க்க ஆதிக்க உணர்விலிருந்து மட்டுமல்ல, உயர்சாதிய ஆதிக்க உணர்விலிருந்தும் ஏற்பட்ட ஆத்திரமே அந்தப் படுகொலைகளுக்குக் காரணம்.

இந்த 50 ஆண்டுகளில் தமிழகக் கிராமப்புற வாழ்வில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாமல் போனது, நகர்ப்புறங்களில் ஆலைத்தொழில் விரிந்தது, தகவல் தொழில்நுட்பம் மேம்பட்ட புதிய துறைகளின் வரவு போன்ற பல காரணிகளால் பண்ணையார் குடும்பங்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி, நிலவுடைமை முன்னைக்காட்டிலும்  பரவலாகியிருக்கிறது.

 மறுபுறம் இடஒதுக்கீட்டின் பயனால் ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்ற தலித் மக்கள் பொருளாதார வாழ்வில் சற்றே முன்னேறினர். இதை வரவேற்கும் மனநிலையைச் சாதியம் தடுத்து நிற்பது வேதனையான விஷயம். சமூக வாழ்வின் காத்திரமான மாற்றங்களுக்குப் பொருளாதார மாற்றம் அடிப்படையாக இருக்கிறது என்றாலும், மாற்றம் தானாக நடந்துவிடுவதில்லை என்பதை யதார்த்த வாழ்வு உணர்த்தி நிற்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வர்க்கப் போராட்டத்தைப் பொருளியல் தளத்தில் மட்டுமல்லாது, சமூகத் தளத்திலும் நடத்த வேண்டியிருக்கிறது. இதைத்தான்   ஆணவப்படுகொலைகளும் விதவிதமான தீண்டாமைக்கொடுமைகளும் உணர்த்துகின்றன. இதை நன்கு உள்வாங்கிய காரணத்தால்தான் மார்க்ஸியர்கள் வர்க்க அமைப்புகளில் மட்டுமல்லாது ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ போன்ற சமூக அமைப்புகளிலும் இப்போது தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

உத்தபுரம் தீண்டாமைச் சுவரை அகற்ற வைத்ததிலிருந்து, ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கேட்டு நடைபயணம் நடத்தியது முதல், அதன் களப்பணிகள் அநேகம். சாதிப் பிரச்னை, நாடு தழுவியது என்பதால் அகில இந்திய அளவில் அமைந்துள்ள ‘தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி’யிலும் இடம் பெற்றுள்ளது. அதன் மாநாட்டை மதுரையில் வெற்றிகரமாக நடத்தித் தந்துள்ளது. மார்க்ஸியர்கள் பங்கேற்றுள்ள இந்தச் சமூக அமைப்பின் அடிப்படைக் கோட்பாடு தீண்டாமை ஒழிப்பில் தொடங்கி, சாதி ஒழிப்பை நோக்கி வேகமாக நடைபோடுவது.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

வர்க்கப் போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியா கூறாக சாதி ஒழிப்பை மாற்றாமல் இந்த நோக்கை எட்ட முடியாது என்பதில் மார்க்ஸியர்கள் தெளிவாக இருக்கிறோம்.இதன் அர்த்தம், வர்க்கப் போராட்டத்தைப் பொருளாதாரப் போராட்டமாகச் சுருக்கவும் கூடாது, சாதி ஒழிப்பை உணர்வுத் தளத்தில் மட்டும் நடத்தக் கூடாது என்பதாகும். புறம், அகம் இரண்டும் இயைந்து செல்லும் விரிந்த இயக்கமாக இதை மாற்ற வேண்டும்.

 தமிழகக் கிராமப்புறங்களில் இடைநிலைச் சாதியினரும் தலித் மக்களும் எதிரும் புதிருமாக இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. யதார்த்தம் என்னவென்றால், இடைநிலைச் சாதியினரிலும் ஆகப் பெரும்பாலோர் உழைக்கும் மக்களே. விவசாயக் கூலிகளில் பாதிக்குப் பாதியாக இந்த இரண்டு பகுதி மக்களும்தான் உள்ளனர். வர்க்க ரீதியாகப் பார்த்தால், இந்த இரு பகுதியினரின் நலனும் ஒன்றே. இவர்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று, இடைநிலைச் சாதிகளில் உள்ள ஆதிக்கவாதிகள் சாதிய ஒடுக்குமுறைகளைத் தூண்டிவிடுகிறார்கள். இவர்களை அம்பலப்படுத்தியும், சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்துக் களத்தில் நின்று போராடியும் வர்க்க ஒற்றுமையைக் கட்ட வேண்டும். இத்தகைய ஒற்றுமையே தீண்டாமையை ஒழிக்கும், சாதி ஒழிப்புக்கான அடித்தளத்தை அமைக்கும்.

இன்று புதிய அபாயமாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்திருப்பது மட்டுமல்லாது, அது தமிழகத்திலும் வேர்விடப் பார்க்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க ஏதோ மதச் சிறுபான்மையோருக்கு மட்டும் எதிரானது என்று நினைத்துவிடக் கூடாது. அது அவர்களை எதிரிகளாகப் பொய்யாகக் கட்டமைப்பதன் நோக்கமே மெய்யான எதிரிகளாகிய பிராமணியத்தையும், நெறியற்ற (சலுகைசார்) முதலாளியத்தையும் வெகுமக்கள் எதிர்ப்பிலிருந்து காப்பாற்றுவதுதான். அந்த வகையில் அவர்கள் இந்து வெகுமக்களின் எதிரிகளும்கூட. இந்த உண்மையை உரக்கச் சொல்லி சமூகநீதிப் போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வெண்மணித் தீயில் எரிந்து சாம்பலான அந்த 44 பேரின் தியாகம் வீணாகாது. அவர்களைச் சுட்டுப் பொசுக்கிய தீ, சாதியக் கட்டமைப்பையே ஒருநாள் சுட்டுப் பொசுக்கத்தான் போகிறது. அதற்கான ஞான வெப்பத்தை அது தந்த வண்ணம் உள்ளது.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

கீழ்வெண்மணியும் திராவிடர் இயக்கமும்! - பசு.கவுதமன்

“அரைப் படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக...” – இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்னையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா?

62-களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுகாவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில் , ஆய்மழை தங்கவேலு, சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோரின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களைப் பலிகொண்ட தீயின் கங்குகள்!

“நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கும், இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளுக்கும் இடையே உள்ள வெறுப்பும், இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைச் சங்கத்திலிருந்து பிரித்து , ‘விசுவாசமான தொழிலாளர்களாக’ மாற்ற நெல் உற்பத்தியாளர்கள் செய்த முயற்சியும்தான் இந்த மோதலுக்குக் காரணம். வெறுமனே கூலிப் பிரச்னை மட்டுமே என்று சொல்ல மாட்டேன்” என்று 28.12.1968 ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸி’ல் மதிப்புக்குரிய தோழர் மைதிலி சிவராமன் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்கின்றார்.

இன்னும் அவரே, தான் வெண்மணிக்குப் பக்கத்தில் உள்ள ஆலத்தம்பாடியில் சில மிராசுகளுடன் நடத்திய உரையாடலின்போது, “முன்னெல்லாம் இங்கே ரொம்ப அமைதியா இருந்துச்சு, தொழிலாளிங்க கடுமையா உழைப்பாங்க, மரியாதையா இருப்பாங்க. ஆனா, இப்போ? என் வீட்டுப் புழக்கடையில் நின்னு என்னோடு பேசினவன், இப்போ செருப்பு போட்டுக்கிட்டு  என்னோட வீட்டு வாசலுக்கு வந்து, ‘எங்க தலைவர் இன்னிக்கு சாயங்காலம் ஒரு பொதுக்கூட்டத்திலே பேசுறாரு. நான் அஞ்சரைக்கெல்லாம் போவணு’ம்கறான். அவன் தலைவரு எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே கூட்டம் போடுறாரு. இவன் செவப்புக் கொடிய எடுத்துக்கிட்டுத் தெருவெல்லாம் சுத்துறான். இவனுங்க எல்லாருக்கும் திமிரு புடிச்சிப்போச்சு. இதுக்கெல்லாம் காரணம் இந்த கம்யூனிஸ்ட்டுகதான். இப்பெல்லாம் இவனுங்க ஒடம்புல பயமுங்கறதே இல்ல” என்று பேசியதைப் பதிவுசெய்கின்றார்.

தொடக்கக் காலகட்டங்களில்  நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டத்தில் பொதுஉடைமை இயக்கம் ,  தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்த சாதியக் கட்டுப்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டுதான் இயக்கத்தைக் கட்டமைத்தது. கட்சி வேறு, நாட்டாண்மை – சாதிய முறைகள் வேறு என்று இருந்த நிலை மாறி, சாதிக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிராம நிர்வாகங்கள், கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததற்குப்  பின்னால்  நாட்டாண்மைகள், கட்சியின் தலைவர்களாகவும், சாதிய உணர்வுகள், கொள்கை உணர்வுகளாகவும் உருமாற்றம் பெறுகின்றன.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

54-களில் பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினை நாகை மாவட்டத்தில் மிகப்பெரும் இயக்கமாக வளர்த்தெடுத்த தோழர்கள் பாவா நவநீத கிருஷ்ணன் மற்றும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் ஆகிய இருவரும் தந்தை பெரியாரிடம் உண்டான கருத்து வேறுபாட்டால் இயக்கத்திலிருந்து விலகுகின்றனர். அதில் தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன், மிகப் பெரும்பாலான திராவிடர் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தோழர்களோடு பொதுஉடைமை இயக்கத்தின் தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் செங்கொடி அமைப்பில் இணைகின்றார். அதற்குப் பின்னால் கீழைத் தஞ்சையின் வயல் வரப்புகளில் மார்க்ஸும் பெரியாரும் இணைந்தே நடக்கின்றார்கள். இதைத் தோழர் ஏ.ஜி.கே, “சரியான அனுபவ அறிவும், ஆராய்ச்சி அறிவும், பட்டறிவும், படிப்பறிவும் உள்ளவர்களால் ‘செழுமைப்படுத்தப்பட்ட மார்க்ஸியமே பெரியாரியம்’ என்ற இவ்வுண்மையினை நாம் நமது நடவடிக்கைகளால் முன்வைத்தோம். அதுவும்கூட, நாம் தனித்து எதையும் செய்யவில்லை. செயல்திட்டத்தைக் குழுக் கூட்டத்தில் முன்வைத்து விவாதித்த பிறகே முடிவுக்கு வருவது வழக்கம். கமிட்டியில் தீர்மானிக்கப்படாத எந்த ஒரு போராட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. தனிநபர் முடிவு எடுப்பது என்பது ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. அந்த அடிப்படையில் முதலில் வாழ்வாதாரம், கூடவே தன்மான வாழ்விற்கான நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் நடவடிக்கைகளை அமைத்தோம்” என்று சொல்கின்றார்.

அந்தச் செயல் திட்டங்களின், போராட்டங்களின் விளைவுகள்தான் ‘விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேர்ந்துவிட வேண்டும்’ என்று  சொல்லப்பட்ட உத்தரவு, தன் சொந்த ஊரிலேயே செவிடன் காதில் ஊதிய சங்காய் மாறிப்போக தன்னுடைய அதிகார நிலையிலிருந்து தான் கீழே விழுந்துவிட்ட மனநிலையில் உண்டான அதிகாரவெறி, பண்ணை ராஜ்ஜியத்திற்கே உரிய கெளரவப் பிரச்னை, அத்துடன் சாதித் திமிர் இத்தனையும் சேர்ந்து ஒரு பேட்டை ரவுடியைப்போல கைகளில் தீப்பந்தத்தினைத் தூக்கவைத்ததினால்தான் ராமையாவின் குடிசை கொழுந்துவிட்டு எரிந்து 44 உயிர்களைப் பலிகொண்டதில் முடிந்தது.

“அரைப் படி என்ன – இன்னும் கூடுதலாக அரைப் படி தருகிறேன் வாங்கிக்கொள். ஆனால், நீ எனக்கு உத்தரவு போட்டு இப்படி அள, இங்க கொடு என்று சொல்லக் கூடாது. நான் போடுவேன், நீ பொறுக்கிக்கொள்” என்றது பண்ணை ராஜ்ஜியாதிபதிகளின் அதிகார, சாதிவெறி. இந்த முரண்பாடுதான் வெண்மணி நிகழ்வு.

வெண்மணி தொடர்பான செயல்பாட்டில் நேரடியான பங்களிப்பைப் பெரியார் நிகழ்த்தாவிட்டாலும் தத்துவார்த்தப் பின்புலமாகச் செயல்பட்டிருக்கிறார். இச்சம்பவம் நடக்கும்போது பெரியார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அவரிடம் இது குறித்த தகவல்கள் பகிரப்படுகின்றன. அதையொட்டி, ‘இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மனுதர்மம்தான் ஆட்சி புரியும்’ எனும் கட்டுரையை வெளியிடுகிறார். பின், செம்பனார்கோவில் கூட்டத்தில் வழக்கம்போல இந்திய கம்யூனிஸ்ட்டுகள்  மீதான விமர்சனத்தை வைப்பதுபோல அங்கும் வைத்தார். அடுத்த சில மாதங்களில் சாதி ஒழிப்பு மாநாட்டு அறிவிப்பு விடுக்கிறார். ஆனால், அந்நேரத்தில் அண்ணாவின் உடல்நிலை மோசமாகி, வெளிநாடு அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் வந்ததும் மீண்டும் அம்மாநாட்டு வேலைகளைத் தொடங்குகையில் அண்ணா இறந்துவிடுகிறார். இந்தச் சூழ்நிலையால் அந்த மாநாடு தள்ளிப்போகிறது. அதுவேதான் 1973-ம் ஆண்டு, சென்னையில் ‘சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடா’க மாறுகிறது.

வெண்மணிப் படுகொலைக்குப் பின், கோபாலகிருஷ்ண நாயுடு அழித்தொழிப்பு நடைபெற்றது. அதில் நேரடியாகப் புரட்சிகர இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த ஏழு பேர் பங்கேற்றனர். அவர்கள் தலைமறைவாகி விடுகின்றனர். கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வழக்கு எண் 254/1980-ல், முதல் தகவல் அறிக்கையில் நந்தன், செல்வராஜ், மணியன், குமார் மற்றும் நான்கு பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் தொடர்பில்லாத, சந்தேகத்திற்கு உரியவர்கள் எனச் சிலரைக் கைதுசெய்கின்றனர். அவர்களில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திராவிட மணியை அடித்து, துன்புறுத்தி அப்ரூவர் ஆக்குகின்றனர். அவரது வாக்குமுலத்தின் அடிப்படையில் 11 பேர் கைதுசெய்யப்படுகின்றனர். அவர்களில்  எட்டு பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். திராவிட மணியைச் சேர்த்து  ஒன்பது பேர். 10.5.1980 அன்று நாகை நீதிமன்றத்தில் திராவிட மணியைத் தவிர்த்து மற்ற அனைவருக்குக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அதை எதிர்த்து இவர்கள் மேல் முறையீடு செய்கிறார்கள். 1985-ம் ஆண்டு அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தத் தோழர்கள் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மன மற்றும் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே தலைமறைவாக இருந்த புரட்சிகர இடதுசாரி தோழர்கள் சரணடைந்த பிறகு விடுவிக்கப்படுகின்றனர். இந்த இடத்தில் எனக்கான கேள்விகள் என்னவென்றால், இவ்வளவு இன்னல்களுக்கு உட்பட்டு திராவிட இயக்கத் தோழர்கள் சிந்திய ரத்தம் ஏன் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.அது மார்க்ஸிஸ்ட் கட்சியானாலும்  புரட்சிகர இடதுசாரி அமைப்பானாலும் திராவிடர் கழகமானாலும் சரி, இந்தத் தோழர்கள் பற்றிய பதிவுகளைத் தவிர்த்தது ஏன் என்பதுதான்.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

நான்கு நாவல்கள் - நான்கு கோணங்கள்! -  ச.தமிழ்ச்செல்வன்

வெண்மணியின் சிவப்புச் சகதியிலே மை தொட்டு எழுதப்பட்ட நாவல்கள் எனப் பார்த்தால், தமிழில் மூன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் என நான்கு மட்டுமே வந்துள்ளன. இந்திரா பார்த்தசாரதியின் `குருதிப்புனல்’ 1975-ம் ஆண்டில் வெளியானது. சோலை சுந்தரபெருமாளின் `செந்நெல்’ 2000-ம் ஆண்டில் வெளிவந்தது. பாட்டாளி எழுதிய `கீழைத் தீ (பின் வெண்மணி)’ 2007-ம் ஆண்டில் வெளியானது. 2014-ம் ஆண்டில் மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் எழுதிய `The Gypsy Goddess’ என்ற நாவல், பிரேம் மொழிபெயர்ப்பில் தமிழில் 2016-ம் ஆண்டு `குறத்தியம்மன்’ என்ற பேரில் வெளிவந்துள்ளது.

அந்த நாவல்களுக்குள் போவதற்கு முன், கீழ்வெண்மணியில் என்னதான் நடந்தது என்பதை மிகச் சுருக்கமாக நினைவுப் படுத்திக்கொள்வது அவசியம்.

கதை என்பது என்ன என்று விளக்கும்போது, புதுமைப்பித்தன்  ‘உண்மையை ஒட்டிப் புளுகுவது’ என்று ஒருமுறை குறிப்பிட்டார். அதாவது உண்மையின் மீது புனையப்படுவது. படைப்பில் உண்மையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என முடிவுசெய்யும் உரிமை படைப்பாளியினுடையது. சில படைப்பாளிகளுக்கு உண்மை உணவாகவும், சில படைப்பாளிகளுக்கு உண்மை ஊறுகாயாகவும் இருக்கலாம். ஆனால், உண்மை என்பதும் அதைச் சொல்பவரின் மனச்சார்பைப் பொறுத்து மாற்றம்பெறும். மிகப் பழைய காலத்து வரலாற்றைச் சொல்லும்போது இந்தச் சார்புநிலையே முக்கியப் பங்காற்றும். ஆனால், மிகச் சமீபத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் 1968-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்தத் துயரம் வெறும் நினைவுகளாக மட்டும் அல்லாமல் எழுதப்பட்ட ஆவணங்களாக, பத்திரிகைச் செய்திகளாக, நேரில் கண்ட சாட்சியங்களாக, நீதிமன்ற ஆவணங்களாக (நின்று கெடுத்த நீதி - மயிலை பாலு) ஆய்வுக் கட்டுரைகளாக மட்டுமின்றி அந்தப் படுகொலையில் உயிர் தப்பிய மனிதர்களும் நம்மோடு இருந்து நடந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் ஒப்புக்கொள்ளும் பொதுவான உண்மைகள் உண்டு.

அரைப் படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக 44 உயிர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகச் சற்று எளிமைப்படுத்தப்பட்ட வாசகமாகப் பலராலும் சொல்லப்பட்டுவரும் கீழ்வெண்மணியின் கதை, கூலிஉயர்வுப் போராட்டம் மட்டுமல்ல.

இன்று தஞ்சை, திருவாரூர், நாகை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி வட்டாரமும் காரைக்கால் பகுதியும் சேர்ந்ததுதான் அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம். நாகை, திருவாரூர் பகுதி `கீழைத் தஞ்சை’ என அழைக்கப்பட்டது. தஞ்சாவூர் பகுதி `மேலத் தஞ்சை’ எனப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில், சிலர் கைகளில் பெரும் நிலக்குவியல் இருந்தது தஞ்சை மாவட்டத்தில்தான். மேலத் தஞ்சையில் அது ஜமீன்தார்கள் கையிலும், கீழைத் தஞ்சையில் திருவாரூர் பகுதியில் கோயில்கள் மடங்கள் கைகளிலும், நாகைப் பகுதியில் பண்ணையார்கள் கைகளிலும் குவிந்துகிடந்தன. நிலமற்ற பெருவாரியான மக்கள் (பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த) கூலி உழைப்பாளிகளாக அல்லாமல் பண்ணை அடிமைகளாக உழைத்துவந்தனர். வேலை வாங்குவதற்காகப் பண்ணை அடிமைகளைச் சாட்டையால் அடிப்பதும் வாயில் சாணிப்பால் புகட்டுவதும் அன்றாட நடைமுறைகளாக இருந்தன.

``நான் சென்ற கிராமம் ஒன்றில், ஒரு மிராசுதாரின் ஏஜென்டைப் பார்த்தேன். அவரிடம் இரண்டு சவுக்குகள் இருந்தன. நான் கேட்பதற்கு முன்பே அவர் முந்திக்கொண்டு, ‘அடியாத மாடு படியாது சார். இந்தப் பசங்களை அடிக்காம விட்டா, வேலை செய்வாங்கனு நினைக்கிறீங்க?’ என்று கேட்டார்.

அவரிடம் வேலை செய்யும் விவசாயிகளை நான் தனியாகப் பார்த்து விசாரித்தேன்.    ‘இந்த ஆண்டை ரொம்ப நல்லவர். தினமும் அடிக்க மாட்டார்’ என்று கூறினார்கள்” என்று அந்தப் பகுதியில் களப்பணியாற்றிய கம்யூனிஸ்ட் தலைவர் பி.சீனிவாசராவ் பதிவுசெய்கிறார்.

`அடிச்சா திருப்பி அடி’ என்ற முழக்கத்தோடு செங்கொடியைக் கையில் ஏந்தி சீனிவாசராவ் தலைமையில், தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தோழர்களாக ஒன்றிணைந்து நிமிர்ந்து நின்றார்கள். அரசாங்கமும் பண்ணைகளும் இந்த எழுச்சியை ஒடுக்க நடத்திய அராஜகத்தில் வாட்டாக்குடி இரணியன், ஜாம்புவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், திருச்சி சிறையில் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட களப்பால் குப்பு போன்ற பல தோழர்களின் உயிர்த் தியாகத்துக்குப் பிறகுதான் இனாம்தாரி ஒழிப்பு, ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டங்களும் 1952-ம் ஆண்டில் `தஞ்சாவூர் பண்ணையாள், சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டம்’ போன்றவையும் நிறைவேற்றப்பட்டன.

சட்டங்கள் வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பண்ணையார்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் தயாராக இல்லை. ஏனெனில், அவர்கள் எப்போதும் ஆளும் கட்சிகளில் இருந்தனர். 5,000 ஏக்கர் 6,000 ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ அய்யர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். ஆகவே, ஒப்பந்தங்களும் சட்டங்களும் அவர்களுக்கு எப்போதும் ஒரு பொருட்டல்ல. சட்டப்படி கூலி கேட்டும் போராட்டங்கள் தொடர்ந்தன. `பறையன் கட்சி’ என்று மிராசுகளால் ஏளனம் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் போராட்டங்கள் தொடர்ந்தன. `தென்பரை முதல் வெண்மணி வரை’ என்ற நூலில் மக்கள் மொழியிலேயே இந்தக் கதைகளை மு.அப்பணசாமி பதிவுசெய்துள்ளார்.

மிராசுகள், செங்கொடியைக் கீழே இறக்க, மஞ்சள் கொடியைக் கையில் ஏந்தினர். ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்ற பெயரில் அணி திரண்டனர். விவசாயக் கூலிகளின் `கொட்டத்தை’ அடக்க, ஆட்சியாளர்களும் கிசான் போலீஸ், கிசான் தாசில்தார் எனச் சிறப்புப் படை வரிசையைத் தஞ்சைத் தரணிக்கு மட்டும் உருவாக்கிப் பண்ணைகளுக்குத் தொண்டூழியம் செய்தனர். `செங்கொடியை இறக்கு; மஞ்சள் கொடியை ஏற்று’ என்பது பண்ணையார்களின் உத்தரவாக இருந்தது. சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவுகட்டியது செங்கொடி. பண்ணையடிமை முறையை ஒழித்தது செங்கொடி. தெருவில் செருப்பு போட்டு நடக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தது செங்கொடி. வயலில் நிற்கும் பெண்களின் முழங்கால் சேலையைக் கரண்டைக்காலுக்கு இறக்கிவிட்டது செங்கொடி. ஆகவே, உயிரே போனாலும் எம் உதிரச் செங்கொடியை இறக்க மாட்டோம் என்பது பண்ணையடிமைகளின் எதிர் முழக்கமாக இருந்தது.

இதுதான் போராட்டத்தின் குவிமையம். `கூலிஉயர்வுக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பண்ணைகள், அதை மீறியதால் வெண்மணியிலும் சுற்று கிராமங்களிலும் அறுவடைக்கு வயலில் இறங்க மாட்டோம்’ எனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டினி கிடந்த உழைப்பாளிகளை அழைத்து வந்து வயலில் இறக்கினர் பண்ணைகள்.  ‘வெளியிலிருந்து ஆள்களைக் கொண்டுவந்து வயல்களில் இறக்கக் கூடாது’ என்பது ஒப்பந்தம். அதை மீறிய பண்ணைகளுக்கு எதிராகச் செங்கொடியின் கீழ் உழைப்பாளிகள் உறுதியுடன் நின்றனர். பண்ணைகளுக்கு இது தங்கள் வர்க்கச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் காப்பாற்றும் போராட்டம். தொழிலாளர்களுக்கோ `இது வாழ்வா... சாவா?’ என்ற போராட்டம். இதன் உச்சத்தில் நிகழ்ந்த வன்முறைதான் வெண்மணிப் படுகொலைகள். நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரும் காங்கிரஸ்காரருமான கோபாலகிருஷ்ண நாயுடு நேரடியாகக் களத்தில் இறங்கி, வெண்மணி மக்களின் குடிசைகளுக்குத் தீவைத்தார். காவல்துறை முழுமையான ஒத்துழைப்பை பல வழிகளிலும் அவருக்கு வழங்கி தன் `அறம்’ காத்தது. ராமையாவின் குடிசைக்குள் ஓடி ஒளிந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 44 பேரை குடிசையோடு கொளுத்திக் கொன்றனர். உலகமே அதிர்ந்தது. அப்போது  அண்ணா தலைமையில் தி.மு.க, மாநில ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

1975-ம் ஆண்டில் முதன்முதலாக வெண்மணியைப் பற்றிய நாவலாக இந்திரா பார்த்தசாரதியின் `குருதிப்புனல்’ வந்தபோது, செங்கொடி இயக்கத் தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோபாலகிருஷ்ண நாயுடு (கதையில் கண்ணையா நாயுடு) ஆண்மையற்றவர். அதுதான் இந்தப் படுகொலைகளுக்கான உந்துதல் என்பது நாவலின் மையப்புள்ளியாக இருந்தது. இந்திரா பார்த்தசாரதி அது பற்றி எழுதுகிறார்:

`தலித் மக்களை உயிருடன் கொளுத்திய பண்ணையார், 56 வயதாகியும் விவாகம் ஆகாதவர். சுற்றுப்புறத்தில் இருந்த கிராமங்களில், பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் காட்டிக்கொண்டார் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். கொளுத்தப்பட்டவர்களில் பெரும்பான்மை யோர் பெண்கள், குழந்தைகள். இயற்கை வஞ்சித்துவிட்ட காரணத்தால், தன் கோபத்தைப் பெண்களிடத்தும் குழந்தைகளிடத்தும் காட்டியிருக்கலாமோ என எனக்குத் தோன்றியது.

உண்மையில் அந்தப் பண்ணையார் ஆண்மையற்றவரா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. நான் கீழ்வெண்மணிச் சம்பவம் பற்றி அறிக்கை எழுதவில்லை. நான் எழுதியது நாவல். சம்பவத்தை நான் உள்வாங்கிக்கொண்ட அளவில், என் மனதில் ஏற்பட்ட சலனங்கள் நாவலாக உருப்பெற்றன. கதை மாந்தர்கள் அனைவரும் என் கற்பனையில் உருவானவர்கள். யதார்த்தம் விளக்கேற்றியது, ஒளி என்னுடையது.

ஃபிராய்டு வழியில் பாலினப் பிரச்னையைக் கொண்டுவந்து, பொருளாதாரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விட்டதாக மார்க்ஸியர்கள் என்மீது குற்றம் சாட்டினார்கள்.’ (குருதிப்புனல் - ஐந்தாம் அச்சுக்கு இந்திரா பார்த்தசாரதி எழுதிய முன்னுரையிலிருந்து) `குருதிப்புனலை’ முதன்முறையாக நான் வாசித்தபோது, எனக்கும் அந்தக் கோபம் வந்தது. கோபாலகிருஷ்ண நாயுடு வகையறாக்கள், பெண்களை மட்டும் கொல்லவில்லையே என்பது எனது வாதமாக இருந்தது. சம்பவம் எனக் குறிப்பிடப்படும் படுகொலை நடந்த 1968-ம் ஆண்டிலேயே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் 27 வயதேயான என்.பக்கிரிசாமி, சிக்கல் பஸ் நிலையம் அருகில் அடித்துக் கொல்லப்பட்டார். திருவாரூர் பகுதியில் காங்கிரஸை விட்டு வெளியேறி செங்கொடி இயக்கத்துக்கு வந்திருந்த கேக்கரை ராமச்சந்திரன் போலீஸார் முன்னிலையிலேயே வயலில்வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். விவசாயச் சங்க ஊழியரான இரிஞ்சூர் (கோபாலகிருஷ்ண நாயுடுவின் சொந்த ஊர்) சின்னப்பிள்ளை பண்ணையாரின் ஆள்களால் கடத்திச் செல்லப்பட்டார். என்ன ஆனார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. ரத்தம் தோய்ந்த அவரது துண்டு மட்டுமே கிடைத்தது. தொழிலாளர்களின் போராட்டத்தை வேகப்படுத்திய இந்த மூன்று தொடர் கொலைகளிலும் கொல்லப்பட்டவர்கள் ஆண்கள்தானே.

`நாயுடு, தன் சபதத்தை நிறைவேற்றி விட்டான். இயற்கை அவனை வஞ்சித்துவிட்டதன் காரணமாக, பெண்களையும் குழந்தைகளையும் தீயிலிட்டுப் பொசுக்கியிருக்கிறான்’ என்று `குருதிப்புனல்’ நாவலின் கடைசிப் பக்கத்தில் இந்திரா பார்த்தசாரதி எழுதிவிட்டாரே என எனக்குக் கோபம் வந்தது உண்மைதான். 2000-ம் ஆண்டில் சோலை சுந்தரபெருமாளின் `செந்நெல்’ நாவல் வந்தபோது `குருதிப்புனல்’ நாவல் செய்த தவறை சோலையின் செந்நெல் நேர் செய்துவிட்டதாக நான் விமர்சனம் எழுதினேன். இந்தப் பார்வைதான் பரவலாகத் தோழர்களிடமும் இருந்தது.

வெண்மணி குறித்து வரலாற்று நோக்கில் ஒன்று, வர்க்க நோக்கில் ஒன்று, பெண்ணிய நோக்கில் ஒன்று, அடித்தள மக்கள் நோக்கில் ஒன்று, பண்ணையார்கள் நோக்கில் ஒன்று, பெரியாரிய நோக்கில் ஒன்று எனப் பத்து நாவல்கள் வந்திருந்து, அதில் ஒன்றாகப் பாலியல் நோக்கில் குருதிப்புனலும் வந்திருந்தால், தோழர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் வந்திருக்காது என்று இப்போது நினைக்கிறேன். வந்த ஒரே ஒரு நாவலும் பாலியல் நோக்கில் வந்துவிட்டதே என்பதுதான் அன்று எங்கள் மன உணர்வாக இருந்தது. பல்வேறு கண்ணோட்டங்களில் நாவல்கள் வராதது இந்திரா பார்த்தசாரதியின் குற்றமில்லையே என்று இப்போது நான் புரிந்துகொள்கிறேன்.

`நாவலைப் படித்து முடித்த பிறகு, நாயுடு அந்த ஏழை மக்களைக் கொளுத்தியது நியாயம்தான் என்று ஒரு வாசகனுக்குப்பட்டால், அதுவே இந்த நாவலின் தோல்வி. உளவியல் பார்வை நாவலின் அடித்தளப் பிரச்னையை எந்தவிதத்திலும் திசை திருப்பிவிடவில்லை என்பதே என் அசைக்க முடியாத கருத்து’ என்று இன்று இந்திரா பார்த்தசாரதி எழுதியிருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு குருதிப்புனலை மறுவாசிப்புக்கு உட்படுத்தினேன்.

டெல்லியிலிருந்து ‘ஒரு வேலையும் இல்லாமல் சும்மா கிராமத்தில் இருந்து பார்ப்போமே என’ வெண்மணிக்கு வரும் நாயுடு பையனான கோபால், அவனைச் சந்திக்க இரண்டு மாதங்களுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு தேடிவரும் பிராமணப் பையனான சிவா ஆகிய இருவருடைய பார்வையில் வெண்மணியின் கதை சொல்லப்படுகிறது. சரியாகச் சொன்னால், கதை சொல்லப்படுவதைவிட இரண்டு பேரும் அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதே நாவலில் முக்கிய இடம் பெற்றுள்ளது. `சுதந்திர பூமி’, `காலவெள்ளம்’, `ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ போன்ற அவரது இதர படைப்புகளை நான் வாசித்திருப்பதால், இது அவரது பாணி எனப் புரிந்துகொள்கிறேன்.

குருதிப்புனலில் ஓர் இடத்தில் `இது ஒரு பொருளாதாரப் பிரச்னை என்பதைக்காட்டிலும், சமுதாயப் பிரச்னை என்பதுதான் முக்கியம். `பறப்பய ஒருத்தன், என்னைக் கைநீட்டி அடிக்கிறதை எல்லோரும் பார்த்துக்கிட்டா நிக்கிறீங்க?’ நாயுடுவின் ஆவேசம் அவரை ஒரு பறப்பய அடித்ததுதான்’ என்று வருகிறது. வர்க்கப்பிரச்னையும் சாதிப்பிரச்னையும் பிரிக்க முடியாமல் இணைந்ததுதான் வெண்மணி என்ற புரிதல்தான் சரியானது. இது மட்டும்தான் அல்லது அது மட்டும்தான் என வாதிடுவது பகுதி உண்மையாகத்தான் இருக்கும்.

நாவலின் கடைசி வரிகள் இப்போது வாசிக்கையில், வேறு அர்த்தம்கொள்ள  நமக்கான வாசிப்புக்கு வாசல்களைத் திறந்து வைத்திருப்பதாகவே உணர்கிறேன்.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

``இந்தக் கிராமத்தில் இப்போது எழுந்த இந்தத் தீ அடங்கவே அடங்காது... அடங்கவும் கூடாது!

நான் இப்போது இந்தக் கால்வாயில் குளித்தாக வேண்டும். பரசுராமனைப்போல. பரசுராமன் 21 தலைமுறை ஷத்திரியர்களைக் கொன்று, அதனால் உண்டான அந்த ரத்த ஆற்றில் குளித்தான். நான் அநீதி இழைக்கப்பட்டவர்களின் ரத்த வெள்ளத்தில் குளிக்கப்போகிறேன். அவர்களுடைய பலமெல்லாம் என்னில் புக வேண்டும். நான் கோழை அல்ல. கோபால் கால்வாயில் இறங்கினான்.”

மாணவப் பருவத்தில் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பில் இருந்த கும்பகோணத்துக்காரரான இந்திரா பார்த்தசாரதிக்கு `வெண்மணி குறித்த முதல் நாவலை எழுதிய படைப்பாளி’ என்ற கௌரவத்தைக் காலம் அளித்துள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. வெண்மணிக் கொடுமை அவரை உலுக்கியதன் விளைவாக இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்பதே இன்று எனக்கு முக்கியமாகப்படுகிறது. 44 உயிர்களைப் பலிவாங்க எப்படி மனசு வந்தது என்கிற வேதனையிலிருந்தே  ‘குருதிப்புனலை’ அவர் எழுத முற்பட்டிருக்கிறார். எந்தக் கோணத்தில் எழுத வேண்டும் என்ற சுதந்திரம் அவருக்கானது. அதை விமர்சிக்கும் உரிமை நமக்கானது!

ரண்டாவதாக வந்த `செந்நெல்’லை எழுதியவர், சோலை சுந்தரபெருமாள்.  செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர். திருவாரூரில் அம்மையப்பட்டு காவனூர் பகுதியில் வசிப்பவர்.

பெரியான் என்கிற தலித் விவசாயத் தொழிலாளி, அவர் மகன் கம்யூனிஸ்ட் கண்ணுச்சாமி, அவரைக் காதலிக்கும் செல்வி, வெண்மணியில் டீக்கடை நடத்தி அதையே மார்க்ஸியப் பள்ளியாக மாற்றிக்கொண்டிருக்கும் வடிவேலு போன்ற கதாபாத்திரங்களைச் சுற்றி எழும்பும் ‘செந்நெல்’ நாவல், வெண்மணியில் நடந்த வர்க்கப்போராட்டத்தை வர்க்கப் போராட்டமாகவே சித்திரிக்கிறது. இந்த நாவலிலும் பாலியல் பிரச்னை பேசப்படுகிறது. எளிய உழைப்பாளிகளான இளம்பெண்கள் மீது பண்ணையார்களும் அவர்களின் அடியாள்களும் செலுத்தும் பாலியல் வன்முறையாக அது பேசப்படுகிறது.

`பூந்தாழக்குடி - கருப்பூர்ல போன வருஷக் குறுவ மகசூல் காலத்தில் விவசாயத் தொழிலாளிங்க கலத்துக்கு ஆறு படி கூலி கேட்டுப் போராடும்போது, அந்தப் பண்ணை அந்தக் கூலியைக் கொடுத்துட்டுன்னு எல்லா மிராசுகளும் போயி, அதிகப்படியா கூலி கொடுக்கக் கூடாதுன்னு தடுத்ததும் இல்லாம, அந்தப் பண்ணைய மிரட்டி பல வகையாலும் இம்சை கொடுத்தது வேலு நாடார் மனதில் வந்து போனது.’ (செந்நெல்-பக்கம் 25)
`தம்பி, முழுசா நனைஞ்சப் பொறவு முக்காடு போட்டுக்கவாப் போறோம்? பேசுனபடியே கூலி கொடுத்தா வாங்குவோம். இல்லே... நாளைக்கு வேலைநிறுத்தம் பண்ணினாத்தான் அவங்களுக்கு நம்மோட மவுசு புரியும். காலம் காலமா நம்மள ஏமாத்தி கீழப்போட்டு மிதிச்சுக்கிட்டிருந்த பண்ணைகளுக்கு இப்ப நாம முணுமுணுக்கிற சத்தம்கூட காட்டுக்கத்தலாத் தெரியுது.’ (செந்நெல் பக்கம்- 29)

நியாய உணர்வுள்ள சில  சிறு பண்ணைகளும் தங்கள் மனசாட்சிப்படி கூலியை உயர்த்திக் கொடுக்க முடியவில்லை.

``நீ என்ன, விவரம் தெரியாத ஆளா இருக்கே? நாம நினைச்சாப்போல கூலி கொடுத்து வேலையைப் பார்க்க நெல்லு உற்பத்தியாளர் சங்கம் சும்மா பார்த்துக்கிட்டு இருக்குமாய்யா? இருஞ்சூரு நாயுடு கழுகு மாதிரி சுத்திக்கிட்டு நிக்கிறார். கிழிச்சுப்போடுவாரு கிழிச்சு. இப்பதான் சங்கத்துக்குத் தலைவரா வந்திருக்க மனுஷன், நம்ம பிர்க்காவிலே சேப்புக்கொடிக்காரனுங்க தலை காலு புரியாம நிக்கிறானுங்க. அவனுங்களை அடக்க சரியான ஆளு கோபாலகிருஷ்ண நாயுடுதானு சங்கம் ஏகமனதா முடிவுபண்ணி வெச்சிருக்கு” என்று பண்ணையார் வேலு நாடார் பேசுவதாக ஒரு காட்சி வருகிறது.

இப்படி உண்மையின் மீது அழுத்தமாகக் கால் பதித்து, செந்நெல்லின் கதை நகர்கிறது. அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி, வெண்மணியில் டீக்கடை நடத்தும் வடிவேலுவுக்கும் தோழர்களுக்கும் சிலம்பத்தின் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கும் கதாபாத்திரமாக வந்து, மார்க்ஸிய வகுப்புகள் எடுக்கிறார். உழைப்பாளி மக்கள் இப்படி தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்வது, ஆண்டைகளின் அடியாள்களை எதிர்கொள்ளவும் தாக்குப்பிடித்து வாழவும் மிகத் தேவையானது என்பது நாவலில் உணர்த்தப்படுகின்றது.

காவல்துறை ஆய்வாளர், பண்ணையாரிடம் கை நீட்டிக் காசு வாங்கிக்கொண்டு வடிவேலுவையும் கண்ணுச்சாமியையும் கைதுசெய்து ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகாமல் இன்னொரு பண்ணையார் வீட்டில் விட்டுச் செல்கிறார். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அவர்களை வெண்மணி மக்கள் கூட்டமாகத் திரண்டு சென்று விடுதலை செய்கிறார்கள். வெளியே வந்த கண்ணுச்சாமி சொல்கிறார் ``நல்ல நேரத்திலே நீங்கெல்லாம் திரண்டு வராட்டா, இருஞ்சூரு சின்னப்புள்ளைக்கு ஆன கெதிதான் எங்களுக்கும் ஆகியிருக்கும்” என்று கண்ணுச்சாமி சொல்லவும், அவருடைய அப்பாரு பெரியான் மகனைக் கட்டிக்கொண்டு கதறி அழுகிறார்.

அப்போது கண்ணுச்சாமி சொல்கிறார், ``யப்பா... நம்ம செங்கொடிக்கும் அவனுங்க மஞ்சக்கொடிக்கும் நடக்கிற போராட்டம்ப்பா இது. நம்ம கொடிக்காக எது நடந்தாலும் அதை மனசார நாம ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அதுக்காவ என்னை ஒப்படைச்சுக்கிட்டேன். உனக்கு (அண்ணன்) ஒரு புள்ளதான்னு நினைச்சுக்கப்பா. கண்ணுச்சாமி உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லும்போது, கூடி நின்ற ஜனங்களுக்கும் சிலிர்த்துக்கிட்டு…”

உயிரைத் துச்சமாகக் கருதி செங்கொடி காக்கப் போராடணும் என்று கட்சி சொல்லவில்லை. மக்களே தங்கள் வாழ்வனுபவத்திலிருந்து அந்த முடிவுக்கு வருகிறார்கள் என்றுதான் நாவல் நெடுகிலும் வருகிறது. 44 பேரைத் தீயிட்டுக் கொளுத்தும் காட்சி மனதைப் பதைபதைக்க வைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மூ
ன்றாவதாக வெளியான நாவல் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’. இது 1968-க்குப் பிறகு வெண்மணியில் நடந்தவற்றைச் சொல்லும் கதையாக இருக்கிறது.குறிப்பாக கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கொலை (அழித்தொழிப்பு) செய்யும் கதையைப் பேசுகிறது. நாவலின் பதிப்புரை சொல்கிறது:

“ தமிழகத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நடத்திய அழித்தொழிப்புகளில் பிரபலமானது, கீழ்வெண்மணிக் குற்றவாளி கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்பு. தமிழகத்தின் கிராமங்களில் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.அதேவேளை, கிராமப்புறப் பண்ணைகள், ஆதிக்கச் சக்திகள், அடிவருடி அரசியல் தலைவர்கள் அலறித் துடித்தனர்.அழித்தொழிப்பு வழி அரசியலை சிபிஐ (எம்.எல்)கைவிடும் காலத்தில் நடத்தப்பட்ட கடைசி அழித்தொழிப்புச் சம்பவமே இது.”

மகள் வயதுக்கு வந்ததை ஒட்டி மைக் செட் வைத்துப் பாட்டுப் போடும் தலித் வீட்டு வாசலுக்கு வந்து, ஆதிக்க சாதிக்காரர்கள், “எங்க வீட்டிலேயும் இதே காரணத்துக்காக மைக் செட் வச்சி பாட்டுப் போட்டுக்கிட்டிருக்கோம். ஒங்களோட பாட்டுச் சத்தம் எங்க செட்டவிட மேலாச் சத்தம் போட்டு, எங்க பாட்ட கேக்க விட மாட்டேங்குதுடா. அதாஞ் சொல்றோம். பாட்ட நிப்பாட்டு. இல்லன்னா சத்தத்தக் கொறச்சி அடக்கி வாசி... என்னடா முருவா, வர வர ஒன் ஆட்டம் தூக்கலாட்டுத் தெரியுது. எம்.ஜி.ஆர் கட்சியிலே இருக்கம்னுட்டு நெனப்பா? ரொம்பத் துள்ளாதடா. புடுக்க அறுத்துப்புடுவம் அறுத்து” என்றபடி அந்தக் கும்பல் அகன்றது. என்று நாவல் எடுத்த எடுப்பிலேயே வெண்மணிக் கொடுமைக்குப் பிறகும் தொடர்கின்ற அதே அடக்குமுறைச் சூழலை யதார்த்தமாகச் சொல்லி நகர்கிறது.

எம்.எல்.கட்சியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மையக் கதாபாத்திரமாக நாவலில் வருகிறார். சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சேத்தி தனராஜைத் தன்னுடைய இயக்கத்துக்குப் பொருத்தமான ஆள் என்று கண்டு அவரைச் சந்திக்கச் செல்கிறார்.

“இன்னிக்குக் காலைலே ஊர்வலத்துல ஒங்க ஆட்டத்தைப் பார்த்தேன். ரொம்ப அருமையா ஆடினீங்க தோழர். அதாம் பாத்துப் பேசிட்டுப் போகலாமுன்னுட்டு வந்தேங்” என்று பேச்சுத் தொடங்கி “சி.பி.எம். நம்புன கோர்ட்டு, கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை பண்ணிடுச்சே. அதை அப்பிடியே விடலாமா?” என்று அவருக்கு உணர்ச்சி ஊட்டுகிறார். “இந்தச் சாமிங்கள்ளாம் ஊழித்தாண்டவம் ஆடி, கொடுமையை அழிக்கும் பாத்தீங்கல்ல, அதுமாதிரி நம்ம சனங்களோட விடுதலைக்காக நாம ஒரு ஊழித்தாண்டவம் ஆடணும் தோழர்… இன்னிக்கு ஊர்வலத்துல ஒங்க ஆட்டத்துலே, காலடி எடுத்துவைத்த வைப்புல, அந்தத் தாண்டவத்தை, கோபத்தை, உக்கிரத்தை நான் பாத்தேன். அந்த நம்பிக்கையிலேதான் ஒங்களைத் தேடி வந்தேன் தோழர்.”

“அதுக்கு நான் என்ன தோழர் செய்யணும்?”

“அழித்தொழிக்கணும் தோழர்... நம்ம வர்க்கத்த ஒட்ட உறிஞ்சிச் சுரண்டுகிற வர்க்கத்த அழித்தொழிக்கணும் தோழர்... அப்பத்தாம் நம்ம வர்க்கத்துக்கு விடுதலை.அத வுட்டுட்டு இந்த மாதிரி பாராளுமன்ற சனநாயகவாதம் பேசுறது ஆளும் வர்க்கத்துக்குத்தான் உதவும் தோழர்.”

அந்த உரையாடலின் முடிவில் தனராஜ் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார் “நான் ரெடி... போட்டுத்தள்ள நான் ரெடி. எப்பப் போகலாம்?” என்று கேட்கிறார். ‘கீழைத் தீ’ முன்வைக்கும் மையமான அரசியல் இது.இன்னும் இதுபோல சில தோழர்களைத் தயார்செய்து கோபாலகிருஷ்ண நாயுடுவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிடுகிறார்கள். அந்த ஆபரேஷனுக்கு ‘வாசுகி திட்டம்’ எனப் பெயர் வைக்கிறார்கள். கோபாலகிருஷ்ண நாயுடு எப்போதும் துப்பாக்கியும் கையுமாக அலைபவர் என்பதால், துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பித்தலுக்காக ஓரிரு தினங்கள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பார். அது எந்த நாள் என்று பார்த்துக் காத்திருக்க, தற்செயலாக அன்றைக்கு அவரது நாயும் உடல் நலக்குறைவால் கூட வராமல் போக, நாயுடு தனியாக வரப்பில் வருகிறார். அந்தச் சமயத்தைச் சரியாகப் பயன்படுத்தி வாசுகி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்.கோபாலகிருஷ்ண நாயுடு அழித்தொழிக்கப்படுகிறார்.

ஏன் அவருடைய கையிலிருந்த கட்டுக் கட்டான பணம், தங்க மோதிரம், கைக்கடிகாரம் எதையும் தொட்டுக்கூடப் பார்க்காமல் அழித்தொழித்தோம் என்பதை விளக்கும் நோட்டீஸுகளை அவர் உடல்மீது வீசிவிட்டுத் தலைமறைவாகிறார்கள் தோழர்கள்.

கடைசி அத்தியாயத்தில் ‘மக்கள் திரளின் ஆதரவின்றி வெறும் குழு நடவடிக்கையாகச் சுருங்கிப்போனோம். ஆகவே அழித்தொழிப்பு அரசியல் இனி வேண்டாம்’ என்று கட்சி எடுத்த முடிவை விளக்கி தோழர் திரு பேச, இது சரியான முடிவுதானா என்கிற கேள்வியுடன் நாவல் முடிகிறது. நாவலில் வரும் வெங்கிட்டன் - ஜோதி காதல் கதை தனி ட்ராக்காக ஓடுகிறது.

தவறான பாதை எனக் கட்சி எடுத்த முடிவின் கடைசி அழித்தொழிப்பாக நாயுடுவின் கொலை நிகழ, வெண்மணி மக்கள் பாயசம்வைத்துச் சாப்பிடுகிறார்கள்.

நான்காவதாகவும் சமீபத்திலும் வந்துள்ள நாவல் மீனா கந்தசாமியின்  ‘குறத்தியம்மன்’. மிக நவீனமான பாணியில் எழுச்சியூட்டும் விதத்தில் சொல்லப்படும் கதையாக வந்துள்ளது.

‘பல காலத்துக்குக்கு முன், ‘ஏழு குறவர் பெண்கள்’ தங்கள் குழந்தைகளைச் சுமந்துகொண்டு தங்கள் கூடாரத்துக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, வழி தவறிப்போய் எங்கெங்கோ அலையத்
தொடங்கினர். மறுநாள் தங்கள் சனங்களின் இடத்தை அடைந்தபோது குழந்தைகளோடு சேர்த்து அந்தப் பெண்களும் (இரவு திரும்பாத குற்றத்துக்காக) கொல்லப்பட்டனர்.அவர்களின் கதறலும் அழுகையும் அவர்களைக் காப்பாற்றவில்லை. சில கதைகள், அவர்கள் பதினேழு பெண்கள் என்று சொல்கின்றன. பெரும்பாலான கதைகள், அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் தங்களோடு குழந்தைகளை வைத்திருந்ததாகச் சொல்கின்றன. பெண்களும் குழந்தைகளும் விஷம் புகட்டிக் கொல்லப்பட்டதாகச் சில கதைகள் சொல்கின்றன. பெண்களும் குழந்தைகளும் குடிசை ஒன்றில் அடைக்கப்பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகச் சில கதைகள் சொல்கின்றன. ஒரு கோரமான கதை உள்ளது: பெண்களை ஓடவிட்டு வெட்டுச் சக்கரத்தை வீசி தலையைத் துண்டிப்பதாகவும், தலையற்ற உடல்கள் ஓடுவதைப் பார்த்து நடுங்கியே குழந்தைகள் உயிர்விட்டதாகவும் அது சொல்கிறது.’

என்று நாவலின் ஆரம்பத்தில் ஒரு நாட்டுப்புறக் கதையைச் சொல்கிறார் ஆசிரியர்.

‘காலப்போக்கில் அவளே அந்த மண்ணை ஆளும் தேவியானாள். எப்போதாவது தனக்கு இடப்படும் மிருகபலிப் படையல் அவளுக்குப் பிடித்தமானதாகத்தான் இருந்தது. ஆனால், ஆறு படி நெல்லைவைத்துப் பூசை செய்தாலே, அவளுடைய மனம் குளிர்ந்துவிடும்.’ இந்தக் கதையே ஒரு புனைவுதான். ஆனால், எத்தனை நுட்பமான புனைவு. வெண்மணிப் பெண்களின் கதையைக் காவிய நிலைக்குக் கொண்டுசெல்லும் புனைவு.

‘எங்கள் குலதெய்வங்கள் நிம்மதியாக நீடூழி வாழும்போது நாங்கள் கவிதையிலும் அரசியலிலும் எங்கள் வலிகளை மறைத்துக்கொண்டு காலத்தைக் கடத்துகிறோம்’ என்கிற பீடிகையுடன்தான் நாவல் தொடங்குகிறது. இந்த நாவலின் அற்புதமான அம்சமே இந்தக் கதை சொல்லும் முறைதான். ஒரு துயரக் கதை இப்படித்தான் சொல்லப்பட வேண்டும் என்று பல இடங்களில் எனக்குத் தோன்றியது. வெண்மணித் தீ வைக்கப்படும் கதையைச் சொல்லும்போது மட்டும் நேரடியான மொழிக்கும் நடைக்கும் நாவல் வந்துவிடுகிறது.

‘கண்ணற்ற தீ, கால்களால் எங்கும் நடந்தது. நீரைப்போல இரக்கம் காட்டாத அந்த நெருப்பு அவர்களை எரித்து முடித்துவிட்டது. சாவு வீட்டின் சாமந்திப்பூ வாசம் அந்தச் சேரியில் இல்லை. உருகிய செம்பின் நெடிகொண்ட தசையின் கருகல், அதன் நெடியை என்னவென்றும் சொல்ல முடியாது.’ கதறி அழவைத்த வரிகள் இவை.

வெண்மணிக்குப் பிறகு, அந்தக் கோரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண்கள் உளவியல் ரீதியாக அடைந்த துன்பங்களை இந்நாவல் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் நம்மை நடுங்கச்செய்கிறது.

“பகலில் அடக்கிவைத்த கொடிய நினைவுகள், முனியன் பெண்சாதியை இரவுகளில் குதறியெடுத்தன. ஒரு இடத்தில் இருக்க முடிவதில்லை. கால்கள் செல்லும் போக்கில் அலைவாள். விடியும்போது வீடு வந்து சேர்வாள். வலிகளைத் தனியே சுமந்து, இருட்டில் தொலைய நினைத்தாள்.”

இதுபோல நெஞ்சை அறுக்கும் கவித்துவமான வரிகளில் துயரம் வாசகருக்கு வந்து சேர்கிறது. இந்நாவலில் ஆங்காங்கே மார்க்ஸிஸ்ட்டுகள் பற்றியும் அவர்களின் நடைமுறை பற்றியும் நக்கலான பார்வைகள் தெறித்துக்கிடக்கின்றன.

‘ஒரு கோப்பைத் தேனீருக்கும் சில சிகரெட்டுகளுக்கும் கடமைப்பட்டு புகார்களை எழுதித்தரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பணியாளர் போலவோ, லஞ்சம் வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் எழுதித் தரும் காவலர்போலவோ சாதாரணமான ஆள் இல்லை நான்.’

‘பாராளுமன்ற ஜனநாயக முறையின் வசதிகளை அனுபவிக்கத் தொடங்கியிருந்த கட்சி’ கட்சிக்கு விசுவாசமாக மக்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. விசுவாசம் என்பது நிலவுடைமைச் சமூகத்தின் குணம் என்கிற கேள்வி அங்கு யாருக்கும் எழவில்லை’ என்பன போன்ற  வரிகள் சில சாம்பிள்கள். பள்ளர்களும் பறையர்களும் மட்டும்தான் தஞ்சை மண்ணில் உயிரைக் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தார்கள் என்கிற அரசியல் பார்வை நாவலில் முன்வைக்கப்பட்டுள்ளது.

‘தீண்டாமைக் கொடுமை பற்றிய பிரச்னையில் கட்சிக்குள் அணிகள் பிரிந்தன. தங்கள் சாதிக் கட்டுப்பாடுகள் கெட்டுப்போகாத வகையில் வசதியான நிலைப்பாட்டை ஒவ்வொருவரும் எடுத்தனர்.’ என்று நாவலில் போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான ஆதாரங்களுடன் எந்த விவாதமும் நிகழ்ச்சியும் நாவலுக்குள் இல்லை. நாவலின் மையமாக இந்த வரி இல்லை. ஆனால், இந்த வரிதான் பின்னட்டையில் எடுத்தாளப் பட்டுள்ளது. அதுதான் நாவல் முன்வைக்கும் அரசியலா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. பின்நவீனத்துவப் பாணியில் சொல்லப்பட்ட நாவலில் மையம் இருக்காது அல்லவா? எனினும் சமீபகாலத்தில் என்னை மிகவும் உலுக்கிப்போட்ட நாவல் இதுதான்.

இந்த நான்கு நாவல்களுமே எழுதியவர்களின் சார்பு நிலையில் நின்று வெண்மணியின் துயரக் கதையைப் பேசியுள்ள முக்கியமான நாவல்கள் என்பதால், இந்த நான்கு நாவல்களுக்கும் மனப்பூர்வமாக ஒரு செவ்வணக்கம். வாசகர்கள் அவரவர் சார்புநிலையிலும் சொந்த வாசிப்பு வரலாற்றின் தொடர்ச்சியாகவும் வாசித்து உள்வாங்குவார்கள்.

பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் விரிவாக ஆய்வு செய்து எடுக்கப்பட்ட ‘ராமையாவின் குடிசை’ என்கிற ஆவணப்படம், கீழ்வெண்மணி படுகொலை சார்ந்த முக்கியாமான பதிவு. அதில் இடம்பெற்றுள்ள இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடன்பிறந்த அண்ணன் மகன், வெண்மணி வழக்கை பதிவுசெய்த அன்றைய கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் போன்றோரின் நேர்காணல்கள் முக்கியமானவை.வெண்மணிக் கொடூரத்தை அறிந்துகொள்ள முனைபவர்கள் ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

“அந்த ரெண்டு தோட்டாக்களும் என்னோடயே வாழ்ந்துட்டிருக்கு!” - விஷ்ணுபுரம் சரவணன்

த்தாண்டுகளுக்கு முன் பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வனோடு வெண்மணி சென்றபோது, மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. வெண்மணித் தியாகிகளின் நினைவிடத்துக்கு ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்பே, வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்குச் சாரைசாரையாக மக்கள் கூட்டம். குழந்தைகளை, வயதானவர்களை அழைத்துக்கொண்டு குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். நினைவிடத்தை நெருங்க நெருங்க, கூட்டத்தின் அடர்த்தி அதிகமானது. ராமய்யாவின் குடிசை இருந்த அளவே நினைவிடம் இருந்ததால், உள்ளே செல்வதற்கும் வருவதற்கும் நெருக்கடி இருந்தது. ஆனால், வந்திருந்த யார் முகத்திலும் நெரிசலின் சிரமம் தெரியவில்லை. மாறாக, நிலக்கிழார்களின் கொடுமையினால் மாண்டுபோன 44 உயிர்களின் வலியைச் சுமந்திருந்திருந்தார்கள். ஒருவர் தன் ஐந்து வயதுப் பெண்குழந்தையைத் தோள் மீது சுமந்துகொண்டு, வெண்மணியின் கதையைச் சொல்லிக்கொண்டே சுற்றிவந்தார். அந்தச் சிறுமி, தன் கண்களை அகலத் திறந்து ‘ஃபார்ட்டி ஃபோர் பேரா?’ என்று கேட்டாள்.

“நான் ஆறாவது படிச்சுட்டிருக்கும்போதே பண்ணை வேலைக்கு அழைச்சுட்டுப் போயிட்டாங்க. அதிலேயிருந்து விவசாய வேலைதான். கம்யூனிஸ்ட் கட்சி இங்கே கிளை கட்டும்போது, நானும் சேர்ந்தேன். அதுக்குப் போட்டியா, ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’னு நிலக்கிழார்கள் ஆரம்பிச்சு, எங்களை அதில் சேரச்சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. வெண்மணியைச் சுற்றி பல ஊர் விவசாயிங்க அந்தச் சங்கத்துல சேர்ந்துட்டாங்க. நாங்க பிடிவாதமா எதிர்த்து நின்னோம். அன்னிக்குச் சாயந்திரத்திலேருந்தே ஏதோ விபரீதம் நடக்கப்போகுதுனு தெரிய ஆரம்பிச்சிடுச்சு. எங்க கட்சியைச் சேர்ந்த முனியன், முத்துசாமி இரண்டு பேரையும் கையைக் கட்டி ஒரு வீட்டுல அடைச்சுவெச்சுட்டாங்க. வேவு பார்க்க வந்த பண்ணையார் ஆள் ஒருத்தனை நாங்க அடிச்சு அனுப்பினோம். அப்புறம் பார்த்தா, இரிஞ்சூருலேருந்து கோபாலகிருஷ்ண நாயுடுவோடு நூத்துக்கணக்கான ஆளுங்க கையில அரிவாள், கடப்பாரையோடு வந்தாங்க. சில பேரு கையில துப்பாக்கியும் இருந்துச்சு. எல்லோரும் பதறி அடிச்சு, ராமய்யாவோட குடிசைக்குள்ளே ஓடி ஒளிஞ்சோம். ஏன்னா, அவர் குடிசை மட்டும்தான் சொந்த இடம். மத்தவங்க வீடெல்லாம் பண்ணயார் இடங்கள். அந்தப் பாவிங்க, வாசக் கதவைப் பூட்டிட்டு, கூரைமேல பெட்ரோலை ஊத்திக் கொளுத்திவிட்டுட்டாங்க. உள்ளே ஒரே அழுகை; கூச்சல். அந்தச் சின்னச் சுவருப் பக்கமாக ஏறி வெளியே குதிச்சேன். வெளியில் நின்னுட்டிருந்த அடியாளு ஒருத்தன், என் தொடையிலேயே வெட்டிட்டான். ஒரு தாவு தாவி, மூங்கில் குத்துக்குள்ளே போயி விழுந்து மயங்கிட்டேன். மலபார் போலீஸ் வந்தப்ப, நான் முனகின சத்தம் கேட்டு மீட்டாங்க. அந்தப் போலீஸுங்ககூட குடிசைக்குள்ள ஆடு, கோழி எரிஞ்சுக் கிடக்கிற நாத்தம் அடிக்குதுனுதான் சொன்னாங்க. நான்தான் அம்புட்டும் மனுசங்கய்யானு கதறினேன்” என விம்மலை அடக்க முடியாமல் சொல்கிறார், வெண்மணிக் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பழனிவேல்.

வெண்மணியில் எரிந்த வீடுகளில் இவரின் வீடும் உண்டு. இவரின் மனைவி, அடியாள்களுக்குப் பயந்து, தன் மகளைத் தூக்கிக்கொண்டு இரவு முழுக்க வயலிலேயே நின்றுகொண்டிருந்தாராம்.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

அந்தச் சம்பவத்தில் உறவினர்களை இழந்தவர் முனியன். இப்போது, பத்தடி தூரம் நடப்பதற்குள் சோர்ந்துவிடுகிறார். கடுமையான காய்ச்சலில் இருந்தாலும் தெளிவான குரலில் பேசினார், “அப்போ நான் வாலிபமா இருந்தேன். அவங்க தாக்க வந்தப்போ எதிர்த்து நின்னு, அடிபட்டு மயக்கமாகி விழுந்துட்டேன். அதுவும் ராமய்யாவின் குடிசை வாசலிலேயே. குடிசை எரிஞ்சிட்டிருந்தப்போ பரணிலிருந்த செத்தை எரிஞ்சு, என் தலை மேல விழுந்துச்சு. அதுக்கப்புறம்தான் எந்திரிச்சு ஓடினேன். குடிசைக்குள்ளே என் அக்கா, அக்கா பொண்ணு, அண்ணி, அண்ணி பொண்ணுனு நாலு பேரும் மாட்டியிருந்தாங்க. என்ன செஞ்சும் அவங்களைக் காப்பாத்த முடியலை. அப்போ, என்னைச் சுட்டதில தொண்டையில ஒண்ணு, முழங்கால்ல ஒண்ணுன்னு குண்டு பாஞ்சிருச்சு. அதை ஆபரேஷன் பண்ணி எடுக்கக் காசு இல்லை. சரி இருக்கட்டும்னு விட்டுட்டேன். அந்த ரெண்டு குண்டும் என்னோடேயே வாழ்ந்துட்டு இருக்கு. என்ன, இப்போ நடக்க நடக்க, முட்டியில் ரொம்ப வலிக்குது” ஈரம் கசிந்த விழிகளைத் துடைத்துக்கொள்கிறார்.

வெண்மணி நினைவிடத்தின் எதிரே அந்த வேதனையைச் சொல்லும் விதத்தில், பிரமாண்டமான நினைவுக் கட்டடம் தயாராகிவருகிறது. அதைச் சுற்றிலும் மாண்டுபோன 44 பேரின் கைகளைத் தாங்கிய தூண்களாக அமைத்துவருகின்றனர். ‘இது வாசுகி, இது ஆசைதம்பி, இது சந்திரா, இது பாப்பா’ என ஒவ்வொரு கைகளையும் அடையாளம் காட்டுகிறார், காவல் காக்கும் சேதுபதி. அந்தக் கைகள் மெள்ள அசைந்து நம்மை அருகே அழைப்பது போலிருந்தது. வெண்மணியில் அடிக்கும் வெயிலுக்கும் நெருப்பின் வாசம்!

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

வெண்மணி என்னும் அரசியல் தொன்மம்! - ஸ்டாலின் ராஜாங்கம்

கீழ்வெண்மணி அளவிற்கு அரசியல் சொல்லாடல்களில் ‘வன்முறை தொன்மமாக’ வேறெந்தச் சமூக வன்முறையும் இடம் பெற்றதில்லை. அந்த வகையில் இச்சொல்லாடல்களில் அது என்னவாக
வெல்லாம் பிரதிபலித்திருக்கின்றது என்று பார்ப்பது தமிழ்ச் சமூகத்தின் வெண்மணி பற்றிய இன்றைய நினைவுகளைப் புரிந்துகொள்ள உதவலாம். அரசியல் ரீதியாகப் பல இயக்கங்களிடையே உரிமை கோரல்களையும் விவாதங்களையும் அப்பிரச்னை உண்டுபண்ணியபடியே இருந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பெறுவது பற்றியும் அதன் தலைமையிலான தஞ்சை வட்டார விவசாய உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் ராஜாஜிக்கு முற்றிலும் எதிர்மறையான பார்வை இருந்தது. அதற்கேற்ப உள்ளூர் அளவில் நிலவுடைமையாளார்களின் பதுங்குகுழியாக காங்கிரஸ் மாறியிருந்தது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அரசியல் முரண்பாடுகள் இருந்து வந்தன. அடுத்து 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன் அக்கட்சி பேசிவந்த தமிழ்ப் பொற்காலப் புனைவுகள் மங்கி, சமூக யதார்த்தங்கள் வெளிப்படுவன போன்று அடுத்த ஆண்டே (1968) இந்த வெண்மணிக் கொடூரம் நடந்தது.  இதற்குப் பிறகு, தி.மு.க அரசு மற்றும் கட்சியின் தலையீடு தொடர்பாக  கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே பரவலான விவாதங்கள் எதிரொலித்து வந்தன.  இதனிடையே ஆட்சிக்கு வந்திருந்த தி.மு.க. மீதும் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்திருந்த இளைஞர்களிடையே நக்சல்பாரி அரசியல் புதிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. வர்க்க எதிரிகளை ஆயுதமேந்தி அழித்தொழிப்பதே தீர்வு என்று நம்பிய நக்சல்பாரிகளுக்கு வெண்மணிச் சம்பவம் அதற்கான நியாயத்தை வழங்கியது. பின்னால், காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்த முற்போக்கு இயக்கங்களின் மேடைகளில் இப்பிரச்னை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு அதற்கோர் சொல்லாடல் மதிப்பு ஏற்பட்டது. அதேவேளையில் இத்தகையப் புரிதல்கள், தரவுகள் சார்ந்து அமைந்ததை விட  44 பேர் கொல்லப்பட்டனர் என்ற அனுதாபம் அல்லது ஆவேசம் சார்ந்தே உள்வாங்கிக்கொள்ளப்பட்டது என்பதும் உண்மை.

1990-களுக்குப் பின் நடந்த புதிய வகை தலித் இயக்கங்களின் எழுச்சியை ஒட்டி வேறொரு வகையில் ‘வெண்மணி’ விவாதத்திற்கு வந்தது.  தங்கள் மேடைகளிலும், எழுத்துகளிலும் தலித் தரப்பு இதனை நினைவுகூர ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாகவே ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சி, திருமாவளவன் தலைமையில் திரட்சியாக வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றது. ஆனால், உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  ‘பொதுவுடைமை பேசும் கட்சி, வெண்மணியைச் சுற்றி வேலி போட்டுத் தனியுடைமை ஆக்குவதா?”  என்று இதைத் திருமாவளவன் சாடினார்.  இரு கட்சி மோதல் போன்று அது வெளிப்பட்டிருந்தாலும், நம் சமூகத்தின் அடிப்படை முரண் சாதியா, வர்க்கமா என்ற விவாதத்தின் தொடர்ச்சியில்தான் இதன் அடிப்படை உருவானது.  1990-களின் தலித் எழுச்சி, ‘சமூகத்தின் பிரதான முரண்பாடு சாதியே’ என்ற கண்ணோட்டத்திற்கு வலுசேர்த்திருந்தது.  இதன் தொடர்ச்சியில் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்பட்ட தலித்துகள் வெளியேறி, சாதி முரண்பாட்டை முதன்மையாகப் பேசும் தலித் அமைப்புகளில் சேரவும் தலைபட்டிருந்தனர்.  ‘வர்க்கம்தான் பிரதான முரண்பாடு எனில், வெண்மணியில் இறந்த எல்லோரும் ஏன் தலித்துகளாக இருந்தனர்?’ என்ற கேள்வி தலித் மேடைகளில் ஒலித்தபடியே இருந்தது.  இவ்வாறு உருவாகி வந்த கருத்தியல் அழுத்தங்களெல்லாம் சேர்ந்துதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வெண்மணிக்குச் செல்ல உந்தியிருந்தன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறுவிதச் சிக்கல்கள் இருந்தன.  வர்க்கமே முதன்மையான முரண் அல்லது வர்க்கமும் சாதியும் கலந்த முரண் என்ற கட்சியின் நிலைபாட்டைத் தக்கவைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருந்தது. அடுத்து 1940-களிலிருந்து தஞ்சை வட்டாரத்தில் செயல்பட்டும் வெண்மணிக்கு முன்னும் பின்னுமாகப் போராடியும் வந்த நிலையில் வெண்மணி சார்ந்த உரிமை கோரலைத் தக்கவைக்க வேண்டிய நிலையும் இருந்தது.  நினைவிடம் மீதான உரிமையை இழப்பது தங்களின் அதுவரையிலான போராட்ட வரலாற்றை இழப்பதாகிவிடும் என்கிற பதட்டம் அவர்களுக்கிருந்தது. தேர்தல் உள்ளிட்ட அரசியல் களங்களில் அவ்விரண்டு கட்சிகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டிய தேவை எழுந்துவிட்ட இன்றையச் சூழலில் இதுபோன்ற கடந்தகாலக் கசப்புகள் பேசப்படாமலேயே முடிவுக்கு வந்துவிட்டன. 

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

தஞ்சை வட்டார நிலவுடைமை எதிர்ப்புப் போராட்டத்திலும் வெண்மணி நிகழ்விலும் கட்சிப் பங்களிப்பை ஆவணப்படுத்தும் பணி இத்தொடர்ச்சியில் துரிதப்படுத்தப்பட்டன.  வெண்மணியைப் பற்றிய பாரதி கிருஷ்ணகுமாரின் ‘ராமையாவின் குடிசை’ ஆவணப்படம் (2005), வெண்மணி வழக்கின் தீர்ப்புகளின் தொகுப்பாக மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பிலான ‘நின்று கெடுத்த நீதி’ நூல் (2009), சுமதி என்பவரால் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருந்த வெண்மணி பற்றிய கலை இலக்கியப் பதிவுகளைக்கொண்ட ‘வெண்மணி படுகொலைகள்: வரலாறும் கலை இலக்கியப் பதிவுகளும்’ என்ற நூல் (2008), தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு என்கிற பெயரில் அப்பணசாமி தொகுத்த ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ நூல் (2004), இதன் தொடர்ச்சியாக இயக்கச் செயற்பாட்டாளர்களை நேர்காணல் செய்து சோலை சுந்தரபெருமாள் தொகுத்த  ‘வெண்மணியிலிருந்து...’ நூல் (2010) போன்றவை பத்தாண்டு என்ற கணக்கில் வெண்மணியை மையப்படுத்தியே வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன.

‘வெண்மணிச் சம்பவத்திற்குப் பின் வெண்மணி’ என்ற தலைப்பில் உ.ரா. வரதராஜன் எழுதிய நூல் தொடங்கி, முகில் எழுதிய ராமையாவின் குடிசை (நாடகம்) வழியாக, சோலை சுந்தர பெருமாளின் ‘செந்நெல்’ (1999) வரையிலுமாகப் பார்த்தாலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பே வெண்மணி பற்றி எழுதிவந்திருக்கின்றனர் என்பதை அறிய முடியும். ஆனால், இவற்றிற்கும் 2000-த்திற்குப் பிந்தைய மேற்கண்ட வெளியீடுகளுக்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது.  முன்பு வெளியானவை வெண்மணியின் கொடூரத்தையும் நிலவுடைமை எதிர்ப்பின் நியாயத்தையும் அழுத்தமாகக்கொண்டிருக்க, 2000-த்திற்குப் பிந்தைய வெளியீடுகள், கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்மணி மீதான உரிமைக் கோரல்தான் அதிக அழுத்தம் பெற்றிருந்ததைப் பார்க்க முடிகிறது.

 தற்காலத்தில் வெண்மணிப் பிரச்னை, முற்றிலும் மாறுபட்ட விவாதம் ஒன்றில் ஒரு தரவாக எழுத்தாளப்படுகிறது. அதாவது 1990-களின் இறுதியில் தலித் தரப்பிலிருந்து திராவிட இயக்கம் மீது, குறிப்பாகப் பெரியார் மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இந்த விமர்சனங்களும் எதிர்கொள்ளல்களும் பெரியாரை முற்றிலும் நிராகரித்தல் அல்லது முற்றிலும் நியாயப்படுத்துதல் என்கிற எதிரெதிர் நிலைகளிலே நிலைகொண்டிருப்பது கெடுவாய்ப்பே. தொடர்ச்சியாக இந்த விவாதங்களில், வெண்மணிப் பிரச்னையில் பெரியார் எடுத்திருந்த நிலைப்பாடு பற்றி இப்போது பேசப்படுகிறது. அதில், தஞ்சை வட்டாரத்தில் பெரியாரிய நோக்கோடும் இடது சார்புத்தன்மையோடும் செயல்பட்ட ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் பற்றி பசு.கவுதமன் தொகுத்த நினைவலைகளில், வெண்மணிக் குற்றவாளியான  கோபாலகிருஷ்ண நாயுடு பெரியாரைச் சந்திக்க முற்பட்டபோது பெரியார் புறக்கணித்தார் என்ற செய்தி முக்கியத் தரவாக  எடுத்துக்காட்டப்படுகிறது.  ஆனால், வெண்மணி போன்ற கொடூரமான வன்முறையின்போது பெரியார் அழுத்தமான எதிர்வினையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு முன் இத்தகையத் தரவுகள் பலவீனமானவையாகவே உள்ளன.  தமிழ்நாட்டு சாதி எதிர்ப்பு வரலாற்றின் பிரதான செயற்பாட்டாளர் என்ற இடத்தை எந்தவிதச் சலுகையும் இல்லாமல் பெற்றுவிடும் பெரியாரை மறுதளத்தில் விமர்சனம் அற்றவராகக் காட்டும் எத்தனங்களே இத்தருணங்களில் வெளிப்படுகின்றன. அவரை விமர்சனப்பூர்வமாக மீட்டெடுக்க இப்போக்கு உதவாது. இத்தளத்தில் பெரியாரிய இளம் ஆய்வாளர் சுகுணா திவாகர் மட்டுமே இவற்றை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்று விளக்கிவிட்டு, வெண்மணிப் பிரச்னையில் பெரியாரின் நிலைப்பாடு முக்கியமான விடுபடலே என்று கூறியிருப்பது ஒரு விதிவிலக்காக இருக்கிறது. 

இவ்வாறு, வெண்மணிப் பிரச்னை அரசியல் தளத்தில் விவாதத்திற்கான தரவாக இருந்து வந்திருக்கும் அதேவேளையில், கலை இலக்கியத் தளத்தையும் பாதித்தே வந்திருக்கிறது என்பதையும் பார்க்க முடிகிறது. இதன் தொடக்கமாக 1975-ம் ஆண்டு இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவலைக் குறிப்பிடலாம். நிலவுடைமை ஆதிக்கத்தைவிடவும் பண்ணையாரின் உளவியலுக்கு இந்நாவல் தந்த அழுத்தம் பற்றித் தமிழில் விரிவான விமர்சனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய இதே காலத்தில் கீழ்வெண்மணி என்ற தலைப்பில் ஞானக்கூத்தனும் ஒரு கவிதை எழுதினார். 

இடதுசாரி அரசியலுணர்வைப் பிரதிபலித்த கவிதைகளில் முழுமையாகவோ தகவல் அளவிலோ வெண்மணிப் பிரச்னை தொடர்ந்து இடம்பிடித்து வந்தது. இதில் நவகவி வெளியிட்ட வெண்மணி (1993) என்ற தொகுப்பைக் குறிப்பிடலாம்.  ஈரோடு தமிழன்பனும் ‘அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்’ (1994) கவிதையை எழுதினார். ‘தீக்குளியல்’ என்ற பெயரிடப்படாத கவிதை, வெண்மணி பற்றிய கவிதை வடிவிலான ஆவணம்.  கவிஞர் இன்குலாப், தம் கவிதைகளில் வெண்மணியைப் பரவலாகக் கையாண்டிருக்கிறார். குறிப்பாக அவருடைய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ என்ற புகழ்பெற்ற கவிதையில் சாதி வன்முறைகளை அடுக்கி வரும்போது ‘சதையும் எலும்பும் நீங்க வெச்ச தீயிலே வேகுதே - ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெயை ஊத்துதே’  என்ற வரிகள் வெண்மணியையே குறித்தன. பின்னாளில் தலித் பண்பாட்டுப் பேரவையை ஆரம்பித்த உஞ்சைராசன் இதன் தாக்கத்திலேயே தான் தொடங்கிய இதழின் பெயரை ‘மனுசங்க’ என்று சூட்டினார். இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலித் பிரச்னைகளுக்காக நடத்தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கொண்டுவரும் இதழின் பெயரை ‘அணையா வெண்மணி’ என்றே சூட்டிக்கொண்டிருக் கிறது. வெண்மணி தொடர்புடையதாகக் கடந்த 15 ஆண்டுகளுக்குள் வெளியான மூன்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன.  சோலை சுந்தரபெருமாளின் ‘செந்நெல்’ (1999), வெண்மணிக்குப் பிந்தைய பிரச்னைகளைப் பேசும் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’, மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பிரேம் மொழிபெயர்ப்பாக வெளியாகியிருக்கும் ‘குறத்தியம்மன்’ நாவல் (2016) ஆகியவை.

திரைப்படங்களிலும் வெண்மணிச் சம்பவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. வெண்மணிச் சம்பவத்திற்குப் பிறகு ஏழாண்டுகள் வரை திரைப்படங்களில் ஏழைப் பங்காளனாக நடித்துவந்த எம்.ஜி.ஆரின் படங்களில் இதன் தாக்கம் எந்தவிதத்திலும் இருந்திருக்கவில்லை.  இதன் முக்கிய வெளிப்பாடாக 1983-ல் ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் வெளியான ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற படத்தைக் கூறலாம். வெண்மணிச் சம்பவத்தை நேரடியாகப் பிரதிபலித்த இப்படம், இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவலின் தழுவலாகவே இருந்தது. பின்பு, ‘அலையோசை’, ‘சிவந்த கண்கள்’, ‘சிவப்புமல்லி’ போன்ற படங்களின் கதையாடல்களிலும் பாடல்களிலும் வசனங்களிலும் வெண்மணிப் பிரச்னையின் சாயல் பிரதிபலித்தது. 1980-களின் இடதுசாரிக் கதையாடலின் சாயலைக் கொண்டிருந்த படங்களின் சிவப்பு என்னும் குறியீடு வெண்மணியை நினைவுக்குக் கொணர்ந்தன. 2000-த்தில் வெளியான ‘அரவிந்தன்’, ‘சிட்டிசன்’ ஆகிய இரண்டு படங்கள் வெண்மணிப் பிரச்னையை அல்லாமல் அதன் பின்புலச் சட்டகத்தை மட்டுமே எடுத்தாண்டிருந்தன.  வெண்மணி அரசியலைவிடவும் புதிய வித்தியாசமான கதைக்களம் என்கிற அளவிலே இப்படங்களில் இப்பிரச்சனை தழுவப்பட்டிருந்தது.

இவை எல்லாவற்றுக்குப் பின்னாலும் நமக்குக் கிடைக்கும் செய்திகள் பல, வெண்மணிப் பிரச்னை ஒரு சம்பவமாக நம்மைப் பாதித்த அளவிற்கு அரசியல் மற்றும் கருத்தியல் அளவில் ‘பார்வை மாற்றம்’ என்ற அளவில் பாதிக்கவில்லை.  அரசியல் தளத்தில் மட்டுமல்லாது ஆய்வுத்தளத்திலும் குறிப்பிடும்படியான விரிவான பார்வைகள் வெளிப்படவில்லை.  நிலம் பறிக்கப்பட்டிருப்பதற்கும் சாதியின் நிலைத்தத் தன்மைக்கும் தொடர்பிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கும் நாம், அது தொடர்ச்சியான பண்பாட்டு மோதல்களோடும் தொடர்பு பெற்றிருப்பதைக் காணத் தவறியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. நிலம், சாதி, பண்பாடு என்ற நெடிய ஆய்வுகளைத் தொடர வேண்டும். அத்தகைய ஆய்வுகள் இன்னும் தொடங்கவில்லை. அதுவரை வெண்மணி ஓர் அரசியல் அடையாளமாக மட்டுமே நமக்குப் பயன்படும்.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

வெண்மணிக்கு முன்... வெண்மணிக்கு பின்... - பாட்டாளி

து நூற்றாண்டுகளைக் கடக்கும் காலம். வெள்ளிவிழா, பொன்விழா, பவளவிழா, நூற்றாண்டு விழா என்று நமக்கு முன்னே வாழ்ந்த ஆளுமைகளின், நம் வரலாற்றுத் தடங்களின் ஆண்டுகளைக் கடந்துபோகும் காலம்.

அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு, காந்தி நூற்றாண்டு, பெரியார் நூற்றாண்டு, சென்ற ஆண்டு திராவிட இயக்க நூற்றாண்டு, இப்போது நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு என்பதின் வழியே, பிறக்கவிருக்கும் ஆண்டு, வெண்மணிக் கொடூரத்தின் 50-வது ஆண்டு. பொதுவாக நூற்றாண்டுகளின் அனுசரிப்பு என்பது கொண்டாட்டமாகவே இருந்துவிடும். ஆனால், சில மட்டுமே வலிகள் மறையாத, வேதனைகள் மாறாத, கால நகர்வுகளால் மேலோடு மட்டும் ஆறியிருக்க, உட்புண் ஆறாத, கடும் காயத்தின், கொடும் ரணத்தின், அழுகி நாறித் தொலைக்கும் சீழ் என நமது நினைவடுக்குகளில் கடத்திப் போகிறது காலம்.

வெண்மணிக்கு 50-வது ஆண்டு என்பது கொண்டாட்டத்துக்கு உரியது அல்ல. பொதுவாக, ஒரு மனித இனம் முன்னேறியிருக்கிறது, நாகரிகம் அடைந்திருக்கிறது என்று அடையாளப்படுத்த, குறிப்பிட்ட காலத்திற்கு முன், பின், என்று வகைப்படுத்துவது, அறிவுசார் வழக்கம். கி.மு, கி.பி, போல... வெண்மணிக்கு முன்.. வெண்மணிக்குப் பின்... என்று பாகுபடுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது.

வெ.மு-வில் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான நிலம் எப்படி இருந்தது? யாருடைய கைகளில் குவிந்திருந்தது? ஆதிக்கச் சாதிகளின் கைகளிலும் சைவ மடங்களின் கைகளிலும் குவிந்துகிடந்தது.

அந்தப் பச்சைப்பசேலென்ற சமவெளி வயல்களில் உண்டு, உறங்கி, புணர்ந்து, குடும்பம் பெருக்கி, ஆண்டைகளுக்கு அடிமைத் தொண்டூழியம் செய்த மக்களுக்கோ, கட்டியிருக்கும் கோவணத் துணி அளவுகூட சொந்த நிலம் கிடையாது. இது வெண்மணிக்கு முன். சரி, வெண்மணிக்குப் பின்..?

நில உச்சவரம்புச் சட்டத்திற்குப் பிறகு, பினாமிப் பெயர்களில் நிலங்கள் பிரித்துப் பிரித்துப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதே தவிர, அந்த வெண்மணி மக்கள் இன்றும் நிலமின்றித்தான் கிடக்கிறார்கள். உழவுக் காலங்களில் வயல்களில் கூலிக்குச் செல்வது, அதுவும் இல்லாத காலங்களில் அரசின் 100 நாள் வேலைக்குச் செல்வது என அலைந்து திரிகிறார்கள். விதிவிலக்காக, அங்கொன்றும் இங்கொன்றுமாக, சிலருக்கு ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் எனச் சொற்ப நிலங்கள் சொந்தத்தில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், அனைவருக்கும் நிலம் என்பது வெண்மணிக் கொடூரத்தின் பிறகான 50 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் சாத்தியப்படவே இல்லை.

வெண்மணி 50 - எரியும் நினைவுகள்

அடுத்த முக்கியமாயான அம்சம் கல்வி. இந்த விஷயத்தில் வெ.மு மாதிரி இல்லை வெ.பி-யின் நிலை என்பது சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது என்றாலும், பெரும்பாலும் இடைநிலைக் கல்வியோடு அதிகம் நின்றுவிடுகிறார்கள். சமூகத்தில் உயர் கல்வி என்று சொல்லப்படுகிற, மருத்துவம், பொறியியல், வானியல், அதிகாரப் படிப்பான ஆட்சிப்பணி, குடிமைப்பணி என்பதெல்லாம் இன்றும் வெண்மணிக்கு எட்டாத பெரிய விஷயங்களாவே இருக்கின்றன.

சுகாதாரம்... வெ.மு-வுக்கும் வெ.பி-க்கும் அவ்வளவு ஒன்றும் பெரிதான வித்தியாசம் இல்லை. அன்று உடம்புக்கு முடியாவிட்டால், அந்த முடியாத உடம்போடு, கீழ்வேளூருக்கு நடந்து சென்றுதான் வைத்தியம் பார்த்தார்கள். ரொம்பவும் முடியாத, நடக்கவே முடியாதவர்கள் என்றால், வண்டி கட்டிப்போனார்கள். இன்று நகரப் பேருந்துகளில் போகிறார்கள்; அவ்வளவே வளர்ச்சி. மற்றபடி மருத்துவமனை, உயர் மருத்துவச் சிகிச்சை என்பதெல்லாம் தொடரும் சோகம்தான்.

வாழிடம்... நாம் எதிர்பார்ப்பது அடுக்குமாடி உயர் கட்டடங்கள் அல்ல. மழைக்கும், வெயிலுக்கும், குளிருக்கும், பனிக்கும் பாதுகாப்பான இல்லங்கள் மட்டும்தான். அன்று வெ.மு-வில் குடிசைகள்... குடிசைகள்... ஓலைக் குடிசைகள்... எங்கெங்கு காணிணும் குடிசைகள் மட்டுமே. அதனாலேயே, ஆண்டைகளுக்குக் கொளுத்திப்போட வெகு எளிதாகப்போனது. வெண்மணிக் கொடூர எரிப்பிற்குப் பிறகு, தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவைகளின் தரம், இன்றிருக்கும் நிலை வெகு அவலமானது. வெட்கக்கேடானது. காரை பெயர்ந்து இற்று வீழ்ந்துகொண்டிரு க்கும் கூரை, இந்த மழைக்காலத்தில் எப்போது இடிந்து யார் தலையில் விழுமோ என்கிற அச்சத்தில் குடிமக்கள். 

அடுத்து சமூகப் பிணியான சாதி...  இங்கு எல்லாம் மாறும். மாறியிருக்கிறது. மாறும் என்பதே மாறாத விதி. ஆனால், மாமேதை மார்க்ஸையும் மறுதலிக்கவைத்துவிடும் இந்தச் சாதி. அது மட்டுமே இன்றும் மாறவில்லை. அப்படியே தொடர்கிறது. முன்பிருந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை வடிவங்கள் இன்று இல்லாவிட்டாலும், காலத்திற்கு ஏற்பத் தன் வடிவத்தை லேசாக மாற்றியிருக்கிறது. கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. ஆக, வடிவத்தில் மாற்றம் இருக்கிறதே தவிர, சாரத்தில் மாற்றம் இல்லை.

சாதிய ஒடுக்குமுறை சார்ந்து மற்ற பகுதிகளுக்கும் வெண்மணிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்று குறிப்பிடப்பட வேண்டியது. மற்ற பகுதிகளில் மிக எளிதாக இன்றும் கை வைத்துவிடுவார்கள். ஆனால், வெண்மணியில் அப்படி வெடுக்கென்று தன் கொடுங்கரத்தை நீட்டிவிடுவதில்லை. நீட்டிவிட முடிவதில்லை. கொஞ்சம் தயங்குகிறார்கள். கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். இது வெண்மணி வீரப் போராட்டத்தின் விளைவு. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்துதான்விடுகிறது என்றாலும், சமூகத்தின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் இது வெற்றிதான்.

அடுத்து கட்சி அரசியல்... வெ.மு-வில் செம்மாந்து உயர்ந்து நின்றது செங்கொடி. அன்று அது மட்டும்தான். வெ.பி-யில் இன்று எல்லாக் கட்சி அரசியலும் உள் நுழைந்து, தழைத்து, நிலைபெற்றுவிட்டன. செங்கொடி, இன்று கூட்டத்தோடு கூட்டமாகப் பறந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் செய்தி ஊடகத் தொலைக்காட்சி ஒன்றிற்காக, ஆவணப்படம் எடுக்க படக்குழுவோடு வெண்மணி சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த சிறார்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அவர்களுக்கு வெண்மணிக் கொடூரம் குறித்து எதுவும் தெரியவில்லை. போகட்டும், சிறார்கள் என்று நினைத்து மேல்நிலைக் கல்வி பயிலும் பதின் பருவத்தினரிடம் கேட்டேன், அவர்களுக்கும் தெரியவில்லை. ஊரிலிருக்கும் வயதான ஆண்களும் பெண்களும் மட்டுமே, இன்றும் கண்ணீரோடு அதைப் பகிர்ந்துகொள்கிறார்கள். நெஞ்சு பதற விவரிக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறைக்கு அந்தச் சாதியக் குரூரம், வன்மம், தெரியாமலேயே போகட்டும். ஆனால், வெண்மணியின் போராட்டங்கள்... வெண்மணித் தியாகங்கள்... வெண்மணியின் வீரம்...?