Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

ச.புகழேந்தி, மதுரை.

‘காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கத் தயார்’ என்கிறாரே ராகுல் காந்தி?


! ராகுல் தலைவராவதை எதிர்க்கும் அளவுக்கு வலுவான தலைவர்கள் யாரும் காங்கிரஸில் இல்லை. அவரை விட்டாலும் வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். எனவே, தலைவர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும். இல்லாவிட்டால், கட்டிவைத்து விடுவார்கள். கல்யாணம் அல்ல, காங்கிரஸ் தலைவர் பதவி. கல்யாணம் செய்துகொள்வதும் மறுப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், தலைவர் பதவி என்பதை விருப்பமே இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். விடாது காங்கிரஸ்!

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.விஜய், நாமக்கல்.

‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவான்கா, ஒரு நாட்டின் தலைவர் அல்ல. அப்படியிருக்கும்போது, இந்தியா வந்திருந்த இவான்காவுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தது தவறு’ என்று சர்ச்சை எழுந்துள்ளதே?


ட்ரம்ப்பின் மகள் மட்டுமல்ல இவான்கா. அவர் அமெரிக்க அதிபரின் ஆலோசகர் பொறுப்பையும் வகிக்கிறார். அது, அதிகாரபூர்வமான அரசு பதவிதான். அதனால் இந்தச் சர்ச்சை அவசியமற்றது!

கழுகார் பதில்கள்!

ஆர்.ஜெகந்நாதன், சென்னை-33.

30 ஆண்டுகளாகக் குனிந்த தலை நிமிராமல் கொத்தடிமைகளாக இருந்தவர்கள், விடுதலை பெற்றால் எப்படி நடந்துகொள்வார்கள்?


கை, கால் போன்ற உடல் உறுப்புகளைப் பயன்படுத்தா மலேயே வைத்திருந்தால்... பிறகு அவற்றின் பயன்பாடே மறந்து போய்விடும். அப்படித்தான், 30 ஆண்டுகளாகக் கொத்தடிமை களாக இருந்தவர்களுக்கு, சுதந்திர மாய் எப்படி பொறுப்பு உணர்வுடன் செயல்படுவது என்பதும் மறந்துபோயிருக்கும். ஆளாளுக்கு ஆடுவார்கள். நீங்கள் கேட்டது அ,தி.மு.க-வைப் பற்றித்தானே ஜெகந்நாதன்?!

க.பாலகிருஷ்ணன், சுரண்டை.

தோல்வி பயத்தின் காரணமாகத்தானே உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க தள்ளிப்போட்டது?

பாதி உண்மை அது. உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்குள் கட்சிக்குள் ஏராளமான வெட்டு குத்துகள் நடந்துவிடும். இது மீதி உண்மை.

வை.ஜெயராமன், அயனாவரம்.

மழை பாதிப்பு நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்கிறார்களே?


வேறு யாரும் பாராட்டவில்லை என்றால், அவர்களே தங்களைப் பாராட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆர்.ஜெயகுமார், கோவை.

தங்களைக் கவர்ந்த இலக்கிய அரசியல்வாதி யார்?


ஜீவாவையும் ம.பொ.சி-யையும் இலக்கியவாதிகள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், ஜெயகாந் தனையும் கண்ணதாசனையும் அரசியல்வாதிகள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், எனக்குப் பிடித்த இலக்கிய அரசியல்வாதிகள் இவர்கள் நால்வரும்.

காந்தி லெனின், திருச்சி.

கமல் கரையேறுவாரா?


கரையோரம் வந்தால்தானே சொல்ல முடியும்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

2011, 2016 தேர்தல்களில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக தே.மு.தி.க இருந்தது. ஆனால் இன்று..?


இன்று இப்படிக் கேள்வி கேட்கும் நிலைமையில் இருக்கிறது. விஜயகாந்தின் உடல்நிலை மட்டுமல்ல, அரசியல் செயல்பாடுகளும்தான் இதற்குக் காரணம். 2011 தேர்தலுக்குப் பிறகு, ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கான கடமைகளை அவர் செய்யாததுதான் இந்தப் பின்னடைவுக்குக் காரணம். கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லாத தலைவர்களே சுறுசுறுப்பாகச் செயல்பட்டபோது, 29 பேரை வைத்துக்கொண்டு சும்மா இருந்ததன் விளைவு இன்று விஜயகாந்தைச் சும்மா இருக்க வைத்துவிட்டது.

எஸ்.பி.லிங்கம், சேலம்.


சிறந்த நடிகர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவதுபோல, அரசியல்வாதிகளுக்கும் விருது வழங்கலாம் அல்லவா?


அதுதான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் கொடுத்துவிடுகிறார்களே... சரியில்லை என்றால், ஐந்தாண்டுகள் கழித்துத் திரும்பவும் வாங்கிவிடுகிறார்களே!

எம்.பி., எம்.எல்.ஏ பதவிகளெல்லாம் மக்கள் வைக்கும் விருந்து மட்டுமல்ல, மருந்தும்தான்!

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ரஜினி, இனிமேல் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்கப்போகிறார்?


‘நாடு சுபிட்சமாகத்தானே இருக்கிறது. இனிமேல் ரஜினி அரசியலுக்கு வந்து என்ன சாதிக்கப் போகிறார்’ என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்களா?!

கழுகார் பதில்கள்!

தா.பாண்டியன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்)


தேர்தல் களத்தில் கேரள மக்கள் கொடுக்கும் தீர்ப்பைப் போல், தமிழக மக்கள் கொடுக்கும் தீர்ப்பு அறிவுபூர்வமாக இல்லையே... ஏன்?


கேரள மக்கள் கொடுக்கும் தீர்ப்பை அறிவுபூர்வமானது என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கும், மறுதேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும் என்று மாறி மாறித்தான் கேரள மக்கள் வாக்களிக்கிறார்கள். இதை, அறிவுபூர்வமானது என்று சொல்ல முடியுமா? தமிழகத்திலும் 1984 தேர்தலிலிருந்து அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் மாறி மாறி ஆட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் தந்து வந்தார்கள். 2016 தேர்தலில் மட்டும்தான், ஆளும்கட்சியான  அ.தி.மு.க-வே மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்தது. எனவே, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தேர்தல் முடிவுகளில் வித்தியாசம் இல்லை.

கேரள மக்கள் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பதில்லை. தமிழகத்தில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது பழக்கமாக ஆகிவிட்டது. இதுதான் வித்தியாசம். இரண்டு மாநில மக்களும் ஆளும்கட்சி மீதான கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால், இங்கே பணம் கொடுத்தால் கோபம் அதிகமாகும்; அல்லது தணிக்கப்படும்.

கழுகார் பதில்கள்!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!