Published:Updated:

தலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்!

தலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்!

ப.திருமாவேலன்

ருணாநிதி, ஜெயலலிதா, நல்லகண்ணு, சங்கரய்யா, வீரமணி, ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், முத்தரசன், தொல்.திருமாவளவன், எடப்பாடி பழனிசாமி, டாக்டர் கிருஷ்ணசாமி, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லாஹ், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், சீமான்... என்றிருக்கும் தமிழ்நாட்டு அரசியல், ரஜினி, கமல், விஜய், விஷால் என்று மாறப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை, கூப்பிடுதூரத்தில்தான் இருக்கிறது. படம் ரிலீஸ் ஆவது போல இவர்களின் அரசியல் பயணங்கள் தொடங்கிவிட்டன.

ரஜினி போகப் போகும் பாதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். டிசம்பர் 12 அவரது பிறந்தநாள். தன் ரசிகர்களை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து, `சிஸ்டம் சரியில்லை’ என்று கொந்தளித்த ரஜினி, அடுத்த ரசிகர் சந்திப்பைத் தனது பிறந்த நாளின்போது சொல்லவிருக்கிறார். `இந்தக் கெட்டுப்போன சிஸ்டத்தைக் காப்பாற்ற நான் வரப்போகிறேன்’ என்று அவர் நெஞ்சம் திறக்கலாம்.

 கமல்ஹாசன் கட்சிப் பேரை அறிவிக்காமலேயே கட்சி நடத்திவருகிறார். டைட்டில் வைக்காமல் ஷூட்டிங் போவது சினிமாவில் சாதாரணமாய் நடப்பதுதான். அதை அரசியலுக்கும் கொண்டு வந்துவிட்டார் கமல்.
`‘ஆளப் போறான் தமிழன்’’ என்ற பாடல் மூலமாகத் தனது ஆசையை வெளிப்படுத்தி விட்டார் விஜய். ரஜினி, கமல் இருவரும் என்ன செய்யப்போகிறார்கள் என்று காத்திருந்து காய் நகர்த்துவதுதான் விஜய்யின் திட்டம். இவர்கள் யாரும் எதிர்பாராதது விஷால் வருகை. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நின்று வென்ற விஷாலுக்கு, ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் நிற்பதும் சாதாரணமாகத்தான் தெரிகிறது. பெரிய நடிகர்கள்கூட `சரத்குமார் - ராதாரவி’ கூட்டணியைப் பார்த்து பயந்து நின்றபோது, அவர்களை வீழ்த்த முடியும் என்று நிரூபித்தவர் விஷால். அவரோடு கார்த்தி, ஆர்யா ஆகியோர் கைகோத்தார்கள். இந்தப் படை இல்லாவிட்டால் அவர்களை வீழ்த்தியிருக்க முடியாது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தந்த உற்சாகம் சட்டசபைக்குள் வருவதற்கும் விஷாலுக்கு ஆசையைக் கூட்டிவிட்டது.

தலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது உண்மையில் விஷாலுக்குள் இருந்த ஆசையா அல்லது ரஜினி, கமலைப் பார்த்து வந்த ஆசையா எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் விஷாலின் அரசியல் பிரவேசம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
‘விஷாலே வந்துவிட்டார், நாம் ஏன் வரக் கூடாது’ என்று சிம்புவும் தனுஷும் நினைக்கலாம். ‘ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி வருவதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என்ற புதுக்கேள்வியை விஷால் வருகை உற்பத்தி செய்துவிட்டது. ‘அறம்’ படத்தில் மாவட்ட ஆட்சியர் பதவியை விட்டு விலகும் நயன்தாரா, அடுத்து தன் மக்கள் பணியை, ‘மதிவதனி என்னும் நான்’ என்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு தொடங்கப் போவதாகக் காட்சிகள் உள்ளன. கதைக்கும் இந்தக் காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திட்டமிட்டு நயன்தாரா சம்மதத்துடன் உருவாக்கப்பட்டதாகவே அது இருக்கிறது. எம்.ஜி.ஆரைப் பார்த்து ஜெயலலிதா வந்ததுபோல நடிகர்களைப் பார்த்து நயன்தாரா வர நினைக்கலாம்.

`‘நாடு போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதா எல்லாம் முதலமைச்சராகிவிடுவார் போல’’ என்று 1960-களின் இறுதியில் முரசொலி மாறன் ஒரு பேட்டி கொடுத்தார். அதற்கு 30 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா முதலமைச்சராகவும் ஆனார். ஒரு முறை அல்ல, நான்கு முறை. எனவே இன்னார்க்கு மட்டும்தான் என்று விதிக்கப்பட்ட நாற்காலியாக அது இல்லை. எடப்பாடி நினைத்திருப்பாரா, கோட்டையில் கொடி ஏற்றுவோம் என்று? ஜெயலலிதாதான் நினைத்திருப்பாரா, நமக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என்று?

இந்த நடிகப்பட்டாளம் என்ன செய்யும் என்று அவ்வளவு எளிதாகக் கணிக்க முடியாது. யார் யாரோடு சேருவார்கள், யார் யாரை எதிர்ப்பார்கள், யார் யாரை ஆதரிப்பார்கள் என்பதும் அவர்கள் நடிக்கும் சினிமாவைப் போலவே சிக்கலுக்குரியதுதான். ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம்... ஒவ்வொருவரும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளக் கூடியவர்.

சினிமாவில் எல்லாக் காட்சிகளிலும் தான் மட்டுமே வர வேண்டும் என்று நினைப்பது மாதிரி கட்சியிலும் அரசியலிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். தானே ஹீரோ, தானே வில்லன், தானே காமெடியன் என வரித்துக்கொள்பவர்கள். அரசியலுக்குள் வரும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய முதல் சிக்கல் இதுதான். ஒரு ஹீரோ, இன்னொரு ஹீரோவைச் சேர்த்துக்கொள்ள மாட்டார். ஒரு ஹீரோ, இன்னொரு ஹீரோவை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

தலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்!

எவ்வளவு விமர்சனங்கள் வைத்தவர்களாக இருந்தாலும் ஸ்டாலினும் வைகோவும் ஒரே கூட்டணிக்குள் இருப்பார்கள். எவ்வளவு மோதல் போக்குகள் இருந்தாலும் ராமதாஸும் திருமாவளவனும் ஒரே கூட்டணிக்குள் வரவே மாட்டார்கள் என்று பத்திரம் எழுத முடியாது. ஆனால், ரஜினியும் கமலும், விஜய்யும் விஷாலும் ஒரே கூட்டணிக்குள் என்பது சாத்தியம் இல்லாதது. ஏனென்றால், தனித்து நிற்கும் ஹீரோயிசத்தில்தான் அவர்களது பிம்பமே கட்டமைக்கப்படுகிறது. தேர்தல் என்பது, கூட்டணிகளின் வெற்றி. இந்தக் கள யதார்த்தம் சினிமாக்காரர்களுக்குப் புரியாது. சீமானுக்கே இன்னும் புரியவில்லை என்றால் மற்ற சினிமாக்காரர்களைச் சொல்லி என்ன பயன்?

விஷாலின் அறிவிப்பு, அரசியல் கட்சிகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது. அதைவிட ரஜினி, கமல், விஜய் போன்றவர்களை அதிகம் யோசிக்க வைத்திருக்கும். ‘வர்றேன்... வர்றேன்’ என்று பயமுறுத்திக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் திடீரெனக் குதித்தே விட்டார் விஷால். ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் அடுத்து என்ன செய்தாலும் அது விஷாலுக்கு அடுத்ததாகத்தான் இருக்கப்போகிறது. ரஜினிகாந்த் வரப்போகிறார் என்று சொல்லி வந்த நிலையில் விஜயகாந்த் வந்தார். இது ரஜினியே எதிர்பாராதது. ரஜினி தயங்கினார். விஜயகாந்த் தயக்கத்தை உடைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், கமல்ஹாசனை சாட்சியாக வைத்து, விஜயகாந்த்தை ரஜினி பாராட்டினார். ‘`உங்களது துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன்’’ என்ற தொனியில் சொன்னார். வீரமாய் வந்த விஜயகாந்த் மிக வேகமாய்ச் செயல்பட்டார். கருணாநிதி பிடிக்காத, ஜெயலலிதா பிடிக்காத எட்டு சதவிகித வாக்காளர்களைப் பிடித்தார் விஜயகாந்த். எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். ஆனால், அதைத் தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் பக்குவம் விஜயகாந்த்துக்கு இல்லை.

ஷூட்டிங் நாளில் மட்டும்தான் ஹீரோக்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மற்றநேரம் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பார்கள். இப்படித்தான் சட்டசபை நாள்களில், பொதுக்கூட்ட நாள்களில் மட்டும் விஜயகாந்த் உற்சாகமாக இருந்தார். மற்ற நாள்களில் வீட்டுக்குள்ளேயே இருந்தார். சினிமாவில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். அரசியலில் சாத்தியம் இல்லை. ஷூட்டிங் இல்லாத நாளில் மேக்கப் போட்டு செட்டுக்கு வருவது எப்படித் தவறானதோ அதுபோலதான் மீட்டிங் இருக்கும் நாள்களில் மட்டும் வேட்டி கட்டிப் பொது இடங்களுக்கு வருவதும் தவறானது. இந்த வேறுபாடு புரியாததால்தான் நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் சில ஆண்டுகள்கூட ஓடாமல் பெட்டிக்குள் சுருண்டது.

தலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்!

பாக்யராஜ், டி.ராஜேந்தர், ராமராஜன், கார்த்திக், சரத்குமார் வரையிலான கட்சிகள் என்ன சாதித்தன, எதனால் பலவீனம் அடைந்தன, ஏன் அதளபாதாளத்துக்குப் போயின என்பவற்றை இன்றைய நடிகர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இன்னும் சொன்னால், ஏன் இவர்கள் கட்சி ஆரம்பித்தார்கள் என்பதில் இருந்தே தொடங்க வேண்டும்.

பொதுநலன் - சுயநலன் இரண்டும் கலந்ததுதான் அரசியல். எது கூடுதலாக இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஒரு அரசியல் கட்சி உயிர்வாழ்வதன் அவசியமும் தேவையும் இருக்கிறது. அதனுடைய இருப்பே, இந்த இரண்டில்தான் இருக்கிறது. பொதுநல நோக்கத்தால் தொடங்கப்பட்ட கட்சிகள், இன்று சுயநல மனிதர்கள் கையில் இருந்தாலும் அக்கட்சிகளுக்கு உயிர் இருக்கிறது. சுயநல நோக்கத்தால் தொடங்கப்பட்ட கட்சிகள், அந்த மனிதனோடு முடிந்துவிடுகின்றன. அல்லது சிலகாலம் இருந்து மறைந்துவிடுகின்றன. இதுதான் அரசியலுக்கு வரும் நடிகர்கள் முதலில் படிக்க வேண்டிய அரசியல் பாடம்.

மக்களுக்கு இந்த நடிகக் கட்சிகளும், காட்சிகளும் இதுவரை பாதிப் பொழுதுபோக்காக இருந்தன. இனி முழு நீளப் பொழுதுபோக்காக மாறப்போகின்றன. ஒரு நாட்டின் தலையெழுத்தான அரசியலை மக்கள் அதனுடைய சீரியஸ் தன்மை இல்லாமல் பொழுதுபோக்காக நினைத்துவிடுவதைப் போன்ற அவலம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

தலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்!

அரசியல் என்பது இரண்டரை மணி நேர சினிமா அல்ல. இரண்டு வரி டயலாக் அல்ல. ஒரே ஒரு மீம் அல்ல. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை அது. தலையெழுத்து அது. எதிர்காலம் அது. இத்தகைய அரசியலை மலினப்படுத்தும், கொச்சைப்படுத்தும், கிண்டல் கேலிக்குள்ளாக்கும் காலமாக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு அரசியலின் முகம் மாறப்போகிறது. அது முகமற்ற முகமாக இருப்பதுதான் ஆபத்தானது. வேஷம் கலைப்பதும் வேலையே என்பவர்கள் கூடுவது அதிக ஆபத்தானதே!