Published:Updated:

``என் மீது ஊழல் புகார் சுமத்த முடியாமல் திணறியவர் ஜெயலலிதா!'' - ஆர்.எஸ்.பாரதி

``என் மீது ஊழல் புகார் சுமத்த முடியாமல் திணறியவர் ஜெயலலிதா!'' - ஆர்.எஸ்.பாரதி
``என் மீது ஊழல் புகார் சுமத்த முடியாமல் திணறியவர் ஜெயலலிதா!'' - ஆர்.எஸ்.பாரதி

``என் மீது ஊழல் புகார் சுமத்த முடியாமல் திணறியவர் ஜெயலலிதா!'' - ஆர்.எஸ்.பாரதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`உள்ளாட்சித் துறையா... கொள்ளையாட்சித் துறையா?', `தி.மு.க தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?', `பியூனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது'... என்று தொடர்ச்சியாக தி.மு.க - அ.தி.மு.க தலைவர்களிடையிலான வார்த்தைப் போர் தமிழக அரசியல் களத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கிறது. 

தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், `தமிழக உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத வகையில் ஊழல் நடைபெற்று வருவதாக...' அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் வேலுமணி, ``என் மீதானக் குற்றச்சாட்டை ஸ்டாலின், நிரூபணம் செய்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன். அதேபோல், நிரூபிக்கத் தவறிவிட்டால், மு.க.ஸ்டாலினும் தி.மு.க தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்'' என்று காட்டமாகப் பேசியிருந்தார். 

இதற்கிடையில், தி.மு.க அமைப்புச் செயலாளரும், எம்.பி-யுமான ஆர்.எஸ். பாரதி, ``உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து அமைச்சர் வேலுமணி என்னோடு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?'' என்று சவால் விட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், ``ஸ்டாலின் சொல்லும் புகார்களுக்கு பெட்டிசன் போட்டுவரும் ஆர்.எஸ். பாரதி போன்ற பியூனோடு எல்லாம் நான் விவாதிக்க முடியாது'' என்று பதில் அளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்.... 

``நான் நகராட்சித் தலைவராக 4 முறை பதவி வகித்தவன். துடைப்பம், ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு, சுத்தப்படுத்தும் கருவி உள்ளிட்டப் பொருள்களைக் கோருவதற்கான டெண்டர் வருடம்தோறும் பிப்ரவரி மாதம்தான் வெளியிடுவோம். ஒவ்வொரு நகராட்சியும் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே டெண்டர் விடுவதுதான் இதுவரையிலான நடைமுறை. ஆனால், இப்போது இந்த நடைமுறையையே மாற்றிவிட்டார்கள். 

பேக்கேஜ் சிஸ்டத்தில் எல்லாப் பொருள்களையும் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்கே டெண்டர் கொடுத்துவிடுகிறார்கள். எனவே, தமிழ்நாடு முழுக்க அனைத்து நகராட்சிகளின் வருமானமும் குறிப்பிட்ட சிலரது பாக்கெட்டுகளுக்கே போய்விடுகிறது. அமைச்சர் வேலுமணியின் உடன்பிறந்த சகோதரர் அன்பரசன் மற்றும் உறவினர்களான ராஜா சந்திரசேகர், பிரகாஷ் ஆகியோர்தான் இப்படி பினாமிகளாகச் செயல்படுகின்றனர். இந்த வகையில், தமிழகம் முழுக்க உள்ள அனைத்து நகராட்சிகளுக்கும் தேவையானப் பொருள்களை குறிப்பிட்ட 7 நிறுவனங்களே ஒருவர் மாற்றி ஒருவராக பேக்கேஜ் சிஸ்டத்தில் டெண்டர் எடுத்து பொருள்களை சப்ளை செய்துகொண்டிருக்கிறார்கள். 

அடுத்ததாக, நகராட்சி டெண்டர் எடுக்கவிருக்கும் நிறுவனங்களுக்கென்று குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்கின்றன. அதன்படி டெண்டர் கோரும் நிறுவனமானது ஏற்கெனவே இந்தத் தொழிலில் 3 வருட முன் அனுபவத்துடன் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. ஆனால், இந்த விதிமுறைகள் எதுவும் இப்போது பின்பற்றப்படவில்லை. 

சமீபத்தில், தமிழகம் முழுக்க நகராட்சி தோறும் குப்பை வாருவதற்கென்று பேட்டரி கார் வாங்க டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். அவையும் அமைச்சருக்கு நெருக்கமான வரதன், கே.சி.பி என மிகவும் நெருங்கிய உறவினர் நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கும் மேலான கான்ட்ராக்டுகள் அமைச்சர் வேலுமணியின் அண்ணனுக்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் மருத்துவம் சம்பந்தப்பட்ட டெண்டரும் அமைச்சரின் பினாமி நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

நகராட்சித் தலைவராக நான் இருந்த காலத்தில், என் மீது எந்தப் புகாரும் இல்லை. அதனால்தான், ஜெயலலிதாவே என் மீது ஊழல் வழக்கு எதுவும் பதிய முடியாத ஆத்திரத்தில், சுகாதாரத் துறையில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த என் மனைவியைப் பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளன்று பணியிடை நீக்கம் செய்து தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்.

அமைச்சர் வேலுமணிக்கு எதிராகப் பத்துப் பக்கங்களில் ஆதாரபூர்வமானப் புகாரை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றையாவது பொய்ப் புகார் என்று அமைச்சர் வேலுமணி மறுக்கட்டும்... என் மேல் கேஸ் போடட்டும்... பார்க்கலாம்!'' என்கிறார் ஆவேசமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு