Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

ஜெயலலிதா ஆட்சி புரிந்ததற்கும் எடப்பாடி ஆட்சி புரிவதற்கும் என்ன வித்தியாசம்?


தானே புயல் கடலூர் மாவட்டத்தைத் தாக்கியபோது, பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா. 2015 சென்னை வெள்ளச் சேதத்தின்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தார். மெளலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்தபோது போய்ப் பார்த்தார். ஆனால், கன்னியாகுமரியில் இவ்வளவு பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் இதுவரை (11-ம் தேதி வரை) செல்லவில்லை. இதுதான் ஜெயலலிதா ஆட்சிக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம். ஜெயலலிதாவின் பேச்சுகளைச் செய்தித்துறை புத்தகமாகக் கொண்டு வந்தது. அதுபோல், இப்போது எடப்பாடியின் உரைகளைப் புத்தகமாகக் கொண்டு வரப் போகிறார்களாம். சூப்பரா இருக்கும்ல!

கழுகார் பதில்கள்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்கு அ.தி.மு.க-வினருக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது பற்றி..?


இவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு முன்பாக, தமிழக அமைச்சர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஒவ்வோர் அமைச்சரும் மக்கள் பிரச்னைகளைப் பற்றியோ, அரசியல் பற்றியோ சொல்லும் கருத்துகளைப் பார்த்தால் புல்லரிக்கிறது.‘இவர்களின்  வாயையெல்லாம் ஜெயலலிதா ஏன் கட்டிவைத்தி ருந்தார்’ என்பது இப்போதுதான் புரிகிறது.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க., பா.ம.க ஆகிய கட்சிகள் போட்டியிடாததால், அதன் பலன் யாருக்குப் போகும்? தி.மு.க-வுக்கா, அ.தி.மு.க-வுக்கா?


பெரும்பாலும் தி.மு.க-வுக்குத்தான் போகும். இந்த இரண்டு கட்சிக்காரர்களிடமும் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தயக்கங்கள் இருக்கும்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐ.டி ரெய்டுகளுக்கெல்லாம் பஞ்சம் இல்லை. ஆனால் அவற்றின் பலன் என்னவென்பது வெளியுலகத்துக்குத் தெரிவதில்லையே?


முன்பெல்லாம் ஐ.டி. ரெய்டு நடந்தால், ‘இப்படி ஒரு ரெய்டு நடத்தப்பட்டது’ என்றாவது அறிக்கை கொடுப்பார்கள். சமீபத்திய ரெய்டுகளில் அதுவும் தருவதில்லை. ஒரு அதிகாரியைக் கேட்டால், ‘‘இரண்டு ஆண்டுகள் வரைக்கும் அதுபற்றி விசாரணை நடத்த கால அவகாசம் இருக்கிறது’’ என்கிறார். இந்த அடிப்படையில் பார்த்தால், நீங்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்வியைக் கேட்கலாம்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

ஆர்.கே. நகர் தொகுதியில் பி.ஜே.பி வெற்றி பெறுமா?


பி.ஜே.பி வெற்றி பெற வாய்ப்பு இருந்தால் தமிழிசையோ ஹெச்.ராஜாவோ போட்டியிட்டிருக்க மாட்டார்களா?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கன்டெய்னரில் வந்த 540 கோடி ரூபாய் மர்மம் எப்போதுதான் விலகும்?


! இன்னுமா அதை ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள். நீங்கள் ‘ஞாபகசக்தி நோய்’க்கு மருந்து சாப்பிடவும்!

காயல் எஸ்.ஏ.நெய்னா, காயல்பட்டினம்.

இரட்டை இலையால் மட்டுமே வெற்றி கிட்டிவிடுமா?

சின்னங்களைப் பார்த்து மட்டுமே வாக்களித்தது ஒரு காலம். இரட்டை இலை, உதயசூரியன் என்று சின்னங்களைத் தாண்டியும் சில பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை அனைவருமே மனதில் கொள்ளவேண்டும். எனவே, ஆர்.கே நகரில் இரட்டைஇலை வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும், அந்த சில பல விஷயங்களும் காரணமாக இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

சம்பத்குமாரி, பொன்மலை.


‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழலே இல்லை’ என்று பேசியிருக்கிறாரே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்?


இந்த வாக்குமூலத்தை திண்டுக்கல் சீனிவாசன் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். வேறு யாரையாவது அப்படிச் சொல்லச் சொல்லவும்.

‘‘அம்மா இட்லி சாப்பிட்டார்’’ என்று சொன்னவர் திண்டுக்கல்லார். பிறகு, ‘‘நாங்கள் சும்மாதான் சொன்னோம்’’ என்று மாற்றியும் சொன்னார். மன்னிப்பும் கேட்டார். இப்படிப்பட்டவரை எப்படி நம்ப முடியும்?!

வசந்தகுமார், மதுரை.

குஜராத் தேர்தலில் மோடி பேச்சை கவனித்தீர்களா?


எல்லா மாநிலத்துக்கும் சென்று, ‘குஜராத் வளர்ந்துவிட்டது, குஜராத் செழித்துவருகிறது, மற்ற மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன்’ என்று சொல்லி வந்தார் மோடி. ஆனால், அந்த மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் குஜராத்துக்குத் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லாமல் ராகுலையும் காங்கிரஸை யும் திட்டிக்கொண்டு இருக்கிறார். 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ‘மோடியைக் கொல்வதற்கு பாகிஸ்தான் சதி செய்கிறது, அதற்கு காங்கிரஸ் உடந்தையாக இருக்கிறது’ என்றெல்லாம் சொல்வதைப் பார்த்தால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பாதிப்பு மோடிக்கு அதிகமாக இருப்பது போல் தெரிகிறது.

படங்கள்: ரா.ராம்குமார்,  வீ.நாகமணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

எர்ணாவூர் நாராயணன்,
தலைவர், சமத்துவ மக்கள் கழகம்.


ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரசார பணிகள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் என பிஸியாக இருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்ட மீனவ மக்களை நேரில் சந்தித்து, காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எப்போது எடுப்பார்?


முதல்வருக்கு இதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லையே! கோட்டையில் உட்கார்ந்து ஆலோசனை மட்டுமே நடத்துகிறார். குமரி மாவட்டத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பேரழிவு என்பது காலத்தால் மறக்க முடியாததாக மாறி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கதி என்னவென்று இன்னும் தெரியவில்லை. அவர்களில் எத்தனை பேர் திரும்பக் கிடைப்பார்கள் என்பதும் தெரியவில்லை. ஒரே ஒரு சுற்றுலாப் பயணி, இந்தியாவில் காணாமல் போனால் ஒரு நாடு எப்படி துடிக்கும் என்பதைப் பார்த்துள்ளோம். ஆனால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளது குறித்துக் கவலைப்படவில்லை முதல்வர். ஆர்.கே. நகர் பிரசாரத்துக்குச் செல்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துகிறார். இவைதான் அவருக்கு முக்கியமாக ஆகிவிட்டன.

குமரி மாவட்டம் சென்று அங்குள்ள மக்களுக்கு முதல்வர் ஆறுதல் சொல்லியிருந் தாலே, அவர்கள் ஓரளவு திருப்தி அடைந்திருப்பார்கள். ‘அரசாங்கம் நம் பக்கம் இருக்கிறது’ என்று நிம்மதியடைந் திருப்பார்கள். தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டும் வகையில், ‘கன்னியாகுமரியை கேரள மாநிலத்துடன் இணைத்துவிடுங்கள்’ என்ற கோரிக்கை அங்கு கிளம்பி யுள்ளது. இதைவிட அரசுக்குப் பெரிய அவமானம் எதுவுமில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது குமரி. ‘அங்கேயே நாங்கள் இருந்திருக்கலாம்’ என்று அந்த மக்கள் நினைத்தால், எடப்பாடி யாருக்காக ஆள்கிறார்?

கழுகார் பதில்கள்!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!