ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 59 பேர் களத்தில் இருந்தாலும், அ.தி.மு.க-வின் ஈ.மதுசூதனன், தி.மு.க-வின் என்.மருதுகணேஷ் மற்றும் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையிலான மும்முனைப் போட்டிதான் உள்ளது. இந்நிலையில், இன்னும் மூன்று தினகரன்களும், இரண்டு மதுசூதனன்களும் கோதாவில் குதித்துள்ளனர். மற்ற மூன்று தினகரன்களுக்கும் அடுத்தே வேட்பாளர்கள் லிஸ்ட்டில் டி.டி.வி.தினகரன் இடம் பிடித்திருக்கிறார் என்பதுதான் வேடிக்கை.
முக்கிய வேட்பாளர்களின் பெயரிலேயே இப்படி சுயேச்சைகள் களம்காண்பது குறித்துப் பொதுவான இரண்டு கருத்துகளை அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள். ஒன்று, ‘பெயர்க்குழப்பம் ஏற்பட்டால் வாக்குகள் சிதறும். சிதறுகிற அந்த வாக்குகள், வலுவான எதிரணிக்குச் சாதகமாக அமையும்’. இன்னொன்று, ‘எல்லா வேட்பாளர்களுக்கும் பூத் ஏஜென்ட்களை நியமித்துக்கொள்ளும் அங்கீகாரம் உண்டு. குறிப்பிட்ட சுயேச்சைகளை யார் களமிறக்கினார்களோ, அவர்கள் அந்த ஏஜென்ட்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்.’
ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனு செய்திருக்கும் இந்த தினகரன்கள் மற்றும் மதுசூதனன்களின் பின்னணி அறிய ஒரு பயணம் மேற்கொண்டோம்.

சென்னையை அடுத்த மணலி, வயக்காடு பகுதியில் ஜி.தினகரன் வீடு இருக்கிறது. இவருக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றி ஏரியாவில் விசாரித்தோம். ‘‘அண்ணா காலத்துல இருந்தே அவங்க தி.மு.க குடும்பம்ங்க. தம்பி, (ஜி.தினகரன்தான்) ஆர்.கே. நகர் பிரசாரத்துக்குப் போயிட்டுத் தினமும் ராத்திரிதான் வீட்டுக்கே வருது. வீட்டுல அவங்க அக்கா பிரபாவதி இருப்பாங்க, அவங்களைப் போய்ப் பாருங்க’’ என்று வீட்டுக்கு வழிகாட்டினார்கள். பிரபாவதியை நாம் சந்தித்தபோது, தி.மு.க குறித்து நமக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டார் பிரபாவதி. ஜி.தினகரனை போனில் பிடித்தோம். ‘‘சும்மாத்தான் சார் தேர்தல்ல நிக்கிறேன், நமக்கு எவ்வளவு ஓட்டு விழுதுன்னு பார்க்க வேண்டாமா?” என்றார். ‘‘ஆட்டோ சின்னத்துக்கு வாக்குக் கேட்டு எந்தெந்த ஏரியாவில் பிரசாரம் செய்கிறீர்கள்?’’ என்றதும், ‘‘நாம நாளைக்கு நேரில் சந்திப்போமே’’ என்று முடித்துக்கொண்டார்.
அடுத்த சுயேச்சை கே.தினகரன். இவருக்கு ‘பெட்டி’ சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி சுந்தரம் தெருவில் நுழைந்து இவரைப் பற்றி விசாரித்தோம். ‘‘தி.மு.க வட்டச் செயலாளர் தினகரன்னு தெளிவாச் சொன்னாத்தானே சார் எங்களுக்குப் புரியும்...’’ என்று ஏரியா மக்கள் உரிமையுடன் கோபித்துக்கொண்டனர். பின்னர், கே.தினகரன் வீட்டுக்கு வழிகாட்டினர். தினகரன் வீட்டில் இருந்தவர்களிடம் பேச முயன்றோம். அவர்கள், ‘‘எதுவாக இருந்தாலும் நீங்க தினகரன் கிட்டேயே பேசிக்குங்க’’ என்றனர். தினகரனைப் போனில் பிடித்தோம். ‘‘தலைமையைக் கேட்காமல் நான் எதுவும் பேச முடியாது’’ என்று முடித்துக் கொண்டார். தினகரன் வீட்டுக்கு வழிகாட்டிய வர்களை மீண்டும் பார்த்தோம். ‘‘தம்பி, நீங்க நேரா தண்டையார்பேட்டைக்குப் போயிடுங்க. தி.மு.க எலெக்ஷன் ஆபீஸ் எதுன்னு கேளுங்க. தினகரன் அங்கதான் இருப்பாரு’’ என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரு.வி.க நகரிலுள்ள கோபாலபுரத்தில், மூன்றாவது சுயேச்சையான எம்.தினகரன் வசிக்கிறார். இவருக்கு ட்ரில்லிங் மெஷின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கும் ஏரியா பொதுமக்கள் நம்மை உட்காரவைத்து வகுப்பு எடுத்தார்கள். ‘‘நீங்க பாட்டுக்கு மொட்டையா ‘தினகரன்’னு சொன்னா யாருக்குத் தெரியும்? இங்க நாலஞ்சு தினகரன்கள் இருக்காங்க. மீன்பாடி வண்டி ஓட்டற தினகரனைப் பாக்கணும்னா, அந்த மூலையில்தான் வூடு. இன்னொரு தினகரன் வூடு கட்டற பில்டிங் மேஸ்திரி. கேஸ் விஷயமா வந்தீங்கன்னா, அதுக்கும் ஒரு தினகரன் இருக்காரு. தி.மு.க வக்கீல் அவரு. நல்ல மனுஷன். ஆமா, உங்களுக்கு யாரு வேணும்?” என்றனர். மூன்று விரல்களை நீட்டி, நாமே ஒன்றைத் தொட்டு, ‘‘வக்கீல் தினகரன் வீடு’’ என்றோம். வீட்டைக் காட்டினார்கள். அந்த வீட்டை நெருங்கினோம். வீட்டில் யாரும் பேச மறுக்க, தினகரனை போனில் பிடித்தோம். ‘‘ஆமாம் சார், சுயேச்சையாகத்தான் போட்டியிடுகிறேன், இப்போது நான் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்’’ என்று முடித்துக்கொண்டார். பழைய அனுபவம் கொடுத்த பாடத்தால், திரும்பும் வழியில் வீட்டைக் காட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு, ‘‘வக்கீல் தினகரன் சாரை எங்கு போனால் இப்போது பார்க்கலாம்?’’ என்று கேட்டு வைத்தோம். ‘‘ஆர்.கே. நகருக்குப் போயிடுங்க’’ என்றனர்.

நான்காவது சுயேச்சை எஸ்.மதுசூதனன், சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கிறார். கடந்த முறை ஓ.பி.எஸ் அணி சார்பாக ஈ.மதுசூதனன் நின்றபோது கேட்டு வாங்கிய இரட்டை மின் கம்பம் சின்னத்தையே இவர் கேட்டு வாங்கியிருக்கிறார். இவரும் தி.மு.க வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர் என்பது நம்முடைய முதற்கட்ட விசாரணையிலேயே தெரியவந்தது. வீட்டைக் கண்டுபிடித்து, அவரையும் நேரில் பிடித்து விட்டோம். வீடெங்கும் உதயசூரியன் வரைந்திருக்க, புகைப்படங்களில் தளபதி நமக்கு அழைப்பு விடுத்தபடி இருந்தார். ‘‘சார், நான் சுயேச்சை வேட்பாளர். அவ்வளவுதான்’’ என்று சொல்லி விட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அடுத்தது, ‘அயன் பாக்ஸ்’ சின்னம் வாங்கியுள்ள ஆர்.மதுசூதனன் மட்டும்தான் இந்த ‘வி.ஐ.பி’ வேட்பாளர்களில் மிச்சமிருந்தவர். வியாசர்பாடி, எஸ்.ஏ. காலனியில் வசிக்கிறார். ஏரியாவில் விசாரித்தோம். ‘‘நம்ம மதுவீடுதானே? அந்த முனை வீடுதான். பிரைவேட் கம்பெனியில கார் டிரைவரா இருக்காரு. வெற்றிவேல் எம்.எல்.ஏ-வின் விசுவாசி. மதுசூதனனை வெறுப்பேத்த டி.டி.வி.தினகரன் சைடுலயும் ஒரு சுயேச்சை வேணுமில்லையா, அதான் இவரை இறக்கி விட்டிருக்காங்க’’ என்றனர். மதுசூதனன் வீட்டுக்கு நாம் போனபோது, இரவு 10 மணியைக் கடந்து விட்டது. ‘பிரசாரக் களைப்பில் தூங்கியிருப்பாரோ’ என்ற எண்ணத்துடன் வீட்டு வாசலில் போய் நிற்க, எங்கோ அவசரமாக மதுசூதனன் கிளம்பிக் கொண்டிருந்தார். ‘‘என்ன சார், இந்த நேரத்துலகூட பிரசாரத்துக்குப் போறீங்களே, நீங்க செம சின்சியர்’’ என்றதும், அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வீட்டின் முகப்பில் நிறைந்திருந்த அ.தி.மு.க-வின் அடையாளம், அவரை நெளிய வைத்தது. என்ன நினைத்தாரோ, ‘‘பரவாயில்லை, உள்ளே வாங்க சார்’’ என்று தாராள மனதுடன் வரவேற்றார். ‘‘நாங்கள்லாம் ஒரே டீம் சார். மீடியாகிட்டே எதையும் பேசக்கூடாதுன்னு மாவட்டம் சொல்லியிருக்காரு’’ என்றார். அதற்குமேல் அவர் எதையும் பேசவில்லை. வீடெங்கும் டி.டி.வி.தினகரனின் அடையாளங்கள் பேசிக்கொண்டிருந்தன.
- ந.பா.சேதுராமன்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு