Published:Updated:

தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சட்டமன்ற செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சட்டமன்ற செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சட்டமன்ற செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சட்டமன்ற செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த கூட்டத்தொடரில், தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன் பேசும்போது, ‘‘முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த பின்னர், என் தொகுதி மக்கள் மத்தியில் எனக்கு அதிக மரியாதை ஏற்பட்டுள்ளது. எனவே தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய விரும்புபவர்கள், என் வழியை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

இதற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழழகனை தாக்க சென்றனர். அப்போது, தே.மு.தி.க.வை சேர்ந்த மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தடுத்தபோது இரு தரப்பினர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

##~~##
இந்த சம்பவம் குறித்து சட்டசபை உரிமைக்குழு விசாரணைக்கு சபாநாயகர் தனபால் பரிந்துரை செய்தார். இந்த குறித்து விசாரித்த உரிமைகுழு கடந்த மார்ச் 25ஆம் தேதி பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து, தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார், உறுப்பினர்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி, அனங்கை முருகேசன், பாலஅருள்செல்வன், செந்தில்குமார் ஆகியோரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்த தண்டனை குறைக்க வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல அரசியல் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் காலத்தை 6 மாதமாக குறைத்து கடந்த மார்ச் 26ஆம் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: சட்டமன்ற செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இந்த நிலையில் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் நேற்று வழக்கு தொடர்ந்தனர். அதில், சட்டப்பேரவையில் இருந்து தாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் தொகுதி பணிகள் பாதிக்கப்படுகிறது என்றும் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஒரு தரப்பை மட்டுமே விசாரித்து எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கு தனிப்பட்ட முறையில் மனுதாரர்கள் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதி்க்கு நீதிபதி தள்ளிவைத்தார். இதனிடையே, உயர் நீதிமன்ற நோட்டீஸை அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி பெற்றுக் கொண்டார்.