Published:Updated:

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

தமிழ்ப்பிரபா , படங்கள்: தே.அசோக்குமார்

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

தமிழ்ப்பிரபா , படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

``இந்த வாட்டி நாலாயிரம்லாம் குடுத்தா வாங்கப்போறது இல்ல சார். இவனுங்க அடிக்கிற கொள்ளைக்கு இந்தவாட்டி ஆறாயிரம் குடுக்கணும். காசு வாங்கலைன்னா மட்டும் நம்ம கேக்காமயே சீர் செஞ்சிடுவானுங்க பாரு. பம்ப்புல தண்ணி அடிச்சா கரேர்னு காவாத் தண்ணிதான் வருது. நீதான் காசே வாங்கலையே போயி கேளேன். உனுக்கு ஒரு வாயி கேன் வாட்டரு குடுக்கிறானுங் களான்னு பாப்போம்’’ - ஆர்.கே.நகர்  சலூனில் முடி வெட்டிக்கொண்டிருந்தவர்கள் நடத்திய உரையாடல்தான் இது.

திருவிழா நடக்கப்போகும் ஒரு கிராமத்துக்குள் சுற்றிவந்த அனுபவங்களைத் தருகிறது ஆர்.கே.நகர்த் தொகுதி. ஆங்காங்கே புதியதாய் முளைத்திருக்கும் சோதனைச் சாவடிகளின் அருகே காவலர்கள் நின்று, வாகனங்களை நிறுத்தித் தங்களுக்கு சந்தேகம் வரும் இடங்களில் தடவிப்பார்த்து, திறந்து பார்த்து விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள். மதுசூதனன், மருது கணேஷ் புகைப்படங்கள் தாங்கிய ஆட்டோக்கள் ‘எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று ஒவ்வொரு தெரு முனையிலும் அலறிக் கொண்டிருக்கிறது. மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என விதவிதமான ஊர்க்காரர்களின் புதுக்குரல்கள் ஆர்.கே நகரைச் சுற்றி ஒலிக்கிறது. வெண்மை நிறைந்த ஆடையில் வேஷ்டி விளம்பரத்தில் வருவது போல கூட்டம் கூட்டமாக நின்று கட்சிக்காரர்கள் விவாதித்துக்கொண்டிருக் கிறார்கள். குளிரும், கொட்டும் பனியும் இல்லையே தவிர, இந்திய தேசத்தின் பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது ஆர்.கே நகர்.

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

வண்ணாரப்பேட்டை தபால்நிலையத்திற்கு அருகே தள்ளுவண்டியில் கடை நடத்தும் முருகன் “ப்ரதர், இது அதிமுக கோட்டைதான், யாரும் இல்லன்னு சொல்லல. ஆனா, இப்ப ஊர் ஜனங்க குழப்பத்துல இருக்குதுங்க. இவனுங்க மட்டும் அமவுன்ட்டை இறக்கலைன்னா சத்தியமா டி.எம்.கேதான் ஜெயிக்கும்” என்று பிளாஸ்டிக் கவரில் குழம்பை ஊற்றிப் பொட்டலம் கட்டியபடியே பேசினார்.

குறுக்குத்தெருக்களுக்குள் சுற்றினால் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கண்டறிய அந்தந்தக் கட்சிக்காரர்கள் வீடுவீடாகச் சென்று சரிபார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளைக் காண முடிகிறது. தெருவாசிகள் ஆண்கள் பெண்கள் எனக் குழுக்களாகப் பிரிந்து ஏதோ விவாதித்திருந்த தருணத்தில் பெண்களிடம் சென்று பேசினேன். “ஓட்டு யாருக்குன்னெலாம் கேக்காத நைனா. ஒரு அம்மிக்கல்ல நிக்க வெச்சு அது இரட்டை இலை சின்னத்துல நிக்குது அதுக்கு ஓட்டுப் போடுங்கன்னா நாங்க போட்டுடுவோம். எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து ஆளைப்பாத்து ஓட்டுப் போடுறதுல்ல. இரட்டை இலைல யார் நின்னாலும் எங்க ஓட்டு இரட்டை இலைக்குத்தான்” என்று ஒரு ஆயா சொன்னபோது எம்.ஜி.ஆர் இன்னும் உயிர் வாழ்வதாக எங்கோ ஒரு கிராம மக்கள் நம்பிக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனத் தோன்றியது.

ஒரு வயதான டெய்லரிடம் பேசினேன். “தம்பி, காங்கிரஸ்காரன் தமிழ்நாட்ட ஆண்ட காலத்துல இருந்து இங்க கடை வெச்சுனு இருக்கிறேன். தோ இந்தப் பழைய மிஷன் இருக்குதே இதுமாதிரிதான் நானும். எத்தனையோ தேர்தலைப் பாத்திருக்கேன். இங்க அ.தி.மு.க-தான் அதிகவாட்டி ஜெயிச்சிருக்கு. ஜெயிக்கும். ஏன்னா, இந்த ஜனங்க ஒருத்தரை நம்பிட்டாங்கன்னா எந்த நிலையிலயும் சந்தேகப்பட மாட்டாங்க. ஆனா, இப்போ நிலைமை மாறிட்டுவருது. யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எதுக்குன்னா, அந்தம்மா சாவு எங்கள ரொம்ப பாதிச்சிடுச்சு தம்பி. சும்மாவே மனசார ஓட்டுப் போடுற எங்களுக்கு கடந்த ரெண்டு மூணு தேர்தல்ல கட்சிக்காரனுங்க மாறி மாறி பணத்தைக் கொடுத்து ஆசை காட்டிட்டானுங்க. என்னைக் கேட்டா இந்தத் தேர்தல்ல யாரு அதிகமா பணம் கொடுக்கிறாங் களோ அவங்களுக்குத்தான் ஓட்டுபோடணும்கற நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்க” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

மதிய நேரம் சாப்பிடலாம் என்று ஆர்.கே நகரில் உள்ள எந்த உணவகத்துக்குச் சென்றாலும் வெள்ளைஉடை அரசியல்வாதிகள் அனைத்து டேபிள் நாற்காலிகளையும் ஆக்கிரமித்திருந்தனர். பஜ்ஜி போண்டாக் கடைகளை காக்கி நிற இளங்காவலர்கள் தட்டும் சட்னியுமாகக் கையகப் படுத்தியிருந்தனர். பொது இடங்களில் பேனர், கட் -அவுட் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டதால் சிறிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் ஆட்டோக்களில் கட்டப்படும் வேலை சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தன. ஒரு பிரமாண்டமான சினிமாப் படப்பிடிப்பு நடைபெறும் சூழலையே ஆர்.கே. நகர்த் தொகுதி பெற்றிருந்தது.

பணப்பட்டுவாடா நடக்கிறதென்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்த போராட்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் “எங்களுக்குப் பணம் தரக்கூடாதுன்னு ஓட்டு லிஸ்ட்ல இருந்து பேரைத் தூக்கிட்டீங்களா?” என்று உள்ளூர்க் கட்சிக் காரர்களுடன் மக்கள் சண்டை போடுவது தெருவுக்குத் தெரு நடக்கிறது. இவர்களுக்கு நடுவே இரயிலில் ஏறியதும் சமோசா சமோசா என்று கூவுவது போல திறந்தவெளி ஜீப்பில் “பிரஷர் குக்கர் பிரஷர் குக்கர் பிரஷர் குக்கர் பிரஷர் குக்கர் மக்கள்செல்வர் டிடிவி தினகரனின் சின்னம் ப்ரஷர் குக்கர் மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள்’’ என்று ஒருவர் ரொம்பவும் ப்ரஷருடன் வியர்வை வடியப் பேசிக்கொண்டிருந்தார்.

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

``மண்ணின் மைந்தன் மதுசூதனன் உங்களை நோக்கி வாக்கு சேகரிக்க வருகிறார்’’ என்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்ததும் மஞ்சள் சீருடை அணிந்தவர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆடலும் பாடலுமாய் செல்ல, மாடியிலிருந்து மதுசூதனனுக்குப் பூமழை கொட்டப்படுகிறது. மேல்பார்த்து சிரித்த முகத்துடன் அவர் அதற்கு நன்றி தெரிவிக்கிறார். ஆரவாரத்துடன் அவர் ஒருபக்கம் ஓட்டு சேகரிக்க, இவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று தி.மு.க-வும் இதே பாணியில் ஓட்டுசேகரிப்பு நடத்த ஊரே அல்லோலப்படுகிறது.

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

ஆர்.கே. நகர் மக்களுக்கும் பணம் வாங்குவது குறித்து எந்த சஞ்சலமுமில்லை. “ஒரு வேலை ஆவணும்னு கவர்மென்ட் ஆபீஸுக்குப் போனா சும்மாவா உடறானுங்க?  அஞ்சாயிரம், பத்தாயிரம் இல்லாம வேலை நடக்க மாட்டுது. அவ்ளோ ஏன், தோ இப்போ இரட்டை இலைச் சின்னம் குடுத்தாங்களே சும்மாவா குடுத்திருப்பாங்க. இல்லை சும்மாதான் வாங்கியிருப்பாங்களா... எல்லாத் தரப்புலயும் பணம் கொடுக்கல் வாங்கல்லதான சார் வேலை நடக்குது. நாங்க மட்டும் பணம் வாங்கக்கூடாதுன்னா என்ன அர்த்தம். இவனுங்க என்ன தன்னோட சொத்தை வித்தா எங்களுக்குக் குடுக்கிறானுங்க. எங்களோட பணம் ஏதோ ஒரு வகையில எங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்போது நாங்க எதுக்கு விடணும்” என்றார் ஆர்.கே நகரில் பழைய துணிகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட், குடங்கள் விற்கும் ஒரு நடுத்தர வயது மனிதர்.

அதிகார அத்துமீறல்! - ஆர்.கே.நகர் அதிர்ச்சிகள்!

ஆர்.கே. நகர் மக்கள் தீபாவளி, பொங்கல் என ஏதோ பெரும்பண்டிகை வருவதைப்போலப் பரவசத்துடன் இருக்கிறார்கள். தினசரி ஒரு தலைவர் வந்து அன்புடனும், ஆவேசத்துடனும் மக்களிடம் வாக்குறுதி கொடுக்கிறார்கள். முதியவர்களின் காலில் விழுகிறார்கள். கைக்குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டு, பெயர் வைக்கிறார்கள். இவையெல்லாம் மக்களுக்கு நல்லது செய்யத்தான் என்று நினைக்கும்போது தமிழ்நாட்டை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

தி.மு.க-வுக்கே வெற்றிவாய்ப்பு?!

2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இது இரண்டாம் இடம்பிடித்த தி.மு.க-வின் சிம்லா முத்துச்சோழனைவிட  39,545 வாக்குகள் அதிகம்.  மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வசந்திதேவி அந்தத் தேர்தலில் 4,195 வாக்குகள் பெற்றார்.

``ஜெயலலிதா போட்டியிட்டபோதே எதிர்க்கட்சியான தி.மு.க-விற்கு வாக்களித்தவர்கள் என்பதால் தி.மு.கவின் வாக்கு எண்ணிக்கை குறையாது. வாக்குகளும் பிரியாது. மேலும், மீனவர்கள் அதிகம் உள்ள காசிமேட்டுத் தொகுதி ஆர்.கே.நகரில் வருகிறது. கன்னியாகுமரியில் மீனவர்பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டுவதாக இப்பகுதி மீனவர்களும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளும் தி.மு.க பக்கம் திருப்பும். அதேபோல், ஜெயலலிதா பெற்ற 97 ஆயிரம் வாக்குகளை இந்தமுறை தினகரன் பிரிப்பார். ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆதரவும் தி.மு.க-விற்கு இருப்பதால் இந்த முறை தி.மு.க வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதிகார அத்துமீறலும்,  பணபலமும் முடிவுகளை மாற்றலாம்’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பணம் இன்னும் பாயவில்லை!

ஆர்.கே.நகர்த் தொகுதிக்குள் பணத்தை எதிர்பார்த்து வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் அ.தி.மு.க-வுக்கும், தினகரனுக்கும்தான் போட்டி. தினகரன் கொடுப்பதைவிட கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணி காத்திருப்பதாகச் சொல்கிறார்கள் உள்ளூர் கட்சிக்காரர்கள். ``தினகரன் இன்னும் பணத்தை உள்ளே இறக்கவில்லை. ஆனால், மந்தைவெளியில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டுவிட்டது. விரைவில் அவர்கள் தரப்பு பணத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும். அதன்பிறகுதான் அதைவிடக் கூடுதலாக ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு பணத்தை இறக்கும். ஒரு வாக்காளருக்கு அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாயை மூன்று தவணைகளில் கொடுப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்கிறது அரசியல் வட்டாரம்.

- ந.பா.சேதுராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism