Published:Updated:

``ஹெச்.ராஜா பேச்சு பத்தி உங்க கருத்து என்ன சார்?'' விசுவின் பதில்

``ஹெச்.ராஜா பேச்சு பத்தி உங்க கருத்து என்ன சார்?'' விசுவின் பதில்
``ஹெச்.ராஜா பேச்சு பத்தி உங்க கருத்து என்ன சார்?'' விசுவின் பதில்

`யாகாவாராயினும் நா காக்க'... இது என் தமிழ் ஆசிரியர் சொன்னது. `உணர்ச்சி வசப்படுதல் உடல் நலத்துக்குக் கேடு'... இது என் மருத்துவர் சொன்னது. `உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்'... இது என் பாட்டி சொன்னது. `எங்கள் சிங்கம் வலையில சிக்கிக்கிச்சு'. இது மெஜாரிட்டி இந்துக்கள் தற்போது ஆழ் மனதில் வருத்தப்படுவது.

நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வது தொடர்பாக ஹெச்.ராஜாவுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஹெச்.ராஜா காவலர்களை தரக்குறைவாகப் பேசியதுடன் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கக்கூடிய வகையில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. மக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து சில அரசியல் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். பின்னர், ஹெச்.ராஜா அந்தக் காணொலிக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் "காவல், நீதித்துறைகளை மிரட்டும் தொனியில் வெளிவந்துள்ள வீடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல; யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். நான் நீதிமன்றத்தை மதிப்பவன்" என்று கூறினார்.

இந்தச் சூழலில் இயக்குநரும் மற்றும் நடிகருமான விசு என்ன சொல்கிறார் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது. விசுவின் எதிர்வினை என்னவென்று தெரிந்துகொள்வதற்குக் காரணம் இந்து மதத்தை மீட்டெடுக்கக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்றும், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு ஆண்மகனைப் பார்க்கிறேன் என்றும் ஹெச்.ராஜா குறித்து ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஒரு பொதுமேடையில் விசு பேசியிருந்தார். இதனையொட்டி ஹெச்.ராஜாவின் சமீபத்திய பேச்சுக்குறித்து விசு என்ன சொல்கிறார் எனக் கேட்டேன். 

"திரு ஹெச்.ராஜா அவர்களது எல்லாப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் என்னால் பதிலளிக்க இயலாது. ஆனாலும் இந்தக் காணொலி குறித்து சில விஷயங்கள் சொல்கிறேன். M G R அவர்களுக்காக எழுதப்பட்ட பாடலை சற்று `உல்டா' செய்கிறேன். `கடமை வரும்போது துணிவு வர வேண்டும், பணிவும் வர வேண்டும் தோழா' நண்பர் ராஜா அவர்களே... வெறும் இரண்டு வார்த்தைகளில் காத தூரம் தள்ளி நின்று விட்டீரே.. முகத்தைக்கூட பார்க்க முடியாமல் திரும்பி நின்ற அந்தக் காவல் அதிகாரி, அதே இரண்டு வார்த்தைகளில் `அண்ணாச்சி அண்ணாச்சி' என்று கூறியே என்னை அள்ளி ஜோபிக்குள் போட்டுக்கொண்டு விட்டாரே. விதி வலியது . Everything is pre-written, nothing can be re-written. `யாகாவாராயினும் நா காக்க'.. இது என் தமிழ் ஆசிரியர் சொன்னது. `உணர்ச்சி வசப்படுதல் உடல் நலத்துக்குக் கேடு'. இது என் மருத்துவர் சொன்னது. `உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்' .. இது என் பாட்டி சொன்னது . `எங்கள் சிங்கம் வலையில சிக்கிக்கிச்சு' இது மெஜாரிட்டி இந்துக்கள் தற்போது ஆழ் மனதில் வருத்தப்படுவது. 

மேலே குறிப்பிட்ட சிங்கம் என்கிற உவமை ஹெச். ராஜாவைத்தான் குறிக்கிறதா? 

`இந்து கோயில்கள் மீட்பு' பற்றிய புள்ளி விவரங்கள் தந்ததில் அவரை நான் கர்ஜித்த சிங்கமாகப் பார்த்தேன். அதுவும், இப்போது இந்த நீதிமன்றம் பற்றிய இரண்டு வார்த்தைகளில் நீர்த்துப் போக வாய்ப்புண்டு. அவர் மீது நான் வைத்த வலுவான நம்பிக்கை மேலும் நீர்த்துப்போகுமா என்று எனக்குத் தெரியாது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி மேல உட்கார்ந்துட்டு ஒருத்தி எழுதிகிட்டு இருக்காளே, அவள் என்ன எழுதப்போகிறான்னு யார் சார் கணிக்க முடியும்? புதுக்கோட்டை மாவட்டத்துல, திருமையத்துக்குப் பக்கத்துல திரு.ஹெச். ராஜா அவர்களின் வேகத்துக்கு ஒரு ப்ரேக் போடணும்னு அவள் நினைச்சா. அந்த ப்ரேக்தான், நடந்த இந்தச் சம்பவம். ஆனா அந்த ப்ரேக்குக்கு BRAKE தான் ஸ்பெல்லிங்கா அல்லது BREAK தான் ஸ்பெல்லிங்கான்னு எனக்குத் தெரியல. ரெண்டுக்கும் வெவ்வேறு அர்த்தம் இருக்கு. இந்த ப்ரேக்கக் கொடுத்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகிக்குதான் இது தெரியும். அது என்னென்னனு புரிஞ்சிக்கக்கூடிய சக்தியை அவள் எனக்குக் கொடுக்கலை. 

இது என்னுடைய குரலே இல்லை. யாரோ சதி செய்திருக்கிறார்கள் என இந்தக் காணொலிக்கு ஹெச்.ராஜா மறுப்பு தெரிவித்திருக்கிறாரே?

திரைப்பட உலகத்தை 1981லிருந்து அண்டிப்பிழைப்பவன் என்ற முறையிலும், `டப்பிங்' கலைகளை நுணுக்கமாக அறிந்தவன் என்ற முறையிலும், திரைக்கதையின் route ஐயே டப்பிங்கில் மாற்றிப் பேச வைத்த இயக்குநர் என்ற முறையிலும், டப்பிங் வசனங்களை மிகவும் பொருத்தமாக எழுதக்கூடிய டப்பிங் எழுத்தாளர்களை உள்ளடக்கிய எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 8 /10 வருடங்கள் தலைவனாக இருந்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன் ராஜா அவர்கள் சொன்னது யோசித்துப்பார்க்க வேண்டிய விஷயம்தான். அந்தக் காணொலியில் கேட்டது டப்பிங் குரலாகவும் இருக்கலாம்.''

அடுத்த கட்டுரைக்கு