Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘‘நான் முதலமைச்சரா,  நீங்கள் முதலமைச்சரா?’’

பு
துச்சேரியில் அறிவிக்கப்படாத துணை முதலமைச்சராக வலம்வருபவர், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி. கவர்னர் கிரண் பேடியுடனான மோதலில், மற்ற அமைச்சர்கள் அடக்கி வாசிக்க, இவர் மட்டும் சகட்டுமேனிக்கு ஆளுநரை வறுத்தெடுப்பார். ஆனால், சமீபகாலமாக ‘மைண்ட் வாய்ஸ்’ என நினைத்துக்கொண்டு கந்தசாமி சத்தமாகப் பேசிய சில விஷயங்களால் முதலமைச்சர் நாராயணசாமி நொந்து போயிருக்கிறார். சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கந்தசாமி, ‘‘அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளமே போட முடியாத நிலையில் அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது” என்றார். அரசு ஊழியர்கள் பதற, ‘‘அப்படியெல்லாம் இல்லை. அரசு ஊழியர்களுக்கு எப்போதும் போல தடையின்றி சம்பளம் வழங்கப்படும்’’ என்று பதறியடித்துக்கொண்டு மறுநாள் பேட்டி கொடுத்தார் முதல்வர் நாராயணசாமி.

இதேபோல, கிரண் பேடியைக் கிண்டல் செய்து, ‘‘புதுச்சேரியில் இரட்டை ஆட்சி என்பதற்கே வாய்ப்பில்லை. அப்படி நடக்க புதுச்சேரி ஒன்றும் தமிழ்நாடு இல்லை’’ என்று காரசாரமாகப் பேசினார் முதல்வர் நாராயணசாமி. ஆனால், ‘‘புதுச்சேரியில் பல அதிகாரிகள் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது” என்றார் கந்தசாமி.

நொந்து போன நாராயணசாமி, ‘‘நான் முதலமைச்சரா, நீங்கள் முதலமைச்சரா? எதிர்க்கட்சிங்க பேச வேண்டியதையெல்லாம் நீங்க பேசறீங்க. உங்களை வைத்துக்கொண்டு மீதி நாள்களை எப்படி ஓட்டப் போறேன்னு தெரியலை’’ என்று அமைச்சர் கந்தசாமியை அழைத்து டோஸ் விட்டாராம்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

மாஸ் காட்டிய மார்ட்டின்!

தி
.மு.க புள்ளிகளோடு நெருக்கம் காட்டினார் என்பதற்காக ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட லாட்டரி மார்ட்டின்,  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளார். மார்ட்டினின் மூத்த மகன் சார்லஸின் திருமணம், டிசம்பர் 1-ம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது. சென்னையில் வசிக்கும் ஆந்திரத் தொழிலதிபர் கமலக்கண்ணனின் மகள் சிந்துதான் மணப்பெண். திருமண வரவேற்பு 16-ம் தேதி கோவையில் நடந்தது. 4 கோடி ரூபாய் செலவில் திருமணத்துக்கு செட் போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோரோடு வந்தார். மு.க.அழகிரி தன் மனைவி காந்தியோடு வந்திருந்தார். செல்வியும் வந்திருந்தார். ஸ்டாலின் குடும்பமும், அழகிரி குடும்பமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. மார்ட்டின் வீட்டு விசேஷத்துக்கு கருணாநிதி குடும்பம் திரண்டு வந்தது கோவையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘‘மார்ட்டின்மீது உள்ள அன்பின் காரணமாகவே அவர்கள் வருகை தந்தார்கள்’’ என்கிறார்கள், மார்ட்டினின் நண்பர்கள்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

கவர்னருடன் போட்டோவுக்கு கட்டணம் ரூ.500

ட்டமளிப்பு விழாவில் கவர்னருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறது.

டிசம்பர் 6-ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வந்து, 752 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அவரிடம் பட்டம் பெற்ற அனைவரையும் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படங்களைப் பெறுவதற்கு 500 ரூபாயை பல்கலைக்கழகம் வசூலித்தது. புகைப்படம் தேவையில்லை என்று சொன்னவர்களிடம்கூட கட்டாயமாக வசூல் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பட்டமளிப்பு விழாவுக்காக மாணவர்களிடம் ஏற்கெனவே வசூல் செய்யப்பட்ட நிலையில், கவர்னருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்காக தனிக்கட்டணம் வசூலிக்கப்படுவதைச் சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கண்டித்துள்ளனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஆட்சிக்கு ஆபத்து?

தி
ருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளிக் குகைக்கு எதிர்ப்புறமுள்ள சுற்றுப்பிராகாரத்தின் மேற்கூரை டிசம்பர் 14-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில், பேச்சியம்மாள் என்ற பெண் உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தனர். இந்த மேற்கூரை உரிய பராமரிப்பு இல்லாமல், மிகமோசமான நிலையில் இருந்தது. இதுபற்றிப் புகார் அனுப்பி மூன்று ஆண்டுகளாகியும் நடவடிக்கையே இல்லை. எதிரிகளை வீழ்த்த முக்கிய அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள் இங்கு சத்ரு சம்ஹார பூஜையை ரகசியமாகச் செய்வது வழக்கம். அப்படிப்பட்ட தலத்தில் நடந்த இக்கட்டட விபத்தாலும், இதனால் தங்கத்தேர் உலா தடைப்பட்டதாலும் ‘ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம்’ என அர்ச்சகர்கள், ஆன்மிகவாதிகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

- பி.ஆண்டனிராஜ், ஜெ.முருகன், இ.கார்த்திகேயன், எம்.புண்ணியமூர்த்தி 
படங்கள்: தி.விஜய், எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்