Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

வெங்கடேசன், பொன்னேரி.

கேரளாவில் சூரிய மின்தகடு ஊழல் தொடர்பாக சரிதா நாயர் எழுதிய கடிதத்தின் விவரங்களை வெளியிடவோ, விவாதிக்கவோ இரு மாதங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே?


இனிமேல் வெளியிடவோ, விவாதிக்கவோ என்ன இருக்கிறது. சரிதா நாயரின் கடிதம் வெளியாகி கேரளா மட்டுமல்ல, இந்தியாவே நாறியது. கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி தன்னை பலாத்காரம் செய்தார், ரமேஷ் சென்னிதாலா பலாத்காரம் செய்தார், மாநில உள்துறை அமைச்சரின் உதவியாளர் பலாத்காரம் செய்தார், கேரள நிதி அமைச்சரின் மகன் பலாத்காரம் செய்தார்... என்று பெரும்பட்டியலாக இருந்தது சரிதா நாயரின் கடிதம். சரிதா சிறையில் இருக்கும்போது அது வெளியானது. நீதிமன்றம் வந்த அவர், ‘‘ஆமாம். அது நான் எழுதிய கடிதம்தான்’’ என்றார். ‘அரசியல் சதி’ என்று அவர்கள் சொன்னார்களே தவிர... வேறு எதையும் சொல்ல முடியவில்லை. திடீரென சரிதா நாயரின் ஆபாசப் படம் வெளியானது. அதன் பின்னணியில் போலீஸ் அதிகாரி ஒருவரே இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஆட்சி நிர்வாகமும், அரசியலும் எவ்வளவு ஆபாசமாக மாறிவிட்டன என்பதற்கு உதாரணம் இந்த விவகாரம். அவ்வளவும் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, தடை போட்டுள்ளது நீதிமன்றம். புரையோடிப் போன ஊழலையும் ஒழுங்கீனத்தையும் தடுக்க நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறது என்பதைத்தான் இனி கவனிக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

எந்தப் பிரச்னையிலும் தன் சொந்தக் கருத்தைச் சொல்வதில்லை; அறிமுகம் உள்ளவர்களைப் பார்த்துக்கூட சிரிக்கத் தயங்குவது; கட்சிப் பொறுப்பாளர்களை உட்கார வைத்து யோசனை எதையும் கேட்காதது; மாஜி மந்திரிகளுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் யாரெல்லாம் எதிர் கோஷ்டியோ, அவர்களைத் தன்னுடைய எதிர் கோஷ்டியாகவே நினைப்பது - இப்படி மு.க.ஸ்டாலினின் மைனஸ் பாயின்ட்களை 2011-ல் கழுகாரே பட்டியலிட்டார். 2017-ல் செயல் தலைவரான பிறகு மு.க.ஸ்டாலினிடம் மாற்றம் இருக்கிறதா?

அப்போது அப்படி ஸ்டாலின் செயல்பட்டதற்குக் காரணம், கருணாநிதி ஆக்டிவான தலைவராக இருந்தார் என்பதுதான். அதனால் ஸ்டாலின் அடக்கி வாசித்திருக்கலாம். இப்போது அவர் செயல்பட்டாக வேண்டிய தலைவராக ஆகிவிட்டார்; மாறித்தான் ஆக வேண்டும். சொந்தக் கருத்துகளைச் சொல்கிறார். அறிவாலயத்துக்கு தன்னைச் சந்திக்க வரும் அனைவரையும் சந்திக்கிறார். இயக்கப் பொறுப்பாளர்களின் பிரச்னைகளை இரு தரப்பையும் உட்கார வைத்துப் பேசுகிறார். ஒரு கோஷ்டியினருக்கு வேண்டியவராக அவரைச்  சுட்டிக்காட்டும்  நிலைமை இப்போது இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ரசிகர்களை மீண்டும் ரஜினி சந்திக்கவிருப்பது அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞையா?


‘சமிக்ஞையா’ என்று கேட்பதும், ‘ஆமாம்’ என்று சொல்வதும்... சலித்துப்போய்விட்டது. இனி, அவர் வரும்வரை சும்மா இருப்பதே உத்தமம்!

கழுகார் பதில்கள்!

காந்தி லெனின், திருச்சி.

‘குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது’ என்று மோடி குற்றம்சாட்டினாரே?


‘குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது... என்னைக் கொல்ல சதி செய்கிறது... இதற்குக் காங்கிரஸ் கட்சியும் உடந்தை’ என்பது போன்ற பேச்சுகள் ஒரு பிரதமருக்கு அழகல்ல. ஹெச்.ராஜாக்கள் பேசுவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.

சொ.ஆகாஷ், ரோஸ்மியாபுரம்.

‘தேர்தலில் ஆளும்கட்சி பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறுவது சகஜம்தான்’ என்கிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?


பணம் கொடுப்பதை மறுக்கவில்லை என்பதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாகவே, ‘ஆளும்கட்சி பணம் கொடுக்கும் என்பது தி.மு.க-வுக்கும் பொருந்தும், அ.தி.மு.க-வுக்கும் பொருந்தும்’ என்று அவர் ஒப்புக்கொள்வதையும் பாராட்டத்தான் வேண்டும்.

பொன்விழி, அன்னூர்.

கமல் எங்கே... சத்தத்தையே காணோமே?

ஆர்.கே. நகரில் தேர்தல் நடப்பதே அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லையே!

கழுகார் பதில்கள்!

டி.சிவபாலன், திருவான்மியூர்.

ஜெயலலிதாவின் வாரிசு மற்றும் மகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் கதைகள் எப்போது முற்றுப்பெறும்?


சில கதைகளுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. ‘எம்.ஜி.ஆரின் வாட்ச் இன்னமும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது’ என்பதுபோல... இம்மாதிரியான கதைகள் ஓடிக்கொண்டேதான் இருக்கும்.

எஸ்.கே.வால், த.முருங்கப்பட்டி.


உண்மையிலேயே தேர்தல் கமிஷன் நேர்மையாகத் தேர்தலை நடத்துகிறதா?


நேர்மையாக அவர்களை நடத்தவிட்டால், நடத்துவார்கள். ஆனால், அப்படி விடமாட்டார்கள்.

இன்னொன்று, ‘தேர்தல் கமிஷன்... தேர்தல் கமிஷன்’ என்கிறோமே... அவர்கள் யாரும் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் இந்த அரசாங்கத்தின் ஊழியர்கள்தாம். தேர்தல் காலத்தில் மட்டும் இவர்கள் தேர்தல் கமிஷன் ஊழியர்களாகச் செயல்படுவார்கள். தேர்தல் முடிந்ததும் இவர்கள் மீண்டும் அரசு ஊழியர்களாகி விடுவார்கள். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஆளும்கட்சியைப் பகைத்துக்கொள்ள முடியும்? தேர்தல் கமிஷனால் செயல்பட முடியாமல் போவதற்கு இதுதான் காரணம்.

தாமரை நிலவன், கீழ்கட்டளை.

‘‘ஆர்.கே. நகர் தேர்தலை இந்திய துணைக் கண்டமே உற்றுநோக்குகிறது’’ என்கிறாரே முதல்வர்?


இவ்வளவு கேவலமாக ஒரு தேர்தலைப் பார்த்ததில்லை என்பதால் இருக்கலாமோ?!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


‘கொள்கைப் பிடிப்பு’ என்றால் என்ன?

எந்தச் சூழ்நிலையிலும் கொள்கையை விடாமல் பிடித்துக்கொள்வதுதான் கொள்கைப் பிடிப்பு.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.


ஜெயலலிதா நினைவு நாளன்று அதிக சோகத்தைக் கடைப்பிடித்தது யாரெல்லாம்?

அப்படி யாரும் இருந்ததாகத் தெரியவில்லை!

படங்கள்: தி.விஜய், கே.ஜெரோம்

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

கரு.பழனியப்பன்,  இயக்குநர்

? தெர்மாகோல் மிதக்க விடுபவர்களும், ‘சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்’ படித்தவர்களும் நிறைந்திருக்கும் சட்டசபைக்குள் அறிஞர்கள் நுழையும் காலம் அருகிக்கொண்டே வருகிறது. இந்தச் சூழலில், பல்துறை அறிஞர் பெருமக்கள் பங்குபெற மேல்சபை அமைப்பது அவசியம் இல்லையா?

! மேல் சபை அமைக்கலாம். அங்கும் இதுபோன்ற ‘அறிஞர்களை’ நியமித்தால் என்ன செய்வீர்கள்? வெண்ணிற ஆடை நிர்மலாவை நியமிக்க முடியவில்லை என்பதற்காக, மேல்சபையைக் கலைத்த இடம் இது. சட்டசபைக்காவது, எப்படியாவது தேர்தலில் வென்று வரவேண்டும். மேல்சபைக்கு யாரையும் நியமித்துவிடும் ஆபத்து இருக்கிறது.

இதே சட்டசபையில், பட்டறிவும் அனுபவ அறிவும் கொண்ட பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதாவே வழங்கவில்லை. ‘நமக்குக் கீழே இப்படிப்பட்ட ஆட்கள் இருந்தால் போதும்’ என்று அவரே நினைத்தார். ‘அரசியல் என்பது பணக்காரர்களின் விளையாட்டு’ என்று அறிஞர்கள் பலரும் ஒதுங்கிவிட்டார்கள். இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். அனைத்துக் கட்சிகளும் கொஞ்சமாவது கல்வி அறிவும் அனுபவ அறிவும் இருப்பவர்களுக்கே பதவிகள் தரவேண்டும்.

கழுகார் பதில்கள்!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002  kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism