Published:Updated:

தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”
பிரீமியம் ஸ்டோரி
தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

Published:Updated:
தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”
பிரீமியம் ஸ்டோரி
தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

“ஒரு வருடமாக எத்தனையோ நெருக்கடிகளை எங்கள் குடும்பம் சந்தித்தபோதுகூட, நாங்கள் அந்த வீடியோவை வெளியிடவில்லை. குறிப்பாக, என் அத்தை சசிகலாமீது கொலைப்பழி சுமத்தப்பட்ட போதுகூட, அதை வெளியிட நினைத்ததில்லை. ‘தன்மீதான பழியைத் துடைப்பதைவிட ஜெயலலிதா அம்மாவின் கௌரவம்தான் முக்கியம்’ என்று சசிகலா அத்தை நினைத்தார்கள். ஆனால், இப்போது அந்த வீடியோ வெளியே வந்துள்ளது. பொதுநோக்கத்துக்காக வெளியாகவில்லை. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா அம்மா அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகளைப் பாருங்கள். பல லட்சம் மக்கள் தெய்வமாக நினைக்கும் அம்மாவின் கெளரவத்தையும் கண்ணியத்தையும் குலைப்பதாக உள்ளது. இதை வெற்றிவேல் எப்படி உணராமல் போனார்? அதனால்தான், எனது கோபத்தை வெளிப்படுத்தினேன்” என்று கொதிக்கிறார் கிருஷ்ணப்ரியா.

ஜெயலலிதா சிகிச்சைபெறும் காட்சிகள் கொண்ட வீடியோவை, தினகரனின் வலதுகரமான வெற்றிவேல் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார். ‘இது தினகரனின் வேலைதான்’ என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தபோது, சசிகலா குடும்பத்திலிருந்தே மீடியா முன்னால் வந்து கொந்தளித்தார் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா. ‘இந்த வீடியோவை எப்படி வெளியிடலாம்?’ என்று அமைச்சர்கள் கொந்தளிப்பதைவிட, கிருஷ்ணப்ரியாவின் கர்ஜனை அதிகமாக இருந்தது.

‘அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி’ என்ற அடைமொழியுடன் ஜூனியர் விகடனில் கிருஷ்ணப்ரியா பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தோம். ‘இதோ கிருஷ்ணப்ரியா வந்து விட்டார்’ என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது அவரது இந்தத் திடீர் பாய்ச்சல். கிருஷ்ணப்ரியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.

தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

‘‘அந்த வீடியோ அப்போலோவில் தான்  எடுக்கப்பட்டதா?”

‘‘ஆமாம். அது அப்போலோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். அந்த வீடியோவை சசிகலா அத்தைதான் எடுத்தார்கள். ஜெயலலிதா அம்மாவுக்கு ட்ரெக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதனால், திரும்பிப் பார்க்க முடியாத நிலையில் இருந்தார். அதனால், அவருக்குப் பின்புறம் இருக்கிற கருவிகள், இடங்களை அம்மாவுக்குக் காட்டுவதற்காக என் அத்தை அந்த வீடியோவை எடுத்தார். அந்த வீடியோவை எங்களிடம் கூட கொடுக்காமல், போயஸ் கார்டனில் இருந்த தன் அறையில்தான் பத்திரமாக வைத்திருந்தார். அதைத்தான் இப்போது வெளியிட்டுள்ளார்கள். அம்மா பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட அந்த வீடியோவை வெளியிடுவது குற்றம்தானே.”

‘‘அந்த வீடியோ வெற்றிவேல் கைக்கு எப்படிப் போனது?’’

‘‘தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்த பிறகு, ‘தேவைப்பட்டால் அந்த வீடியோவை அவர்களிடம் காட்டுங்கள்’ என்று சொல்லி, சசிகலா அத்தைதான் எங்களிடம் கொடுத்தார். அதுவும், பரோலில் வந்திருந்தபோதுதான் தந்தார். அந்த வீடியோவை காப்பி எடுத்து, விவேக் வசம் ஒன்றும், தினகரன் வசம் ஒன்றும் கொடுத்திருந்தோம். அதைத்தான் தினகரன், வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிட வைத்துள்ளார். ஒரிஜினல் வீடியோ இன்னும் நீளமாக இருக்கும். அம்மாவும் அத்தையும் பேசிக்கொள்ளும் காட்சிகளெல்லாம் இருக்கும். அதை ‘கட்’ செய்துவிட்டு, சில விநாடிக் காட்சிகளை மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியிடப்பட்டது சசிகலா அத்தைக்கே தெரியாது.”

‘‘சசிகலாவின் ஒப்புதலைப் பெற்று இந்த வீடியோவை தினகரன் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?”

‘‘தன்மீது கொலைப்பழி வந்தபோதுகூட வெளியிட விரும்பாத ஒரு வீடியோவை, தினகரனுக்காக வெளியிட சசிகலா அத்தை ஒப்புக்கொண்டிருப்பாரா? அவர் பொதுச் செயலாளரானபோது, பல எதிர்ப்புகள் வந்தன. அவர் நினைத்திருந்தால், அப்போதே வெளியிட்டிருக்கலாம். ஆனால், செய்யவில்லை. இன்று ஒரே ஒரு தொகுதியில் ஜெயிப்பதற்காக... அதுவும் கட்சியும் சின்னமும் எங்கள் வசம் இல்லாத நிலையில்... இந்த வீடியோவை வெளியிட எப்படி அவர் சம்மதம் தெரிவித்திருப்பார்கள்?”

‘‘சசிகலாவை தினகரன் அடிக்கடி சந்திக்கிறார். எனவே, சசிகலா ஆலோசனைப்படிதானே தினகரனின் அரசியல் இருக்கும்?”

“குடும்பரீதியாக எந்தக் கருத்துமோதலும் இருவருக்கும் இடையே இல்லை. கட்சிரீதியாக என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. அதில், நானும் தலையிட விரும்பவில்லை!”

‘‘வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதை ஆதரித்து, திவாகரனின் மகன் ஜெயானந்த் கருத்துச் சொல்லியிருக்கிறாரே?”

“அது, அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுதொடர்பாக அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். எங்கள் மனவலியை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். சசிகலா அத்தை எதற்காக இந்த வீடியோவை வெளியிடவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம். ஜெயானந்த், ‘வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது’ என்று சொன்னபோதே, அதை சசிகலா அத்தை கண்டித்தார். எங்களிடம் அதைச் சொல்லவும் செய்தார். ‘அந்த வீடியோவை பொதுமக்களிடம் காட்டுவதற்காக எடுக்கவில்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதைமீறி வெளியிடுவதும், கருத்துச் சொல்வதும் தார்மீகரீதியாகத் தவறுதான்!”

‘‘இந்த விவாதங்களைப் பார்க்கும்போது, உங்கள் குடும்பத்துக்குள்ளே கருத்துமோதல்கள் அதிகரித்துவிட்டதுபோலத் தெரிகிறதே?”

‘‘நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. எல்லா குடும்பங்களிலும் கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், மீடியா வெளிச்சத்தில் எங்கள் குடும்பம் இருப்பதால், அதைப் பூதாகரமாக ஆக்கிவிடுகிறார்கள்.”

“போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித் துறை ஆய்வு மேற்கொண்டதே இந்த வீடியோவை எடுக்கத்தானா?”

“இல்லை. அங்கே இருந்த வீடியோ எதையும் அவர்கள் எடுக்கவில்லை. அப்போது இந்த வீடியோவும் அங்கே இல்லை. அந்த ரெய்டு நடத்தப்பட்டதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”

‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் நிற்பதை உங்கள் குடும்பத்தினரே ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்களே?”

“எங்கள் குடும்பத்தினர் என்ன நினைத்தார்கள் என்பதை என்னால் சொல்லமுடியாது.”

‘‘நீங்கள் அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டீர்களா?”

“அரசியலுக்குச் சிலர் ஆர்வப்பட்டு வருவார்கள்; அதைத் தவறு என்று சொல்லமுடியாது. எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றால், ‘இல்லை’. ஆனால், அரசியலுக்கு வருவேனா என்றால், கண்டிப்பாக வருவேன். எப்படி வருவேன், எந்த வழியில் வருவேன் என்பதை அடுத்து ஆண்டுவரை பொறுத்திருந்து பாருங்கள். அதற்கான முன்னேற்பாடுகளை நான் செய்யாமல் இல்லை.”

‘‘இளவரசி குடும்பத்தின் கையில்தான் மொத்தச் சொத்துகளும் இருப்பதாகச் சொல்கிறார்களே?”

“அம்மா, அத்தை ஆகியோரிடம் இருந்த சொத்துகள், தொழில்களை நாங்கள்தான் பார்க்கமுடியும். அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.”

‘‘ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்டவையெல்லாம் உங்கள் குடும்பம் வசமே இருப்பதை மற்ற உறவுகள் விரும்பவில்லையாமே?”

‘‘யார் அதை வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்கள்?”

‘‘உங்கள் தம்பி விவேக் வசமுள்ள சொத்துகளின் மதிப்பை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்காகச் சொல்கிறார்களே?”

‘‘இத்தனை கோடிக்கு அதிபதி என்பதை ஊடகங்கள் சொல்லித்தான் என் தம்பிக்கே தெரியும். அவர் ஒரு நிறுவனத்தின் ஊழியராக மட்டுமே இருக்கிறார். ‘ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது’ என்று வந்த செய்தியைப் பார்த்து வருமானவரித் துறையினரே எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்கள். அது ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டது.”

“மத்திய பி.ஜே.பி அரசுதான் உங்கள் குடும்பத்துக்குத் தொடர்ச்சியாக நெருக்கடிகள் கொடுக்கிறதா?”

‘‘எனக்கு அது பற்றி ஆதாரத்துடன் தெரியவந்தால் கருத்துகளைச் சொல்வேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினகரனைத் திட்டும் இளவரசி மகள்! - “வீடியோவை வெளியிட்டது தவறு!”

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசில் உள்ளவர்கள் பலரும் உங்கள் குடும்பத்தினர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அவர்கள் குற்றம்சாட்டவில்லை. ஒரு சிலரைப் பற்றித்தான் குற்றம்சாட்டுகிறார்கள். ‘நம்பிக்கையாக இருப்பார்’ என்று நினைத்துதான் எடப்பாடி பழனிசாமியைக்கூட உருவாக்கினார் என் அத்தை. அவரும் என் அத்தை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கித்தான் பதவியேற்றார். அவரே இப்போது குற்றச்சாட்டு சொல்வதைப் பார்க்கும்போது எங்களுக்குச் சிரிப்புதான் வருகிறது. பதிலுக்குப் பதில் குற்றச்சாட்டு சொல்வதை நாங்கள் விரும்பில்லை. ‘துரோகம்’ என்ற ஒரே வார்த்தைதான், எல்லாவற்றுக்குமான பதில். அதிலும், சசிகலா அத்தையைப் பற்றி யாரும் தப்பாகப் பேசவில்லை. தினகரனைப் பற்றித்தான் தப்பாகச் சொல்கிறார்கள். அது ஏன் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.”

‘‘தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமிக்காமல் இருந்திருந்தால், இந்தக் கட்சி உங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இப்போதும் இருந்திருக்குமோ?”

“ஆமாம்! இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அதனால்கூட, இவ்வளவு எதிர்ப்பு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

“கிருஷ்ணப்ரியாவின் அரசியல் என்ட்ரி எது மாதிரியாக இருக்கும்?”

“எனது சுய அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.”

“அ.தி.மு.க என்ற பேனரை நீங்களும் அரசியலில் பயன்படுத்துவீர்களா?”

“நாளை என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்லமுடியாது.”

‘‘இத்தனை காலம் திரைமறைவில் இருந்த நீங்கள் இப்போது பொதுவாழ்க்கைக்கு வரக் காரணம் என்ன?’’

‘‘எனக்கு 10 வயது இருக்கும்போது நாங்கள் குடும்பத்தோடு போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தோம். என் அம்மாவும் அத்தையும் அரசியல் விளையாட்டுகளில் சிக்கி பட்ட அவஸ்தைகளையும் அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தோம். அந்த நிலை என் குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதால், குறிப்பிட்ட காலம் வரை அமைதியாக இருந்தேன். என் குழந்தைகளுக்கு வாழ்வின் அடிப்படையை உணரவைத்தேன். இப்போது, அவர்கள் புரிந்துகொள்ளும் வயதை எட்டிவிட்டார்கள். நானும் எனது கடமையை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன். ‘நாடா, குடும்பமா?’ என்று முதலில் யோசித்தபோது, குடும்பம் பெரிதாகப்பட்டது. ‘என் குடும்பமா, நாடா?’ என்று இப்போது பார்க்கும்போது, நாடுதான் எனக்குப் பெரிதாகப்படுகிறது. எனவே, அரசியலுக்கு வருகிறேன். காரணம், தமிழகத்தில் இப்போது நடைபெற்றுவரும் ஆட்சியின் அலங்கோலம். அது, என்னையும் அரசியல் பக்கம் இழுத்துவந்துவிட்டது.’’

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: தே.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism