Election bannerElection banner
Published:Updated:

``பர்சனல் லைஃபை பொறுத்தவரைக்கும் நான் அப்பாவி'' - சி.ஆர்.சரஸ்வதி

``பர்சனல் லைஃபை பொறுத்தவரைக்கும் நான் அப்பாவி'' - சி.ஆர்.சரஸ்வதி
``பர்சனல் லைஃபை பொறுத்தவரைக்கும் நான் அப்பாவி'' - சி.ஆர்.சரஸ்வதி

``என் வளர்ப்புப் பிராணிகள்தான் என் குழந்தைகள். அவங்களோடு அன்பு செலுத்துறது, அரசியல் பணினு ஓடிகிட்டு இருக்கேன். இனியும் திருமணம் பத்தி யோசிக்கப்போறதில்லை''

டி.டி.வி. தினகரனின் `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' செய்தித் தொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதியைச் சமீப காலமாக ஊடக விவாதங்களில் பார்க்க முடிவதில்லை. `என்னாச்சு?' என்ற கேள்வியோடு பேசினேன். தன் பர்சனல் ஆரம்பித்து ஏன் விவாதங்களில் கலந்துகொள்வதில்லை என்பது வரை பேசினார் சி.ஆர்.சரஸ்வதி.

``ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து நான் எம்.ஜி.ஆரின் தீவர ரசிகை. அவர்மேல பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுச்சு. அவர் காலமான 1987-ம் ஆண்டு தருணத்துலதான், நான் `எங்க சின்ன ராசா' படத்தின் மூலமா சினிமாவுல அறிமுகமானேன். அப்பவே அரசியல்ல ஈடுபடணும்னு முடிவெடுத்தேன். ஆனா, சினிமாவுல ஓரளவுக்கு பிரபலமாகிட்டால், பிற்காலத்துல எளிதா மக்கள்கிட்ட அபிமானம் பெற முடியும்னு நினைச்சேன். முதல் படத்துலயே, என்னைவிட வயசுல மூத்தவரான பாக்கியராஜ் சாருக்கு அம்மாவா நடிச்சேன். முதல்ல நடிக்கத் தயங்கினாலும், என்னை ஒப்புக்கவெச்சுட்டாங்க. பிறகு நிறைய தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள்ல நடிச்சேன். அரசியல்ல ஈடுபடணும் என்பதற்காகவே சினிமா வாய்ப்புகளைக் குறைச்சுகிட்டேன். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவர் வழிவந்த ஜெயலலிதா அம்மா மட்டும்தான் எனக்குப் பிடிச்ச அரசியல் தலைவர். அதனால, 1999-ம் ஆண்டு அவர் தலைமையிலான அன்றைய அ.தி.மு.க-வில் உறுப்பினரா சேர்ந்தேன்" என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான அன்பைப் பகிர்கிறார்.

``1989-ம் ஆண்டு ஜெயலலிதா அம்மா ஒரு கட்சி நிகழ்ச்சியில் பங்குபெற செங்கல்பட்டு வழியாகப் போனாங்க. அப்போ அங்க ஷூட்டிங்ல இருந்த நான், அவரைச் சந்திக்க நேர்ந்தது. அம்மாவைக் கையெடுத்துக் குடும்பிட்டேன். அதுதான் அவரை நான் சந்திச்ச முதல் சந்திப்பு. அடுத்து 1999-ம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க-வில் உறுப்பினரா சேரப் போனேன். அப்போ, `உங்களை இதுக்கு முன்னாடி ஒருமுறை நேரில் பார்த்திருக்கேன்'னு சொல்லிச் சற்று நேரம் யோசிச்சவங்க, `செங்கல்பட்டு விநாயகர் கோயில்கிட்ட பார்த்திருக்கேன். நீங்க எனக்கு வணக்கம் சொல்லி வாழ்த்தினீங்க'னு பத்து வருஷத்துக்கு முன்பு நடந்த நிகழ்வை மறக்காம ஞாபகப்படுத்தினாங்க. எனக்கு இன்ப அதிர்ச்சி. என் மேடைப் பேச்சுகளை அவங்க ரொம்பவே ரசிப்பாங்க. என் மேல் எப்போதும் அவருக்குத் தனிப்பட்ட அன்பு இருந்துச்சு. 

2004-ம் ஆண்டு நான் டெங்குக் காய்சலால் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டேன். ரத்த வாந்தி எடுத்து, கோமா நிலைக்குப் போகாத குறையா இக்கட்டான நிலைக்குச் சென்றேன். அதைக் கேள்விபட்ட ஜெயலலிதா அம்மா, உடனே அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிகிட்ட எனக்கு உயர்தர சிகிச்சை கொடுக்கச் சொன்னாங்க. சில மூத்த அமைச்சர்களை அனுப்பி என் உடல்நலம் பற்றி விசாரிக்கச் சொன்னாங்க. என் மருத்துவச் செலவையும் அவங்களே பார்த்துக்கிட்டாங்க. முழுமையா குணமானதும் என்னை நேரில் அழைச்சு ஆறுதலா பேசினாங்க. என்னோட அம்மா எனக்கு முதல் உயிர் கொடுத்து பெற்றெடுத்தாங்கன்னா, ஜெயலலிதா அம்மா எனக்கு இரண்டாவது உயிர் கொடுத்து உயிர் பிழைக்கவெச்சாங்க. 2004, 2011, 2016-ம் ஆண்டுனு மூன்று முறை சமூகநல வாரிய தலைவரா என்னை ஜெயலலிதா அம்மா நியமிச்சாங்க. அமைச்சருக்கு இணையான அந்தப் பொறுப்புல இருந்ததால, அரசின் அனுமதியில்லாம சினிமாவுல நடிக்க முடியாது. அதனால கடைசியா `பழனி' படத்துக்குப் பிறகு நடிப்பை நிறுத்திட்டேன். கட்சியில மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்தாங்க. கட்சியில முதல் பெண் செய்தித் தொடர்பாளரா என்னை நியமிச்சாங்க. கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தாங்க. அவங்களோட இழப்பை என்னால வார்த்தைகளில் விவரிக்க முடியாது" என்கிறார், சி.ஆர்.சரஸ்வதி.

தன் பர்சனல் வாழ்க்கை குறித்துப் பேசுகையில், ``அரசியல்ல இருக்கிறதால நான் சார்ந்த கட்சிக்கு என் உயிர் போனாலும்கூட விசுவாசமா இருப்பேன். என் கட்சிக்காக, எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வதும் தவிர்க்க முடியாததுதான். ஆனா, எதிர்க்கட்சியினரை தரக்குறைவா இதுவரை நான் பேசியதில்லை. கண்ணியத்துடன்தான் விமர்சனம் செய்திருக்கிறேன். யார் மீதும் தனிப்பட்ட தாக்குதலை முன்னெடுக்க மாட்டேன். அதைத்தான் ஜெயலலிதா அம்மாவும் எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. எந்த மேடையா இருந்தாலும், விவாத நிகழ்ச்சியா இருந்தாலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்துல சிறப்பாப் பேசிடுவேன். கைதட்டல் வாங்கிடுவேன். ஆனா, பர்சனல் லைஃப்ல நான் ரொம்ப அப்பாவி. மத்தவங்க தனிப்பட்ட விஷயத்துல தலையிடுற பழக்கம் எனக்கில்லை. கட்சி வேலை, வீடுனு அமைதியா வாழ்ந்துகிட்டு இருக்கேன். அதுவே எனக்குப் போதும். நிறைய படிப்பேன். நியூஸ் பேப்பர், பத்திரிகைகள், செய்தி சேனல்கள்னு எல்லா வகையிலும் சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிஞ்சுப்பேன். என் வீட்டுல நிறைய நாய்க்குட்டிகள் மற்றும் பூனைக் குட்டிகளை வளர்க்கிறேன். தவிர என் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற தெரு நாய்களுக்கும் தினமும் உணவளிப்பதை வழக்கமான பணியா செய்றேன். ப்ளூ கிராஸ்லயும் உறுப்பினரா இருக்கேன். என் பெற்றோர் இறந்துட்டாங்க. என் சகோதரர் குடும்பம்தான் எனக்குத் துணையா இருக்காங்க. எனக்குனு ஒரு திருமண வாழ்க்கை பத்தி இதுவரை எந்த எண்ணமும் வரலை. எல்லாத்துக்கும் மனசுதானே காரணம். என் விருப்பப்படியே குடும்பத்தினரும் விட்டுட்டாங்க. தனியா போராடி வாழணும்ங்கிறது என் விருப்பம். என் வளர்ப்புப் பிராணிகள்தான் என் குழந்தைகள். அவங்களோடு அன்பு செலுத்துறது, அரசியல் பணினு ஓடிக்கிட்டு இருக்கேன். இனியும் திருமணம் பத்தி யோசிக்கப்போறதில்லை'' என்றவர் தான் ஏன் ஊடக விவாதங்களில் சமீப காலமாகப் பங்கேற்பதில்லை என்பது பற்றியும் சொன்னார்.

``இன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு எங்க மீது அதிக காழ்ப்புஉணர்ச்சியோடு இருக்காங்க. அதனால பிரபல செய்தித் தொலைக்காட்சிகள்ல கலந்துகொண்டு எங்க கட்சி தரப்பு விளக்கங்களைச் சொல்ல விடாமல் தடுக்கிறாங்க. இந்தச் சர்வாதிகாரப் போக்கு விரைவில் மாறும். பிறகு வழக்கம்போல என்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ல பார்க்கலாம்" என்கிறார், சி.ஆர்.சரஸ்வதி.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு