Published:Updated:

`மக்கள் கொடுக்கும் உறுப்புகள் வெளிநாட்டவர்களுக்குதான் பொருத்தப்படுது’ - கொந்தளிக்கும் கனிமொழி

`மக்கள் கொடுக்கும் உறுப்புகள் வெளிநாட்டவர்களுக்குதான் பொருத்தப்படுது’ - கொந்தளிக்கும் கனிமொழி
`மக்கள் கொடுக்கும் உறுப்புகள் வெளிநாட்டவர்களுக்குதான் பொருத்தப்படுது’ - கொந்தளிக்கும் கனிமொழி

``லஞ்சம் கொடுக்கும் வெளிநாட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது” என்று எம்.பி கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, ``அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்கிறாரே அவருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளியவர்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால், லஞ்சம் கொடுக்கும் வெளிநாட்டவர்களுக்கு நம் தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. நல்ல மனதோடு நம் மக்கள் தானம் செய்யும் உறுப்புகள் அனைத்தும் லஞ்சம் கொடுப்பவர்களுக்குப் பொருத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 95 வெளிநாட்டவர்களுக்கு இப்படி உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் 95 தமிழக மக்களுக்கு அந்தச் சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

குட்கா விவகாரத்தில் இவரைக் கைது செய்ய வேண்டும் என்று நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஊழலின் ராஜாவான எடப்பாடி பழனிசாமி, சிறப்பாக ஊழல்கள் புரிந்து வரும் விஜயபாஸ்கரை பாராட்டும் விதமாக அவருக்கு கட்சியில் அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடியின் லட்சணம் இப்போது புரிகிறதா? கோடிக்கணக்கான அனைத்து டெண்டர்களையும் உங்கள் சொந்தக்காரர்களுக்கே கொடுக்கிறீர்களே என்று தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க கேள்வி எழுப்பியது. அதற்கு `ஏன் என் சொந்தக்காரர்கள் தொழில் செய்யக் கூடாதா, செய்தால் என்ன தப்பு?’ என்று ஒரு முதலமைச்சர் வெட்கமே இல்லாமல் எழுந்து பதில் சொல்கிறார். இப்படி நல்லது எது கெட்டது என்று தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர்தான் எடப்பாடி பழனிசாமி.

திண்டிவனம் மக்களாகிய நீங்கள் பல ஆண்டுகளாகத் திண்டிவனம் - திருச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதை செய்து கொடுக்க இந்த அரசுக்கு துப்பு இல்லை. ஆனால், வேண்டாம் வேண்டாம் என்று கதறும் மக்களை சித்ரவதை செய்து, அச்சுறுத்தி, கைது செய்து அவர்களின் நிலத்தை எட்டு வழிச் சாலைக்காகப் பறிக்கிறார்கள். அப்படியென்றால் அந்த எட்டு வழிச்சாலை திட்டத்தில் எடப்பாடிக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் எந்தத் திட்டமாக இருந்தாலும் குறிப்பிட்ட 5 கம்பெனிகளுக்கு மட்டும்தான் அத்தனை டெண்டரும் செல்கின்றது. தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்தாரே அவர் யாரென்று தெரியுமா உங்களுக்கு? அவரின் சொந்த ஊரில் ஒட்டுமொத்த ஏலக்காய் வியாபாரமும் அவர் கையில்தான் இருக்கிறது. மற்றவர்கள் யாரும் வியாபாரம் செய்ய முடியாது. அதுமட்டுமல்ல அவர் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் திடீரென்று ரியல் எஸ்டேட் அதிபர்களாக மாறிவிட்டார்கள். அடுத்தது அமைச்சர் வேலுமணி. மத்திய அரசு கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல். இப்படி முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழல் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கான ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அ.தி.மு.க ஆட்சி. ஊழல் குற்றச்சாட்டில் இதுவரை இவர்கள் யாரையாவது கைது செய்திருக்கிறார்களா அல்லது பதவி விலகச் சொல்லி இருக்கிறார்களா ?

ஏனென்றால் அந்த ஊழல் பணம் அனைவருக்கும் சென்றது. தளபதியும் தி.மு.க-வும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றால் மக்களுக்கு இந்த அளவுக்குக்கூட நியாயம் கிடைத்திருக்காது. எதாவது திட்டத்தைக் கொண்டு வந்தால்தானே ஊழல் செய்ய முடியும் ? ஆனால், இந்த ஆட்சியில் மக்களுக்கான ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? விவசாயிகள், பெண்களுக்காக எந்தத் திட்டமாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதா? மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. ஆனால், திருமணத்துக்கு பெட்ரோல் கேனை பரிசாகக் கொடுக்கும் அளவுக்கு அதன் விலையை உயர்த்தியதுதான் பிரதமர் மோடியின் சாதனை.

சாமானிய மக்களின் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகளை ஏற்படுத்தினார் நம் தலைவர் கலைஞர். ஆனால், மத்திய பா.ஜ.க-வின் பினாமி அரசான அ.தி.மு.க அரசு நீட் தேர்வை அனுமதித்துவிட்டு வாயை மூடிக் கொண்டு அமைதியாக நிற்கிறது. இதன்மூலம் திராவிட இயக்கங்களுக்கு முன்பான நிலைக்கு தமிழகத்தைக் கொண்டுசெல்ல நினைக்கிறார்கள். இப்படி அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு எதிரான ஓர் அரசாக, மத்திய பாசிச ஆட்சியை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்க முடியாத அரசாகத்தான் தற்போதைய அ.தி.மு.க ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சியை தூக்கி எறிய நாம் இன்று சூளுரை எடுப்போம்” என்றார்.