`ஊழலின் தந்தையே தி.மு.க-தான்!' - ஆர்ப்பாட்டம் குறித்து தளவாய் சுந்தரம் கிண்டல்

`ஊழலின் தந்தையே தி.மு.க-தான்!' - ஆர்ப்பாட்டம் குறித்து தளவாய் சுந்தரம் கிண்டல்
தமிழக முதல்வர் மீதோ, மற்றவர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில், ஊழல் செய்ததாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஊழலின் தந்தையாக விளங்குவது தி.மு.க என தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக முதல்வர் மீதோ, மற்றவர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில், ஊழல் செய்ததாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஊழலின் தந்தையாக விளங்குவது தி.மு.க. ஒரு தடவை ஊழலுக்காகவும், மற்றொரு முறை தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. நாகர்கோவிலில் போராட்டம் நடத்தும் தி.மு.க-வின் சுரேஷ்ராஜன் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது. ஒரு மாதத்துக்கு உள்ளாக, வங்கி மூலம் ரூ.16 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டது தி.மு.க என்பதை மறந்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நெடுஞ்சாலையில் முக்கிய டெண்டர்கள், ஒரு நபர் டெண்டராக தி.மு.க ஆட்சியில் ராமலிங்கத்துக்குக் கொடுக்கப்பட்டது. அதுபோலத்தான் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் புதிதாகக் கண்டுபிடித்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அ.தி.மு.க ஆட்சி நேர்மையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" என்றார்.