2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 - டாப் 10 மனிதர்கள்

2017 - டாப் 10 மனிதர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2017 - டாப் 10 மனிதர்கள்

2017 - டாப் 10 மனிதர்கள்

உயிர்மெய் MBBS

அனிதா - 17  (மாணவி)

2017 - டாப் 10 மனிதர்கள்

சகலருக்கும் சமமான கல்வி என்பதே சாத்தியப்படாத நாடு. திடீரென நுழைந்தது மருத்துவக் கல்விக்கான

2017 - டாப் 10 மனிதர்கள்

`நீட்’ தேர்வு. ‘`கோச்சிங் கிளாஸ் வைத்துக்கொள்ளக்கூட வாய்ப்பற்ற நாங்களெல்லாம் என்ன செய்வோம்?’’ என்று எதிர்க்குரல் கொடுத்து எழுந்து நின்றார் ப்ளஸ் டூ மாணவி அரியலூர் அனிதா. மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளியின் மகள். வறுமையோடு போராடி வாழ்வை வெல்லும் முனைப்பில் இருந்தவர். டாக்டராகும் கனவுகளை எப்போதும் சுமந்த வண்ணத்துப்பூச்சி. மருத்துவ இலக்கை எட்டிப்பிடிக்க ப்ளஸ் டூ தேர்வில் எடுத்தது 1176 மதிப்பெண்கள். கையெட்டும் தூரத்தில் மருத்துவக்கனவு, `நீட்’ தேர்வால் கண்ணீர்க்கதையாய்க் கலைந்துபோனது. நீதிமன்றப் படியேறி, கல்வி உரிமைக்கான போராட்டத்தை தானே முன்னின்று தொடங்கினார்.  நீதிமன்றமும் `நீட்’ ஆதரவு என்றே நீட்டி முழுக்க, நிர்கதியாய் நின்றார் அனிதா. சக மாணவர்களின் உரிமைக்காகவும், தனிமனுஷியாக நின்று போராடிய அனிதா, அந்தத் தீர்ப்புக்குப் பிறகு மனதளவில் வீழ்ந்துபோனார். இறுதியில் தன் உயிரையே ஆயுதமாக்கி `நீட்’டை நீக்கத் துணிந்தது, தமிழகத்தை அதிரவைத்தது!

கலக நாயகன்

கமல்ஹாசன் - 63  (நடிகர்)

2017 - டாப் 10 மனிதர்கள்

விஸ்வரூபம் பார்ட்-2 எப்போது எனக் காத்திருந்தபோது, அரசியல் அவதாரம் எடுத்தார் ஆழ்வார்பேட்டை நாயகன். ட்வீட் தாளம் தட்டி ஆழம் பார்த்தவர், தடாலடியாக  ஆட்டத்தைத் தொடங்கி அரசியல் கட்சிகளைப் பதறவைத்தார். `பிக் பாஸ்’ பஞ்சாயத்துகளோடு பூடகமாகவும் நேரடியாகவும் அவர் பேசிய சனி, ஞாயிறு விமர்சனங்கள் அனைவரையும் கவர்ந்தது. எதிரிக்கட்சிகளின் தரக்குறைவான தாக்குதல்களைப் பகடியோடு எதிர்கொண்டு திருப்பிக்கொடுக்கவும் தயங்கவேயில்லை. அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக, செயல்படாத உதவாக்கரை அரசுக்கு எதிராக கமல் கொடுத்த ஒவ்வோர் அறிக்கையும் அணுகுண்டாக வெடித்தது. எதிர்க்கட்சித் தலைமைகளே பேசத் தயங்குகிற பிரச்னைகளையும்கூட அடித்து ஆடி அமர்க்களப்படுத்தினார். ஊடகப் பேட்டிகளில் மட்டுமல்ல... ஊருக்குள் வந்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி நின்றது எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது!

நேர்மை அதிகாரி

உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)

2017 - டாப் 10 மனிதர்கள்

மக்களே அக்கறை கொண்ட அரிய வகை அதிகாரி. ``டென்டர் நேரத்தில் இவர் இருந்தால், எதுவுமே செய்ய முடியாது. இவரை மாற்றிவிடுங்கள்’’ என ஊழல் அரசியல்வாதிகளை அலறவைத்த துணிச்சல்காரர். பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக, பழைய மோசடிகளைத் தோண்டி எடுத்து முறைகேடுகளைக் களைந்து `பளிச்’ என மாற்றிய மிஸ்டர் க்ளீன். இவரை மாற்றப்போகிறார்கள் என்கிற வதந்திக்கே நெட்டிசன்கள் இணைந்து ஹேஷ்டேக் உருவாக்கி ஆதரவுக் குரல்கொடுத்ததே உதயச்சந்திரனின் நேர்மை சொல்லும் நிகழ்காலப்பதிவு. பத்தாம்வகுப்பு மற்றும் ப்ளஸ்டூ தேர்வில் குதிரைப்பந்தய ரேங்க் முறையை ஒழித்தது, பள்ளிப்பாடத் திட்டங்களில் நவீன மாற்றங்களைப் புகுத்தியது, நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி மையங்கள் அறிவிப்பு, பல ஆண்டுகளுக்குப் பிறகு நூலகங்களுக்குப் புதிதாக நூல்களை வாங்கியது என உதயச்சந்திரன் எடுத்ததெல்லாம் அவசிய மாற்றங்கள்!

வெல்லும் அறம்

அறப்போர் இயக்கம்

(சமூக செயற்பாட்டாளர்கள்)

2017 - டாப் 10 மனிதர்கள்
2017 - டாப் 10 மனிதர்கள்

`நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகம்’தான் ஆயிரக்கணக்கான அறப்போர் இயக்கத்து இளைஞர்களின் ஒற்றை லட்சியம். உள்ளூர் அரசியல்வாதிகளின் ஊழல்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதை வேள்வியாகச் செய்கிறது இந்த இளைஞர் படை.  ராம மோகனராவின் மோசடியில் தொடங்கி குட்கா ஊழல்கள் வரை அறப்போர் இயக்கம் வெளிச்சமிட்டுக் காட்டிய இருள் பக்கங்கள் ஏராளம். ஊழல் ஒழிப்பு மட்டுமன்று, நீர்வளப் பாதுகாப்பு, குடிமக்கள் உரிமைகள், மக்களுக்கான அரசியல் விழிப்பு உணர்வு, லோக் ஆயுக்தாவுக்கான போராட்டங்கள் என ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசனும் அவரோடு பயணிக்கும் இளைஞர்களும் தன்னலமின்றி ஏராளமாகப் பங்காற்றுகிறார்கள். வேலை பார்க்கிற படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து, பக்குவமான அரசியலை முன்னெடுக்கும் அறப்போர் இயக்கம் மாற்று அரசியல் பாதையில் நல்லொளி!

வணக்கம் வாத்தியார்

மாரிமுத்து - 51 (வட்டாட்சியர்) 

2017 - டாப் 10 மனிதர்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பு கீற்றுக்கொட்டகையில் 60 பேரோடு தொடங்கியது `விருதுநகர் வாத்தியார்’ மாரிமுத்துவின் வார இறுதி ட்யூஷன். இன்று அவருக்கு முன்னால் 3,000 பேர் அமர்ந்திருக்கிறார்கள். கோவை, திருச்சி, மதுரை என எல்லா திசைகளிலிருந்தும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகிற இளைஞர்கள் ஏராளமாகக் கூடுகிறார்கள். ஆடு மேய்க்கிற சிறுவனிலிருந்து தற்கொலை முயற்சிகளில் தோற்றவர்கள் வரை எண்ணற்றோரின் வாழ்வு மாரிமுத்துவின் வகுப்பறைகளில் மாற்றம் கண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தனிமனிதரால் பலனடைந்திருக்கிறார்கள். வெவ்வேறு மாவட்டங்களில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். யாரிடமும் இதுவரை ஒரு ரூபாய்கூடக் கட்டணமாகப் பெற்றுது இல்லை.  மாரிமுத்து, விருதுநகரில் இப்போது கலால்துறை தாசில்தார். கூமாப்பட்டி என்கிற குக்கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். போட்டித்தேர்வுகள் எழுதி அரசுப் பணிகளுக்குள் நுழைந்தவர். ``ஒருவேளை உணவுக்கே நான்பட்ட துன்பங்களை இனி யாரும் வாழ்வில் படக் கூடாது’’ என்பதை எப்போதும் எல்லோரிடமும் சொல்லும் மாரிமுத்துவைத் தொடர்ந்து இயக்குவது இந்த மனிதம்தான்!

ஆதித்தாய்

வம்பாளம்மாள் - 68 (விவசாயி)

2017 - டாப் 10 மனிதர்கள்

வம்பாளம்மா பெயரால்தான் அந்த ஊரே இன்று வம்பாளமந்தொட்டி என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வகுடி விதை ரகங்களை இயற்கைமுறையில் மீட்டுருவாக்கம் செய்து பாதுகாப்பதையே தன் வாழ்நாள் நோக்கமாகக்கொண்டு வாழும் பெண் விவசாயி. தனியொரு மனுஷியாகக் காடுகளிலும் நிலங்களிலும் தேடி அலைந்து நூறு பாரம்பர்ய விதைகளைச் சேகரித்திருக்கிறார். கிராம மக்களையும் இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்பியிருக்கிறார். இயற்கை விவசாயத்துடன் கால்நடைகளின் உதவியோடு தன் வீட்டிற்குப் பின்னால் ஒரு காட்டையே உருவாக்கிவைத்திருக்கிறார். ``இயற்கையை நம்புங்க, என்றைக்குமே நம்மைக் கைவிடாது’’ என்று எல்லோருக்கும் கற்றுத்தருகிறார் வம்பாளம்மாள். ஆதித்தாய் அப்படியே இருக்கிறார் அம்மாவின் புன்னகையில்!

முருகாற்றுப்படை

திருமுருகன் காந்தி - 43

(சமூக செயற்பாட்டாளர்)

2017 - டாப் 10 மனிதர்கள்

ஈழப்போராட்டத்திற்காகத் தொடங்கப்பட்டது `மே பதினேழு இயக்கம்.’ இன்று தமிழ்நாட்டின் அத்தனை பிரச்னைகளுக்காகவும் களம் காண்கிற அமைப்பாக மாற்றம் கண்டிருக்கிறது. உணர்வுள்ள இளைஞர்களை அடுத்த கட்ட அரசியலுக்கு அழைத்து வந்தவர் திருமுருகன் காந்தி. ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கி நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு, ரேஷன் கடைப் பிரச்னை, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக என சமூகப்பிரச்னைகள் எதுவாயினும் மக்கள் பக்கம் ஒலிக்கிறது திருமுருகனின் குரல். ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் மெழுகுவத்தி ஏந்தியதற்காக அரசு குண்டர் சட்டத்தை ஏவி, புழல் சிறையில் தள்ளியது. எதிர்த்துப்போராடி வெற்றிபெற்று விடுதலையாகியிருக்கும் திருமுருகன் காந்தி, இன்றைய அரசியல் வானில் அரிய நட்சத்திரம்!

சங்கத் தமிழன்

சு.வெங்கடேசன் - 46

(எழுத்தாளர்)

2017 - டாப் 10 மனிதர்கள்

அசலான தமிழர் வரலாற்றைத் தொடர்ந்து ஆவணப்படுத்தும் அன்பின் எழுத்தாளர் சு.வெங்கடேசன். தமிழ் மண்ணின் தொன்மங்களைத் தன் வசீகர எழுத்துகளால் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் கனவுக்கலைஞன். ‘காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி வென்றவரின் தற்போதைய முகவரி ‘வேள்பாரி.’ தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் துல்லியமாக 60 வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக விகடனில் எழுதிவருகிறார். ஒரு வரலாற்று நாவலாசிரியரின் பணி என்பது கதை எழுதுவது மட்டுமன்றி, அவன் நம்புகிற வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படும்போதெல்லாம் அதற்கு எதிராக வெகுண்டெழுந்து குரல் கொடுப்பதும்தான். கீழடியில் அகழ்வாராய்ச்சி கைவிடப்படுகிறது எனத் தெரிந்ததும் அதனை எதிர்த்துக் குரலுயர்த்திய முதன்மையானவர்களில் சு. வெங்கடேசன் முக்கியமானவர். கவிஞர், பேச்சாளர், கட்டுரையாளர், நாவலாசிரியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எனக் கலையுலகில் தன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் சு.வெங்கடேசன், தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத பொக்கிஷம்!

கடலப்பன்

சுப்பிரமணியம் - 53 (மீனவர்)

2017 - டாப் 10 மனிதர்கள்

எளிய மனிதர்களின் அன்பிற்கும் அறத்திற்கும் தேச எல்லைகள் கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறார் மீனவர் சுப்பிரமணியம். நடுக்கடலில் தத்தளித்த ஏழு பேரை உயிருடன் மீட்டுக் கொண்டுவந்த மனிதாபிமானி. நாகப்பட்டினம் கடலில் 30 நாட்டிகல் மைல் தொலைவில் தன் மகனோடு மீன்பிடிக்கச் சென்றவரின் பார்வையில் பட்டது அந்த பயங்கரம். படகுகள் உடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஐந்து மீனவர்களை, தன் உயிரையே பணயம் வைத்துக் காப்பாற்றியவர், அதே பகுதியில் இலங்கை மீனவர்கள் இருவரையும் மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார். கடற்படையே கைவிடுகிற காலத்தில், தனி ஒருவனாய் கடலில் தத்தளித்த சக உயிர்களை மீட்கத்துணிந்த சுப்பிரமணியம்... பேரன்பின் ஒளிச்சுடர்!

நீலம் கருப்பு நெருப்பு

கௌசல்யா சங்கர் - 20

 (சமூக செயற்பாட்டாளர்)

2017 - டாப் 10 மனிதர்கள்

கண்ணெதிரே காதல் கணவனை வெட்டிச்சாய்த்தனர். இவர் உயிரைப் பறிக்க இன்றும் துரத்துகிறது அச்சுறுத்தல். ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான ஆவணமாகத் தன்னையே மாற்றிக்கொண்டு களத்தில் நிற்கிறார் கௌசல்யா. இனியோர் ஆணவக்கொலை நடக்கக்கூடாது என்று ஊர்ஊராகச் சென்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். சங்கர் கொலைக்கான நீதியைப் பெற தனியொருத்தியாக நீதிமன்றத்தில் போராடி, 6 பேருக்கு தூக்குத்தண்டனைப் பெற்றுத்தந்திருக்கிறார். `சாதி ஆணவக் கொலைகளுக்குத் தனிச்சட்டம் கொண்டுவரப்படுவதே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும்’ என்கிற முழக்கத்தோடு சாதியற்ற சமூகக் கனவை நோக்கிப் பயணிக்கிறார் இந்த ஃபீனிக்ஸ் பறவை. கனவு நனவாகட்டும்!