2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 - டாப் 10 இளைஞர்கள்

2017 - டாப் 10 இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2017 - டாப் 10 இளைஞர்கள்

2017 - டாப் 10 இளைஞர்கள்

2017 - டாப் 10 இளைஞர்கள்

ஆல்ரவுண்ட் ஆட்டக்காரர்

வாஷிங்டன் சுந்தர் -18

(கிரிக்கெட் வீரர்}

2017 - டாப் 10 இளைஞர்கள்

`இந்தியாவின் அடுத்த விராட் கோலி’ என வாஷிங்டன் சுந்தரைப் புகழ்கிறது  கிரிக்கெட் உலகம். பேட்டிங், பெளலிங் இரண்டிலுமே கலக்கும் இளம் புயலுக்கு வயது 18. ஐ.பி.எல் வரலாற்றில் மிக இளம் வயதில் `மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது வென்ற சாதனை இளைஞன். 2017 ஐ.பி.எல் போட்டிகளில் புனே அணியை ஃபைனல் வரைக்கும் அழைத்துச்சென்றது இந்த ஒல்லிகில்லியின் மந்திரப் பந்துவீச்சு. தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே வெளுத்துவாங்க, இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பு வந்தது. வாஷிங்டனின் அப்பா சுந்தர், தமிழ்நாட்டின் முன்னாள் ரஞ்சி பிளேயர். அவர் கிரிக்கெட் விளையாடவும் படிக்கவும் உதவியவர் வாஷிங்டன் என்னும் ராணுவ வீரர். அவர் இறந்த சில நாள்களிலேயே சுந்தருக்கு மகன் பிறக்க, வாஷிங்டன் சுந்தர் எனப் பெயர் வைத்தாராம். வர்லாம் வர்லாம் வா வாஷிங்டா!

அருவிக் குருவி

அதிதி பாலன் - 26 (நடிகை)

2017 - டாப் 10 இளைஞர்கள்

தூக்கி வாரிக் கொண்டை போட்டதற்கே ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். மூச்சுவிடாமல் பேசிய வசனத்திற்கு விசிலடிக்காத விரல்கள் இல்லை. இறுதிக்காட்சி வீடியோவில் கொட்டித்தீர்த்த அழுகைக்குக் கண்ணீரைக் காணிக்கையாக்கினர். அமைதியாய் ஓடி, பரவசமாகப் பாய்ந்து, மொத்தமாய் அன்பில் வீழ்ந்து அருவியாய் வாழ்ந்த அதிதி பாலனை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். சட்டம் படித்துவிட்டு வழக்காடப்போனவரை ``வாடி ராசாத்தி’’ எனத் தமிழ்சினிமா வாரிக்கொள்ள `அருவி’ அவருக்காக விரித்தது ரத்தினக்கம்பளம். பாசக்கார மகளாக, எய்ட்ஸ் நோயாளியாக, தனிமையின் துயரில் மூழ்கி வெடிக்கும் பெண்ணாக, துப்பாக்கியோடு அத்தனை பேரையும் நடுநடுங்கச் செய்யும் யட்சியாக ஒரே படத்தில் அதிதி பாலன் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார். இசை, நாடகம், பயணம், சினிமா என நிஜத்திலும் இந்த அதிதி... அருவியே!

நையாண்டி பிரதர்ஸ்

நக்கலைட்ஸ் குழு

(யூ-ட்யூப் இளைஞர்கள்)

2017 - டாப் 10 இளைஞர்கள்

அரசியல் நையாண்டியின் அடுத்த லெவல் நக்கலைட்ஸ் யூ-ட்யூப் சேனல். கேலியும் கிண்டலும்தான் என்றாலும் அதன் அடியாழத்தில் அவசியமான அரசியல் மருந்தையும் குழைத்துக்கொடுக்கிற கோவைக்கார குறும்பு டீம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் தொடங்கிய அதன் வைரல் வரவு, `நாச்சியார்’ வரை வந்திருக்கிறது. ஆதிக்கசாதித் திமிரோடு திரிகிறவர்களைக் கலாய்த்து எடுத்த `ஆண்டபரம்பரை’ குறும்படம் வயிறுவலிக்கச்செய்யும் அரசியல் வெடி. இயக்குநர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் சுஜித், நடிகர்கள் பிரசன்னா, அருண்குமார், செல்லா, விக்னேஷ், தனம் அம்மா என ஒட்டுமொத்த டீமும் கேடி, கில்லாடிகள். ஹிட்ஸ், வியூஸ் பின்னால் மற்ற சேனல்கள் ஓடிக்கொண்டிருக்க, நக்கலைட்ஸ் ஓடுவது மக்கள் பிரச்னைகளுக்குப் பின்னால்தான். மக்கள் அரசியலை மக்களிடமே மகிழ்வோடு பேசும் `நக்கலைட்ஸ்’ செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு!

இளம் தோழர்

வளர்மதி - 24

(சமூக செயற்பாட்டாளர்)

2017 - டாப் 10 இளைஞர்கள்

கல்லூரிக்காலத்திலேயே கலகக்காரி. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மாணவர் படையுடன் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகக் கொடிபிடித்தவர். படிப்பு முடிந்ததும் வேலை, வருமானம் எனத் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் போராட்டக்களத்தை விரிவாக்கிக்கொண்டார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கை விநியோகித்தார் என்று குண்டர் சட்டத்தைப் பிரயோகித்துச் சிறைக்கு அனுப்பியது அரசு. சிறையிலடைத்தால் முடங்கிவிடுவார் என அதிகாரம் எதிர்பார்த்திருக்க, 56 நாள்கள் சிறையிலிருந்துவிட்டுத் திரும்பிவந்தவர், நேராகச் சென்றது அதே போராட்டக்களத்துக்கு. அடுத்தடுத்த போராட்டங்கள், மக்களுக்கான முழக்கங்கள் என வளர்மதி தன்னை இன்னும் கூர்தீட்டிக்கொண்டே இருக்கிறார், அதிகாரத்தின் கோரப்பற்களை உடைத்தெறிய!

மெர்சல் கவி

விவேக் - 32 (பாடலாசிரியர்)

2017 - டாப் 10 இளைஞர்கள்

``பூ அவிழும் பொழுதில்’’ என மென்மையாகத்தான் ஆரம்பித்தார் விவேக். ஆனால் இதோ இப்போது `எகிறு அல்லு சில்லு’ என மெர்சலாகத் தொடர்கிறது பாடல்பயணம்.சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு பாட்டுக்கட்டும் அபூர்வக்கவிஞன். `வா கடவுள் செய்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவருக்குத் திறந்தன திரைக்கதவுகள். `ஏய் சண்டக்காரா’, `அடியே அழகே’ எனக் காதலில் காத்திரம் காட்டுபவர், ‘தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிர் ஏறும்’ என டெம்ப்போ ஏற்றுகிறார். `வாடி ராசாத்தி’யில் கவனிக்கப்பட்டவர், இப்போது ஏ.ஆர். ரஹ்மான் படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ஆயிரம் பாக்கள் மலரட்டும்!

தங்கத் தமிழச்சி

பவானிதேவி - 24

(வாள்வீச்சு வீராங்கனை)

2017 - டாப் 10 இளைஞர்கள்

மிடில் கிளாஸ் வடசென்னை சகோதரி. வீட்டில் ஐந்து பிள்ளைகளில் ஒருவர். பள்ளிக்காலத்தில் மற்ற விளையாட்டுகளில் இடமில்லாமல், அரைமனதாக வாள் பிடித்தவர். இன்று சர்வதேச அரங்கில் வாள்வீச்சில் நம்மைத் தலைநிமிரச் செய்கிறார். இதற்காக பவானிதேவி இரவு பகல் பாராமல் உழைத்தது ஒன்பது ஆண்டுகள். 14 வயதில் ஆசிய சாம்பியன், 15 வயதில் காமன்வெல்த் சாம்பியன் என ஆரம்பமே அமர்க்களம். சமீபத்தில் நடந்த சார்லே ஃபென்சிங் (Charlotte Fencing) போட்டியில் கிடைத்த தங்கப்பதக்கம், சர்வதேச அரங்கிலும் சாம்பியன் ஆக்கியது. பவானியின் இப்போதைய இலக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ். தங்கத்தோடுதான் வருவேன் என ஐரோப்பாவில் ஆக்ரோஷமாகப் பயிற்சியில் இருக்கிறார். தட்டிவா தங்கம்!

குட்டி விஞ்ஞானி

ரிஃபாத் ஷாருக் - 17

(இளம் கண்டுபிடிப்பாளர்)

2017 - டாப் 10 இளைஞர்கள்

இன்னும் பள்ளிப்படிப்பே முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பி சாதனை படைத்திருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். பள்ளி சகாக்கள் விதவிதமான விளையாட்டுகளில் ஆர்வமாயிருக்க, ப்ளஸ் டூ வகுப்பு மாணவரான ரிஃபாத்துக்கு விண்வெளி ஆராய்ச்சியில்தான் நாட்டம். சின்னதாக செயற்கைக்கோள் ஒன்றைத் தானாகவே உருவாக்கினார். அதை ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்போடு சேர்ந்து நாசா நடத்திய போட்டிக்கு அனுப்ப, கலந்துகொண்ட 86,000 ஐடியாக்களில் 80 பேருடைய ஐடியாக்களுக்கு டிக் அடித்தனர் நாசா விஞ்ஞானிகள். அதில் ஒன்று ரிஃபாத்தின் ‘கலாம்-சாட்’ செயற்கைக்கோள். வருங்கால கலாமை சலாம் போட்டு வரவேற்கிறான் விகடன்!

இசைஞன்

சாம் சி.எஸ் - 35 (இசையமைப்பாளர்)

2017 - டாப் 10 இளைஞர்கள்

இசைக்காதலால் ஐ.டி வேலைக்கு முழுக்குப்போட்டுவிட்டு கோடம்பாக்கத்துக்குப் பஸ் பிடித்தத் தேனிக்காரர். விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் போட்டு, கீ போர்டு வாசித்து, புரோகிராமிங் செய்து என இருந்தவருக்கு, திரைக்கதவுகள் எளிதில் திறந்துவிடவில்லை. ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்தது `விக்ரம்-வேதா’ வாய்ப்பு. ஒவ்வொரு காட்சியையும் தன் புதுமையான இசையால் உயிரூட்டியிருந்தார் சாம். திரைப்படம் முடிந்த பின்னும் உணர முடிந்த, இதயம் அதிர்ந்த இசை. நான்கு பாடல்கள், ஆறு தீம் மியூசிக் என சாம் காட்டியது வெரைட்டி வெடி. இப்போது தெலுங்கிலும் இவரே மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர்!

மாற்றத்தின் வண்ணங்கள்

மஞ்சள் (நாடகக் குழு)

2017 - டாப் 10 இளைஞர்கள்

மனிதர் கழிவை மனிதரே அகற்றும் அவலத்துக்கு எதிராக விழுந்த சம்மட்டி அடி `மஞ்சள்’ நாடகம். `டிஜிட்டல் இந்தியாவிலும் ஏன் இந்த அவலம்?’ என்கிற கேள்வியை வலுவாக ஒலித்தது இந்த நாடகக்குழு. மலம் அள்ளும் மனிதர்களின் வேதனைகளை, அவர்களுடைய உரிமைகளை, அவர்களை இன்னமும் அந்தக் கேவலத்தில் மூழ்கடித்து வைத்திருக்கும் சாதியக் கட்டமைப்பு அரசியலை என ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது நாடகம். பாஷா சிங் எழுதிய ‘தவிர்க்கப்பட்டவள்’ நூலைத் தழுவி இந்த நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, காத்திரமான கதையை `கட்டியங்காரி’ நாடகக்குழு நிகழ்த்திக்காட்டியது. நாடகத்தைத் திறம்பட நடத்தி, பெருந்திரளான மக்களிடம் கொண்டுசேர்த்தது `நீலம்’ மற்றும் `ஜெய்பீம்’ அமைப்புகள். டிஜிட்டல் இந்தியாவே, திரும்பிப் பார் எங்கள் டாய்லெட் இந்தியாவை!

அபூர்வ நட்சத்திரம்

விதார்த் - 41 (நடிகர்)

2017 - டாப் 10 இளைஞர்கள்

புதுமுக இயக்குநர்கள், வித்தியாசக் கதைக்களங்கள், அபூர்வமான கதாபாத்திரங்கள் எனத் தேடித்தேடி நடித்த விதார்த், இந்த ஆண்டின் வித்தியாச நாயகன். க்யூட் திருடனாக `விழித்திரு’வில்  சிரிக்கவைத்தார். தந்தையைத் தேடி அலையும் பாசக்கார மகனாக `குரங்கு பொம்மை’யிலும், குற்ற உணர்வில் குமைந்து திரியும் கொலைகாரனாக `ஒரு கிடாயின் கருணைமனு’விலும் இவர் வெளிப்படுத்தியது உணர்வுகளின் வானவில். பேருந்து ஓட்டுநர் ஆவதையே பெரிய லட்சியமாகக்கொண்டிருந்தவருக்கு, கூத்துப்பட்டறையில் கிடைத்தது நடிப்பதற்கான ஞானம். 2010-ல் `மைனா’வில் கிடைத்தது முதல் வெற்றி. ஏழாண்டுகளில் எக்கச்சக்கமாக நடித்துக்குவிக்காமல், வெற்றிகளுக்குப் பின்னால் ஓடுகிறவராக இல்லாமல், எப்போதும் நல்ல நல்ல படைப்புகளைத் தேடிப் பிடித்து நடிக்கிற விதார்த்... தமிழ்சினிமாவின் அபூர்வமான எளிய நட்சத்திரம்!