2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 டாப் 25 பரபரா...

2017 டாப் 25 பரபரா...
பிரீமியம் ஸ்டோரி
News
2017 டாப் 25 பரபரா...

விகடன் டீம், ஓவியங்கள்: கண்ணா

2017 டாப் 25 பரபரா...
2017 டாப் 25 பரபரா...

அம்மா அம்மம்மா..அம்ம்ம்மம்மா!

அம்மாவின் மரணத்திற்குப் பிறகு `சின்னம்மா’வாக இருந்த சசிகலா, ‘தியாகத்தலைவி சின்ன அம்மா’வாகப் பதவி உயர்வு பெற்றார். ஒப்புக்குச் சப்பாணியாக ஓ.பி.எஸ். முதல்வர் பதவியில் இருக்க, சசிகலா சாம்ராஜ்யம் சலங்கை கட்டி ஆடியது. ஓவர் நைட்டில் சேலை முதல் கொண்டை வரை கம்ப்ளீட் சேஞ்ச் ஓவரில் ‘முழுசா அம்மாவாகவே மாறி நிற்கும் சின்னம்மாவைப் பார்’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள் ரணகள ர.ரக்கள். பொதுச்செயலாளராகப் பதிவியேற்றதும் சசிகலா பேசிய கன்னிப்பேச்சு, கலகல கண்ணிவெடி. ‘அக்கா, மதியச் சாப்பாட்டுக்கு மஷ்ரூம் பிரியாணி செய்யவா அக்கா?’ என்றெல்லாம் ராகம் போட்டுப் பேசிவிட்டு, வராத கண்ணீரை கர்ச்சீப்பால் துடைத்தது, ‘ரத்தம் ரத்தமா வாந்தியெடுத்தேன்க்கா’ ‘கரகாட்டக்காரன்’ மொமன்ட். ஒரே சாங்கில் முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைத்தபோது, பன்னீரால் நடந்தது பரபர ‘சம்பவம்.’ நாற்காலிக் கனவு பன்னீரால் கலைய, சின்னம்மாவுக்கு வந்ததே சினம். ‘எனக்கு முதலிலேயே தெரியும். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும்...’ என்று சொல்லும்போதே முகத்தில் வெடித்தது கடுப்பு. அடிமை எம்.எல்.ஏ-க்களை வைத்து ஆட்டம் காட்ட நினைத்தபோது, தெறிக்கவிடலாமா எனத் தீர்ப்பு வந்தது. ஜெயிலுக்குக் கிளம்புவதற்கு முன்னால் ஜெயலலிதா சமாதிக்கு வந்து, கைகளால் அறைந்து கதிகலங்க வைத்தார். ஜெயிலுக்குப் போனபின்னாலும் குறையவில்லை சின்னம்மா கெத்து. ‘அள்ளிக்கோ அள்ளிக்கோ அண்ணாச்சி கடையில் அள்ளிக்கோ’ என்று சுடிதார் போட்டு ஹேண்ட்பேக்கோடு ஷாப்பிங் சென்றதில் ஜெர்க் ஆனது ரெண்டு ஸ்டேட்டும்.

2017 டாப் 25 பரபரா...

சண்டைக்கோழி

பெரியார் தொடங்கி பெரியமேட்டு பாய் வரை எல்லோரையும் எடுத்தெறிந்து பேசினார் ஹெச்.ராஜா. ‘ஆமாங்கிறேன்’, ‘இல்லைங்கிறேன்’, ‘அதுக்குங்கிறேன்’, ‘இதுக்குங்கிறேன்’ என்றெல்லாம் அவர் கொடுத்த டெரர் பேட்டிகளை எல்லாம் ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ ஸ்டைல் என்டர்டெயின்மென்ட். ‘கமல்ஹாசனுக்கு முதுகெலும்பே இல்லை’ என்று எக்ஸ்ரே ராஜா ஆனார். ‘எலும்பு நிபுணர்’ பட்டத்தை இலவசமாகக் கமலிடம் வாங்கினாலும், அலும்பு குறையவே இல்லை. காத்துக்கிடந்தவருக்குக் கையில் கிடைத்தது ‘மெர்சல்’ விவகாரம். ஏற்கெனவே சாரணர் தேர்தலில் 52 வாக்குகளில் அவுட் ஆனவருக்கு ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டைக் கேட்டால் எரிச்சல் வருமா... வராதா? ``நெட்டில் ‘மெர்சல்’ பார்த்தேன்’’ என்று ராஜா பேச, நெட்டுக்குத்தாக நெட்டிசன்கள் எகிறிக் குத்தினார்கள். பிறகு ஜகா வாங்கி, சமாளிஃபிகேஷன்கள் தட்டிப் பம்மினார். விஜய்யின் வோட்டர் ஐடியை ட்விட்டரில் ஏத்தி, ‘பார்த்தீங்களா ஜோசப் விஜய்’ என்று சொல்லி, தனக்குத்தானே ஆன்லைன் ஆப்பு செருகிக்கொண்டார். ‘ தேர்தல் நேரத்தில் தேடி வந்து மோடி பார்த்தபோது, அவர் ஜோசப் விஜய்யாக இல்லாமல் முனுசாமி விஜய்யாகவா இருந்தார்?’ என்று விவரம் தெரிந்தவர்கள் கொஸ்டீன் கொக்கி போட, எக்குத்தப்பாய் முழித்தாலும் ராஜாவின் ஆட்டம் அடங்கவே இல்லை!

2017 டாப் 25 பரபரா...

மூச்சுமுட்ட முட்டுக்கொடுப்பேன்!

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா ஆதிக்கம் அ.தி.மு.க-வில் அதிகரித்தபோது, ‘தலைமை சரியில்லை, தக்காளிச்சட்னியில் உப்பில்லை’ என்ற ரீதியில் வெந்து புழுங்கினார் நாஞ்சில் சம்பத். மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருப்பதுபோல, இலவசமாக அம்மா தந்த இனோவா காரை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொண்டுபோய் நிறுத்தினார். ‘பதவி ஆசை இல்லாததால்தான் நிறுத்தினார்’ என்று பலபேர் நினைக்க, பிறகுதான் தெரிந்தது, பஞ்சர் பார்க்க நிறுத்தினார் என்று. எந்த சசிகலாவை எதிர்த்துக் குரல் எழுப்பினாரோ, அதே சசிகலாவை ஆதரித்து அடுத்த வாரமே அதிர்ச்சி கிளப்பினார். சசிகலா ஜெயிலுக்குப் போனதும், டி.டி.வி தினகரனுக்கு அடிப்பொடியானார். ‘திராவிடத் தலைவன் தினகரன்; தீரன், வீரன், சூரன்’ என்றெல்லாம் வார்த்தைக் கடலைகளை  வறுத்தெடுத்தார். அரை மணி நேர கேப்பில் அஞ்சாறு சேனல்களில் பேட்டிகள் கொடுத்தார். மன்னார்குடிக்காக மண்சோறு சாப்பிடவும் தயாராக இருந்தார். பால் காவடி முதல் பட்டர் காவடி வரை எடுக்கத் தயாரானார். நிஜமாகவே மன்னார்`குடி’ முழுகியது. ஆனாலும், நாஞ்சித்தின் டை அடித்த மீசையில் மண் ஒட்டவில்லை. இடையில் தமிழிசையைப் பற்றித் தாறுமாறாய்ப் பேச, கடுப்பான காவிக்கட்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று சம்பத்துக்கு சம்பளம் வாங்காமல் பி.ஆர்.ஓ வேலை பார்த்தார்கள். ஆண்டு முழுக்க சம்பத்தின் இனோவா சடன் பிரேக் போட்டு, சடாரென யு-டர்ன் அடித்தது இந்த ஆண்டின் கடுப்புச் சரித்திரம்!

2017 டாப் 25 பரபரா...

ஆங்கிரி பேர்டு! 

எடப்பாடி பழனிசாமியையோ அ.தி.மு.க அரசையோ யார் எதிர்த்தாலும் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி சப்போர்ட் பண்ணினார் தமிழிசை. ‘சட்டை அவரோடதுதான். மாப்பிள்ளை நாங்கதான்’ காமெடியை அச்சு அசல் நினைவுபடுத்தியது தமிழிசையின் தத்துப்பித்துகள். எதிர்ப்பவர்களின் பரிவாரங்கள் கூடிக்கொண்டே போக, ‘பசுபதி எட்றா வண்டியை’ என  என்று ‘நாட்டாமை’ வசனம் பேசி வண்டியைத் திருப்பினார் திருச்சிக்கு. ‘நீட்’டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டம் போட்டால், ‘நீட்’டை ஆதரித்து போட்டிக்கூட்டம் நடத்தினார். போட்டி என்பது சரிதான், ஆனால் ‘கூட்டம்’ என்றதுதான் தப்பு. திருச்சி பஸ் ஸ்டாண்டில் மணப்பாறை முறுக்கு விற்பவர்கள் அளவுக்குக்கூடக் கூட்டம் கூடவில்லை. ஆனாலும் கெத்து குறையாமல் அ.தி.மு.க-வுக்கு முட்டுக்கொடுத்தே வந்தார். ‘விஜய்யை வளைக்கப் பார்க்கிறது பா.ஜ.க’ என்று திருமா குருமா கிண்ட, ‘கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை வளைத்துப்போட்டது திருமாதான்’ என்று கோபக்குழம்பாய்க் கொதித்தார் தமிழிசை. அவர் போகும் இடங்களிலெல்லாம் சிறுத்தைகள் கறுப்புக்கொடி காட்ட, பா.ஜ.க.காரர்கள் ஆங்கிரி பேர்ட்ஸாக அடிதடி ரகளை. பா.ஜ.க-வுக்கு ஓட்டு விழுகிறதோ இல்லையோ, மீம்ஸ்களுக்கும் காமெடி வீடியோக்களுக்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளின!

2017 டாப் 25 பரபரா...

ப்ராப்ளம் ஸ்டார்!

சென்ற ஆண்டின் ‘பீப்’ நாயகன், இந்த ஆண்டிலும் எக்கச்சக்க என்டர்டெயின்மென்ட் தந்தார். வருஷத் தொடக்கத்திலேயே ஜல்லிக்கட்டுக்கு ‘வாய்ஸ்’ கொடுத்துப் பேட்டி தட்டினார். திடீரெனப் பொங்கியெழுந்த சிம்பு, ‘பெரிசா ஒண்ணும் போராட வேணாம். அவங்கவங்க வீட்டுல அஞ்சு நிமிஷம் மௌனவிரதம் இருந்தா போதும்’ என்று வித்தியாசமாகப் போராட்ட அறிவிப்பு செய்தார். ‘ஆஹா, இந்த மௌனவிரதம் அஞ்சு நிமிஷம்தானா? சிம்பு வருஷம் முழுக்க மௌனவிரதம் இருந்தா வம்பு இருக்காதே’ என்று தவித்துப்போனது தமிழகம். ‘படம் வரும்... ஆனா வராது’ ரேஞ்சில் இந்த வருடம் வந்தது ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.’ படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் உடுக்கை அடித்துக் கலாய்த்தார்கள். எல்லா படங்களிலும் ஹீரோயின்களின் உதட்டைக் கடித்து ஊறுகாய் போடும் சிம்பு, இந்தப் படத்தில் ‘பச்சக்’ பசை தடவியது ஒய்.ஜி.மகேந்திரன் உதட்டில். உவ்வ்வேக்! படத்தோல்விக்கு பிறகு ``சிம்பு சரியாவே நடிக்க வரலைங்க... அவர் வீட்டு பாத்ரூம்லதான் டப்பிங் பண்ணினோம்’’ என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் கதறிய கதறல், மரண பயத்தைக் காட்டிட்டான்டா பரமா மொமன்ட். மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை சனிப்பெயர்ச்சி பலன்களில் ட்ரெண்டிங் விட்டதுதான் பீப் சூப்!

2017 டாப் 25 பரபரா...

கட்சி தாண்டி உச்சம் தொடு!

காவி ஸ்டெதாஸ்கோப் மாட்டி, கண்டபடி திரிந்தார் கிருஷ்ணசாமி. ஏற்கெனவே பா.ஜ.க-வின் வாய்ஸாக ஹெச்.ராஜா, தமிழிசை, பொன்னார், இல.கணேசன் என்று ஆளாளுக்கு ஸ்டாண்ட் அப் காமெடி பண்ண, ஆதரவுக் கரம் நீட்டி ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடி அவதாரம் எடுத்தார் டாக்டர் கிருஷ். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, நீட் தேர்வு என்று மோடி அரசு கொண்டுவந்த அத்தனை நடவடிக்கைகளுக்கும் ரணகளமாய்ப் பாய்ந்து லைக்ஸ் போட்டார். அதன் உச்சம், நீட் தேர்வு நிலைப்பாடு. அனிதாவின் தற்கொலையால் தமிழகமே கண்ணீரில் தத்தளிக்க, எதிர்த்திசையில் கொடி பிடித்து எக்கச்சக்க வெறுப்பைச் சம்பாதித்தார். ‘கிருஷ்ணசாமியின் மகள் டாக்டரானதே கிடைத்த கேப்பில் கிடா வெட்டியதுதான்’ என்று எதிர்த்தரப்பு சரவெடி கொளுத்த, திகில் தீபாவளி கொண்டாடியது அரசியல் களம். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இதுவே கேள்வியாய் முன்வைக்கப்பட, போனை எடுத்து மகளிடம் பேசியவர் ‘இவ்ளோ மார்க்கா எடுத்திருக்கே?’ என்று ஆனந்தக்கண்ணீர் வடித்தது அழுகாச்சி சிரிப்பாச்சி எபிசோடு!

2017 டாப் 25 பரபரா...

நாங்க மொத்தம் மூணு பேரு! 

`அடேங்கப்பா அதிமுக’ அத்தியாயத்தில் புது என்ட்ரி இந்த மூவர் கூட்டணி. ஜெயலலிதா இறந்தபிறகு இரட்டை இலையில் ஆளுக்கொரு இலையைப் பிய்த்துக்கொண்டு அடித்துக்கொண்டதில் மூவருக்கும் மவுசு எகிறியது. சமாதியில் உட்கார்ந்து திடீர் திகில் தியானம் இருந்த பன்னீர் கோஷ்டி ஒருபக்கம், ‘கோடானுகோடி, நாம் குதிப்போம் விளையாடி...’ என்று ரிசார்ட் கும்மாளத்தில் இருந்த சின்னம்மா அணி மறுபுறம் என இரண்டு கும்பலும் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நிர்பந்தத்தில் தத்தளிக்க, லக்கி ப்ரைஸ் அள்ளியது ‘த்ரீ மென்’ டீம். ‘பன்னீரோ, சசிகலாவோ... மக்கள் வாக்கைப் பொறுத்துதான் முடிவெடுப்பேன்’ என்று சொந்தத் தொகுதியில் ஓட்டுப்பொட்டி வைத்தார் தமிமூன் அன்சாரி. விழுந்த வாக்குகள் எல்லாம் சசிகலாவை அன்லைக் செய்ய, சொல்லாமல் கொள்ளாமல் பொட்டியை மூடிப் புறப்பட்டார் அன்சாரி. ரிசார்ட் கொண்டாட்டத்திலேயே கும்மியடித்த கருணாஸ், இப்போதும் சின்னம்மா அணியின் செல்லப்பிள்ளைதான். இருவரும் மன்னார்குடிக்குப் பச்சைக்கொடி காட்ட, ஃபுட்போர்டிலேயே ஃபுல் டிராவல் செய்தார் தனியரசு!

2017 டாப் 25 பரபரா...

ரெஸ்ட் எடு... ரெய்டு விடு!

அனுதாப அலையை, அதிகார அலையாக மாற்ற அரசியல் கடலுக்குள் அவசரமாக இறங்கியபோதே ஆரம்பமானது தீபாவின் காமெடி மாரத்தான். ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ எனத் தனது பெயரிலேயே பேரவை தொடங்கினார் பேபிம்மா தீபா. `இளைய புரட்சித் தலைவி தீபாம்மா, இளைய புரட்சித் தலைவர் மாதவன்’ என உறுப்பினர்கள் கூவ, இருவரின் மனதிலும் `பாகுபலி-2’ ஓட ஆரம்பித்தது. வீக் எண்டில் மட்டும் அரசியல் வேலைகளைப் பார்த்துவிட்டு, மற்ற நாள்களில் `குட்டிம்மா ஊரில் இல்லை. கேட்டை ஆட்டாதீர்கள்’ என போர்டை மாட்டிவிட்டுக் கிளம்பினார்கள். ஊடகங்கள் எதைக் கேட்டாலும் ‘அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்’ எனக் குண்டக்க மண்டக்க கண் சிமிட்டியபடி குல்ஃபி கொடுத்தார் குட்டிமா. பேரவையில் உறுப்பினர்களாய் இருந்த பத்துப்பேரும் மூன்று குழுக்களாகப் பிய்த்துக்கொள்ள,  `எம்.ஜி.ஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் புதுக்கட்சி ஆரம்பித்து காமெடி கவுன்ட்டவுன் தொடங்கிவைத்தார் மாதவன். ‘தோட்டத்துக்கு வா, தோசை சாப்பிடலாம்’ என்று தம்பி தீபக் அழைக்க, கிளம்பினார் அக்கா தீபா. அங்கே தீபக்கைத் தீபா திட்ட, மாதவனும் தீபக்கைத் திட்ட, சம்பந்தமேயில்லாமல் டென்ஷன் ஆன டிரைவர் ராஜா, மாதவனைத் திட்ட, யார், யாரைத் திட்டுகிறார்கள்... ஏன் திட்டுகிறார்கள் எனப் புரியாமல் `எனி ஹெல்ப் ஷாலினி’ என்றது சமூவம்!

2017 டாப் 25 பரபரா...

நான் யாரு, எனக்கேதும் தெரியலியே!

ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன், செங்கோட்டையன் என நான்கு பேருக்கு நடுவில் நடந்த முதலமைச்சர் மியூசிக்கல் சேர் விளையாட்டில், விதியின் விளையாட்டால் முதல்வரானார் பழனிசாமி. அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது சசிகலா அணி எம்.எல்.ஏ-க்களால் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் `நமக்குத் தலைவர் பதவியா!’ என அண்டா குண்டா நிறைய ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். திடீரென தினகரன் திஹாருக்குப் போக, ஒன்பது கிரகமும் உச்சம்பெற்று முதல்வராக பிக்அப் ஆனார் எடப்பாடி. முதல் ஒரு மாத காலமும் நிவாரணங்கள் கொடுத்துக் கொடுத்தே `சிம்பதி சிம்பொனி’ வாசித்தார். குட்டிக்கிளி, வெள்ளைப்புறா எனக் குட்டிக்கதைகளிலும் குதித்துப் பார்த்தார்; வேலைக்காகவில்லை. இடையே, ஓ.பி.எஸ் அணியினர் வேறு `தர்மயுத்தம்’ எனும் பெயரில் `சேர்த்தல் - நீக்கல்’ விளையாட்டு விளையாட, ரொம்பவே நொந்துபோனார் பழனிசாமி. கடைசியாக தினகரனுக்குத் திருநெல்வேலி அல்வாவைக் கூரியரில் அனுப்பிவைத்துவிட்டு, `தர்மயுத்தம்’ டீலை பிரச்னை இல்லாமல் முடித்துக்கொண்டார் முதல்வர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பேரில் ஊர் ஊராக அலப்பறை பண்ணுவதில் சார் பிஸி!

2017 டாப் 25 பரபரா...

தர்மயுத்தம் - அதிகாரம் இரண்டு!

ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் பண்ணி `தர்மயுத்தம்’ படத்திற்குப்  பூஜை போட்டார் ஓ.பி.எஸ். `சசிகலா கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொல்கிறார்’ எனப் படத்தின் முதல் வசனத்திலேயே கொளுத்திப்போட, தமிழ்நாடே கொழுந்துவிட்டு எரிந்தது. பதவி பறிக்கப்பட்டாலும் `மக்களின் முதல்வரா’க மாறினார். `அணிகளை இணைத்து அதிமுகவை இரும்புக்கோட்டையாக மாற்றுவேன்’ என இன்டர்வெல்லில் பஞ்ச் அடித்தார். ‘ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது’ என்று படத்தை ஹாரர் ஜானரிலும் திருப்பிவிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானபோது அழுது புலம்பிய ஓ.பி.எஸ், அதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தபோது பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியதெல்லாம் பிம்பிளிக்கி பிளாக் ஹியூமர். க்ளைமாக்ஸுக்கு முன்பு வரை வெயிட்டு காட்டியவர்... தடாலென `கிரி’ பட வீரபாகுவாக ஏதோ ஒரு பேக்கரி டீலிங்கில் இ.பி.எஸ்ஸோடு இணைந்துவிட்டார். ஆனால், இப்போது தர்மயுத்தம் 2.0-க்கு ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டார். ஓரளவுக்குதான் பொறுமை, பார்த்துக்கோங்க... பார்த்துக்கோங்க!

2017 டாப் 25 பரபரா...

கட்டிக்கோ... ஓட்டிக்கோ!

`பிக் பாஸ்’ வீட்டிலுள்ள பெண்கள் அழும்போது கண்ணீர்கூட வராமல் இருக்கலாம்; ஆனால், சினேகன் கட்டிப்பிடிக்காமல் இருந்ததில்லை. `பிக் பாஸ்’ வீட்டினுள் நுழைந்த முதல் வாரமே தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தானைத் தலைவன். ஹவுஸ் மேட்ஸ் எல்லாம் சினேகனை,  தமிழ்த் தாத்தா ரேஞ்சுக்கு ஃபீல் செய்ய ஆரம்பித்தது இலக்கியக் காமெடி ஆஃப் தி இயர். அவரும் ஆரம்பத்தில் ஹரி படங்களில் வரும் அப்பத்தாக்களைப் போல, பாசமான பீஸாகத்தான் வலம் வந்தார். முதலில் கணேஷ் வெங்கட்ராமுக்கு முட்டை எல்லாம் வேகவைத்து உரித்துக் கொடுத்தவர், நூறாவது நாள் நெருங்க, கொஞ்சம் கொஞ்சமாய் உக்கிரமானார். காலங்காத்தால கோலம் போடுவது, காருக்குள்ளேயே விடிய விடியக் கெடப்பது, கமலுக்காகக் கவிதை எழுதிப் பாடுவது என ஓவர்டைம் உழைத்தது உக்கிர அதிகாரம்! `ஜெயிக்கப்போறது நாமதான்’ என நூறு நாள்களும் தாறுமாறாய் நம்பிக்கை வைத்திருந்த சினேகனுக்கு க்ளைமாக்ஸில் மக்கள் கொடுத்தது `மொரட்டு மருத்துவ முத்தம்’!

2017 டாப் 25 பரபரா...

அடடே, அப்ரசன்ட்டீஸ்!

ஆண்டு முழுக்க அ.தி.மு.க அமைச்சர்கள் செய்த கப்பித்தனமான கூத்துகளைப் பார்த்தபோதுதான் மக்களுக்கு ஜெயலலிதாவின் மெயின்டனென்ஸ் மெதட்களின் மகத்துவம் புரிந்தது. `மகசேசே விருது மற்றும் நோபல் பரிசு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்பன போன்ற அமைச்சர்களின் உளறல்கள் சீரிஸின் ஓப்பனிங் காமெடி. தெர்மாகோல் அட்டைகளை வாங்கி வைகை அணையையே மூட முயன்றது உலக லெவல் அட்ராசிட்டி. இன்னொரு பக்கம், திண்டுக்கல் சீனிவாசன். பாரத ரத்னா எம்.ஜி.ஆரை, பாரதப் பிரதமர் எம்.ஜி.ஆர் என அழைத்தது, `பிரதமர் மன்மோகன் சிங்’ என்றது, பாடகி சுதா ரகுநாதனைப் பாராட்ட ‘பரதநாட்டியத்தில்...’ என ஆரம்பித்தது என எல்லாமே `ரோலீங்ங் சார்’ ரோஃபல்ஸ்.  `ஸ்டாலின் சோடா குடித்தால், தினகரன் ஏப்பம் விடுகிறார்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் பழமொழியாய் அறிக்கை விட,  `கொசுவைவிட வேகமாகச் செயல்படுங்கள்’ என விஜயபாஸ்கரும், `நொய்யல் ஆற்றில் நுரை பொங்க, சோப்பு நீரே காரணம்’ எனக் கருப்பண்ணனும் அமைச்சர்களின் ஆட்டத்தில் சேர, களைகட்டியது `வாயில கண்டம் வாலிபர் சங்கம்’!

2017 டாப் 25 பரபரா...

இங்கே ஓர் இலுமினாட்டி

`ஓ.பி.எஸ்ஸை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதே நான்தான்’ என்பார். ஆனால், ஓ.பி.எஸ்ஸே இவரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்துவார். தனக்குத் துணைப் பொதுச்செயலாளர் போஸ்ட்டை வைத்துக்கொண்டு,
எடப்பாடியை முதல்வராக்குவார். ஆனால் அவரோ, `அன்னந்தண்ணி புழங்கக்கூடாது’ என ஆட்சி, அதிகாரத்தில் இருந்தே தள்ளிவைத்துவிடுவார். இப்படி இந்த ஆண்டு `விவேகம்’ அஜித்தைப்போல பல பேர் டி.டி.வி தினகரன் முதுகில் `நங்...நங்...’ எனக் குத்தியிருக்கிறார்கள். எவ்வளவு அடி வாங்கினாலும் சார் `எனக்கொண்ணும் வலிக்கலியே’ டைப் பர்சனாலிட்டி. பால் விளம்பரங்களில் வரும் பசுமாடுகளைப் போல எப்போதும் சிரித்த முகத்துடனேயே வலம் வருவார் தினகரன். `பிஹெச் பாண்டியனும் ஓ.பி.எஸ்ஸும் சதித் திட்டம் போடுகிறார்கள்’, `தடம் மாறுகிறார் எடப்பாடி’ என எல்லாவற்றையும் முன்கூட்டியே கணித்துவிடுவார். ஆனால், ஒன்றுமே செய்யமாட்டார். இரண்டாவதுமுறை நடந்த இடைத்தேர்தலில் குக்கர் கொடுத்தார்கள் இவருக்கு, பிரஷர் எதிர்க்கட்சிக்காரர்களுக்கு!

2017 டாப் 25 பரபரா...

அந்தக் கொழந்தையே...

ஆண்டின் ஆரம்பத்தில் தலைப்பாகையோடு அமர்ந்து தலைவாழை இலையில் விஜயகாந்த் சோறு சாப்பிடும் போட்டோ... வைரலோ வைரல். வழக்கமாக கேப்டனின் போட்டோக்களுக்கு `ஹாஹா’ ரியாக்‌ஷன்களே அதிகம் வரும். ஆனால், இந்த போட்டோவுக்கு `லவ்’ ரியாக்‌ஷன்கள் குவிந்தன. இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவிலும் விஜயகாந்த் சாப்பிடப்போய், அரங்கேறியது `க்யூட்’ மொமன்ட். அதை வீடியோவாக்கி, பின்னணியில் டைரிமில்க் விளம்பரப் பாடலைக் கோத்துவிடவும், வைரலானது வீடியோ. இந்த ஆண்டு விஜயகாந்த் செய்த பெரிய காமெடி `உங்களுடன் நான்’ பயணம். அதென்ன `உங்களுடன் நான்’ என்றால், தொண்டர்களோடு விஜயகாந்த் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்வார். அவ்வளவுதான். இத்தனை நாள்களாக விஜயகாந்த்தை வைத்து எத்தனை மீம்களைப் பார்த்திருப்போம், போட்டிருப்போம். ஆனால், அந்த விஜயகாந்துக்கு `மீம்ஸ்’ என்றே சொல்லவராது, அவர் மீம்களையே பார்த்ததில்லை என்பது தெரிந்ததும் இந்த ஆண்டுதான் மக்கழே!

2017 டாப் 25 பரபரா...

ஒரே ஒரு கவர்னர் வர்றார்!

`யார் வம்புக்கும் தும்புக்கும் போகாமல், தான் உண்டு தன் சோலி உண்டு’ என வாழ்ந்துகொண்டிருந்த வித்யாசாகர் ராவை, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக்கி டரியலாக்கினார்கள். ஆளுநரை தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரைப்போல் நம் அரசியல்வாதிகள் ட்ரீட் செய்ய, நொந்து, வெந்துபோனார். அனுமதி வேண்டி, உரிமை கோரி, புகார் தெரிவித்து எனப் பல காரணங்களுக்காகப் பக்கம் பக்கமாய் கடிதங்கள் எழுதி,  படிக்கவைத்து டார்ச்சர் செய்தார்கள். ஸ்டாலின் உச்சபட்சமாக சட்டசபையில் கிழிந்த சட்டையோடு ராஜ்பவன் கதவைத் தட்டினார். ஆளுநர் `வருகிறார், வந்திறங்கினார், வந்தார், சென்றார், செல்லவிருக்கிறார், சென்றுகொண்டிருக்கிறார்’ என இரண்டே இரண்டு வினைச்சொல்லை எல்லாக் காலத்திற்கும் மாற்றி பிரேக்கிங் நியூஸ் ஆக்கிக்கொண்டிருந்தன 24x7 சேனல்கள். ஆனால் கவர்னரோ, ராஜ்பவனில் மானைத் தடவிக்கொடுத்துவிட்டு, அடுத்த ஃப்ளைட் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தார்.  `தமிழகத்தின் ஆளுநராக நான் இருந்தபோது நடந்த ஒரே நல்ல விஷயம், அந்தப் பதவிக்காலம் முடிஞ்சதுதான்’ என நிச்சயம் நினைத்துப் பெருமூச்சு விட்டிருப்பார். கிரேட் சார்...

2017 டாப் 25 பரபரா...

தலைகீழ் விகிதங்கள்!

‘ஜில் ஜங் ஜக்’ சேட்டை சாமியார்களின் காமெடி வேட்டை இந்த ஆண்டும் தொடர்ந்தது. பாபா ராம்தேவ் இந்த ஆண்டு தமிழகத்தை டார்கெட் செய்து டிவி வழியாக நம் வீட்டுக்குள் குதித்து சிரசாசனம் செய்தார். காலையில் யோகா நிகழ்ச்சியில் தலைகீழாக நின்றால், மாலையில் ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ நிகழ்ச்சிக்கு சீஃப் கெஸ்ட்டாக வந்து மெர்சல் ஆக்கினார். ஜக்கி வாசுதேவ்மீது காட்டை வளைத்துக் கட்டடங்கள் கட்டுவதாக கம்ப்ளெய்ன்ட்கள் பறந்தன. யானை செல்லும் பாதைகளில் எல்லாம் தீனி வைக்காமல் தியானலிங்கம் வைக்கிறார் என்று புகார்கள் போர்க்கொடி தூக்கின. ஆனாலும் அசராமல், மோடியை அழைத்துவந்து சிலை திறந்தார். மிஸ்டு கால் கொடுத்தால் ஆல் இண்டியா நதிகளை அட் எ டைம் இணைக்கலாம் என்று பயணம் கிளம்பிப் பதைபதைக்கவைத்தார். திருவண்ணாமலை தொடங்கி சென்னை வரை ஆங்காங்கே ஆக்கிரமித்து, மடத்தைக் கட்டி, குண்டலினி எழுப்புகிறோம் என்று நித்தியின் சீடர்கள் கிளம்ப, சுத்துப்பட்டு மக்கள் கையில் கம்புடன் கிளம்பிவந்து வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது என சொடக்கு போட்டார்கள் சொடக்கு! 

2017 டாப் 25 பரபரா...

குருவி... கருவி... அருவி!

அவசர அறிக்கைகள், அவசிய ஒரண்டைகள், வான்டட் வம்புகள் என எப்போதும் பிஸியாக இருந்தது ட்வீட்டுலகம். ஒவ்வொரு வரியிலும் வெடிகுண்டு வீசினார் உலகநாயகன்.  கமல்ஹாசன் தன் எல்லா ட்வீட்டிலும் இறுதியில் ‘தயவாய் வெகுவாய்’ என்று எழுத, ‘ஐயய்யோ மிரள்வாய்’ என்று மெர்சல் ஆனார்கள் ட்வீட்டர்கள். கமலோடு களமிறங்கி வேட்டையாடி விளையாடினர் அர்விந்த்சாமியும் சித்தார்த்தும் மாதவனும். ட்விட்டரையே தங்களுடைய போர்க் களமாக மாற்றி கேவலமான ஹேஷ்டேக் போட்டு எதிரிகளைப் பந்தாடினர் தல-தளபதியன்ஸ். அரசியல்வாதிகள் எல்லாம் ட்விட்டருக்கு அப்டேட் ஆக, எடப்பாடி, பன்னீர்செல்வம், தினகரன், தீபா என எல்லோருமே களமிறங்கினர்.  அ.தி.மு.க அம்மா அணி, புரட்சித்தலைவி அம்மா அணி என இரண்டாக அ.தி.மு.க பிரிய, ர.ர-க்களும் யாரை ஃபாலோ செய்வது எனத் தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தனர். இத்தனைக்கும் நடுவில் டொனால்ட் ட்ரம்ப்  என்கிற மகான் அமெரிக்காவையே ட்விட்டரில்தான் ஆண்டுகொண்டிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!

2017 டாப் 25 பரபரா...

மிக்சர் பாய்ஸ்!

‘கூவத்தூர்’ என்ற பெயர் தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட்டது. சசிகலா மற்றும் தினகரன் மேற்பார்வையில் அதிருப்தி பன்னீர் அணியைத் தவிர அத்தனை எம்.எல்.ஏ-க்களையும் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் ரிசார்ட்டில் சேர்த்தார்கள். ஊஞ்சல், சறுக்குமரம், கண்ணாமூச்சி ரே ரே, பரமபதம், பல்லாங்குழி என எம்.எல்.ஏ-க்கள் போட்ட ஆட்டத்தைப் பெருமூச்சுடன் பார்த்தது தமிழகம். இடையில் ஒருவர் குதித்துக் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி, ‘இதுதான் ராஜன் செல்லப்பா’ என்று பலர் வாட்ஸ்-அப்பில் லேசர் லைட் அடிக்க, ‘ஐயய்யோ... நான் அவன் இல்லை’ என்று பதறல் குரல் எழுப்பினார் சின்னம்மா அணி செல்லப்பா. ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-க்களையும் அடைத்துவைத்திருக்கிறார்கள் என்று பன்னீர் அணியும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்ட, ‘பிள்ளைகளா, வாங்க’ என்று பிரஸ்மீட் நடத்தினார் சசிகலா. ‘நல்லா பாருங்க, எல்லோரும் ஃப்ரீயா இருக்காங்க’ என்று அணிவகுப்பு நடத்த, ‘ஆமாமா’ என்று தலையாட்டியபடியே தட்டிலிருந்து மிக்சர் அள்ளினார்கள் மக்கள் பிரதிநிதிகள். ‘எங்களூர் எம்.எல்.ஏ-வைக் காணோம். தொகுதிப்பக்கம் ஆளைப் பார்க்கமுடியலை’ என்று மக்களே போலீஸ் ஸ்டேஷன் போய்ப் புகார் கொடுக்க, ‘‘யார்ரா நீங்க’’ என்று ஜெர்க் ஆனார்கள் சின்னம்மா பிள்ளைகள்.

2017 டாப் 25 பரபரா...

ரத்தம் கொதிக்குதேய்ய்!

‘அம்மாவும் இல்லை... அய்யாவும் தொடர்பு எல்லைக்கு வெளியே... தக்க தருணம், தங்கத் தருணம் தம்பிகளா...’ என்று சீமான் சிலிர்க்க, உற்சாக உடுக்கையடிக்கத் தொடங்கினர் ‘ஒறவுகள்.’ ‘தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆளவேண்டும்’ என்று ரஜினிக்கு எதிராக ஆவேசக்குரல் கொடுக்க, ‘அண்ணாத்தே ஆடுறார், ஒத்திக்கோ ஒத்திக்கோ’ என்று களத்தில் குதித்தார் கமல். பின்னாலேயே ‘விஜய்’க்கும் ஹெச்.ராஜா அரசியல் வாடிவாசல் திறந்துவைக்க, குழம்பிப்போனார் சீமான். ‘விடுதலைப்புலிகளுக்கு விசிட்டிங் கார்டு அடித்ததே நான்தான்’ என்று காமெடிப் பேட்டியைத் தட்டிவிட, ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் போர்க்களமாகின. ‘நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்’ என்று ஹேஷ்டேக் ஆரம்பித்து, காமெடி ட்வீட்களை அள்ளிக்கொட்டி, ட்ரெண்டிங்கில் கொண்டுவந்தார்கள். ‘வருஷக்கடைசியில் கந்துவட்டிக்கும் ஆதரவுக்கரம் நீட்டி, சீமான் பேட்டி தட்டியது வட்டியும் முதலும் டூ பாயின்ட் ஓ!

2017 டாப் 25 பரபரா...

கமலோடு விளையாடு!

ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் சடுகுடு ஆடினார் சுவாமி. போதாக்குறைக்குத் தமிழக அரசை ஆதரித்துத் துண்டு போட்டுத் தாண்டி, ‘சசிகலாதான் முதல்வராகணும்’ என்று சர்ட்டிஃபிகேட் நீட்ட, ‘இது என்னா டீலிங்கு?’ என்று குழம்பிப்போய்க் குண்டக்கமண்டக்க நின்றனர் பப்ளிக். தொடர்ச்சியாக ரிசார்ட் கூத்துகளுக்கும் சசிகலாவுக்கும் எதிராக கமல் ட்வீட் தட்ட, சாமியின் டார்கெட் கமல் பக்கம் திரும்பியது. ‘தமிழ் பொர்க்கீஸ்’ லிஸ்ட்டில் அவரையும் சாமி சேர்க்க, ‘நான் தமிழைப் பொறுக்குபவன்தான்’ என்று நாகரிகமாய் எதிர்வினை செய்தார் கமல். ஆனால் ‘நாகரிகமா, நம்ம ஷோதான் நல்லா இருக்காதே கிரிகாலா’ என்று நான்சென்ஸ் வார்த்தைகளால் ட்விட்டரையே அசிங்கப்படுத்தினார் சு.சாமி. இன்னொருபக்கம் சாமியோ சாஷ்டாங்கமாய் விழுந்து, சசிகலாவிடம் சரண்டர் ஆனார். ‘இந்தக் கணக்கு குமாரசாமி கால்குலேட்டர்லயே டேலி ஆக மாட்டேங்குதே’ என்று திகைத்துப்போனது தமிழகம்!

2017 டாப் 25 பரபரா...

உ.பி.ச 2.0

வாட்ஸ்-அப் வைரல் பொண்ணு ஜூலியும் ‘தகதிமிதா’ காயத்ரி மாஸ்டரும்தான் இந்த ஆண்டின் ஏடாகூடக் கூட்டணி. இருவருமாகப் போட்ட சதித்திட்டங்களும் விசித்திர வியூகங்களும் தமிழ்நாட்டுக்கே முரட்டு என்டர்டெயின்மென்ட்.ஜல்லிக்கட்டு அரசியல் மோதலில் தொடங்கிய இருவர் நட்பு... பின்னாளில் உடன்பிறவா சகோதரிகள் 2.0-ஆக மாறியதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சில்லாக்கி டும்மா.  ‘அக்கா, நீதான் எனக்கு சொக்கா’ என்று காயத்ரி ரகுராமுக்குக் கம்மலாகி, காதோரம் சிணுங்கிக்கொண்டே திரிந்தார் ஜூலி.  அக்கா பாசத்தில் ஆறுதல் சொன்ன ஓவியாவையே ‘அவதான்க்கா அப்படிச் சொன்னா’ என்று அடித்துத் துவைத்தது பதறவைக்கும் பாசக்காட்சிகள். இருவரையும் வாரந்தோறும் கமல்ஹாசன் எவ்வளவு அடித்தாலும்... வலிக்கலியே என்று சிரித்தபடியே இருந்ததும், பாட்டுப்பாடியே ஹவுஸ்மேட்ஸை அலறவிட்டதும் அடடா... நூறாண்டு பேசும் நூறு நாள் சாதனை! 

2017 டாப் 25 பரபரா...

வி ஃபார் விபரீதம்

நள்ளிரவில் டீஸர் வெளியிட்டு நடுநடுங்க வைத்த கலகல காஞ்சனாக்கள் `தல’ அஜித்தும் `சிறுத்தை’ சிவாவும். ‘ஹாலிவுட்டே கலங்கப்போகுது, கோலிவுட்டே கொதிக்கப்போகுது’ என்று ஸ்டேட்டஸ் தட்டினார்கள் தல ஆர்மிகள். படமும் ரிலீஸானது. ஆனால், முதல் ஷோ ரிசல்ட்டே மூஞ்சியில் அடித்தது. தல அஜித் படம் முழுக்க இழுத்து இழுத்து எட்டுகஜ பன்ச் டயலாக் பேச, ‘வெள்ளைக்காரன்கிட்ட தமிழ்ல பன்ச் பேசறதுதான் விவேகமாண்ணே?’னு விளங்காமல் தவித்தார்கள். இயக்குநர் சிவா மீது ரசிகர்கள் கோபமாக, அவர்களுடைய ஆவேசம் அடங்குவதற்குள் ‘அடுத்த படமும் சிவா டைரக் ஷன்தான்’ என்று தெறிக்கவிட்டார் அஜித். அடுத்து வருவது அல்லுசில்லு ‘விசுவாசம்.’ தழுதழுக்கிறது தல ஃபேன்ஸ் வட்டாரம்.

2017 டாப் 25 பரபரா...

நடராஜா சர்வீஸ்!

ஜெயலலிதா இறந்தபோது பேட்டியளித்த வைகோ, காரணமே இல்லாமல் தி.மு.க-வைத் திட்ட, கடுப்பானார்கள் உடன்பிறப்புகள். அடுத்த வாரமே காவேரி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன கருணாநிதியைப் பார்க்க வைகோ போய் இறங்க, கைகலப்பானது ஆழ்வார்பேட்டை சிக்னல். ‘எல்லாத்துக்கும் ஸ்டாலின்தான் காரணம். தூண்டிவிட்டுட்டு வெளியூர் போயிட்டார்’ என்று ஆவேசப்பேட்டி தட்டினார் வாக்மேன். ‘அவர் எப்பவுமே இப்படித்தான்; இப்படித்தான் எப்பவுமே’ என்று காலரில் தூசு தட்டினார் ஸ்டாலின். சீமைக் கருவேல மரங்களை வெட்ட, முண்டாசு கட்டி முண்டா தட்டினார் வைகோ.இயர் எண்டில் என்ன நினைத்தாரோ...கருணாநிதியைப் பார்க்கக் கோபாலபுரத்துக்குக் கூட்டத்துடன் கிளம்பிப்போனார் வைகோ. ஸ்டாலினே உள்ளே அழைத்துப்போய்ப் பார்க்கவைக்க, ‘அண்ணன் கலைஞர் அழுதார், நான் நெகிழ்ந்தேன்’ என்று கர்ச்சீப் நனைத்தார் கலிங்கப்பட்டிக்காரர். கடைசியில் ஆர்.கே.நகர்த் தேர்தலில் தாய்க்கட்சிக்குத் தாறுமாறு லைக்ஸ் கொடுத்துப் பாடியது, அன்பின் ஆராரோவ்வ்!

2017 டாப் 25 பரபரா...

ஆர்கே நகர் ஆபரேஷன்

எந்த முதலீடும் இல்லாமல் வாக்காளர் அட்டை இருந்தாலே ஆதாயம் பண்ணும் இடமாக மாறியது ஆர்.கே.நகர். ஜெயலலிதா ஜெயிலுக்குப் போன நாள் தொடங்கி வசூல் வேட்டைதான். ``போனடைம் ஆறாயிரம் குடுத்தாங்க, இந்த முறை ஒரு எட்டாயிரமாச்சும் குடுக்கணும்’’ எனக் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார்கள். அ.தி.மு.க சில்லு சில்லாகச் சிதறியதில் சில்லறையை அள்ளியதும் ஆர்.கே.நகர் வாசிகள்தான். தொப்பியும் நாலாயிரமுமாக டிடிவி வேட்டைக்குக் கிளம்ப, ஜெயலலிதா சிலையைச் சவப்பெட்டியில் வைத்துத் தெருத்தெருவாய் இழுத்துவந்து ஓட்டு கேட்டது, ஓபிஎஸ் டீம். `அம்மாவை அசிங்கப்படுத்திவிட்டார்' என்று எதிரணி எகிற, தமாசு... தமாசு என்று தேர்தலை நிறுத்தியது தேர்தல் ஆணையம். மீண்டும் தேர்தல்... மீண்டும் காசு. இம்முறை விஷாலும் வந்தார். அப்ளிகேஷனிலேயே அவரை அவுட் ஆக்கி அனுப்பினர் அரசியல் புலிகள். சாதாரண ராதாகிருஷ்ணன் நகரை ‘ராத்திரி காசு நகராக’ மாற்றியதுதான் தேர்தல் ஆணையத்தின் இந்த ஆண்டு சாதனை!

2017 டாப் 25 பரபரா...

முகநூலிஸம்!

முகம் கழுவுகிறார்களோ இல்லையோ, நாள்தவறாமல் முகத்திரை கிழித்தார்கள் ஃபேஸ்புக் புரட்சியாளர்கள்.   உண்மையை உலகுக்குச் சொல்லியே தீருவோம் என ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் போராளிகள் போட்ட ஸ்டேட்டஸ் குண்டுகள் எல்லாமே புரட்சிப் புஸ்வாணங்கள்.  மீனவர்களுக்காகக் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போதே லட்சுமி குறும்படத்தில் விஞ்சி நிற்பது பெண்ணியமா, கண்ணியமா என விமர்சனத்தைப் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பீட்டாவை எதிர்த்து முதன்முதலில் மீசையை முறுக்கியவன் நம் முப்பாட்டன் முகநூல் தமிழன்தான். ஓவியா ஆர்மி வைத்து ஓட்டு கேட்டுத் திரிந்தது `ஆஹஹா மொமன்ட்’ என்றால், ராகவா லாரன்ஸ், `ஹிப்ஹாப்' ஆதி, ஆர்ஜே.பாலாஜி என்று வரிசையாகப் பலபேர் ஜல்லிக்கட்டில் அந்தர்பல்டி அடிக்க, அத்தனை பேரையும் ஒரே வாஷிங்மெஷினில் போட்டுத் துவைத்துப் பிழிந்தது ஆக்‌ஷன் அத்தியாயம்.`வேற... வேற’ என டெய்லி ரெண்டு சைடு டிஷ் கேட்டுத் திணறடிக்கிறார்கள் சோஷியல் மீடியன்ஸ்!