
2017- ல் தமிழகத்தைத் தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்


வரலாறு காணாத வெற்றிப் போராட்டத்துடன் 2017-ஐத் தொடங்கியது தமிழ்நாடு. ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக தமிழர் கடலில் இளைஞர்கள் ஒன்றுகூட, மெரினாவில் பற்றிய தீ உலகம் முழுவதும் பரவியது. போராட்டத்தை மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்க்க, மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தது. டெல்லிக்குப் பறந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒப்புதலுடன் வந்து சேர்ந்தது அப்போதைய ஓ.பி.எஸ் தலைமையிலான அரசு. ஆனால், முழுமையான சட்டத்திருத்தம் வேண்டும் என மெரினாவில் இளைஞர்கள் எதிர்ப்புக்குரல் கொடுக்க, லத்திகளால் போராட்டத்தைக் களங்கப்படுத்தியது தமிழ்நாட்டுக் காவல் துறை!

வறட்சியால் வறண்டது தமிழகம். பருவமழை பொய்த்துப்போக, அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தது அரசு. ஆனால், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்கப்படவே இல்லை. தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கின. தமிழகம் முழுவதும் 250-க்கும் அதிகமான விவசாயிகள் மரணம் அடைந்தனர். இந்த மரணங்களிலும் அரசியல் பேசப்பட்டதே தவிர, நிவாரணம் கிடைக்கவில்லை. இறுதியாக, சிறு விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு 5,465 ரூபாய் வழங்கி நஷ்டஈட்டுக் கணக்கை முடித்தது தமிழக அரசு!

`சிரிச்சாப் போச்சு’ ரவுண்டுக்குத் தயாரானது தமிழகம். போயஸ் இல்லத்தில் வைத்து ஓ.பி.எஸ்-ஸிடம் ராஜினாமாக் கையொப்பம் வாங்கப்பட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகுடம் சூட முடிவெடுத்தார் `சின்னம்மா’ சசிகலா. பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்பு விழாவுக்குத் தேதிகேட்டு ஆளுநர் மாளிகையின் கதவை சசிகலா தரப்பு தட்ட, `அம்மா’ சமாதிக்கு முன்பாக, சின்னம்மாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்க, பிரேக்கிங் நியூஸ் மியூஸிக்கில் மிரண்டனர் தமிழர்கள். ஆனால், ஆளுநர் மாளிகையின் கதவுகளுக்குப் பதிலாக பரப்பன அக்ரஹாராவின் கதவுகள் திறந்ததுதான் ட்விஸ்ட்!

ஐடி ரெய்டுகளால் அதிர்ந்தார்கள் அரசியல்வாதிகள். மத்திய, மாநில அரசுக்கு சவால்விட்ட அத்தனை பேரின் வீடுகளிலும் பாரபட்சமில்லாமல் நடந்தது சோதனை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டின் முடிவால் இடைத்தேர்தலே ரத்தானது. ஆனால், சில மாதங்களில் விஜயபாஸ்கர் முகாம் மாற, அவர்மீதான வழக்கு ஸ்லோமோஷன் மோடுக்குத் தாவியது. ஆண்டின் இறுதியாக சசிகலாவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என மொத்தம் 187 இடங்களில் மகா மெகா ரெய்டு நடத்தியது வருமான வரித் துறை. அதன் விவரங்கள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை!

டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் தேசத்தையே திடுக்கிடவைத்தது. வறட்சியால் தவிக்கும் விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்சங்களை முன்னிறுத்தி நூதன வழிகளில் போராடினார்கள் விவசாயிகள். ஆனால், போராட்டம் தொடர்ந்ததே தவிர, தீர்வு கிடைக்கவில்லை. நிர்வாணப்போராட்டம் நடத்தியபோதும்கூட பிரதமர் மோடி விவசாயிகளைச் சந்திக்க முன்வரவில்லை. ``விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்’’ என்று உறுதிமொழி கொடுத்த எடப்பாடி அரசு மெளனத்தையே மர்ம பதிலாகத் தருகிறது.

வாழ்விடங்களை இழந்து அலையும் வனவிலங்குகளின் பரிதாபம் தொடர்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்கள் பேரளவுக்கு ஆக்கிரமிக்கப்பட, நீரும் உணவும் தேடி மலையோரக் கிராமங்களுக்குள் நுழைந்தன யானைகள். வலசைப் பாதையில் பசியில் திரிந்த யானைகள், வழியில் சிக்கிய நான்கு பேரைத் தூக்கிவீசிக் கொன்றன. கோபம் கொண்டு யானைகளைத் தாக்கும் மக்களால் தொடர்கிறது துயரம்!

சினிமா தியேட்டர்களில் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்காதவர்கள் மீது கடுமையான தாக்குதல்களும், சட்டரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம், ``சினிமா தியேட்டரில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் நாட்டுப்பற்று இல்லை என்று அர்த்தம் இல்லை. இதுகுறித்து மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்’’ என்றது உச்ச நீதிமன்றம். திரையரங்குகளில் தேசிய கீதம் பாடலாமா, கூடாதா என சர்ச்சை தொடர்கிறது!

இந்த ஆண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் சாதனை படைத்தது மாநிலத் தேர்தல் ஆணையம். ``2016 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும்’’ என்கிற உயர்நீதிமன்றத்தின் ஆணையையே ஒரு வருடமாகத் தள்ளிப்போடவைத்தன ஆணையத்தின் தந்திரங்கள். தேர்தல் நடத்தாததற்கு நீதிமன்றத்தின் முன்பு மாநிலத் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் அலட்சியம் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்க, இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதே ஆளுங்கட்சியை அறிந்தவர்கள் சொல்வது!

ஆதார் என்னும் மூன்றெழுத்தால் மூச்சுமுட்டினான் மிஸ்டர் இந்தியன். குடும்ப அட்டை முதல் கிரெடிட் கார்டு வரை எல்லாவற்றையும் ஆதாரோடு இணைக்கவேண்டும், ஆதார் இல்லை என்றால் எதுவும் இல்லை என மத்திய அரசு சொல்ல, ஆதார் மையங்களைத் தேடி ஓடினான் தமிழன். ஆனால், சில நிறுவனங்கள் ``தகவல்கள் விற்பனைக்கு’’ என ஆதார் விவரங்களை விற்க ஆரம்பிக்க, அப்செட்டில் இருக்கிறான் இந்தியன்!

ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி உலகசாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. இதில் 101 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள். ரஷ்யாவின் சாதனையை இந்தியா முறியடித்ததைப் பார்த்து அமெரிக்காவே வியந்தது. ``ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சி வியக்கவைக்கிறது’’ எனப் பாராட்டினார்கள் அமெரிக்க அமைச்சர்கள்!

‘ரூபெல்லா’ வைரஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஒருவகை அம்மை நோயான ரூபெல்லாவை ஒழிக்க, சிறுவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை அரசே இலவசமாகப் போடுவதாக அறிவித்தது. ஆனால், வெளிநாடுகளிலிருந்து நோயைப் பரப்புவதற்குத்தான் தடுப்பூசி போடப்படுகிறது, ரூபெல்லாவால் ஆபத்து என வதந்திகள் கிளம்ப, பெற்றோர் பதறினர். தடுப்பூசி பற்றிய விழிப்பு உணர்வுப் பிரசாரங்களால், விவகாரம் அமைதியானது!

இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் கலங்கமானது கடல். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கடல்பகுதிகளில் எண்ணெய் மிதந்தது. மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எண்ணெயை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள்கூட இல்லாமல் வெறும் கைகளில், வாளியைக் கொண்டு எண்ணெயை வாரியதுதான் வேதனை.

சுபாஷ் சந்திர கபூர், தீனதயாளன் என முக்கிய ‘சிலைக் கடத்தல்’ மன்னர்கள் கைதுசெய்யப்பட்டாலும் சிலைக் கடத்தல் தொடர்ந்தது. சர்வதேச அளவில் சிலைக் கடத்தலில் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் புரள்கிறது. தமிழகத்தில் உள்ள 37,000 கோயில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. கணக்கிடப்படாத சிலைகள் இன்னும் ஏராளம். புதிய போலிச்சிலைகளை வைத்துவிட்டு விலைமதிப்பில்லாத பழைய சிலைகள் கடத்துவது தொடர்கிறது.

மனித வாழ்க்கைக்கும் கால்நடைகளுக்கும் பெரும் கேடுவிளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என வெகுண்டெழுந்தார் வைகோ. உயர் நீதிமன்றமும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுகின்ற பணியை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்றது. ஆனால், சீமைக்கருவேலமரம் இருப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான் என ஒரு தரப்பு களத்தில் இறங்க, முடிவில்லாமல் தொடர்கிறது விவகாரம்.

சசிகலா சிறைக்குப் போக, ஓ.பி.எஸ் இரட்டை இலை எனக்குத்தான் எனக் கொடிபிடிக்க, முதல்வர் நான்தான் என எடப்பாடி அறிவிக்க, சட்டசபையில் நடந்தது பலப்பரீட்சை. கூவத்தூரிலிருந்து எம்.எல்.ஏ-க்களைத் தலையாட்டிப் பொம்மைகளைப்போல அழைத்துவந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது எடப்பாடி அணி. இதற்கிடையே சட்டசபைக்குள் நடந்த மோதலில் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து மியூசிக் சேர் விளையாட, அமளி துமளியானது சட்டப்பேரவை. `சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’ என்றார் ஸ்டாலின்!

நள்ளிரவில் பிறந்தது மோடியின் ஜி.எஸ்.டி குழந்தை. 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வரிவிதிப்பு முறை ஒழிக்கப்பட்டு `ஒரே நாடு ஒரே வரி’ என்ற முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த வரித்திட்டத்தை முதலில் கொண்டுவர விரும்பிய காங்கிரஸே எதிர்க்க ஆரம்பிக்க, ‘நீங்கள் கொண்டுவர நினைத்ததுதான்’ என்றார் மோடி. `அது இதுவல்ல’ என்றது காங்கிரஸ். குஜராத் தேர்தல் நெருங்கியதும் 178 வகையான பொருள்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக வரியைக் குறைத்தது பா.ஜ.க அரசு!

நிகந்த கொடூரம், வக்கிரத்தின் உச்சம். சென்னையில் ஆறு வயதுச் சிறுமியை அதே குடியிருப்பில் வசித்த 22 வயதான தஷ்வந்த் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, சிறுமியை எரித்துக் கொலை செய்தான். குண்டர் சட்டத்தின்கீழ் தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட, அவனை ஜாமீனில் வெளியே எடுத்தார் அவனின் தந்தை. ஆனால், வெளியே வந்தவன் தன் தாயையும் கொலை செய்துவிட்டு மும்பைக்குத் தப்பிக்க, போராடிப் பிடித்துவந்து சிறையில் தள்ளியது காவல்துறை.

நீதிபதிகளுக்கு இடையேயான மோதல், பொதுவெளியில் விவாதத்துக்கு உள்ளானது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த இடமாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவை கர்ணனே பிறப்பித்தார். இதனால் உச்ச நீதிமன்றத்துக்கும் கர்ணனுக்கும் இடையே உரசல் உண்டானது. உச்ச நீதிமன்றத்தை ஊடகங்கள் முன் குற்றம்சாட்டிய நீதிபதி கர்ணன் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார்.

ரிசார்ட் காமெடிகளால் களங்கப்பட்டது தமிழக அரசியல். முதலில் ஆட்சியைத் தக்கவைக்க எடப்பாடி தலைமையிலான எம்.எல்.ஏ-க்களை கூவத்தூர் விடுதியில் தங்கவைத்துக் கவனித்த டி.டி.வி தினகரன், மீண்டும் எடப்பாடியுடன் மோத... அதே ரிசார்ட் அப்ரோச்சைக் கையில் எடுத்தார். `என் பக்கம் நிறைய எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள், ஸ்லீப்பர் செல்கள் உண்டு’ என்றவர் கர்நாடக மாநிலம் கூர்க் வரை சில எம்.எல்.ஏ-க்களை அழைத்துச்சென்று பாதுகாத்துப் பராமரித்தார். இருந்தாலும் நோ யூஸ்!

மர்மதேசமாக மாறியது கொடநாடு எஸ்டேட். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் குரூரமானது குளிர்பிரதேசம்.முதலில் காவலாளி அடித்துக்கொல்லப்பட, பின்னர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், மர்மமான முறையில் விபத்தில் இறந்துபோனார். அடுத்து அவர் நண்பரும் கார் விபத்தில் படுகாயமடைய, குற்றவாளிகளைப் பிடிக்கக் கேரளா வரைக்கும் போனது காவல்துறை. ஆனால், ஆட்சித் தரப்பிலிருந்து சைலன்ட் மோடுக்குப் போகச் சொல்லி உத்தரவு வர, கொடநாடு வழக்குகள் டீப் ஸ்லீப்பில் இருக்கின்றன!

நாடு முழுக்க மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இந்த உத்தரவுக்குக் கேரள மாநில அரசு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை ஐஐடி-யில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பொள்ளாச்சி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்க, குஜராத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு!

மதுபான முதலைகளை நடுநடுங்கவைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவு. `தேசிய - மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக் கடைகளை மூடவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட நாடு முழுக்க 90 ஆயிரம் மதுபானக் கடைகள் பூட்டப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 3000-த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சீல் விழுந்தன. ஆனால், சில மாதங்களிலேயே ``நாங்கள் சொன்னது நெடுஞ்சாலைகள்தான், நகருக்குள் இருக்கும் சாலைகள் அல்ல’’ என விளக்கம் வர, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புது ரூட் பிடித்து பல இடங்களில் மீண்டும் முளைத்தன மதுக்கடைகள்!

`பிக் பாஸ்’ ஃபீவரால் அல்லோலப்பட்டது தமிழ்நாடு. கமல்ஹாசன் நிகழ்ச்சித்தொகுப்பாளராக பிரமாண்டமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஓவியாவின் சிணுங்கல்களால் ஓவர் நைட்டில் வைரல் ஆனது. `நீங்க ஷட் அப் பண்ணுங்க’, `கொக்கு நெட்ட கொக்கு’ என ஓவியா என்ன சொன்னாலும் ட்ரெண்டிங்தான். காதல், மோதல் என நிகழ்ச்சி ட்ராக் மாற, ஓவியா தற்கொலை செய்ய முயன்றார் எனச் செய்தி பரவ, உலக லெவல் டி.ஆர்.பி ஹிட் அடித்தது `பிக் பாஸ்’.

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி, தி.மு.க என ஆர்.கே.நகரே அதகளமாக, பணம் வாரி இறைக்கப்படுகிறது என இடைத்தேர்தலை ரத்துசெய்து ஏப்ரல் ஃபூல் சொன்னது தேர்தல் ஆணையம். இடையில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இணைய, தினகரன் தனித்து விடப்பட, இரட்டை இலைச் சின்னம் ஆட்சி அதிகாரத்துக்குக் கிடைக்க, டிசம்பரில் தேர்தல் என மீண்டும் அறிவிக்கப்பட, தொகுதி முழுக்க `போட்றா வெடிய’ மொமன்ட்டுகள்தான்!

மனங்கள் இணைய, இரட்டை இலைகளும் இணைந்தன. ``ஆனால் முதலமைச்சர்தான் சார்’’ என முறுக்கிக்கொண்டிருந்த `தர்மயுத்தம்’ ஓ.பி.எஸ்ஸுக்கும், ``முதலமைச்சர் பதவியை மட்டும் விட்டுக்கொடுக்க முடியாது’’ எனப் பவர்காட்டிய பழனிசாமிக்கும், டெல்லி பிக் பாஸ் ``இணைந்தால்தான் இரட்டை இலை’’ என லக்ஷுரி டாஸ்க் கொடுத்தார். கொள்கைகளைக் கொல்லையில் போட்டு எடப்பாடியுடன் இணைந்தார் பன்னீர். `துணை முதலமைச்சரை மதிப்பதில்லை, போஸ்டர்களில் பேர் போடுவதில்லை’ எனப் புகார்கள் கிளம்ப, பஞ்சாயத்துகள் தொடர்கின்றன.

காவிரி மஹா புஷ்கர விழாவில் நீராடினால், செய்த பாவமெல்லாம் தீர்ந்துபோகும் என்பது நம்பிக்கை. 144 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால், அரசு சார்பில் இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், காவிரியில் நீர் வராததால், லாரிகளால் குளத்தில் நீர் நிரப்பப்பட்டு நடந்தது குளியல். அமைச்சர்கள் புடைசூழ புனித நீராடினார் முதல்வர் எடப்பாடியார். குளத்தில் மூழ்கி எழுந்த முதல்வர், நான்கு திசை நோக்கியும் கையெடுத்துக் கும்பிட்டு பக்தி மயமானார். விழாவில் கலந்துகொண்ட மற்றொரு வி.ஐ.பி... துர்கா ஸ்டாலின்!

காலியாகவே இருந்த தமிழக கவர்னர் பதவியை நீண்ட காலக் காத்திருப்புக்குப் பின் நிரப்பியது மத்திய அரசு. தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித். மூன்று முறை நாக்பூர் தொகுதியின் எம்.பி-யாக இருந்தவர் இரண்டு முறை காங்கிரஸ் சார்பிலும், ஒருமுறை பா.ஜ.க சார்பிலும் வென்றவர். ராஜ்பவனில் தமிழ் ஆசிரியரை வரவழைத்துத் தமிழ் கற்றுவரும் ஆளுநர், தமிழகம் முழுக்க ஆய்வுப் பணிகளில் செம பிஸி. ஆளுநரின் `ஆய்வை’ எதிர்க்கட்சிகள் கண்டிக்க, ஆளும் கட்சியோ `எதுக்குப் பெரிய இடத்துப் பஞ்சாயத்து?’ என அமைதி காக்கிறது!

இரண்டு மாதம் சுதந்திரக் காற்றை அனுபவித்தார் பேரறிவாளன். முதலில் ஒரு மாத பரோலில் வெளிவந்தவருக்கு இன்னொரு மாதம் நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு. சிறுவயதில் தான் ஓட்டிய சைக்கிள், வாசித்த கிடார் ஆகியவற்றை ஆசையோடு கட்டியணைத்துக் கதறியதையும், 26 வருடங்களுக்குப் பிறகு வீட்டின் புறவாசலில் நின்று ஆசை தீர நிலாவைப் பார்த்து ரசித்ததையும் தன் சிறை நண்பர்களிடம் சொல்லிச்சொல்லிச் சிலாகித்திருக்கிறார் பேரறிவாளன். விடுதலை மட்டும் இன்னும் வெகுதூரத்தில்தான் இருக்கிறது!

டிஜிட்டல் இந்தியாவில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் அட்டைகளாக உருமாறின. இதுவரை தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.93 கோடி குடும்ப அட்டைகளில், 1.71 கோடி அட்டைகளுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறது தமிழக அரசு. ஆனால், ஸ்மார்ட் கார்டுகளில் பல குளறுபடிகள். சேலத்தில் நடிகை காஜல் அகர்வால் புகைப்படத்தோடு ஸ்மார்ட் கார்டு; திருப்பூரில், குடும்பத் தலைவராக விநாயகர் புகைப்படம்; தர்மபுரியில் காலணிப் படம் போட்ட ஸ்மார்ட் கார்டு என கோல்மால்கள் அதிகம்!

அன்பில் கரைந்தார் இரோம் ஷர்மிளா. மணிப்பூரில் ஆயுதப்படைச் சட்டத்துக்காக 16 ஆண்டுக்காலம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா, கொடைக்கானலில் செட்டில் ஆனார். தேர்தல் தோல்வியை மறந்து, அரசியல் வாழ்க்கையைத் துறந்து, திருமண பந்தத்தில் இணைந்தார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோதான் மாப்பிள்ளை. இரோம் இப்போ செம ஹேப்பி அண்ணாச்சி!

குட்கா ஊழலால் குட்டு வாங்கியது தமிழகக் காவல்துறை. சென்னை அருகேயுள்ள குட்கா குடோனில் நடந்த வருமானவரிச் சோதனையின்போது, வரவு செலவுக் கணக்கு எழுதப்பட்ட லெட்ஜர் கைப்பற்றப்பட்டது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் டிகே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் பெயர்களும் இருந்தது என விவகாரம் சூடுபிடித்தது. அமைச்சர், காவல்துறை அதிகாரிகளை நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு சரி. எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை!

தீயில் கருகியது தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடம். துணிக்கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ, மளமளவெனக் கட்டடங்களைச் சூழ்ந்தது. ஏழு மாடிக் கட்டடம் கடும் சேதமடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள், பொருள்கள் எரிந்து நாசமாகின. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடியும் அவ்வளவு சீக்கிரத்தில் தீயை அணைக்க முடியவில்லை. தீப்பற்றி எரிந்ததில் கட்டடம் உருக்குலைய, சில நாள்கள் கழித்துக் கட்டடம் முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது!

சிக்கலில் சிக்கிக்கொண்டே இருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காகக் கோடிக்கணக்கான பணத்தைப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் அமைச்சர் வீட்டிலேயே சிக்கியது. ஆரம்பத்தில் போலீஸை மிரட்டியவர், சில நாள்களில் சரண் அடைந்து, அணி தாவி, இருக்கும் இடம்தெரியாத அளவுக்கு சாந்தமானார். அமைச்சர் வீட்டில் சிக்கிய லிஸ்ட்டில் முதல் பெயராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர்தான் இருந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்போது வழக்கு உறங்கிக்கொண்டிருக்கிறது!

புன்னகைப் பேட்டிகளால் ஏராளமான ஹார்ட்டீன்ஸ் வாங்கினார் டி.டி.வி தினகரன். ஆரம்பத்தில் வில்லனாக தமிழக மக்களுக்கு அறிமுகமானவர், `ஜஸ்ட் லைக் தட்’ புன்னகைப் பேட்டிகளால் நெருக்கம் ஆனார். இரட்டை இலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவருக்கு `ஆட்சிப் பக்கம் வராதீங்க’ என அதிர்ச்சி கொடுத்தார் எடப்பாடி. அப்போதும் சிரிப்புப் பேட்டிகளையே கொடுத்தவர், வருமானவரிச் சோதனையின்போது கோ பூஜை செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் இரட்டை இலையை எதிர்த்தே போட்டியிட்டார்!

``போர் வரட்டும் பார்த்துக்கலாம்’’ எனத் துண்டை உதறித் தோளில் போட்டார் ரஜினிகாந்த். 2017-ல் அரசியலில் சிக்ஸர் அடிப்பார் எனக் காத்திருந்த ரசிகனுக்கு செல்ஃபிக்களை மட்டும் வழங்கி சிங்கிள்ஸ் எடுத்தார் சூப்பர் ஸ்டார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் `சிஸ்டம் சரியில்லை’ என்று சீரியஸ் ஆனவர் மீண்டும் மேக்-அப் கிட்டுடன் `காலா’ ஷூட்டிங்கில் பிஸியானார். `2018-ல நிச்சயம் அரசியல் பிரவேசம்தான்’ என இன்னமும் நம்பியிருக்கிறான் ஏழை ரசிகன்!

மெட்ரோ ரயில் வேலைகளால் மேடுபள்ளமானது சென்னை. பரபரப்புச் சாலையான அண்ணாசாலையில் திடீரெனப் பள்ளம் விழ, காரும் பஸ்ஸூம் பள்ளத்துக்குள் புரண்டது. வாகனங்களில் இருந்தவர்கள் பதறடியத்துப் பறக்க, நீண்ட நேரம் கழித்தே மீட்புப் பணிகள் ஆரம்பமாகின. திடீரெனத் தண்ணீர் வருவது, சிமென்ட் கலவை கொப்பளிப்பது, ஓட்டை விழுவது எனச் சாலைகளில் சர்க்கஸ் நடத்திக்கொண்டிருக்கின்றன மெட்ரோ ரெயில் பணிகள்!

தனியார் பாலில் கலப்படம் எனப் பொங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சரின் குற்றச்சாட்டைத் தனியார் பால் நிறுவனங்கள் மறுத்ததோடு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்குத்தொடுத்தன. ``புனே ஆய்வு நிறுவனத்துக்குத் தனியார் பாலை அனுப்பியிருக்கிறோம்’’ என அமைச்சர் சொல்ல, ஆய்வு நிறுவனமோ ``அப்படி எந்தப் பாலும் வரவில்லை’’ என மறுப்புச் சொன்னது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கக் கூடாது என அமைச்சருக்குத் தடா போட்டது நீதிமன்றம்!

சென்னையின் சாலைகள் மிகப்பெரிய மாற்றத்துக்குத் தயாராகின. விமான நிலையம் டு வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை டு சென்னை சென்ட்ரல் என 14,600 கோடி ரூபாய் செலவில், 45.1 கி.மீ நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதற்கிடையே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான ஆய்வுப் பணிகளும் தொடங்கப்பட, புதுப்பொலிவுக்குத் தயாராகிறது சென்னை.

மாலைகளும் மேளங்களுமாக இந்த ஆண்டு முழுக்க எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களிலேயே ஆட்சி நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. கட் அவுட்கள் வைப்பது முதல் முதலமைச்சரை வரவேற்கப் பள்ளி மாணவர்களை அழைத்துவருவது வரை விழாப் பொறுப்பாளர்களுக்கு கலவர அசைன்மென்ட்டுகள் கொடுக்கப்பட்டன. அனுமதியின்றி வைக்கப்பட்ட கட் அவுட்டால் கோவையில் இளைஞர் ஒருவர் மரணம் அடைய, விழா எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்தது. ஓகிப் புயலின்போதும் கொண்டாட்டத்திலேயே இருந்தார் முதல்வர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, இளவரசி இருவரும் கூட்டாக வெளியே ஷாப்பிங் போனதாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார் கர்நாடகக் காவல்துறை அதிகாரி ரூபா. சிறைத்துறை டி.ஜி.பிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகளை அனுபவித்தார் சசிகலா என்றும் அதிரவைத்தார். நடவடிக்கை எதுவும் எடுக்காமல் டி.ஜி.பியையும், புகார் சொன்ன ரூபாவையும் பணியிடமாற்றம் செய்து கடமையை நிறைவேற்றியது கர்நாடக அரசு!

தற்கொலையால் அதிர்ந்தது தமிழ்நாடு. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதாவின் டாக்டர் கனவு, நீட் தேர்வால் கலைந்துபோனது. நீட் தேர்வை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தியும் தோல்வியே கிடைத்ததால், மனமுடைந்த 17 வயது மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம், நீட்டுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்களைப் போராடவைத்தது.

சாதாரண ஜுரத்துக்கே டெங்குவோ எனப் பதறி மருத்துவமனைக்கு ஓடினான் தமிழன். டெங்குவால்
100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க, நிரந்தர நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தண்ணீரைத் தேக்கிவைக்கிறார்கள் எனப் பல குடியிருப்புகளுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தது சுகாதாரத்துறை. இந்த ஆண்டு 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் வருமா, வராதா என்கிற குழப்பமே தொடர்கிறது. “நவோதயா பள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம்ஸ்கிருதம் கற்றுத்தரப்படும் என்பதால், அதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் கல்வி கற்பிப்பதற்குப் போதுமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன” என, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியது தமிழக அரசு. நவோதயா பள்ளிகளைத் தொடங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் சொல்ல, இதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ட்விட்டரில் அரசியல் ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்த கமல், களத்துக்கும் வந்தார். எடப்பாடி தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தவர், அமைச்சர்களின் ஊழலை அம்பலப்படுத்த மெயிலில் புகார் அனுப்புங்கள் என்றார். பணமதிப்பிழப்பு நீக்க விவகாரத்தில் மோடியை ஆதரித்ததற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் அறிவித்தார். பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் என முதல்வர்களுடன் நட்புக் கூட்டணியில் இருக்கும் கமல், விரைவில் தேர்தல் கூட்டணிக்கும் வருவார் என்பது எதிர்பார்ப்பு!

ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி முதல்முறையாக முரசொலி அலுவலகம் வந்தார். பவள விழா புகைப்படக்கண்காட்சியைப் பார்வையிட்டது, பேரனுடன் கொஞ்சி விளையாடியது, அறிவாலயம் வந்தது என 93 வயது கருணாநிதி மீண்டும் ஆக்டிவ் ஆகிறார் எனக் கொண்டாடினார்கள் உடன்பிறப்புகள். மோடி முதல் ராகுல்காந்தி வரை அனைத்துத் தலைவர்களும் அவரை வீட்டுக்கு வந்து சந்தித்து நலம் விசாரித்தனர்!

கன்னியாகுமரியைப் புரட்டிப்போட்டது ஓகி புயல். புயலின் தாக்கத்தால் ஏராளமான மரங்கள், ரப்பர், வாழைத் தோட்டங்கள் அழிவைச் சந்தித்தன. புயல் சின்னம் உருவாவதற்கு முன்பே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் உயிரிழக்க, இன்னும் பலபேர் வீடு திரும்பவில்லை. மீனவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. புயல் பாதிப்புகள் ஏற்பட்டு 12 நாள்களுக்குப் பின் கன்னியாகுமரி வந்தார் முதல்வர். குஜராத் தேர்தலை எல்லாம் முடித்துவிட்டு மீனவர்களைச் சந்திக்க வந்த பிரதமர் மோடி, புகைப்படக் கண்காட்சியைப் பார்த்துவிட்டுப்போனது எரிச்சல் கிளப்பியது.

ஆணவக் கொலையாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது திருப்பூர் சிறப்பு நீதிமன்றம். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர்-கெளசல்யா காதல் திருமணம் செய்துகொண்டார்கள். வேறு சாதி இளைஞனைத் திருமணம் செய்த மகளை வெட்டிக்கொல்ல, கெளசல்யாவின் தந்தையே கூலிப்படையை அனுப்ப, சங்கர் கொல்லப்பட்டார். கெளசல்யா உயிர்பிழைத்தார். கொலையாளிகளுக்கு எதிராக சட்டப்போராட்டதை மேற்கொண்ட கெளசல்யாவுக்கு நீதி கிடைத்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 6 பேருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

கொள்ளையர்களைப் பிடிக்கப்போன இடத்தில் மரணமடைந்தார் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன். சென்னையில் நடைபெற்ற நகைக்கடைக் கொள்ளைச் சம்பவக் குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் போன காவல்துறைக் குழுவில் பெரியபாண்டியனும் ஒருவர். நள்ளிரவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக போலீஸ் உள்ளே போக, அங்கு நடந்த சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார் பெரியபாண்டியன். மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டுதான் பெரியபாண்டியனைக் கொன்றது என ராஜஸ்தான் காவல்துறை சொல்ல, விசாரணை தொடர்கிறது!

அப்போலோவில் சிகிச்சையில் இருக்கும்போதும், இறந்து ஓர் ஆண்டு ஆன பிறகும் வெளிவராத ஜெயலலிதாவின் மருத்துவமனை வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு வெளியானது. டி.வி பார்த்தபடி பழச்சாறு அருந்தும் அந்த 20 நொடி வீடியோவை தினகரன் தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோவின் மூலம் மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்பதும் அவருடைய கால்கள் அகற்றப்படவில்லை எனவும் பரபரப்பானது. அந்த, வீடியோவே போலியானது என்கிற குரல்களும் ஒலித்தன!

தி.மு.க-வை அசைத்துப்பார்த்த 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையுமே விடுதலை செய்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போதைய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.ஆனால், குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ அதிகாரிகள் நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்று கூறி, அத்தனை பேரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டது நீதிமன்றம்!