Published:Updated:

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

Published:Updated:
ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

ஆர்.கே.நகர்... அதிசய நகராகத் தேர்தல் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘6 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்... 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்போகிறார்கள்... ஜனநாயகம் தோற்றுவிட்டது... தேர்தல் ஆணையம் தூங்கிவிட்டது’ என எப்படிப் பேசினாலும், சுயேச்சை வேட்பாளர் தினகரன் பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல. அதன் சூட்சுமம் என்ன?

தீயாய் வேலை பார்த்த தினகரன் அணி!

தினகரனுக்கு குக்கர் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட 20 நிமிடங்களில், அவரின் ஆதரவாளர்கள் 20 பேர் குக்கர்களுடன் தேர்தல் அலுவலகத்தில் வந்து நின்றனர். அடுத்த 2 மணி நேரத்தில், தொகுதி முழுவதும் குக்கர் சின்னம் பிரபலமாகிவிட்டது. சின்னம் ஒதுக்கிய நாளில் தினகரன் ஆட்களுக்கு இருந்த உற்சாகம், அவர் வெற்றிபெற்ற சான்றிதழைத் தேர்தல் அதிகாரியிட மிருந்து வாங்கும்வரை அப்படியே தொடர்ந்தது. தொகுதியில் மொத்தம் 256 வாக்குச்சாவடிகள். எந்தத் தெருவில் இருப்பவர்கள், எந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்கள் என்பதை முதலில் கணக்கெடுத்தனர். அதை, மார்ச் மாதம் இடைத்தேர்தல் அறிவித்தபோதே கணக்கெடுத்து வைத்திருந்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 250 முதல் 300 ஓட்டுகள் பதிவாக வேண்டும்; அப்படிப் பதிவானால், எளிதாக 78 ஆயிரம் ஓட்டுகள் வாங்கலாம் என்பது கணக்கு! அதை நோக்கியே தினம் தினம் வேலை பார்த்தது தினகரன் டீம். காலையில் இரண்டு பகுதிகளில் பிரசாரம்... இரவில் இரண்டு பகுதிகளில் பிரசாரம் என்று கணக்குப்போட்டு, கடந்த 17 நாள்களில் ஆர்.கே. நகரில் உள்ள சந்து பொந்துகள் என அத்தனை இடங்களிலும் வலம் வந்தார் தினகரன்.

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

25 பேருக்கு ஒருவர்!

தினகரனுக்காக தென் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஆர்.கே. நகருக்குள் இறக்கிவிடப்பட்டனர். 25 பேருக்கு தலா ஒரு நிர்வாகி என்ற வீதம் தினகரன் நியமித்தார். ஒரு நிர்வாகிக்குக் கீழ் குறைந்தது மூன்று தொண்டர்கள் இருப்பார்கள். பிரசாரம் செய்வது முதல், பரிசுப்பொருள்களைக் கொண்டு சேர்ப்பது வரை இந்த 25 பேருடன் நெருக்கமாகிவிட வேண்டும். இதுதான் டாஸ்க்! தேனியிலிருந்து பிரசாரத்துக்குச் சென்ற தினகரன் ஆதரவு நிர்வாகி ஒருவரது காரை போலீஸார் பறிமுதல் செய்தார்கள். அதை அறிந்துகொண்ட 25 பேரில் ஒருவர், தனது டூவீலரைப் பிரசாரத்துக்காகக் கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்படி அந்த 25 பேரின் குடும்பங்களில் ஒருவராகவே மாறியிருக்கிறார்கள் தினகரன் தரப்பினர்.

எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள், அ.தி.மு.க-வினர், மாற்றுக் கட்சிக்காரர்கள் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனித்தார்கள். தினகரனின் சித்து வேலைகளை எந்த வகையிலும் அரசாங்கத்தால், போலீஸால் கட்டுப்படுத்த முடிய வில்லை. தினகரன் தரப்பினர் பணத்துக்குப் பதிலாக 20 ரூபாய் நோட்டை டோக்கனாகக் கொடுத்ததாகச் செய்திகள் வெளியாகின. அதன்படி, அந்த 20 ரூபாய் டோக்கனைத் தேர்தல் முடிந்த பிறகு கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம். ‘‘பணத்துக்கு நாங்கள் பொறுப்பு’’ என நிர்வாகிகள் தங்கள் போன் நம்பர்களைக் கொடுத்துள்ளனர். ‘கையில் கிடைத்ததைவிட, கிடைக்கப் போகும் விஷயத்துக்கு மதிப்பு அதிகம் அல்லவா?’ அதுதான் வேலை செய்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

‘சந்தோஷ’ சசிகலா

பெங்களூரு சிறையில் மனிதர்களைக் கடந்து சசிகலா அதிக நம்பிக்கையுடன் வணங்குவது சிவனைத்தான். இதற்காகவே, சிறை நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று சிறு வடிவிலான சிவலிங்கத்துக்குப் பூஜை செய்துவரும் சசிகலா, டிசம்பர் 24-ம் தேதி சிவ பூஜையை முடித்துவிட்டு,  எம்.ஜி.ஆர் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ஆர்.கே. நகர் தேர்தல் வாக்கு முன்னிலை விவரத்தை டி.வி-யில் ரசித்துள்ளார். உற்சாக மூடில் இருக்கும் சசிகலா,   ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றியை, கிறிஸ்துமஸ் விழாவுடன் சேர்த்துக் கொண்டாடி சிறை வட்டாரத்தை மகிழ்வித்துள்ளார். எப்படி? சசியை கவனித்துக்கொள்ளும் மூவர் டீம் (வினோத், ஆனந்த், மற்றொரு வினோத்), தினகரனின் வெற்றியைச் சிறை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடியது. 

‘சசிகலாவை 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்’ என்ற சிறை விதிமுறை யின்படி, டிசம்பர் 29-ம் தேதி தினகரன் சசிகலாவைச் சந்திக்க வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிறப்பு அனுமதி பெற்று 27-ம் தேதியே பார்க்க தினகரன் தரப்பு முயற்சி செய்து வருகிறது.

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

தோல்வியை எதிர்பார்க்காத மது!

‘தினகரன்தான் வெற்றிபெறுவார்’ என இரண்டாவது உளவுத்துறை அறிக்கை போகும்வரை ஆளும்தரப்பு மிக மந்தமாகத்தான் இருந்தது. பிறகு, ‘பணம் கொடுத்து தினகரனைத் தடுக்கலாம்’ என்று களமிறங்கியது. ஆர்.கே. நகரில் அன்றைக்குத்தான் பணம் ஆறாக ஓடியது. ஒவ்வொரு வீட்டுக்கும் ‘6 ஆயிரம்’ என்று தேடித் தேடிக் கொடுத்தனர். அதில் சுதாரித்துக் கொண்ட தினகரன் தரப்பு, அதற்கு முன்பு கொடுத்திருந்த 4,500 ரூபாயை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது. டோக்கன் வந்தது. தினகரன் அணி கொடுத்த வாக்குறுதியை ஆர்.கே. நகர் மக்கள் நம்பினர்; அதைவிட முக்கியம், ஆளும்தரப்பு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நம்பவில்லை என்பது!

‘‘இப்படி ஒரு தோல்வியைக் கண்டிப்பாக எதிர் பார்க்கவில்லை’’ என்று மதுசூதனன் நம்மிடம் சொன்னார். ‘‘அ.தி.மு.க ஓட்டு, எங்கயும் போகலை. அது எப்பவும் போல இரட்டை இலைக்குக் கிடைச்சிருக்கு. இத்தனை கட்சிகளைக் கூட்டணியில வெச்சுக்கிட்டும், தி.மு.க இவ்வளவு மோசமா தோக்குதுன்னா அதுக்கு என்ன காரணம்? தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சியை, சின்னத்தை எதிர்த்து கருணாநிதி கட்சியுடன் ரகசியக் கூட்டு வைத்துக்கொண்டு, தினகரன் பெற்ற வெற்றியை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பணமும் துரோகமும் ஒரே தராசுத் தட்டில் வைக்கப்பட்டிருக் கிறது’’ என்றார் அவர்.

ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடிய சசிகலா!

கோட்டை விட்ட தி.மு.க!

அற்புதமான வாய்ப்பை தி.மு.க கோட்டை விட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளர் மருது கணேஷ் அநாதையாக விடப்பட்டதைப் போலத்தான் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு கொடுத்த அளவுக்குக்கூட, தி.மு.க-வினர் எந்தப் பகுதியிலும் மருது கணேஷை வரவேற்கவில்லை; கூட்டணிக் கட்சியினர் தேர்தல் வேலை பார்த்த அளவுக்குக்கூட, தி.மு.க-வினர் வேலை பார்க்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்  அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுச்சென்றனர். ‘‘எப்படியும் தேர்தல் நின்றுவிடும். வீணாக நாம் பணத்தைச் செலவு செய்து வேலை பார்க்க வேண்டாம்’’ என்று உறுதியான தகவல் தலைமையிலிருந்து வந்தது எனச் சொல்லி அதையே நம்பிக்கொண்டிருந்தனர் அவர்கள். 

ஆர்.கே. நகரில் தினகரனின் வெற்றிக்காக மட்டும் குக்கர் விசில் அடிக்கவில்லை; தி.மு.க-வின் தூக்கத்தைக் கலைக்கவும் சேர்த்துத்தான் விசில் அடித்துள்ளதுபோல! 

- ஜோ.ஸ்டாலின், ந.பா.சேதுராமன், எம்.கணேஷ், எம்.வடிவேல்
படங்கள்: வீ.நாகமணி

கிருஷ்ணப்ரியா விளக்கம்!

ஜூ
னியர் விகடன் 27.12.17 தேதியிட்ட இதழில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் பேட்டி வெளிவந்தது. அதில், ஜெயலலிதா வீடியோ வெளியானது குறித்த பதிலில், “ஓ.பி.எஸ் ‘அம்மாவின் மரணத்துக்கு விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும்’ என்று வலியுறுத்தி வந்தார். அந்த நேரத்தில் பெங்களூரு சிறைச்சாலைக்கு சென்று நான், என் சகோதரி ஷகிலா, சகோதரர் விவேக் ஆகிய மூவரும் சசிகலா அத்தையைச் சந்தித்தோம். அப்போது, ‘அம்மாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று பேசி வருகிறார்கள், அதனால், இந்த வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்து வைக்கவும். தேவைப்பட்டாலும் படலாம்’ என்று சசிகலா அத்தை எங்களிடம் கூறினார்கள். எனவே, என் சகோதரர் விவேக் அந்த வீடியோவை காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்தார்” என்று வந்திருக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணப்ரியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism