
புதுடெல்லி: ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரரருமான நவஜோத் சிங் சித்துவை பிஜேபி ஓரங்கட்டிவிட்டதாக, சித்துவின் மனைவி நவஜோத் கவுர் சித்து குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக உறுதியான நிலையில் தனது கணவர் இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவருக்கு பிஜேபி நெருக்கடி தந்துவருவதாகவும் கவுர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
சித்து நேர்மையானவராகவும், ஊழல் எதிர்ப்பாளருமாக இருப்பதை, அவர் அங்கம் வகிக்கும் பிஜேபி விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் கூட்டணியை நோக்கி பிஜேபி அம்புகளை வீசிவரும் நிலையில், சித்து மனைவியின் இந்தக் குற்றச்சாட்டுகள் பிஜேபி தலைவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு, பிஜேபியின் தேசிய நிர்வாகக் குழுவில் பொறுப்பு கிடைக்கும் என்று சித்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.