2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 டாப் 10 பிரச்னைகள் - உரிமைக்குரல்

2017 டாப் 10 பிரச்னைகள் - உரிமைக்குரல்
பிரீமியம் ஸ்டோரி
News
2017 டாப் 10 பிரச்னைகள் - உரிமைக்குரல்

அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர்

2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை

2017 டாப் 10 பிரச்னைகள் - உரிமைக்குரல்

சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

ல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், நீட், ஜி.எஸ்.டி, டாஸ்மாக், நியாயவிலைக் கடைகள், அனிதாவின் தற்கொலை, விவசாயிகளின் பல்வேறு போராட்டங்கள் என இந்த ஆண்டு, மக்கள் தங்களின் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாகவே போராட்டங்களைப் பற்றி விவாதித்தார்கள்; அவற்றில் பங்கெடுத்தார்கள்.

அரசியல் உணர்வு பெற்ற ஓர் இளம் தலைமுறை, சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களின்  வழியே ஒருங்கிணைக்கப்பட்டு வீதிகளில் அணிவகுத்து நின்றது.  சமூகத்தின் பொதுக் கோரிக்கைகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு வீதிகளில் மக்கள் களம் கண்டது, கொண்டாட வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணம்தான்.

தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதுமே போராட்டங்கள் ஏகமாக நடந்தன. குஜராத்தின் உனா எழுச்சி, தமிழக விவசாயிகள் ஜந்தர்மந்தரில் நிகழ்த்திய போராட்டங்கள், டெல்லியில் திரண்ட மூன்று லட்சம் விவசாயிகள், ஜி.எஸ்.டி-க்கு எதிராகக் குஜராத்தில் குரல் எழுப்பிய ஜவுளி உற்பத்தியாளர்கள், வன உரிமை மீட்கப் போராடிய பழங்குடிகள் என இவையும் இந்த தேசம்  இதற்குமுன் கண்டிராத உக்கிரத்துடன் சமகாலத்தில் நடந்தேறின.

 உலகம் முழுவதும் உலகமயத்தின் விளைவாக மக்கள் நலனைத் தங்களின் கடமையாகக்கொண்டு செயல்பட வேண்டிய  அரசுகள் மெல்ல மெல்ல உருமாறி கார்ப்பரேட் சேவை மையங்களாகவே தங்களை மாற்றிக்கொண்டன. மக்கள்நலன் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் அளவிற்குப் பெரு முதலாளிகளின் கைப்பாவையாக அரசுகள் செயல்படுவது மிகவும் வருத்தமான விஷயம்.

2017 டாப் 10 பிரச்னைகள் - உரிமைக்குரல்

மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசும் அதிகாரிகளும்தான்,  போராட்டங்களை மக்கள் தங்கள் கையில் எடுக்கக் காரணம். செவிலியர்கள்  தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினால், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போராட்டக்களத்தின் மின்சாரத்தைத் துண்டிப்பது, தண்ணீரை நிறுத்துவது, கழிவறையைப் பூட்டுவது என அராஜமாக நடந்துகொள்ளும் கந்துவட்டிக்கார்களின் கொடூர புத்தி ஓர் அரசிற்கு எப்படி வந்தது.  ஓர் அரசு இப்படியான கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடலாமா?

ஊன்றிக் கவனித்தால், இதே அணுகுமுறையைத்தான் நம் அரசு ஒவ்வொரு போராட்டத்திலும் பின்பற்றுகிறது. போராட்டக்காரர்கள்மீது உளவுத் துறையும் காவல்துறையும் ஏவும் அடக்குமுறைகள் இன்னும் கொடுமையானவை. கடந்த சில ஆண்டுகளாகப் போராடுகிறவர்கள், அரசுக்கு எதிராகப் பேசுகிறவர்கள், அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் உடனடியாக அதிரடியாகத் தேசவிரோதிப் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு உகந்ததா?

தமிழகத்தில் போராட்டங்களை ஒருமுகப்படுத்த ஒரு வலுவான அரசியல் தலைமை இல்லாத வெற்றிடத்தை இந்தக் காலங்களில் உணர முடிந்தது. தமிழகத்தை வழிநடத்திய இரண்டு தலைமைகள் செயலிழந்து நிற்பதும், அந்த வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதும், அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பலர் முனைவதும், மக்கள் மத்தியில் ஒரு பெரும் சோர்வை உருவாக்கியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வியடைந்துவிட்டதா, அல்லது அரசியல்வாதிகளும் அரசதிகாரமும் அதைத் தோல்வியடையச் செய்துவிட்டனவா என்பதை நாம் ஆராய வேண்டிய தருணமிது.

அதேநேரம், இந்த வரலாற்றுத் தருணத்தில் மிஸ்டர் பொதுஜனம் வேடிக்கை பார்த்ததும் நிகழ்ந்தது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், தலித்துகளின் மீதான வன்கொடுமைகள் என்கிறபோது சமூக ஊடகங்களில் பகிர்வது, லைக் போடுவது என்பதில்கூடத் தொடர்பு எல்லைக்கு வெளியே வசதியாய் சிலர் அமர்ந்திருந்தார்கள் என்பது இதே காலத்தின் துரதிஷ்டம்.