2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 டாப் 10 பிரச்னைகள் - வரும்... ஆனா, வராது!

2017 டாப் 10 பிரச்னைகள் - வரும்... ஆனா, வராது!
பிரீமியம் ஸ்டோரி
News
2017 டாப் 10 பிரச்னைகள் - வரும்... ஆனா, வராது!

ஜோதிமணி, அரசியல் செயற்பாட்டாளர்

2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

`வரும்... ஆனா, வராது’ எனும் காமெடியாகவே இருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். 2016 அக்டோபரில் நடக்க

2017 டாப் 10 பிரச்னைகள் - வரும்... ஆனா, வராது!

வேண்டிய தேர்தல் இன்னும் நடந்தபாடில்லை.

பஞ்சாயத்ராஜ் சட்டம் வருவதற்கு முன்பு மாநில அரசுகள் விரும்பினால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்; இல்லாவிட்டால் பலவருடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலேகூட விட்டுவிடலாம். தமிழகத்தில் 1996-ம் ஆண்டிற்கு முன்பு பல ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை, தேர்தலைப் பதினாறு முறை தள்ளிவைத்த வரலாற்றுச் சாதனையும் நம் கைவசம்தான்.இதோ, இப்போது மீண்டும் ஓராண்டாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.

குடிதண்ணீர் கிடைக்காத, குப்பை அள்ளாத, சாக்கடைகள் வழிந்தோடும், கொசுக்கள் குதூகலிக்கும், தெருவிளக்குகள் எரியாத ஒரு இருண்டகாலம் இங்கே இருந்தது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வரும் நிதி முடிந்தவரை மாவட்ட அளவிலேயே சுரண்டப்பட்டு, போனால் போகிறதென்று கொஞ்சம் ஊராட்சி ஒன்றியம் வரை எட்டிப் பார்க்கும். இந்த நிலையை மாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் பஞ்சாய்த்ராஜ் சட்டம்.

இச்சட்டம் உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமல்ல, அவற்றைத் தேர்ந்தெடுக்கும் மக்களை அதிகாரப்படுத்தும் `கிராமசபை’ என்ற பலம் பொருந்திய அம்சத்தையும் உள்ளடக்கியிருந்தது. அத்தோடு, உள்ளாட்சி அமைப்புகள்  சமூகத்தில் பலம்பொருந்திய வர்களின் கைப்பாவையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு தலித்துகள், பெண்கள், மலைவாழ் மக்கள் இவர்களுக்கான 54% இட ஒதுக்கீடு அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாகவும் இருந்தது.

2017 டாப் 10 பிரச்னைகள் - வரும்... ஆனா, வராது!

இச்சட்டத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல்களைக் கட்டாயம் நடத்தியாக வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தேர்தலை ஆறு மாதகாலம் மட்டுமே தள்ளி வைக்கமுடியும். அதற்கு மேல் தள்ளிவைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இப்போது தமிழக அரசு செய்துகொண்டிருப்பது அதைத்தான்!

மழை, வறட்சி  ஆகிய இரண்டு காலங்களையும் எதிர்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி முக்கியமானது.உள்ளாட்சி அமைப்புகள் முழுக்கச் செயலிழந்திருப்பதால் வெள்ளம், வறட்சி, டெங்கு என்று தமிழக மக்கள் தொடர்ந்து சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகான  அரசியல்  சூழலில், தேர்தலை எதிர்கொண்டு  வெற்றிபெறக்கூடிய தலைமையின்மை, ஆளுங்கட்சிமீது நிலவும் அதிருப்தி எனப் பல காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்படுகிறது. இதனால் இழப்பு மக்களுக்குத்தான்.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் மிக முக்கியமானது. அதிலும் மக்களின் அன்றாடப் பிரச்னைகளோடு தொடர்புடைய உள்ளாட்சித் தேர்தல் அதிமுக்கியமானது. அரசியல் சாசனம், நீதிமன்றம், மக்கள் மன்றம் எதையும் ஒரு பொருட்டாக மதிக்காத அரசுகள், அரசியல் கட்சிகளை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தல் நடக்காவிட்டாலும் கிராமசபையைக் கூட்டுகிற அதிகாரம் மக்களுக்கு உண்டு. தற்போது உள்ளாட்சி நிர்வாகத்துக்குப் பொறுப்பாக உள்ள செயல் அலுவலர்கள் கிராமசபையைக் கூட்டாவிட்டால், அவர்களைக் கூட்டுமாறு நிர்ப்பந்திக்க முடியும்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மக்கள் கிராமசபையைக் கூட்டி இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டிக்க வேண்டும்.

அரசுகள், அதிகாரம் எதுவும் மக்களைவிடச் சக்தி வாய்ந்ததல்ல. இதுதான் பஞ்சாயத்ராஜ் சட்டத்தின் அடிப்படைச் சித்தாந்தம்.