
பொறியாளர் சுந்தர்ராஜன், சமூக ஆர்வலர்
2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
ஒரே ஆண்டில் வரலாறு காணாத வறட்சியும் வரலாறு காணாத வெள்ளமும் நிகழும் விநோத மாநிலமாக

இருக்கிறது தமிழ்நாடு.
அதிகாரவர்க்கத்தின் தலையீட்டையும் உதவியையும் கோரி, அவர்களது கவனம் ஈர்க்க டெல்லியில் மையம்கொண்டு தம்மைப் பல இழிவுகளுக்கும் உட்படுத்திக் கொண்டார்கள் தமிழக விவசாயிகள். நிர்வாணப் போராட்டம் தொடங்கி மலம் தின்னுவது வரையில் மத்திய அரசின் கவனம் ஈர்க்கத் தமது மாண்பைத் தாரை வார்த்தார்கள்.
விவசாயிகளின் பிரச்னைக்கு, அதிகார வர்க்கம் எளிதில் சொல்லக்கூடிய காரணமாக வறட்சி இருக்கிறது. காவிரிநீர் பிரச்னையும், மழை பொய்த்துப் போவதும்தான் வறட்சியா? இவை இரண்டும் தீர்ந்துவிட்டால் நமது வறட்சி என்னும் பிரச்னை தீர்ந்துவிடுமா?
தமிழகத்தில் இன்று நிலவும், இனி வரப்போகும் வறட்சிக்கு ஒற்றைக் காரணமென்று எதையும் சொல்லிவிட முடியாது.
`சோறுடைத்த நாடு’ என்று பெயர் பெற்ற சோழ நிலத்தை இன்று `போர்’ சூழ்ந்து நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய மீத்தேன் திட்டத்திற்கு எதிராகப் போராட, மக்கள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள். `ஹைட்ரோகார்பன்’ பெயரில் திட்டம் மாறி வந்தால் தம் நிலத்தடி நீர் பாழாகி விவசாயம் பாதிக்கப்படும் என்கிற அவர்களின் பயத்தில் நியாயம் இருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மாசுபடுவதால் உண்டாவதும்கூட வறட்சிதான்.

அந்த வறட்சி இயற்கையானதா, செயற்கையானதா? கடலூர் வெள்ளாற்றில் 2004 முதல் இயங்கி வரும் மணல் குவாரிகள் 3 அடி ஆழத்திற்கு மட்டும் மணல் எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருக்கின்றன. ஆனால், 30 அடி ஆழம் தோண்டி மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் 250 அடிக்கும்கீழ் இறங்கிவிட்டது. விவசாயத்துக்காக அமைக்கப்பட்டிருந்த 2,500 ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்பட்டுவிட்டன. வரலாறு காணாத வறட்சியில் வாடிக்கொண்டிருக்கிறது வெள்ளாறு. இப்போது அது ஆறு இல்லை, வெறும் கட்டாந்தரை.
பல வருடங்களாகத் தமிழகம் முழுவதும் நடந்துவரும் மணல் கொள்ளையின் பாதிப்புகளை, இன்று தமிழகம் வறட்சி என்கிற வடிவத்தில் எதிர்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைக் கணக்கிட்டால் 1,587 கன அடி வரை இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் தேவை 1,894 கன அடி. இதில் அதிக சதவிகிதம் பாசனத்துக்கும், மற்றவை தொழிற்சாலை, குடிநீர் போன்றவற்றுக்கும் போகும்.
சில மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்து வைத்திருக்கிறோம் நமது நீர் நிலைகளை? சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் 39,000 ஏரிகள் இருந்திருக்கின்றன. ஆனால், இன்று இருப்பது எத்தனை ஏரிகள் என எளிதில் எண்ணிவிடலாம். ஏரிகள் கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான முறையில் ஆக்ரமிக்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளமும் வெயிலும் அதீதமாய் இருப்பதன் பின்னணியில் பருவ நிலை மாற்றம் இருப்பதை நாம் மறுக்க முடியாது. தமிழகத்தில் நீர்மேலாண்மை பல பிரச்னைகளை எதிர்நோக்கியிருக்கிறது.
ஏரிகள், ஆறுகளிலுள்ள ஆக்ரமிப்பை அகற்றுவதும் தூர்ந்து போயிருக்கும் நீர்நிலைகளில் தூர்வாருவதும் அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய பணிகள். இதைச் செய்ய முடியாத அரசுதான் நதிநீர் இணைப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது.