2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 டாப் 10 பிரச்னைகள் - கீழடியைப் பாதுகாப்போம்!

2017 டாப் 10 பிரச்னைகள் - கீழடியைப் பாதுகாப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
2017 டாப் 10 பிரச்னைகள் - கீழடியைப் பாதுகாப்போம்!

சு.வெங்கடேசன், எழுத்தாளர்

2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

வைகை மற்றும் மதுரை ஆகிய இரு சொற்களும் தமிழ்ச் சமூகத்தின் ஆதிநினைவை சுட்டுபவை. ஆனால்

2017 டாப் 10 பிரச்னைகள் - கீழடியைப் பாதுகாப்போம்!

நீண்ட நெடுங்காலம்  வைகைக் கரையிலோ அல்லது மதுரையை மையப்படுத்தியோ விரிவான அகழாய்வு எதுவும் நிகழ்த்தப்படவில்லை. இக்குறையை அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழு 2015-ம் ஆண்டு போக்கியது. வைகைக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில்  அகழாய்வினை செய்து சங்ககால நகர அமைப்பினைக் கண்டறிந்தனர்.

கண்டறியப்பட்ட கட்டுமானங்களும், பல்லாயிரம் பொருள்களும் செழிப்புற்றுத் திகழ்ந்த  சங்ககால நாகரிகத்தின் சாட்சியங் களாக விளங்கின. இக்கண்டுபிடிப்புகள் தமிழக மற்றும் தென்னிந்திய வரலாற்றின் ஒளிபொருந்திய பகுதியை நினைவூட்டுவதாக அமைந்தன.

கீழடி தன்னுள்ளிருந்த ஆதாரத்தின் வழியே தனது எதிரிகளை நோக்கிக் கண்டுபிடிப் பாளர்களை அழைத்துச் சென்றது. வேதவழிப்பட்ட வரலாற்றையே இந்திய வரலாறாகக் கட்டமைக்க நினைப்பவர்களுக்கு கீழடியின் கண்டுபிடிப்புகள் இசைவாக இல்லை. எனவே, 2017-ம் ஆண்டு அகழாய்வுக்கான அனுமதியை அவர்கள் வழங்கத் தயாராக இல்லை. பல்வேறு காரணங்களைச்சொல்லி ஆய்வினை முடிவுக்குக் கொண்டுவர முயன்றனர்.

ஆனால், தமிழகத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அனுமதிதர வேண்டிய நிலை உருவானது. அனுமதியை வழங்கிய கையோடு ஆய்வின் பொறுப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தனர். புதிய பொறுப்பாளராக ஸ்ரீராமன் என்பவரை நியமித்தனர். அவர் ஏழு மாத காலம் அகழாய்வு நிகழ்த்தியதாகக் கூறி அறிக்கை ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார். அவ்வறிக்கையில் “கீழடியில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை” என்ற முடிவினை அறிவித்தார். அம்முடிவின் அடிப்படையில் கீழடி அகழாய்வுப்பணியை மத்திய தொல்லியல் துறை முடித்துக் கொண்டது.

2017 டாப் 10 பிரச்னைகள் - கீழடியைப் பாதுகாப்போம்!

அகழாய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்று நிரூபிக்க என்னனென்ன வழிகளுண்டோ அத்தனை வழிகளையும் கடைப்பிடித்து ஆய்வினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். 2015-2016 ஆண்டுகளில் 102 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், 2017-ல் தோண்டப்பட்டதோ வெறும் எட்டு குழிகள் மட்டும்தான். அந்த எட்டுக் குழிகளில் ஒன்று கூட இயற்கை மண்படிவம்  ( Virgin soil ) வரை தோண்டப்படவில்லை. அதாவது, ஒரு குழியைக்கூட முழுமையாகத் தோண்டவில்லை.

2016-ல் கண்டறியப்பட்ட தொழிற்கூடம் போன்ற பகுதியின் கட்டட அமைப்பின் தொடர்ச்சி தென்திசை நிலத்துக்குள் அமைந்திருந்தது. அதன் தொடர் கட்டட அமைப்பைக் கண்டறிய வேண்டுமென்றால் அத்திசையில் அகழாய்வுக்குழியை அமைத்திருக்க வேண்டும். ஆனால், தென் திசையில் ஒருகுழிகூட அமைக்காமல், நேர் எதிராக வடதிசையில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டினர்.

அதாவது `கீழடி அகழாய்வுக்கு அனுமதி கொடுக்க மறுத்தால்தானே நீங்கள் பிரச்னையை உருவாக்குவீர்கள். அனுமதி கொடுத்துவிட்டுத் தோண்ட மறுத்தால் என்ன செய்வீர்கள்?’ என்பதுதான் மத்திய அரசும், ஆய்வாளர்களும் உருவாக்கிக்கொண்ட தந்திரம்.

உலகின் மிகப் பழைமையான இலக்கிய தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதார நிலம் கீழடி. இந்துத்துவா அரசியல், முழுவிசையோடு வரலாற்றின் கட்டமைப்புகளைக் குலைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கீழடியைப் பாதுகாப்பதும், அதன் ஆய்வினை அறிவியல்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதும் மிக முக்கியம்.