2017 ஸ்பெஷல்
Published:Updated:

2017 டாப் 10 பிரச்னைகள் - கனவுலகின் சூப்பர் ஸ்டார்கள்!

2017 டாப் 10 பிரச்னைகள் - கனவுலகின் சூப்பர் ஸ்டார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
2017 டாப் 10 பிரச்னைகள் - கனவுலகின் சூப்பர் ஸ்டார்கள்!

சுபகுணராஜன், எழுத்தாளர்

2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

மிழ் சினிமாவின் `சூப்பர் ஹீரோயிஸம்’ ஒரு வரலாறு காணாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

2017 டாப் 10 பிரச்னைகள் - கனவுலகின் சூப்பர் ஸ்டார்கள்!

தமிழகத்தில் உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்ப `நான்தான் தகுதியானவன்’ என்கிற எண்ணத்தோடு ஏராளமான நடிகர்கள் இந்த ஆண்டு அரசியல் பேச்சுகளோடு இறங்கியிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் தன் ரசிகர்களையெல்லாம் அழைத்துக் கூட்டம் போட்டார். செல்ஃபி எடுத்துக்கொண்டார். `போர் வரட்டும்’ என்றார். பிக்பாஸ் மேடையைத் தன் அரசியல் என்ட்ரிக்கான மேடையாக மாற்றினார் கமல் ஹாசன். படம் தவறாமல் க்ளைமாக்ஸ் காட்சிகளில் மைக் பிடிக்கிறார் விஜய். `மெர்சல்’ வரைக்கும் அது தொடர்கிறது. 

நெருப்பாற்றில் நீந்த இதோ களம் கண்ட விஷால் கதை, அய்யோ பாவம்! நுழையும் போதே பின் கதவு திறந்து வீழ்ந்துவிட்டார்.

எல்லோருக்குமே எம்.ஜி.ஆர் ஆவதுதான் கனவு. ஆனால், எம்.ஜி.ஆர் ஆவது அத்தனை சுலபமல்ல. ஒரு நடிகராக எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் சிவாஜி கணேசன். ஆனால், அவரால் அரசியலில்
எம்.ஜி.ஆரைக் கடைசிவரை நெருங்க முடியவில்லை. இத்தனைக்கும் திராவிடக்கட்சி பயிற்சி,தேசியக் கட்சித் தலைமையிடம் நெருக்கம், தமிழ் மற்றும் ஒரு பெரும்பான்மை சாதி அடையாளம் என சிவாஜிகணேசனுக்கு எல்லா பலமும் இருந்தன.  ஆனால், எதுவுமே அவரை  எம்.ஜி.ஆர் ஆக்கிவிடவில்லை.

எம்.ஜி.ஆர் தேசியத்திலிருந்து திராவிடம் வந்து, அங்கும் ‘அயலாள்’ என்ற அடையாளத்தோடு தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு தலைமையை எட்டியவர். கட்சியால் அவர் வளர்ந்ததை ரகசியமாக்கி, கட்சி வளர்த்த ‘கதையை’ மட்டுமே முதன்மையாக்கி வென்றவர். அதையும் தனிக்கட்சி கண்டுதான் செய்து முடிக்க வேண்டியதானது. அதை நிகழ்த்த `இருபது ஆண்டு’க்கால உழைப்பு வேண்டியிருந்தது.

2017 டாப் 10 பிரச்னைகள் - கனவுலகின் சூப்பர் ஸ்டார்கள்!

எம்.ஜி.ஆர் ஒரு மேடையில் நடிகர் பாக்யராஜைத் தனது `கலையுலக வாரிசு’ என கவனமாக அறிவித்தார்.ஆனால், பாக்யராஜ் அதை  ‘அரசியல் வாரிசு’ என்பதாகப் புரிந்துகொண்டு கட்சி ஆரம்பித்துப் பட்ட துன்பங்களைத் தமிழ்நாடே அறியும். எம்.ஜி.ஆர் ஆகும் ஆசையோடு களமிறங்கிய டி.ராஜேந்தரும் சரத்குமாரும்கூட அரசியலில் பிரகாசிக்க முடியாமல் இப்போதும் போராடும் நட்சத்திரங்கள்தானே!

இந்தத் தோல்விக்கதைகளால் அரசியல் வேண்டாம் என யாரையும்  ஓடச் சொல்லவில்லை. 2021-க்கு இப்போதே ஆரம்பிக்கலாம். கிராமம் வரை கிளை உருவாக்கி, கொடிமரம் நட்டுக் கொடி ஏற்றலாம். மாதம் பதினைந்து நாள் பயணம், மக்கள் சந்திப்பு, கட்சி உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர் நியமனம் எனப் பரபரப்பாய் இயங்கவேண்டும். அநேகமாக மூன்றாவது மாதம்போல நாலுபேர் எதிர்த்து அறிக்கை விட்டு எதிர்க்கட்சியில் சேர்ந்திருப்பார்கள். இன்னும் பல...

இதெல்லாம் செய்து பார்க்க நேரமில்லை என்றால், எதையும் செய்யாமல், மெல்ல விஜயகாந்த் கட்சியை எட்டிப் பார்த்தால் சூட்சுமம் புரியும்.

கூட்டணி, எம்.எல்.ஏ எனத் தடபுடலாய் ஆரம்பித்துப் பாதி எம்.எல்.ஏக்களைப் பறிகொடுத்து, இந்த முறை சுதாரிப்பாக இருந்து `முதல்வர் வேட்பாளர்’ ஆகி பத்திரிகை, ஊடகப் பரபரப்பு நடந்து இறுதியாக `வாஷ் அவுட்’ ஆன விஜயகாந்தின் கதையில் அரசியல் என்ட்ரி கொடுக்கும் எல்லா நடிகர்களுக்கும் நீதி இருக்கிறது.

எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை சினிமாக்களில் கையாள்வது சுலபம். ஆனால், அரசியல் களம் கொதிகலன், தகிக்கும் வெப்பம். மேக் அப் கிட்டுகள் உருகிவிடும். உள்ளதைச் சொன்னால், தமிழ்நாட்டை ஒரு சுற்றுச் சுற்றி வந்தாலே நடிகர்களின் அரசியல் ஆசை நீர்த்துப் போகும்.