
திருமுருகன்காந்தி, சமூக ஆர்வலர்
2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை

சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
சாதி படியமைப்பும், உழைப்பிற்கேற்ற ஊதியமும், அடக்குமுறையும் காலங்காலமாக இருக்கும் சமூகத்தில் உணவுப் பசியைப் போக்கவந்த நடவடிக்கைதான் ரேஷன் கடைகள். முற்றிலுமாகப் பசியைப் போக்கா விட்டாலும், சமமான சத்துணவாக இல்லா விட்டாலும் ஏழைமக்களின் வீட்டில் `உணவு’ என்று ஒன்று இருப்பதை உறுதிசெய்தவை இந்த ரேஷன் கடைகள்தான்.
சமூகநீதிக் கொள்கைக்கான இந்த நிதி ஒதுக்கீட்டைச் செலவு என்று சொல்லி, அதை ‘சிக்கனம்’ செய்து முன்னேற்றம் காணப் போகிறோம் என்கிறது இந்திய அரசு. ஆனால், உலகம் முழுவதும் பசியோடு படுக்கைக்குப் போகும் 200 கோடி மக்களில் 70 கோடிப் பேர் இந்தியர்கள். `பசி’யை நீக்குவதற்குப் பதிலாகப் பசியோடு இருக்கும் மக்களையே நீக்கும் செயல் அல்லவா இது?
பணமதிப்பு நீக்கம்போல ஒரே நாளில் ரேஷன் கடைகளை மூடினால் பெரும் கலவரம் மூளும் என்பதால் படிப்படியாக இந்த மூடுவிழாவை அரங்கேற்றுகிறார்கள். அரிசிக்குப் பதிலாக அல்லது பகுதியாக கோதுமை, பருப்பு விநியோகம் நிறுத்தம், சர்க்கரை விலையைக் கூட்டுவது, வருமான வசதி அடிப்படையில் மறுப்பது என நாசவேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
`உணவுப்பொருள்களுக்குப் பதிலாகப் பணமாகத் தருகிறோம், சந்தையில் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்கிறது அரசு. சந்தைவிலை சாமானியனின் பசிக்கு எட்டாது. சந்தைவிலையை அரசு நிர்ணயிக்காது. மாறாகப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவுசெய்கின்றன. அப்படியென்றால் இது யாருக்கு நன்மை பயக்கும் நடவடிக்கை?

இத்தனை கொடுமைகளுக்கும் மூலகாரணம் நவம்பர் 2014-ல் உலக வர்த்தக அமைப்பின் வணிக வசதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதுதான். உலகம் முழுவதும் உணவு தானியங்களுக்கான சந்தையை ஏற்படுத்துவதுதான் விவசாய ஒப்பந்தமாகும் (Agreement On Agirculture).
குறைந்த விலைக்குத் தானியங்கள் (அரிசி, கோதுமை, பருப்புகள், சர்க்கரை) போன்றவற்றை அரசே மக்களுக்கு விற்பதால் பெரிய நிறுவனங்கள் உணவு தானிய விற்பனையில் பெரிய லாபத்தை ஈட்டமுடிவதில்லை. எனவே, அரசு உணவு தானியத்தை விற்பதை விட்டுவிட்டு வெளியேறினால் மட்டுமே இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் பார்க்க முடியும். அதனால்தான் ரேஷன் கடையில் மானியத்துக்குப் பதில் தனிநபர்களுக்குப் பணமாகக் கொடுத்து விடுவதை அரசு ஊக்குவிக்கிறது.
இதனால், மக்கள் அப்பணத்தைக்கொண்டு சந்தை விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உணவு தானியங்களை வாங்குவதை ஊக்குவிக்க முடியும். இதைத்தான் அரசு 2014-ல் போட்ட ஒப்பந்தத்தின் மூலமாக நடைமுறைசெய்ய ஆரம்பித்திருக்கிறது.
ஆனால், அரசு சொல்லும் காரணம் உணவுப் பொருள்களில் பெரிய அளவில் கடத்தல் நடக்கிறது என்பதுதான். கடத்தப்படுவதாகச் சொல்லப்படும் ரேஷன் பொருள்கள், உதாரணமாக அரிசி கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இதைவிட அதிகவிலைக்கு விற்கக்கூடிய தரம் இந்தப் பொருள்களுக்கு இல்லை. அரிசியை ரூபாய் 10-க்கும், 12-க்கும் வாங்கும் சமூதாயம் பெரிய வசதி படைத்த அல்லது நடுத்தரவர்க்கச் சமூகமும் அல்ல. இவர்களும் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள்தான் .
ரேஷன் கடையை முறையாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்குத்தான் மறைமுக வழியில் ரேஷன் உணவு போகிறது. சமூகரீதியான பார்வையில் `பசியால்’ வாடும் பிற வயிறுகளுக்கே அது போகிறது. இதைத்தான் காரணம் என்கிறது அரசு... இதற்காகத்தான் ரேஷன்கடைகள் மூடப்படுகின்றன.