
ப.திருமாவேலன், ஊடகவியலாளர்
2017-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டு அரசியலுக்கும் தனிப்பெரும் அரசியல்

தலைவராக இருப்பவர் கருணாநிதி. அவர் உடல்நலமில்லாமல் வீட்டுக்குள் இருக்க வேண்டிய நிலைமையில், அவர் மகனும், 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டு ஓராண்டுக்காலம் சிறையில் அடைக்கப்பட்டதன் மூலமாக அரசியலுக்கு வந்தவருமான மு.க.ஸ்டாலின், இன்று தி.மு.க.வின் செயல் தலைவராக இருந்து கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ம் ஆண்டுமுதல் கருணாநிதிதான் தி.மு.க-வுக்குத் தனிமனித ராணுவம். இன்று ஸ்டாலின். கடந்த தேர்தலில் 89 இடங்களைக் கைப்பற்றியதன் மூலமாகத் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ஸ்டாலினுக்குக் கிடைத்தது.
ஸ்டாலினின் தலைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இன்று தி.மு.க-வில் இருக்கிறார்கள். அடுத்து நடக்கவிருக்கும் தேர்தல், ‘ஸ்டாலின்தான் முதலமைச்சர்’ என்ற பிரகடனத்துடன் நடக்கப்போகிறது. கடந்த முறை, ஸ்டாலினும் அறிவிக்கப்படவில்லை. கருணாநிதியும் முழுமையான பிரசாரத்தைச் செய்யவில்லை. இத்தகைய சூழ்நிலை இனி இல்லை. குடும்பத்துக்குள்ளும் அத்தகைய நெருக்கடி இல்லை.
அரசியல் வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகியவராகவே ஆகிவிட்டார் அழகிரி. மீண்டும் அவர் கட்சிக்குள் பொறுப்பாளராகத் தலையெடுப்பது சாத்தியம் இல்லை. அதற்கு ஸ்டாலினும் சம்மதிக்க மாட்டார். கனிமொழியைப் பொறுத்தவரை எப்போதும் பாசமலர் தங்கைதான். கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் சிக்கலற்ற பறவையாக இருக்கும் ஸ்டாலினுக்கு எதிராகவும் பலமான அரசியல் தலைமைகள் இல்லை.

அ.தி.மு.க இரண்டுபட்டு இருக்கிறது. பலம் வாய்ந்த ஜெயலலிதாவுக்குப் பதிலாக பலவீனமான எடப்பாடியும் பன்னீரும் இருக்கிறார்கள். அவர்களது பலம், இரட்டை இலை. பலவீனம், ஒருவரை ஒருவர் நம்பாதது. தினகரனைப் பொறுத்தவரை தனிமனிதராக அசத்துகிறார். ஆனால், அவரது கட்சியின் பேஸ்மென்ட்டும் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இல்லை. முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்க, வைகோவும், ‘ஸ்டாலின் முதல்வராகும் காலம் விரைவில்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் ஸ்டாலினுடன் கைகோத்துவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை, ஸ்டாலினுக்குத் தானாக வந்து சேர்ந்துள்ளது. இதை ஸ்டாலின் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்போகிறார் என்பதே அவர்முன் உள்ள சவால்.
தி.மு.க-வுக்குப் புதிய தலைமை வந்திருப்பது மட்டுமே போதாது, தி.மு.க தன்னை எல்லா வகையிலும் புதுப்பித்துக்கொண்டாக வேண்டும். கொள்கையில், திட்டமிடுதலில், மேடைகளில், எழுத்தில், போராட்டங்களில் அந்த மாற்றத்தைக் காட்ட வேண்டும். அரசியல் சூழ்நிலைகள் சாதகமாகியுள்ள ஆன அதேநேரத்தில், தி.மு.க-வின் எதிரிகள் பிரசாரமும் பலமாகி வருகிறது. திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்பது ஒரு தரப்பும், இந்துத்துவா எழுச்சி இன்னொரு தரப்புமாக தி.மு.க-வின் கையையும் காலையும் முடக்கத் துடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்டாலினுடைய அரசியல் பழைய பாணியாக இல்லாமல், புதியபாணியாக மாறாவிட்டால் போணியாகாது.