Published:Updated:

“சுட்டுக் கொன்னுடுவோம்னு மிரட்டுறாங்க” - படபடக்கும் மதுரை நந்தினி!

“சுட்டுக் கொன்னுடுவோம்னு மிரட்டுறாங்க” - படபடக்கும் மதுரை நந்தினி!
“சுட்டுக் கொன்னுடுவோம்னு மிரட்டுறாங்க” - படபடக்கும் மதுரை நந்தினி!

 நானும் தந்தையும் இப்போது காரைக்குடி காவல் நிலையத்தில் இருக்கிறோம். பா.ஜ.க-வினர் எங்களை மிரட்டுகிறார்கள். அதோடு, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் சுட்டுக்கொல்வோம் என்கிறார்கள்” பதற்றமான குரலில் தொலைபேசிமூலம் தகவலை நம்மிடம் பகிர்கிறார், மதுரையைச் சேர்ந்த மது ஒழிப்புப் போராளி நந்தினி. 

“குடி வீட்டுக்குக் கேடு... மோடி நாட்டுக்குக் கேடு” என்கிற முழக்கத்தோடு, கடந்த நான்கு நாள்களாக மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்குச் சென்று நானும் அப்பாவும் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறோம். இன்று, காரைக்குடியிலுள்ள அண்ணா சிலை அருகே பொது மக்கள் முன்பு பிரசாரம் செய்துகொண்டிருந்தோம்... அங்கு வந்த பா.ஜ.க-வினர் எங்களைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுத்தார்கள். 'இந்த நாட்டை ஆளும் பிரதமரை அவமதிப்பது போன்ற வாசகங்களைக் கையில் வைத்துக்கொண்டு நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு உனக்கு துணிச்சல் வந்துடுச்சா? முதல்ல அந்தப் போர்டைத் தூக்கி எறி!'னு சொல்லி பிரச்னை செய்தார்கள். நோட்டீஸையும் பிடுங்கித் தெருவில் வீசிட்டாங்க. அதுமட்டுமில்லாமல், 'தூத்துக்குடியில போராடினவங்களை சுட்டுக் கொன்ன மாதிரி உன்னையும் நடுரோட்டுல வெச்சு சுட்டுத்தள்ளணும்' என்று சொன்னார்கள்.

இதுவரை முகநூல் வழியாவும் தொலைபேசி வழியாவும் மிரட்டல் கொடுத்தவர்கள், இப்போது நேராவே சுட்டுக்கொள்ளணும்' என்று சொல்கிறார்கள். 'உங்களுக்கு பிரதமரோட செயல்பாடுகள் பிடிச்சிருந்தா, நீங்க அவரை ஆதரிச்சு பிரசாரம் பண்ணுங்க. எனக்கு அவரோட செயல்பாடுகள்ல உடன்பாடில்லாததால, நான் அவருக்கு எதிரா பிரசாரம் பண்ணுறேன்' என்று அவர்களிடம் சொன்னேன். அது உண்மைதானே! தினம் தினம் எத்தனை பிரச்னைகளை நாம சந்தித்துக்கொண்டிருக்கிறோம். பெட்ரோல் விலை உயர்வு மட்டுமல்ல, தமிழகத்தில் மூடப்பட்ட பல மதுபானக்கடைகள் இப்போது மோடியின் ஆதரவால் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால், தமிழ்நாட்டின் முதலமைச்சரே மோடிதான். இதைப்பத்தி மக்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்த வீதிக்கு வந்தால், தடுத்து நிறுத்துகிறார்கள்: போலீஸ் ஸ்டேஷனில் அடைத்துவைக்கிறார்கள்"  என்கிறார் ஆதங்கத்தோடு.